மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை 3

14 07 2025

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை மஞ்சை வசந்தன்

மூடநம்பிக்கை ஒழிப்பு திராவிட ஆரிய போரின் முதன்மைக் களம்

இந்தியாவைப் பொறுத்தவரை பிற அயல்நாட்டவர் இங்கு நுழைவதற்குமுன் எந்த மூடநம்பிக்கையும் இன்றிதான் தமிழர்கள் வாழ்ந்தனர். நன்றியின்பாற்பட்ட செயல்பாடுகளைத் தவிர அவர்களிடம் எந்த மூடநம்பிக்கைகளும் இல்லை. ஆனால், ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் நுழைந்து பரவி நிலையாக வாழத் தொடங்கியபின், தங்கள் வருவாய்க்கும், பிழைப்பிற்கும், சிறுபான்மையினரான தங்கள் பாதுகாப்பிற்கும் பல்வேறு சடங்குகளை, மூடநம்பிக்கைகளை உருவாக்கி, அவற்றிற்கு வலுச்சேர்க்கவும், வளர்க்கவும் புராணங்களையும், கதைகளையும் உருவாக்கினர். வீரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் யாகம், வேண்டுதல், படையல், பலியிடல் என்று பலவற்றை உருவாக்கி தமிழர்களை ஏற்கும்படி செய்தனர்.

 

தங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், வருவாய்க்கும், ஆதிக்கத்திற்கும், உயர்விற்கும், மேன்மைக்கும் மூடநம்பிக்கைகள் பெரிதும் பயன்பட்டதால், உதவியதால், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதையே தங்கள் முதல் வேலையாக, தொழிலாகக் கொண்டனர். பல நூற்றாண்டுகளாக மூடநம்பிக்கைகளை முதலீடாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியப் பார்ப்பனர்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வரவர, அவை அனைத்தையும் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, அவற்றை முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளைப் பரப்பப் பெரிதும் பயன்படுத்தி, அறிவியல் வளர்ந்து உச்சம் பெற்றுள்ள காலத்திலும், அதே அறிவியலைக் கொண்டு மூடநம்பிக்கைகளையும் உச்சம் பெறச் செய்து வருகின்றனர்.

 

ஆரியப் பார்ப்பனர்களும், அவர்கள் பிடியில் உள்ள ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் திட்டமிட்டு சனாதன நடைமுறைகளை நிலைநிறுத்த ஆட்சி அதிகாரத்தோடு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு, மூடநம்பிக்கைகளை அதிக அளவில் பரப்பினால்தான் சாத்தியப்படும் என்றும் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர். 3 சதவிகிதம் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் 97 சதவிகிதம் மக்களை தாழ்த்தி, வீழ்த்தி, அடக்கி, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்ய முற்படுகின்றனர். கல்வி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஊடகங்களின் வளர்ச்சியில்லாத காலத்திலேயே தந்தை பெரியார் தன்னால் இயன்ற அளவிற்கு ஆரிய ஆதிக்கச் சக்திகளை முறியடித்து, மூடநம்பிக்கைகளைத் தகர்க்கப் போராடி அதில் அதிக அளவு வெற்றியும் பெற்று, நம்மை மானமும், அறிவும், கல்வியும், பதவியும் உள்ள மக்களாய் முன்னேற்றிச் சென்றுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் அவரால் கிடைத்த இந்த உயர்வை இழக்காமல், மேலும் நாம் விழிப்புடன் எதிர்வினையாற்றி எதிர்தரப்பாரின் சதிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு நாம் பெரிய அளவில் மூடஒழிப்பு கலாச்சாரப் புரட்சியைச் செய்தாக வேண்டும்.

 

தற்போது நம்மிடம் நம் கையில் செல்பேசியுள்ளது. அதன்வழி கலாச்சாரப் புரட்சி மிகவும் எளிது. ஒவ்வொருவரும் அதைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டாலே நாம் வெற்றி பெற முடியும். முதலில் நாம் ஒவ்வொருவரும், பகுத்தறிவுடன் ஒவ்வொன்றையும் சிந்தித்து உண்மை எது, சரி எது என்று தெளிய வேண்டும். மூடநம்பிக்கைகளை எந்த அச்சமும் இன்றி அகற்ற வேண்டும். அதற்கு, பகுத்தறிவுச் சிந்தனைகளை நம் செல்பேசி வழி ஒவ்வொருவரும் மற்றவர்களுக் குப் பகிரவேண்டும்; பரப்ப வேண்டும். சனாதனிகளின் சூழ்ச்சிகளைச் சன்னமாய் விளக்கி மக்களை விழிப்பும் எழுச்சியும் பெறச் செய்யவேண்டும்.

 

மூடநம்பிக்கைகளை மக்கள் ஏற்கும்படிச் செய்ய எதிரிகள் பல கவர்ச்சி ஆசை காட்டி ஆசை காட்டி நம்மை ஈர்ப்பார்கள், அதில் ஏமாறாது நாம் எச்சரிக்கையுடன் அறிவார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று மக்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவு வளர்க்கவும், கல்வி, வேலைவாய்ப்பு பெறவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், ஆதிக்கம் ஒழிக்கவும், நல்லிணக்கம் வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும். இது இன்றைய கட்டாயத் தேவையும் கடமையும் ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை மக்கள் மத்தியில் பரப்பி மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்.

 

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நம்பிக்கை என்பது வேறு; மூடநம்பிக்கை என்பது வேறு!

இதுகுறித்து ஆசிரியர் அவர்கள் வெளியிட் டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார். மூடநம்பிக்கை’ என்ற சொல்லிலிருந்தே, (நன்)நம்பிக்கை என்பது வேறு; மூடநம்பிக்கை என்பது வேறு என்று தெளிவான பொருள் பிரதிபலிக்கவில்லையா? அப்படியிருக்க, ‘‘இது அண்ணா, கலைஞர் அரசு என்ற அடிப்படையை’’ அறவே புறக்கணிக்கும் வகையில், சட்ட அமைச்சரின் பதில் அமையலாமா?

அமைச்சரது மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக நரபலி, மாந்திரீகம் என்ற பெயரால், குடும்பப் பெண்களின் நகைகளைப் பறிப்பது, ஏமாற்றுவது, பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடப்பது எந்த நம்பிக்கை அடிப்படையில்?

 

அவற்றை நியாயப்படுத்த முடியுமா?

இன்றைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி, கலைஞர் ஆட்சியின் மறுபதிப்பு – தொடர்ச்சி என்ற நிலையில், அமைச்சரின் இந்த விளக்கம் – பதில் பகுத்தறிவாளர்களால் ஏற்கத்தக்கதா? கொள்கைத் துடிப்புடன் செயல்பட்டு, கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாது, விளைவுகளைச் சந்திக்கத் தயார் என்று முழங்கும், அதன்படியே நடக்கும் இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களுக்குப் பகுத்தறிவுப் பாசறை, பயிற்சி வகுப்புகள் முதலியன நடத்தி, வெளியீடுகள் வழங்கி பக்குவப்படுத்துவது பற்றியெல்லாம் சில அமைச்சர்களுக்குத் தெரியாதா, புரியாதா? போகிற போக்கில் பதில் கூறுவதா, இந்த முக்கிய கொள்கைப் பிரச்சினையில்?

 

தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமை!

எல்லாவற்றையும் தாண்டி, இதே பிரச்சினைபற்றி, கடந்த 2013இல் நமது ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞர் அவர்கள் எழுதிய முக்கிய மடலை, சட்ட அமைச்சருக்கும் மற்றும் சில அமைச்சர்களுக்கும், சட்டப் பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இவ்வாட்சியினைப் பாதுகாக்க என்றென்றும் பணி செய்யும் திராவிடர் கழகத்தின், தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!

 

மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்!

இந்தப் பிரச்சினையில், இக்கருத்தினை நமது முதலமைச்சர் ஏற்காமல், மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும். தவறுகள் திருத்தப்படவேண்டும்.

‘‘இது தொடரும் கலைஞர் அரசு’’ என்று பிரகடனப்படுத்தும் நிலையில், பாதை மாறலாமா?

தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ‘‘கடவுள் பெயரால்’’ என்பதைத் தவிர்த்து, ‘‘உளமார’’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா? நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள்!

நமது முதலமைச்சர்  ஆழ்ந்து சிந்தித்து, இதற்குத் தக்க பதிலும், பரிகாரமும் காண வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள். பிரபல கல்வியாளர் வேலூர் வி.அய்.டி.வேந்தர் விசுவநாதன் அவர்கள், இந்த வேண்டுகோளைப் பல மேடைகளில் வற்புறுத்தியுள்ளார் என்பதும் நாம் தரும் கூடுதல் தகவல் ஆகும்! என்று ஆசிரியர் அவர்கள் தம் அறிக்கையில் கூறியுள்ளார்கள். இதை அரசு கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தல்:

“அமைச்சரின் பதிலும், சபாநாயகரின் கருத்தும் மூடநம்பிக்கையைப் பரப்பி வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார். “மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவியலுக்கும், பகுத்தறிவுக் கும் பொருந்தாத மூடநம்பிக்கை என்பது வேறு. “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என வள்ளலாரே பாடியுள்ளார்” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பெ. சண்முகம், “மக்களிடம் பரப்படும் மூட நம்பிக்கைகளால் பொருட்செலவு, உயிர்ப்பலி உள்பட பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. கருநாடகம்,

மராட்டியம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

“எனவே, சமூக சீர்திருத்தக் கருத்துகள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வலியுறுத்தியுள்ளார்கள். இதையும் அரசு கருத்தில்
கொள்ளவேண்டும்.

 

மாணவர்மீது திணிக்கப்படும் மூடநம்பிக்கைகள்

மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வி யானாலும், செய்திகள் ஆனாலும், செயல்முறைகள் ஆனாலும் அவை அறிவுக்கு (அறிவியலுக்கு) ஏற்புடையதாக இருக்க வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எதுவும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது. அறிவுக்கு உகந்தது எது? சிலர் வினா எழுப்புகின்றனர். உறுதி செய்யப்படக்

கூடியவை (நிரூபிக்கப்பட்டவை) மட்டுமே அறிவுக்கு உகந்தவை. நமது நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல.

‘காந்தம் இரும்பைக் கவரும்’, ’தீ சுடும்’,

 

‘மின்சாரம் தாக்கும்’ இதுபோன்ற கருத்துகள் உறுதி செய்யப்பட்டவை. “கடவுள் நம்மைப் படைத்தார்; நம் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அவரே தீர்மானிக்கிறார்” இக்கருத்துகள் வெறும் நம்பிக்கைகள். இவற்றை உறுதி செய்ய முடியாது. எனவே, இவை அறிவுக்கு உகந்தவையோ அறிவியல் சார்ந்தவையோ அல்ல. “கையில் கயிறு கட்டினால் நன்மை உண்டாகும், தீங்கு நேராது” என்பது நம்பிக்கை. இதை நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத எந்த நம்பிக்கையும் மூடநம்பிக்கைதான்.

கடவுள், மதம், சாஸ்திரம், மந்திரம், ஜோதிடம் என்பனவெல்லாம் உறுதி செய்யப்படாத நம்பிக்கைகள். எனவே, அவை அறிவியல் சார்ந்தவையல்ல. ஆகவே, அவை மூடநம்பிக்கைகள். மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மத்தியில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படிக் கற்பிப்பது மாபெரும் குற்றம்.

நமது முதல்வர் அவர்களும் பள்ளி, கல்லூரிகளில் அறிவியலுக்குப் புறம்பான எதுவும் கற்பிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

கடந்த 03.03.2024 ஞாயிறன்று புனே மாவட்ட பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் புதிய நீதிமன்றக் கட்டிடம் ஒன்றின் அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பூஷன் ஆர் கவாய் பூமி பூஜை நடத்தி நிகழ்வைத் துவக்கி வைத்துள்ளார். மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா உட்பட வேறு சில நீதிபதிகளும் மூத்த வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் உரையாற்றிய அபய் ஓகா கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்: “இத்தகைய விழாக்களின் போது மதம் சார்ந்த சடங்குகளைச் சட்டம் மற்றும் நீதித்துறை வல்லுநர்கள் இனிமேல் தவிர்க்க வேண்டும். பூஜைகள், அர்ச்சனைகள், விளக்கேற்றுதல் போன்றவை கூடாது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை நகல் ஒன்றை வைத்து, சிரம் தாழ்த்தி அதை வணங்கி விழாவைத் துவக்க வேண்டும்.”

“பாபா சாகேப் அரசமைப்புச் சட்டத்தை நமக்கு வழங்கி, வரும் நவம்பர் 26ஆம் நாளன்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. என்னைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டம் தான் நீதித்துறையின் அடிப்படை மய்யம்!”

“அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இரண்டு சொற்கள் முக்கியமானவை. ஒன்று “மதச்சார்பின்மை”. மற்றொன்று “ஜனநாயகம்”. – மதச்சார்பின்மைக்கு சிலர் “தர்ம நிர்பேகஷா” அல்லது “சர்வ் தர்ம் சம்பவ்” என்றெல்லாம் பொருள் விளக்கம் அளிப்பதுண்டு. “என்னைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையே வழிபாட்டிற்குரியது. நீதிமன்ற வளாகங்களில் மதம் சார்ந்த சடங்குகள் நடக்கக்கூடாது. அதுவே அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பையும் சிறப்பையும் நாம் போற்றுவதற்கான அடையாளமாகும். கர்நாடக மாநிலத்தில் நான் பணியாற்றிய காலத்தில் மதச் சடங்குகளை அடியோடு நிறுத்த நான் பல முயற்சிகள் செய்தேன்.

 

அதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. இருப்பினும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினேன் என்று கூறலாம்.

நீதிமன்ற வளாகங்களில் மதம் சார்ந்த வழிபாடுகளும் சடங்குகளும் இனிமேல் எங்கும் நடைபெறக் கூடாது.” – என்றார் அபய் ஓகா. இவருடைய கூற்றை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பூஷன் கவாய் அதற்கு ஆதரவாக இவ்வாறு கூறியுள்ளார்: “அபய் ஓகா அவர்கள் நல்ல யோசனை தெரிவித்துள்ளார். அது இனிமேல் பின்பற்றப்பட வேண்டும். எங்கள் சக வழக்குரைஞர் அனில் கிஷோர் அவர்கள் இன்னொரு நல்ல யோசனை வழங்கியுள்ளார். “நீதிமன்றக் கட்டிடங் களின் அடிக்கல் நாட்டு விழாக்களின் போது மரங்கள் நடுவது பயனுள்ளதாக இருக்கும்.

செடிகளுக்கு நீரூற்றியபின் நிகழ்ச்சி யைத் துவக்கலாம். பூஜைகளையும் மதம்
சார்ந்த சடங்குகளையும் தவிர்க்கலாம்” என்று நல்ல யோசனை அளித்துள்ளார்.

அதன்படி இனி நாம் செயல்பட்டால் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தில் ஏற்பட அது வழிவகுக்கும். நீதித்துறை மற்றும் சட்டத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மதம் சார்ந்த சடங்குகளை இனி தவிர்ப்போம். பூஜைகள், அர்ச்சனைகள், வழிபாடுகள், விளக்கேற்றுதல் போன்றவை இனி வேண்டாம்” — என்று அபய் ஓகாவுக்கு ஆதரவாக பூஷன் கவாய் கூறியுள்ளார்.

நன்றி : ‘தி இகனாமிக் டைம்ஸ்’

Unmai.in may2 2025