அறிந்தும் அறியாமலும்…(30) திராவிடரும் பார்ப்பனரும்

06 01 2018

அறிந்தும் அறியாமலும்…(30)  திராவிடரும் பார்ப்பனரும்

சென்ற வாரம் வெளியான கட்டுரைக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில நியாயமான கேள்விகளாகவும், சில அவதூறுகளாகவும் உள்ளன. நான் தி.மு.க. ஆதரவாளன் என்றும், அதனால் கலைஞரை ஆதரித்தே நான் எழுதுவதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். உண்மைதான். இதனை நானே ஆயிரம் முறை மேடைகளிலும், என் எழுத்துகளிலும் குறிப்பிட்டுள்ளேன். இதனைக் கண்டுபிடிக்க நிபுணர் குழு ஏதும் தேவை இல்லை. புதிதாக ஏதேனும் கண்டுபிடித்துச் சொன்னால் விவாதிக்கலாம். மேலும், என்னை நான் நடுநிலையாளன் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. யாருமே நடுநிலையாளர்களாக இருந்துவிட முடியாது. நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். மிகப் பலர் தங்களின் சார்பினை மறைத்துக் கொள்கின்றனர். அவ்வளவுதான் வேறுபாடு!

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சார்பும், நிலைப்பாடும், அவரவர் படிப்பு, அனுபவம், வாழ்க்கைச் சூழல் ஆகியனவற்றை ஒட்டி அமையும். நான் என் பக்கத்து வாதத்தை எடுத்து வைக்கின்றேன். என்னைப் பற்றி விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, நான் எழுதுவதைப் பற்றி விமர்சனம் செய்தால் அனைவருக்கும் பயன் உண்டு. நாம் அனைவரும் வழக்கறிஞர்கள்தான். தீர்ப்பைக் காலம் எழுதட்டும்! எனவே யாரும் யார் மீதும் தனிப்பட்ட பகை கொள்ளாமல், கருத்துகளின் மீது விவாதம் நடத்தினால், இந்தத் தளம் பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதுகின்றேன். பின்னூட்டங்களில் எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டிய தேவை இருப்பதை உணர்கின்றேன். ஏற்கனவே இவற்றுள் சிலவற்றிற்கு விடைகள் கூறப்பட்டுள்ளன என்றாலும், அவற்றை மீண்டும் ஒருமுறை கூறுவதில் பிழை இல்லை.

தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதில்லை. தமிழர்களாகிய நாம் மட்டும் ஏன் திராவிடர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு வினா. இது மிக நியாயமான கேள்வி என்றே பலருக்குத் தோன்றும். இது குறித்து, 'திராவிடத்தால் எழுந்தோம்' என்னும் என் நூலில் ஏற்கனவே ஒரு விளக்கத்தைத் தந்துள்ளேன். அதனை அப்படியே கீழே தருகின்றேன்: "திராவிடர் என்னும் சொல், அங்கொன்றும்,இங்கொன்றுமாக முன்பே பயன்படுத்தப் பட்டுள்ளது என்றாலும், கால்டுவெல்லுக்குப் பிறகே அது பெருவழக்காயிற்று! 1856இல், 'திராவிட அல்லது தென் இந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலை அவர் வெளியிட்ட பின்புதான், தமிழர்கள் யாரென்று, தமிழர்களே உணர்ந்தனர். சமற்கிருதத்தில் இருந்துதான் உலக மொழிகள் எல்லாம் உண்டாயின என்னும் பொய்க் கூற்றை அடித்துத் தகர்த்த பெருமை அறிஞர் கால்டுவெல்லுக்கே உண்டு. திராவிட மொழிக் குடும்பம் என்பது சமற்கிருதத்தோடு எத்தொடர்பும் உடையதன்று என்பதும் அக்குடும்பத்தில் தமிழே மூத்த முதன்மையான மொழி என்பதும் அந்நூல் அறிவித்த உண்மைகள்.

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு அல்லது கூர்க் ஆகிய ஆறு மொழிகள் திருந்திய மொழிகள் என்றும், துடா, கோட்டா, கோண்டு, கூ, ஓரான், ராஜ்மகால் ஆகிய ஆறு மொழிகள் திருந்தா மொழிகள் என்றும் அவர் கூறுகின்றார். அவற்றுள் தமிழே மிக மூத்த, பெரிதும் பண்படுத்தப்பட்ட மொழி என்பது அவர் கூற்று! தமிழைத் தங்கள் மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி என்றும், முதன்மையான மொழி என்றும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் ஏற்க மறுக்கின்றனர். கால்டுவெல் கூற்றையோ, திராவிடம் என்னும் சொல்லையோ ஏற்றுக்கொள்ளும் வேளையில் தமிழின் பெருமையையும் சேர்த்தே அவர்கள் ஏற்க நேர்கிறது. எனவே அம்மூவரும் தங்களைத் திராவிடர்கள் என்று உணர்வதும் இல்லை, சொல்லிக் கொள்வதும் இல்லை. தமிழின் தொன்மையை, செழுமையை, பழமையை ஏற்க மறுப்பவர்கள் திராவிடர் என்னும் சொல்லையும், திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தையும் ஏற்க மறுப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?

அவர்கள் நோக்கம் நமக்குப் புரிகிறது. தமிழின் பெருமையையும், தொன்மையையும் உணர்ந்த நாமும் ஏன் அவர்களைப் பார்த்து மயங்க வேண்டும்? திராவிடர் என்னும் சொல் அவர்களைப் பாதிக்கிறது, நம்மைப் பெருமைப் படுத்துகின்றது. எனவேதான், அவர்கள் அச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. நமக்கோ அச்சொல் இல்லாமல், தமிழக அரசியலும், வரலாறும் இல்லை." இன்னொரு விமர்சனம் பின்னூட்டத்தில் இடம் பெற்றுள்ளது. எல்லாச் சாதிகளையும் எதிர்க்காமல், பார்ப்பனர்களை மட்டுமே நான் எதிர்ப்பதாகவும், பார்ப்பனர் என்னும் சொல்லைக் கையாள்வதன் மூலம் அந்த வகுப்பினரை இழிவு படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எந்த ஒரு சமூகத்தினரையும் இழிவு படுத்துவதோ, கொச்சைப்படுத்துவதோ என்றும் என் போன்றவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. சக மனிதர்கள் அனைவரையும் மதிப்பதைப் போலவே அவர்களையும் மதிக்கின்றேன். எப்போதும் உரிய கண்ணியத்துடன் அவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்றே கருதுகின்றேன். பார்ப்பனர் என்று அவர்களைக் குறிப்பிடுவதன் நோக்கம் அவர்களை இழிவு படுத்துவதற்காக அன்று. அச்சொல் இழிவானதும் அன்று. அவர்களின் தொழிலாகவும், வாழ்க்கை முறையாகவும், குறி பார்த்தல், சோதிடம் பார்த்தல் ஆகியன இருந்தன. 'பார்த்தல்' என்னும் சொல்லை ஒட்டி, அவர்களின் சமூகம் பார்ப்பனச் சமூகம் என்று அழைக்கப்பட்டது. ஏன் அவர்களைப் பிராமணர் என்றோ, ஐயர் என்றோ, அந்தணர் என்றோ அழைக்ககூடாது என்று நீங்கள் கேட்கலாம்.

பிரம்மனோடு தொடர்புடையவர் அல்லது பிரம்மனின் தலையில் இருந்து பிறந்தவர் என்னும் பொருளிலேயே பிராமணர் என்னும் சொல் பயன்படுத்தப் படுகின்றது. பிரம்மன் மீதும், அந்தக் கருத்தியல் மீதும் நம்பிக்கை இல்லாத, அக்கருத்தை எதிர்க்கின்ற என் போன்றோர் எப்படி அந்தச் சொல்லை ஆளமுடியும்? ஐயர், ஐயங்கார் போன்ற சொற்களில் இடம் பெற்றுள்ள ஐ என்பது, தலைவர் என்னும் பொருளுடையது. எனவே ஐயர் என்றால் தலைவர், உயர்ந்தவர் என்று பொருள். நாம் எப்படி அவர்களை உயர்ந்தவர்களாகவோ, தலைவர்களாகவோ ஏற்க முடியும்? எல்லோரும் சமம் என்று கருதுவோர் யாரும் அச்சொல்லைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறே, அந்தணர் என்போர் அறவோர் என்பதால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் அறவோர் என எப்படிக் கூற முடியும்? அனைத்துச் சமூகத்திலும் அந்தணர்களும் உண்டு, கயவர்களும் உண்டு என்பதுதானே உண்மை. ஆதலால் ஒரு சமூகத்தை மட்டும் உயர்த்தியும், பிறர் அனைவரையும் தாழ்த்தியும் பேசும் சொற்களை நாம் கையாள வேண்டாம் என்பது சரிதானே!

பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கின்றீர்களே, மற்ற சாதியினரை ஏன் எதிர்ப்பதில்லை என்ற வினாவிற்கும் விடை சொல்ல வேண்டும். நாம் ஒட்டுமொத்தமாகச் சாதிகளையும், சாதி உணர்வையும் எதிர்க்கிறோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எல்லாச் சாதியினரிடமும் சாதி உணர்வு இருக்கிறது என்பதும் உண்மைதான். எனினும், அனைத்துச் சாதியினரின் சாதி உணர்வுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பதும், அனைவரின் சாதி உணர்வாலும் பயன்பெறுவதும் பார்ப்பனியமே என்னும் உண்மையை நாம் மறந்து விடக் கூடாது அல்லவா! எனவே வேரை விட்டுவிட்டுக் கிளைகளுக்கு வைத்தியம் பார்க்க கூடாதென்று கருதுகின்றோம்! சரி, மீண்டும் 'சுயமரியாதை இயக்கத்திற்கு' வருவோம்....

( சந்திப்போம் )  subavee-blog.blogspot 29 11 2014