மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை 1

04 07 2025

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை மஞ்சை வசந்தன் -1

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், “தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நமக்கென்று ஒரு கொள்கை இருக்கலாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது. மூடநம்பிக்கையைச் சட்டம் போட்டு தடுக்க முடியாது” என்று பதில் அளித்தார்.

 

இதற்குப் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும், “உறுப்பினர் பொருத்தமில்லாத கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்து விட்டார்” என்று கூறியிருந்தார்.

சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும், தங்கள் கருத்தை திராவிட மாடல் ஆட்சியின் கருத்தாகக்கூறுவது ஏற்புடையது அல்ல. அவர்கள் இன்னும் திராவிட கோட்பாடுகளை, குறிப்பாக இது பற்றிய கலைஞர் அவர்களின் கருத்து என்ன என்பதை நன்கு அறிந்து கூறவேண்டியது கட்டாயம் ஆகும்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் அவசியம் குறித்து கலைஞர் எழுதிய ஒரு கட்டுரையை தருகிறோம். ஊன்றிப் படியுங்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் பற்றி கலைஞரின் கருத்து என்ன?

“மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் 13 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தச் சட்டம், அவசர அவசரமாக 22.8.2013அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்குக் காரணம் மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீரம்மிக்க போராளியுமான நரேந்திர தபோல்கர், புனே நகரவீதிகளில் 20.8.2013 அன்று படுகொலை செய்யப்பட்ட மாபாதகச்சம்பவம்தான். அந்தக் கோரச் சம்பவம் நாடெங்கிலுமுள்ள பகுத்தறிவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நரேந்திர தபோல்கர் காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அவர் கொல்லப்பட்ட செய்தி மராட்டிய மாநிலம் முழுவதும் தீயெனப் பரவியது.கண்டன ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புப் போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றன.

மருத்துவப் பட்டம் பெற்றவரான தபோல்கர், பன்முக ஆற்றல்களின் பெட்டகமாகத் திகழ்ந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணிப் போர் வீரராக இருந்த அவர், சமூகச் சீர்திருத்தங்களில் பேரார்வம் காட்டினார்.

இந்தியச் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாக இருப்பது ஜாதியம்தான் என்று கருதினார். ஜாதிய அமைப்பை அறவே ஒழித்திட அரும்பாடுபட்ட நரேந்திர தபோல்கர், பண்பாட்டுப் புரட்சி நடக்காமல் சமத்துவம் சாத்தியமில்லை என்றார்.

 

‘‘அறியாமையைப் போக்குவதற்கான போராட்டத்தில் எனக்கு எவ்வித ஆயுதமும் தேவையில்லை’’ என்று தபோல்கர் கூறினார்.

தபோல்கரின் நண்பர் அஜீத் அபயங்கர் என்பவர், ‘‘தபோல்கர், ஆண்டவனுக்கோ,மதத்துக்கோ எதிரானவர் இல்லை; நம்பிக்கையின் பெயரால் சுரண்டல் செய்யப்படுவதற்கு எதிராகவே அவர் போராடி வந்தார்” என்று கூறியிருக்கிறார். அபயங்கரின் இந்தக் கருத்தைப் படித்தபோது, “கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காக” என்ற, நான் எழுதிய “பராசக்தி”யின் வசனம் என் நினைவுக்கு வந்தது.

 

தனது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போராடியவர் தபோல்கர். சமூகநீதி நிலைத்திருக்கவும், சமத்துவம் மலர்ந்திடவும், ஜாதி மறுப்புத் திருமணங்களை அவர் ஊக்குவித்து, முன்னின்று நடத்தினார். மந்திரவாதிகள் மற்றும் மோசடிச் சாமியார்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடியவர் அவர்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து நடத்தி வந்த போராட்டங்களின் விளைவாக, மராட்டிய மாநிலத்தில் பலமுனைகளிலும் அவருக்கு எதிரிகள் முளைத்தனர். பில்லி சூனியம், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றிட வேண்டுமென்று தபோல்கர் நீண்டகாலமாகக் கோரி வந்தார். அவரது கோரிக்கை அவர் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

 

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மராட்டிய மாநில அரசு இயற்றியிருக்கும் சட்டத்தைப் போலவே, தமிழகத்திலும் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணி அவர்களும், பேராசிரியர்கள் – சமூக ஆர்வலர்கள்- அறிவியல் இயக்கத்தினர் பலரும் முன் வைத்திருக்கிறார்கள்.

மூடநம்பிக்கைகளைப் பற்றி விவாதிக்கக்
கூடிய சூழ்நிலையைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உருவாக் கிட வேண்டும் என்ற வேண்டுகோளும் எழுந்துள்ளது.

 

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அடிப்படைக் கடமை ஆகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51-A(h) உணர்த்துகிறது. ‘‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform’’ (அறிவியல் மனப்பான்மை, மனிதநேயக் கோட்பாடு, ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்த மனப்பாங்கு ஆகியவற்றை வளர்த்தல்) என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தர்க்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு, வேண்டுதல் வேண்டாமை அகற்றி, ஏற்கெனவே மனதில் ஊறிப் போன கருத்துகளை எதிலும் வலிந்து புகுத்திடாமல் பின்பற்றப்படும் நடைமுறையே அறிவியல் மனப்பான்மை என்பதற்கான விளக்கமாகும். தீவிரமாகக் கலந்தாலோசித்தல், விரிவாக விவாதித்தல் மற்றும் ஆழமாக ஆராய்தல் ஆகியவை அறிவியல் மனப்பான்மையின் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

பில்லி சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் என்பவை மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அவை ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற கட்டமைப்புக்கு எதிரானவை; இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை.

unmai.in may2 2025