சுயமரியாதை - 37 முதலும் கடைசியுமாய் ஒரு மாநாடு!
16 09 2018
சுயமரியாதை - 37 முதலும் கடைசியுமாய் ஒரு மாநாடு!
சுயமரியாதை இயக்கம் தந்த எந்த விளக்கத்தையும் ஜீவா உள்ளிட்ட தோழர்கள் ஏற்கவில்லை. இதற்கிடையே, 1935 நவம்பரில் நீதிக்கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பெரியாரின் திட்டத்தைச் சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்வதாக நீதிக்கட்சி அறிவித்தது. 'விடுதலை' ஏடு நாளேடாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுவேலைத் திட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பெரியாரும் ஒருவராக நியமிக்கப்பட்டது, சிங்காரவேலர், ஜீவா போன்றோரிடம் பெரும் சினத்தை உருவாக்கியது. இப்படிப்பட்ட குழப்பமான நேரத்தில், 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருத்துறைப்பூண்டியில் சுயமரியாதை மாநாடு கூடிற்று. அந்த மாநாட்டில், மேடையில் பெரியாரை வைத்துக் கொண்டே, "இன்றைய இளைஞர்கள், தோழர் ஈ.வெ.ரா.வின் தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேறட்டும்" என்று ஜீவா பேசினார்.அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் புதுக்கோட்டை முத்துச்சாமி வல்லத்தரசும் அதே பாணியில் பேசினார். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பெரியார், இறுதியில் தன் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். ஏறத்தாழ அவர்கள் சேர்ந்திருந்த கடைசி மேடை அதுதான். அதன்பின் அவர்கள் முற்றிலுமாகப் பிரிந்து போய் விட்டனர்.
பிறகு ஜீவா உள்ளிட்டோர், சுயமரியாதை சமதர்மக் கட்சி என ஒன்றை நிறுவ முயன்றனர். அக்கட்சியின் அமைப்பு மாநாடு, அடுத்த மாதமே, 12.04.1936 அன்று திருச்சி, தென்னூரில் நடைபெற்றது. அதற்குப் .புதுக்கோட்டை வல்லத்தரசு தலைமை ஏற்றார். . பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம், அதே திருச்சியில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. ஒரு வேடிக்கையான முரண் எதுவெனில், அதுவே அக்கட்சியின் இறுதி மாநாடாகவும் அமைந்தது என்பதுதான்.1935 ஆம் ஆண்டு வரையில், காங்கிரசை, பூர்ஷுவா, நிலப்பிரபுத்துவக் கட்சி என்று வருணித்த பொதுவுடைமைக் கட்சியினர், 1936இல், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்குக் காங்கிரசை ஆதரிப்பதே சரி என்று கருதினர். "காங்கிரசை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மேடை" என்றும் அறிவித்தனர். அந்நிலையில், பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் ஆதரவாளருமான எஸ்.ஏ. டாங்கே திருச்சி மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் அப்போதுதான், மீரத் சாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்திருந்தார். அம்மாநாட்டில் அவர் ஆற்றிய உரை கவனிக்கத்தக்கது.
'இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது தடை செய்யப்பட்டிருந்ததாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தை உந்தித் தள்ள வேண்டியதே அப்போதைய முதல் கடமை என்று தாம் கருதுவதாலும், காங்கிரசுக்குள்ளேயே புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் அனைவரும் சேர்ந்து பணியாற்றலாம்' என்னும் பொருள்பட அவர் பேசினார். அவர் பேச்சுக்கு மாநாட்டில் பெரும் வரவேற்பு இருந்தது.அக்கருத்தை ஏற்றுக் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அம்மாநாடு கலைந்தது என்று, பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களான சி. சுப்பிரமணியனும், கே. முருகேசனும் எழுதுகின்றனர். அம்மாநாடு கலையும்போதே, அக்கட்சியும் கலைந்து போயிற்று.
(தொடரும்) subaveeblog 06 11 2016