தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'
இலங்கை அரசியல் வரலாற்றைப் பற்றி பேசும் யாரும் உச்சரிக்கக்கூடிய முக்கிய பதங்களில் ஒன்று 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. தமது திருகோணமலை மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத் தம்மைத் தயாராக்கிக்கொண்டமை என்பன பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வரக்காரணமானது. பெப்ரவரி 4, 1957இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி 'தனிச்சிங்கள' சட்டத்தை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தை நடத்தியது.இந்த ஹர்த்தால் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஹர்த்தால் தினத்தில் வடக்குக்- கிழக்கு ஸ்தம்பித்துப் போனது. இதன் எதிரொலியாக சிங்களப் பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியது. பெயர்ப் பலகைகளில் காணப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாரூற்றி அழிக்கப்பட்டன. இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை அதிகரித்தது.
தொடர்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் தமிழரசுக் கட்சி நடத்தியது. மட்டக்களப்பு, மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர்கள் சத்தியாக்கிரகிகளால் முற்றுகையிடப்பட்டார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதி தொழில் அமைச்சர் சிறிவர்த்தன, புகையிரத நிலையத்திலிருந்து வெளியேற முடியாதவாறு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான சத்தியாக்கிரகிகளினால் முற்றுகையிடப்பட்டார். வெளிறேமுடியாத அவர், அடுத்த 'யாழ் தேவியில்' கொழும்பு திரும்பினார்.
இவ்வாறு தொடர்ந்த அஹிம்சை வழிப் போராட்டங்கள்தான் 1957ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் 'தமிழ்மொழியின் நியாயமான பாவனை' பற்றி சில பொதுவான முன்மொழிவுகளை பண்டாரநாயக்க முன்வைக்கக் காரணமானது. நாட்டில் இன முறுகல் நிலை உச்சத்தையடைவதை உணர்ந்த பண்டாரநாயக்க, இதைத் தொடரவிடுவது நல்லதல்ல என்பதை உணர்ந்த நிலையில் கொஞ்சம் 'விட்டுக்கொடுப்புக்கு' தயாரானார். இந்த 'விட்டுக் கொடுப்பு' அல்லது 'இறக்கம்', எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும் சா.ஜே.வே.செல்வநாயகத்துக்குமிடையிலான (பண்டா-செல்வா) பேச்சுவார்த்தைக்கு வழிகோலியது. முதலாவது பேச்சுவார்த்தை ஹொரகொல்லையிலுள்ள பண்டாரநாயக்கவின் பாரம்பரிய வீட்டில் நடந்தது. இதில் செல்வநாயகம் தலைமையில் வி.ஏ.கந்தையா, என்.ஆர்.ராஜவரோதயம், டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் மற்றும் வி.நவரட்ணம் ஆகியோரும், பண்டாரநாயக்க தலைமையில் அமைச்சர் ஸ்ரான்லி டி சொய்சா மற்றும் நவரண்டராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பு றொஸ்மீட் பிளேஸிலுள்ள பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது. இறுதிப் பேச்சுவார்த்தை ஜூலை 26, 1957இல் நாடாளுமன்ற செனட் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகப் பிறந்ததே 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள், அதன்போது இடம்பெற்ற சுவாரஸ்யங்கள் என இதுபற்றி எழுத நிறைய விடயங்கள் இருப்பினும், 'தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன' என்ற தேடலை நோக்கிய இந்தத் தொடருக்கு அவை மிகை என்பதால் அதனைத் தவிர்க்கிறேன். ஆனால், ஓரிரெண்டு சம்பவங்களைக் குறிப்பிடுவதானால், 'தனிச்சிங்கள' சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு சிங்களத்தில் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. இதனை தேஜா குணவர்த்தன வழக்கில் சாட்சியமளித்தபோதே பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, 'சிங்களம் நிர்வாக மொழியாவது உடனடியாக நடக்காது, முதலில் நான் சிங்களம் படிக்க வேண்டும், நானோ மெதுவாகக் கற்றுக்கொள்பவன்' என்று பண்டாரநாயக்க சொல்லிச் சிரித்ததாக, டி.பி.எஸ்.ஜெயராஜ் தன்னுடைய பத்தியொன்றில் குறிப்பிடுகிறார். மேலும் பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது என்று அன்று இரவு இரு தலைவர்களும் ஊடகங்களின் முன் அறிவித்த போது, உண்மையில் ஒப்பந்தம் எழுத்து மூலத்தில் அமைந்து கைச்சாத்திட்டிருக்கப்பட்டிருக்கவில்லை.
மறுநாளை காலையில் வி.நவரட்ணம் அவர்களால் தயாரிக்கப்பட்டு, மதியத்தின் பின்பு பிரதமர் அலுவலகத்தில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது. மூன்று மூலப் பிரதிகள் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் ஒரு மூலப்பிரதி பண்டாரநாயக்கவிடமும் இன்னொன்று செல்வநாயகத்திடமும் மற்றையது, அதை வரைந்த நவரட்ணம் அவர்களிடமும் இருந்தது. வி.நவரட்ணம் அவர்களிடமிருந்த பிரதி, பின்னாட்களில் இந்திய இராணுவத்தின் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எ‡ப் போராளிகளால் அழிக்கப்பட்டதாக வி.நவரட்ணம் தன்னிடம் தெரிவித்திருந்ததாக தனது பத்தியொன்றில் டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.
'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' உள்ளடக்கத்தை நாம் அலசுதல் அவசியமாகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள-தமிழ் அரசியல் தலைவர்களிடையே இடம்பெற்ற முதலாவது முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்பது மட்டுமல்லாது, தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த பண்டாரநாயக்கவுக்கும், அதை எதிர்த்து சமஷ்டி ஆட்சி வேண்டிய செல்வநாயகத்துக்குமிடையில் இணக்கப்பாடு எந்தப் புள்ளியில் இடம்பெற்றது என்பதையே நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இதை இணக்கப்பாடு என்று சொல்வதை விட 'சமரசம்' என்று சொல்வது தான் சாலப்பொருத்தமானதாக இருக்கும். இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இதனை ஓர் 'இடைக்காலச் சமரசமாகவே' பார்த்தது. 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' முக்கிய அம்சம் 'பிராந்திய சபைகள்'. ஏற்கெனவே பண்டாரநாயக்க அரசு நாடு முழுவதிலும் பிராந்திய சபைகளைத் ஸ்தாபிப்பதற்கான சட்டமூல வரைபுகளைத் தயார் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' படி வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்குக்கு இரு பிராந்திய சபைகளும் வழங்க இணக்கப்பாடு ஏற்பட்டது. வடக்கு-கிழக்கை ஒரு பிராந்தியமாகக் கொள்ள விரும்பிய தமிழரசுக் கட்சிக்கு இது திருப்திதரக்கூடியதொன்றாக இருக்கவில்லையெனினும் அதனை செல்வநாயகம் ஏற்றுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தினூடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் இப் பிராந்திய சபைகள் அமையும் எனவும் அவை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும், விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் மீன்பிடி, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள், மின்சாரம், நீரமைப்பு மற்றும் வீதிகள் ஆகியன தொடர்பான அதிகாரங்களைக் கொண்டமைந்திருக்கும் எனவும் இணங்கப்பட்டது.
பிராந்திய சபைகளுக்கான நிதி - மத்திய அரசிலிருந்து வரும் எனவும், அத்துடன் வரி வருவாய் மூலமும் இருக்கும் எனவும் இணங்கப்பட்டது. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சிக்கு இது திருப்திகரமான ஒரு தீர்வல்ல. ஆனால், விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இதனை ஏற்றுக்கொண்டது.இதைத் தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சி வைத்த முக்கிய கோரிக்கை 'தனிச் சிங்களச் சட்டம்' நீக்கப்பட்டு, தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது. ஆனால், 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' படி 'தனிச்சிங்களச் சட்டத்தை' நீக்க பண்டாரநாயக்க மறுத்துவிட்டார். பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை அவர் 'தனிச்சிங்களச் சட்டத்தை' பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்திவிடக்கூடிய ஒரு விஷயமாகக் கருதினார்.
'தனிச்சிங்களச் சட்டம்' இருக்கும் வரை தன்னுடைய ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வராது என்றும் அவர் நம்பினார். 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்படி' தேசிய சிறுபான்மையின் மொழியாக தமிழ் அங்கிகரிக்கப்படும் எனவும், 'தனிச் சிங்களச் சட்டத்துக்கு' இடையூறு ஏற்படாத வகையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் எனவும், பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்தில் முன்பு முன்வைத்த நான்கு முக்கிய முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் எனவும் இணங்கப்பட்டது.
தமிழுக்கு சம-அந்தஸ்து கேட்ட தமிழரசுக் கட்சிக்கு 'தேசிய சிறுபான்மையினரின் மொழி' என்பதுதான் கிடைத்தது. விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இதுவும் ஏற்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இணங்கப்பட்டது. உண்மையில் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை இங்கு தமிழரசுக் கட்சியினால் 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்ற அளவை விட இன்னும் அதிகமாக முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால், தமிழரசுக் கட்சி அதனைச் செய்யத் தவறிவிட்டது. இந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில் தாம் திட்டமிட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிட தமிழரசுக் கட்சி இணங்கியது.
'பண்டா-செல்வா ஒப்பந்தம்' ஒரு சமரசங்களின் தொகுப்பு. உண்மையில் இங்கு அதிகம் விட்டுக்கொடுத்தது என்னவோ தமிழ்த் தரப்புதான். பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை பிராந்திய சபைகள் என்பது, அவர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த ஒன்று, அது தமிழருக்கான தனித்துவமான தீர்வு கிடையாது. மேலும், 'தனிச்சிங்களச் சட்டத்திலும்' மாற்றமில்லை, தமிழ் மொழிக்கும் சம-அந்தஸ்து இல்லை, சமஷ்டி முறையில் தீர்வு இல்லை, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுமில்லை. ஆகவே பண்டாரநாயக்க இந்த சமரசத்தை ஒரு வெற்றியாகப் பார்த்தார். இன்னொரு பார்வையில் தமிழ்த் தரப்புக்கும் இது கொஞ்சம் முன்னேற்றகரமான விளைவுகளைத் தந்தது.
'தனிச் சிங்களச் சட்டத்தின்' பின் எந்த அங்கிகாரமுமின்றி இருந்த தமிழ் மொழிக்கு 'தேசிய சிறுபான்மையினரின் மொழி' அந்தஸ்து, வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழி, பிராந்திய சபையூடாக அதிகாரப் பகிர்வு என தாம் விரும்பிய சமஷ்டி கிடைக்காவிடினும், முன்னிருந்த நிலையிலும் ஓர் அடியேனும் முன்னேற்றகரமானதொரு தீர்வு கிடைத்தது, அதுவும் இனவாத அரசியல் தலையெடுத்துள்ள பொழுதில் இது கிடைக்கப்பெற்றது சாதகமான ஒன்றே என்று தமிழ்த் தரப்பு சிந்தித்தது.
இந்த ஒப்பந்தத்தை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். சி.சுந்தரலிங்கம் அவர்கள், சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'சுதந்திரத் தமிழ் இலங்கையொன்றுதான் ஏற்புடைய தீர்வு' என்று கூறினார். உண்மையில் 'பண்டா-செல்வா ஒப்பந்தம்' செல்வநாயகத்துக்கோ, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ திருப்தியைத் தந்திருக்கவில்லை, இதனை வி.நவரட்ணம் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இது இவ்வாறாக இருக்க பண்டாரநாயக்கவின் தரப்பில் அவர் ஒன்று நினைத்திருக்க, வேறு ஒன்று நடந்தது.
'தனிச் சிங்களச் சட்டம்' தந்த 'வீரன்' என்பதால் தான் எது செய்தாலும் பேரினவாதம் அதனை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு டட்லி சேனநாயக்க தலைவராக இருந்தார். ஆனால், கட்சிக்குள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான குழுவினர் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஜே.ஆர். ஒரு நிபுணர். அரசியல் களநிலைவரங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் அவர் ஒரு சாணக்கியன். பேரினவாத சக்திகளை 1956ஆம் ஆண்டு தேர்தலில் விழுந்திருந்த தன்னையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் மீண்டும் எழுச்சிபெறச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பார்த்தார். ஜே.ஆர். பிக்குகள் முன்னணியும் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதை எதிர்த்தது. இது தான் சமயம் என்பதை உணர்ந்த ஜே.ஆர். கொழும்பிலிருந்து - கண்டிக்கு எதிர்ப்பு நடைபயணம் ஒன்றைத் திட்டமிட்டார்
yarl.com 31 10 2015