கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)

26 03 2017

இந்திய படைகளுடன் தொடங்கியது போர்!: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்!! ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)

• முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.
• இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம் கட்டுவமா” இன்னும் ஏதேதோ மொழிகளிலெல்லாம் சொல்லிக் கத்துவார்கள். தலையைத் திருப்பிப் பார்க்கவே முடியாதபடி பயமாக இருக்கும்.
• விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியப் படையினருடனான போரைத் தொடங்கிவிட்டதாக மக்கள் பேச்சு. இதனால் இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலமாக உருவெடுத்திருந்தது.
• இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்திவிட்டு ஓடிச்சென்ற விடுதலைப் புலிகள். தினசரி பாடசாலைக்கும், மாலை வகுப்புகளுக்கும் சென்றுவருவது நெருப்பின் மீது நடப்பதுபோல இருந்தது.
• குடும்பத்தவர்களுக்குத் தெரியாமல் நானும், தங்கையும் செய்யத் துணிந்த காரியம் இருவருக்குமே பிசகிப் போயிருந்தது.

தொடர்ந்து…….
இப்படியான சந்தர்ப்பத்தில்தான் இந்தியப் படையினரின் வருகை நிகழ்ந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இனி எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வந்துவிடுமெனப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். எல்லோரையும் போலவே நாங்களும் வீதிக்கரையில் நின்று இந்தியப் படையினரைக் கையசைத்து வரவேற்றோம்.பரந்தன், கரடிப்போக்கு ஆகிய இரு ஊர்களுக்கும் நவே வட பிராந்தியத்திற்குரிய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பிரம்மாண்டமான களஞ்சியக் கட்டடங்கள் மற்றும் ஊழியர்களின் விடுதிக் கட்டடங்களில் இந்திய இராணுவத்தினர் பாரிய முகாமொன்றினை அமைத்திருந்தனர்.நாங்கள் அதுவரையிலும் கேட்டறியாத பல மொழிகளில் பேசினார்கள். நீண்ட தலைமுடியும் தாடியுமாகப் பஞ்சாபியர்களும், மஞ்சள் நிறமும் குள்ளமான தோற்றமுமாகக் கூர்க்கா படையினரும், பாடப் புத்தகங்களில் படித்திருந்த இந்தியாவை எமது கண்களுக்கு முன்பாக நிறுத்தியிருந்தார்கள்.

“சயன்ஸ் சென்ரர்” எனப்படும் எமது ரியுசன் சென்ரர் கரடிப்போக்கில் அமைந்திருந்தது. குமரபுரம் மற்றும் பரந்தனிலிருந்து மாணவர்கள் கூட்டமாகச் செல்வது வழக்கம்.பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம் கட்டுவமா” இன்னும் ஏதேதோ மொழிகளிலெல்லாம் சொல்லிக் கத்துவார்கள்.தலையைத் திருப்பிப் பார்க்கவே முடியாதபடி பயமாக இருக்கும். இப்படியாகச் சிறிது காலம் இருந்த நிம்மதியான வாழ்வு மீண்டும் குழம்பத் தொடங்கியது.விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியப் படையினருடனான போரைத் தொடங்கிவிட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள். இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலமாக உருவெடுத்திருந்தது.யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் இளம் பெண்கள்மீது இந்தியப் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மக்கள் பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.

கிளிநொச்சியிலும் அப்படியான சம்பவங்கள் நடந்ததா என்பது எனக்குத் தெரியாமலிருந்தது. ஆனால் எமது பெரியம்மாவின் மகளான எமது அக்காவைத் தமது வீட்டிலே வைத்திருப்பது பாதுகாப்பு இல்லையென இரவோடிரவாக அவரைக் கூட்டி வந்த பெரியப்பா எமது வீட்டில் விட்டுச் சென்றிருந்தார்.
பெண் பிள்ளைகளான எம்மைப் பாதுகாப்பதும், பாடசாலைக்கும் ரியுசனுக்கும் அனுப்புவதும் பெரியவர்களுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது.அப்போது க.பொ.த. சாதாரண பரீட்சைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் எமது பாடசாலை நேரத்தில் பயங்கரமான சூட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. பரந்தன் பிரதேசமே சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.மாணவர்களாகிய நாம் பயத்துடன் மேசைக்குக் கீழே பதுங்கிக்கொண்டு இருந்தோம். சற்று நேரத்தில் எமது பாடசாலை வளாகத்திற்குள் வந்த இந்தியப் படையினர் ஒவ்வொரு வகுப்பறையையும் நிறைத்து நின்றனர்.எமது பாடசாலை அதிபரிடம் என்னவோ விசாரித்து அவரை அடிக்கத் தொடங்கினார்கள். எம்மால் பெரிதும் மதிக்கப்படும் எமது அதிபர் எங்களுக்கு முன்பாக அடிவாங்கி, உதடுகள் வீங்கி இரத்தக் காயத்துடன் நின்ற கோலத்தைக் கண்டு மாணவர்கள் வாய்விட்டு அழத் தொடங்கினார்கள்.சற்று நேரத்தில் ஊர் மக்கள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் கைகளைத் தூக்கியபடிப் பாடசாலை மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன் முழங்காலில் மண்டியிடுமாறு நிறுத்தி வைக்கப்பட்டனர்.இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்திவிட்டு ஓடிச்சென்ற விடுதலைப் புலிகளைத் தேடும் அந்த நடவடிக்கை மாலைவரை நீடித்தது.தினசரி பாடசாலைக்கும், மாலை வகுப்புகளுக்கும் சென்றுவருவது நெருப்பின் மீது நடப்பதுபோல இருந்தது.இந்திய இராணுவத்தினருக்கு உதவியாக இருந்த சில தமிழ் இளைஞர்கள் ஊரிலே பல இளைஞர்களைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்று பயிற்சிகள் கொடுப்பதையும் அறிய முடிந்தது.அதனால் எமது வகுப்புகளில் படித்த பல ஆண் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு காணமல் போக தொடங்கினார்கள்.

நெற்றியில் சிகப்புத் துணிகளைக் கட்டியிருந்த தமிழ் இளைஞர்களும் இந்தியப் படையினரும் வீதி நீளத்திற்கும் நிற்பார்கள். அவர்களுடைய பார்வைகளையும் கேலிகளையும் காணும்போது மனதிற்குள்ளே ஆத்திரமும் கோபமும் கொப்பளித்துக் கொண்டிருக்கும்.ஆனாலும் அதைச் சகித்துக்கொள்வதைத் தவிர மாணவர்களாகிய எமக்கு வேறு வழியிருக்கவில்லை. காடுகளுக்குள்ளே மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் உருவானது.அவர்களால் மட்டும்தான் இத்தகைய துன்பங்களுக்கெல்லாம் ஒரு விடிவைக் கொண்டுவர முடியும் எனக் கனவு காணத் தொடங்கினோம்.என்னைப் பொறுத்தவரை பதின்ம வயதுகளின் இனிமைகளை உணர்ந்து அனுபவித்து மகிழ்ந்த நினைவுகள் அதிகம் கிடையாது.குமரபுரம் முருகன் கோயில் ஆனி உத்தர திருவிழாவுக்குப் பாவாடை தாவணி போட்டுக்கொண்டு பள்ளித் தோழியருடன் போனதும், நாதஸ்வரம் வாசிப்பவர் “ராசாத்தி மனசில” என்ற அந்தக் காலத்து ‘ஹிட்‘ பாடல் மெட்டை வாசித்தபோது எம்மைப் பார்த்துத்தான் வாசிப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு எங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டதும்,பொறிக்கடவை அம்மன் கோவிலுக்கு ‘சாந்தன்’ பாட்டுக் கச்சேரி பார்க்கப் போய்விட்டு வந்த மறுநாள், ரியுசன் சென்ரர் கணக்குப் பாடநேரத்தில் வகுப்பே நித்திரை தூங்கியதைப் பார்த்துக் கோபமடைந்த மரியதாஸ் மாஸ்டர் “சாந்தன் நிலாக் காயுது பாட, விடிய விடிய காஞ்சு போட்டுவந்து இஞ்ச நித்திரையோ தூங்குறியள்” எனச் சத்தம்போட்டு அத்தனை பேரையும் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதும், தோழிகளுடன் பரிமாறிக்கொண்ட கமலஹாசன், ரஜினிகாந்த் நடித்த சினிமா பட விமர்சனங்களும்தான் இப்போதும் நினைவில் இருப்பவை.1990ஆம் ஆண்டு பிரேமதாச – புலிகள் சமாதானம் உருவாகியதும், இனி எல்லாப் பிரச்சனைகளும் முடிந்துவிடுமென மீண்டும் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஆனால் இனியும் பிரச்சனைகள் தொடர்ந்தால் புலிகள் இயக்கத்திற்குப் போவதுதான் சரியான முடிவு என வகுப்பறைகளில் மாணவர்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.அல்லல் படும் எமது மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற உணர்வு எனக்குள் நிறையவே ஏற்பட்டிருந்தபோதிலும் இயக்கத்தில் இணைந்துதான் போராட வேண்டும் என்று நான் நினைத்திருக்கவில்லை.எனது இலட்சியம் பல்கலைக்கழகத்திற்குச் சென்று உயர் கல்வியைத் தொடர்வதாகவே அமைந்திருந்தது. எனது பாடசாலையின் சிரேஷ்ட மாணவர் மன்றத்தின் செயலாளராகவும், பாடசாலையின் மாணவத் தலைவியாகவும் நான் இருந்தேன்.சிறு வயதிலிருந்தே பாடசாலை மேடைகளில் பேச்சு, கவிதை, பட்டிமன்றம், நாடகம் எனப் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கெடுத்து அதிபர், ஆசிரியர்களின் பாராட்டுக்களையும் அபிமானத்தையும் பெற்றிருந்ததுடன், அயல் பாடசாலைகளிலும் அறியப்பட்ட மாணவியாகவே இருந்தேன்.உயர்படிப்புப் படித்து நல்ல வேலையில் வேண்டுமென்பதைத் தவிர வேறு சிந்தனைகளுக்கு என் மனதில் இடமிருக்கவில்லை.தொண்ணூறுகளில் சமாதானம் நிலவிக்கொண்டிருந்த காலத்தில் புலிகள் இயக்கம் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தது.என்னுடன் படித்த பல ஆண் மாணவர்கள் இயக்கத்தில் இணைந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஒன்றிரண்டாகப் பெண் பிள்ளைகளும் காணாமல் போகத் தொடங்கியிருந்தார்கள்.

இந்திய படைகளை சுட்டு வீழ்திய புலிகள்)

பெண்கள் ஏற்கனவே இயக்கங்களில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பது பற்றியும் பரவலாக மக்களிடையே பேசப் பட்டது. யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர் நீத்த திலீபனின் காலத்தில் செயற்படத் தொடங்கிய ‘சுதந்திரப் பறவைகள்’ மகளிர் அமைப்பு பற்றியும் நான் அறிந்திருந்தேன்.ஆனாலும் சீருடை அணிந்து ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளைத் தொண்ணூறுகளில்தான் முதன்முதலில் நேரடியாகக் காணமுடிந்தது.ஆரம்ப காலங்களில் இயக்கங்களில் இணைந்த பெண்களைச் சமூகம் மிகவும் அவதூறாகத் திட்டிய சம்பவங்கள் இருந்தபோதிலும், காலப்போக்கில் பெண் போராளி களையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.பரந்தன் பகுதியிலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு ஊரிலுள்ள பெண் பிள்ளைகள் போய் அவர்களுடன் பழகத் தொடங்கினார்கள். எம்மையொத்த பெண்களாக இருந்தாலும் அவர்களின் வித்தியாசமான கம்பீரமான வாழ்வு என்னையும் ஈர்த்திருந்தது.அவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள நான் பெரிதும் விரும்பினேன். ஒருநாள் நானும் பள்ளித்தோழிகள்

சிலரும் அவர்களின் முகாமுக்கு போயிருந்தபோது ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தேன்.குடும்பத்தவர்களுக்குத் தெரியாமல் செய்யத் துணிந்த காரியம் இருவருக்குமே பிசகிப் போயிருந்தது.இருவருமே வீட்டிற்கு இதைப் பற்றிச் சொல்வதில்லை என ஆளுக்காள் உடன்படிக்கை செய்துகொண்டோம். எமது பாடசாலையில் புலிகள் இயக்கத்தின் மாணவர் அமைப்பினருடைய கூட்டங்கள் அடிக்கடி நடந்தன.‘நீங்கள் அனைவரும் இயக்கத்தில் இணைந்துதான் போராடவேண்டும் என்கிற அவசியமில்லை; மாணவர் இயக்கத்தில் இணைவதன் மூலம் உங்களுடைய கல்வியையும் தொடர முடியும், போராட்டத்திற்கான ஆதரவையும் வழங்க முடியும்’ என்ற கருத்துடன் மாணவர்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.

எமது பாடசாலை மாணவர் இயக்கத்தின் தலைவியாக நான் தெரிவுசெய்யப்பட்டிருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பிரேமதாஸ அரசாங்கத்துடனான புலிகளின் சமாதானம் மீண்டும் குழம்பத் தொடங்கியிருந்தது.பல மக்கள் எழுச்சி நிகழ்வுகளும் மாணவர் ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. எனது பாடசாலை மாணவர்களும் ஆக்ரோசமாகக் கலந்துகொண்டு கோஷமிட்டோம்.“மாணவர் சக்தி மாபெரும் சக்தி, பேனா ஏந்தும் கைகளைத் துப்பாக்கி ஏந்த வைக்காதே” என்ற கோசங்கள் எமது உணர்வுகளை முறுக்கேறச் செய்தன.மாணவர் எழுச்சி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டோம். 1990களின் இறுதியில் மீண்டும் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்குமான போர் வெடித்தது.இந்திய இராணுவத்தினரின் சுறிறிவளைபில் என்னசெய்வது என்று தெரியாமல் முழிசிக்கொண்டிருக்கும் பிரபாகரன். )கொக்காவில், மாங்குளம் இராணுவ முகாம்கள் தகர்க்கப்பட்டதுடன் யாழ்ப்பாணக் கோட்டையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது எனப் புலிகளின் தாக்குதல் வெற்றிகள் மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு அலையைப் புலிகளுக்கு ஏற்படுத்தியது.

வெற்றிக் கதாநாயகர்களாக இயக்கப் போராளிகள் போற்றப்பட்டார்கள். அந்தக் காலத்தில் வெளியிடப்பட்ட இயக்கத்தின் புரட்சிப் பாடல்களான ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’, ‘எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்’ என்பது போன்ற பாடல்கள் இளைஞர்கள், யுவதிகளின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது.ஆயிரமாயிரமாக இயக்கத்திற்கு இளைஞர்களும் யுவதிகளும் சேர்ந்தார்கள். 1991இல் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை நடாத்த முடியாத சூழ்நிலை என்ற காரணத்துடன் பிற்போடப்பட்டது.

அதே ஆண்டு ஏழாம் மாதம் ஆனையிறவு இராணுவ முகாம் மீதான புலிகளின் ஆகாய, கடல் வெளித் தாக்குதலும் தொடங்கப்பட்டிருந்தது.பரந்தன் பகுதி மக்கள் அனைவரும் இடம் பெயர்ந்தபோது எமது குடும்பமும் இடம்பெயர்ந்து, தருமபுரம் சென்றது. மாணவர் அமைப்பு மூலமாகப் பல பின்னணி வேலைகள் புலிகளால் முன்னெடுக்கப்பட்டன. மக்களிடம்உலர் உணவு சேகரித்தல், காயப்பட்ட போராளிகளைப் பராமரித்தல், பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத உயிரிழந்த போராளிகளின் உடல்களுக்கு மலர்மாலை கட்டுதல் எனப் பலவகையான வேலைகள் மாணவர்களுக்குத் தரப்பட்டிருந்தன.எமது பாடசாலையின் ‘பாண்ட்’ வாத்தியக் குழுவின் தலைவியாக நான் இருந்தேன். எமது பாண்ட் அணி உயிரிழந்த புலிகளின் இறுதி வணக்க நிகழ்வுகளுக்கு மரியாதை இசை வழங்குவதற்காக அழைத்துச் செல்லப்பட்டது.

சாதாரணமாக மயானங்களுக்குத் தமிழ்ப் பெண்கள் போவதில்லை. ஆனால் நாம் போராளிகளின் துயிலும் இல்லங்களுக்குச் சென்றோம்.யுத்தத்தில் உயிரிழந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த போராளிகளின் உடல்களுக்குச் சக போராளிகளாலேயே தீ மூட்டப்பட்டது. அந்தக் காட்சி எனது மனதை மிகவும் உருக்கியது.ஆண் பெண் வேறுபாடில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் உயிர்கொடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் பார்வையாளராக இருப்பது எனது மனதில் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்தும் படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென நான் நினைக்கவில்லை.இரவும்பகலும் நான் கண்ட காட்சிகளே மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. ஒரு குடும்பத்தில் ஒருவராவது போராடச் சென்றால் அடுத்த சகோதரர்களாவது நிம்மதியாக வாழ முடியும் என நம்பத் தொடங்கினேன்.எனது இளைய சகோதரர்கள் போராடப் போய் இப்படியொரு சாவு அவர்களுக்கு நேர்வதைவிட நானே போவதென தீர்மானித்தேன். இந்த விடயத்தில் மற்றவர்களிடம் ஆலோசனை பெற வேண்டுமென நான் சிறிதும் நினைக்கவில்லை.

எனது அம்மா, சகோதரர்களை விட்டுப் பிரிவது மிகக் கொடிய வேதனையாக இருந்தது. அவர்களை மறுபடியும் வாழ்க்கையில் சந்திக்க முடியாது என்றே நினைத்தேன்.மாலை நேர வகுப்புக்குப் போவதாக அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்திருந்த பெண் போராளிகளின் முகாமுக்குச் சென்று என்னை இயக்கத்தில் இணைத்துக்கொள்ளும்படிக் கூறினேன்.அங்கு ஏற்கனவே என்னைப் போல இணைந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் மாமரங்களின் கீழே அமர்ந்திருந்தார்கள்.அவர்கள் பயிற்சிக்காகப் பூநகரி சங்குப்பிட்டிப் பாதைக்கூடாக யாழ்ப்பாணம் அனுப்பப்படுவதற்குத் தயாராக இருந்தார்கள். நான் அணிந்திருந்த தோடுகளையும் மணிக்கூட்டையும் கழற்றிப் பொறுப்பாளரிடம் கொடுத்தேன்.அவர்கள் அம்மாவிடம் ஒப்படைப்பதாகக் கூறினார்கள். அம்மாவுக்கு ஒரு சிறிய கடிதமும் எழுதிக்கொடுத்துவிட்டுப் புதிய போராளிகள் அணியுடன் போய் இணைந்துகொண்டேன்.

1991.07.29ஆம் திகதி நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக என்னை இணைத்துக்கொண்டேன். அன்றிருந்த சூழ்நிலையில் அதைத் தவிர எனக்கு வேறு எந்தத் தேர்வுகளும் இருந்ததாகத் தெரியவில்லை.எனது வாழ்க்கையில் சரியானதொரு தீர்மானத்தை நான் எடுத்துவிட்டதாகவே நம்பினேன்.எமது மூத்த தலைவர்கள் மேடைகளில் செய்த போர்ப் பிரகடனங்களுக்காக இளைய தலைமுறையின் வாழ்வு, யுத்த வேள்வித் தீயில் ஆகுதியாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்காக இளைய தலைமுறையினர் அந்த நெருப்புக்குள் ஆவேசத்துடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.
மூலம் -தமிழினி-தொடரும்….apr 11 2016