சுயமரியாதை - 24 வெள்ளையருக்கு வால் பிடித்தவர்கள் யார்?

18 07 2018

சுயமரியாதை - 24 வெள்ளையருக்கு வால் பிடித்தவர்கள் யார்?

காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் செலுத்திய, சென்ற பகுதியில் நாம் பார்த்தவைகளைப் போன்ற நிகழ்வுகளைத்தான் பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் எதிர்த்தார்களே அல்லாமல், இந்திய விடுதலையை எதிர்க்கவில்லை. உண்மையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரியார் தன் மனைவி, தங்கையுடன் ஈடுபட்டவர். காங்கிரசை விட்டு வெளியில் வந்தபின்னும் கூடச் சில ஆண்டுகள் காந்தியாரை ஆதரிக்கவே செய்தவர். 1930களில் கூட, "வெள்ளைக்காரன் நாளைக்கு இந்த நாட்டை விட்டுப் போக வேண்டும் என்று நீ சொன்னால், இன்றைக்கே போக வேண்டும் என்று சொல்கிறவர்கள் நாங்கள்" என்று எழுதினார். ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் முற்றிலுமாக மறைத்துவிட்டு, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் எல்லாம் ஆங்கிலேயருக்கு வால் பிடித்த இயக்கங்கள் என்பது போன்ற உண்மைக்கு மாறான அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன.சைமன் கமிஷனை ஆதரித்தனர், ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தனர் என்பன போன்ற குற்றச்சாற்றுகள் கூறப்பட்டன. அவை உண்மைதான். ஆனால் அவற்றிற்கு மிக நியாயமான காரணங்கள் உள்ளன. அந்தச் செயல்கள் வெள்ளையர்களுக்குத் துணை போவதற்காகச் செய்யப்பட்டவை அல்ல. அவை குறித்த விளக்கங்களைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

1920இல், மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தபின், இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின் இவை குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி, 1927 நவம்பரில், சர் ஜான் சைமன் என்பவர் தலைமையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற அட்லீயும் அந்த எழுவரில் ஒருவர். அந்தக் குழு, இந்திய நிலைமைகளை ஆராய்வதற்காக, 1928 பிப்ரவரி 3 ஆம் நாள் இந்தியா வந்தடைந்தது. அந்தக் குழுவைக் காந்தியாரும், காங்கிரசும் மிகக் கடுமையாக எதிர்த்தனர். "சைமன் குழுவே திரும்பிப் போ" என்னும் முழக்கம் இந்தியாவெங்கும் எழுந்தது. சைமன் குழுவை எதிர்ப்பதுதான் தேசபக்தியின் அடையாளம் என்கிற அளவுக்கு நிலை அன்று ஏற்பட்டது. அந்தக் குழுவில் உள்ள எழுவரில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பதே எதிர்ப்பிற்கான முதன்மையான காரணம். அந்த எதிர்ப்பு நியாயம் என்றே மக்களும் கூடக் கருதினர். ஆனால் அந்த எதிர்ப்பு முட்டாள்தனமானது என்றார் பெரியார். சைமன் குழு எதிர்ப்பை மறுத்து, அக்குழுவின் முன்னால் தனது அமைப்பின் கருத்தை வெளியிட்ட இன்னொரு தலைவர் அண்ணல் அம்பேத்கர்.

சைமன் குழுவை ஏன் எதிர்க்க வேண்டியதில்லை என்பது குறித்துப் பெரியார் விளக்கமாகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். "பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவர்கள் அமைக்கும் கமிஷனை மட்டும் எதிர்ப்பதென்பது கொஞ்சமாவது அர்த்தம் உடையதாக இல்லை" என்றார் பெரியார். "இந்தப் பார்ப்பன அரசியல் தந்திரத்தைப் பின்பற்றுவதும், அவர்களது இயக்கங்களை நாம் பின்பற்றுவதும், பார்ப்பனர் அல்லாத சமூகத்தின் தற்கொலையே ஆகும்" என்று தெளிவுபடாக் கூறினார்.

இந்தக் கூற்றில் ஒரு மிகப் பெரிய உண்மை உள்ளது. காங்கிரஸ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1930 வரையில் எப்போதும், எந்த ஒரு மாநாட்டிலும் கங்கிராஸ் கட்சி இந்திய விடுதலையைக் கோரவில்லை. விட்டோரியா மகாராணியையும் ஆங்கில அரசையும் பாராட்டிப் பல தீர்மானங்கள் காங்கிரஸ் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட சுயாட்சி என்பதுதான் காங்கிரசின் ஆகப் பெரிய கோரிக்கையாக இருந்தது. அவர்கள் நாட்டை ஆள்வதை ஏற்றுக்கொண்ட இந்த நிலையில், அவர்கள் ஒரு குழுவை அனுப்புவதில் என்ன பெரிய ஏமாற்றம் இருக்க முடியம் என்பதோடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இப்படிக் குறிப்பிட்ட போது , ஏன் காங்கிரஸ் கட்சியும் அதில் உள்ள முக்கியப் பார்ப்பனர்களும் இது குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று கேட்டார் பெரியார்.

அந்தக் குழுவில் இந்தியர் ஒருவராவது இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயம்தானே என்று கேட்டபோது, அதிலும் பெரிய நியாயம் எதுவுமில்லை என்பதைத் தக்க சான்றுகளோடு அவர் விளக்கினார். ரவ்லட் குழுவில் (Rowlett commission) முக்கிய இடத்தில் ஓர் இந்தியர் இருந்தும், அதன் விளைவுகள் என்ன ஆயின என்றும் கேட்டார். அதை படிக்கும்போதுதான், அக்குழுவில் ஓர் இந்தியரும் இருந்த செய்தியே இன்று பலருக்கும் தெரிய வரும்! (தொடரும்) subaveeblog  28 sep 2016