ரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது?

29 08 2019

ரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது?

சமீப காலமாக நடிகர்கள் சமூகப் பிரச்சினைகளை ஒட்டி கருத்து சொல்வது என்பது அதிகரித்துள்ளது. சூர்யா, விஜய் சேதுபதி என பலர் பொதுவெளியில் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக சொல்கின்றார்கள். ஆனால் அவை எல்லாம் பெரிய எதிர்ப்பை சந்திப்பதில்லை. காரணம் அவர்கள் பொதுச்சமூகத்தின் பெரும்பான்மையினரின் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார்கள். புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவும், காஷ்மீர் பிரச்சினை பற்றி விஜய் சேதுபதியும் பதிவு செய்த கருத்துக்கள் என்பது தனிப்பட்ட சூர்யா அல்லது விஜய் சேதுபதியின் கருத்தல்ல, அது ஒட்டுமொத்த தமிழகத்தின் பொதுவான எண்ணமாகும். இந்த எண்ணம் என்பது தமிழ்ச் சமூகத்தை இயக்கும் சில பொதுவான கோட்பாடுகளில் இருந்து உருவானது. பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ்நாட்டை இந்தியாவோடு அடையாளப்படுத்திப் பார்க்காமல் தனிநாடாகக் கருதும் மனநிலை போன்றவை இங்கே பல தசாப்தங்களாக உருவாகி வளர்ந்துள்ளது. இந்தப் பொதுச் சிந்தனையை யார் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்துகின்றார்களோ, அவர்கள்தான் தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றார்கள், ஜனநாயக சக்தியாக அங்கீகரிக்கப்படுகின்றார்கள்.

ஆனால் பாசிஸ்ட்கள் என்பவர்கள் பொதுச் சமூகத்தின் சிந்தனையோட்டத்திற்கு எதிராக தங்களின் கருத்தை கட்டமைக்க விரும்புகின்றவர்கள். இவர்கள் தங்களின் சிந்தனையை முதலாளித்துவ அடிவருடித்தனத்தில் இருந்தும், தன்னுடைய சக மனிதனை தன்னைவிட கீழானவன், மேலானவன் என கருதும் கீழ்த்தரமான சாதி, இனம், மொழி ஆகியவற்றில் இருந்தும் பெற்றுக் கொள்பவர்கள். இது போன்ற பாசிஸ்ட்டுகளுக்குத்தான் தங்களின் கருத்துக்களை நம்ப வைக்க ஆன்மீக முகமூடி தேவைப்படுகின்றது. தன்னைச் சுற்றி ஒரு தெய்வாம்ச பிம்பத்தைக் கட்டியமைப்பதன் மூலம் அவர்கள் தன்னுடைய பழைய கீழ்த்தரமான, தனிமனித ஒழுக்கமற்ற அயோக்கியத்தனங்களை மூடி மறைத்துக் கொள்ளவும், பொதுச் சமூகத்தின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நபராக காட்டிக் கொள்வதன் மூலம் அரசியல், பொருளாதார லாபங்களை அறுவடை செய்யவும் முற்படுகின்றார்கள்.

இந்த வழியைத்தான் ரஜினி என்ற அற்பவாத புத்தி கொண்ட பாசிஸ்ட் தொடர்ச்சியாக செய்து வருகின்றார். அதைச் செய்வதற்காகத்தான் ஆன்மீக அரசியல் என்ற பிற்போக்கு அரசியலை கையில் எடுத்திருக்கின்றார். அதற்கு ஏற்றார்போல தன்னை பெரிய பக்திப் பழம் போன்றும், மெய்ப்பொருளை கண்டறிய தீவிரமாக ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருக்கும் ஞானியைப் போலவும் ஒரு பிம்பத்தை கட்டமைக்க பல ஆண்டுகளாக முயன்று வருகின்றார். இமயமலைக்குப் போவது, அங்கே குகையில் அமர்ந்து தியானிப்பது போன்ற புகைப்படங்களை ஊடகங்களுக்குத் திட்டமிடே கொடுத்து வெளியிடவைப்பது, தன்னை பாபாஜியின் அருள் பெற்றவன் என்று தன்னுடைய வாயிலேயே சொல்லிக் கொள்வது, அதன் மூலம் தான் ஆன்மீகத்தில் பெரிய கரை கண்டவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது - இவை எல்லாம் ரஜினி திட்டமிட்டு தன்னுடைய பிம்பத்தை கட்டமைக்க செய்யும், செய்து கொண்டிருக்கும் மோசடியான செயல்கள் ஆகும்.

ஆனால் ரஜினி ஏன் இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார் என்று உங்களுக்குள் கேள்வி எழுந்தால், நீங்கள் உடனே செய்ய வேண்டிய ஆராய்ச்சி ரஜினிக்கும், சங்கி கும்பலுக்கும் உள்ள கள்ள உறவைப் பற்றித்தான். மோடி கேமரா சகிதம் இமயமலைக்கு சென்று அதைப் போட்டோ எடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்ததையும், அதே போல ரஜினியும் கேமரா, வீடியோ சகிதம் இமயமலைக்கு சென்று தன்னுடைய ஆன்மீக நடிப்பைப் பதிவு செய்து ஊடகங்களுக்குக் கொடுத்ததையும் ஒருங்கிணைத்துப் பார்த்தீர்கள் என்றால் பாசிஸ்ட்களை இணைக்கும் மையப்புள்ளியை கண்டு கொள்வீர்கள். தமிழ்நாட்டில் காலூன்ற திராணியற்ற பிஜேபி சங்கி கும்பல் தாயார் செய்து வைத்திருக்கும் பாசிஸ்ட்தான் இந்த ரஜினி என்ற காரியவாதப் பைத்தியம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

ஆனால் தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பிஜேபி போடும் கணக்குகள் எப்போதுமே பொய்த்துப் போவது போலத்தான் ரஜினியை வைத்து தமிழ்நாட்டில் காலூன்றப் போடும் திட்டமும் பொய்த்துப் போகப் போகின்றது. ரஜினியை திரைப்படங்களில் வில்லன்களைப் பறந்து பறந்து வேடையாடும் கதாநாயகனாகப் பார்த்த தமிழக மக்கள் தற்போது அவரை ஒரு அற்பப் பிறவியாக, பார்ப்பன பாசிஸ்ட்களுக்கு சொம்பு தூக்கும் சதிகாரனாக, தமிழின துரோகியாக, தூத்துக்குடியில் ஸ்டெரிலைட் ஆலையை மூடச் சொல்லி போராடிய மக்களை எல்லாம் தீவிரவாதிகள் என்று சொல்லி வேதாந்தாவின் காலில் விழுந்தவராகப் பார்க்கின்றார்கள்.

தமிழ்நாடு இந்த பார்ப்பன பாசிச தேசியத்தில் இருந்து எப்போதாவது நிச்சயம் விடுபடும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களின் தேசிய இன விடுதலைக் போராட்டத்திற்கு அதிகமாக ஆதரவு கொடுக்கும் மாநிலமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் இந்த பொது சிந்தனைக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தில் கருத்து சொல்லி இருக்கின்றார் ரஜினி. "பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய்வீடாக இருக்கின்றது. இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ நுழைவாயிலாக காஷ்மீர் இருக்கின்றது. அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ராஜதந்திரமாக முன்கூட்டியே 144 தடை உத்தரவை ஏற்படுத்தி, அங்கு பிரச்னை செய்பவர்களை வீட்டுச் சிறையில் வைத்து விட்டு, அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், மாநிலங்களவையில் பெரும்பான்மையை ஏற்படுத்தி அதற்குப் பின்னர் மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். இது அருமையான ஒரு ராஜதந்திரம். இதனை விவாதம் செய்து, அது பிரிவினைவாதிகளுக்கெல்லாம் தெரிந்திருந்தால் இப்படி நடக்கவே விட்டிருக்க மாட்டார்கள். தயவு செய்து அரசியல்வாதிகள் எதை அரசியல் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புப் பிரச்னை” என்று கூறி இருக்கின்றார்.

ரஜினி போன்ற பாசிஸ்ட்கள் ஏன் மிக ஆபத்தானவர்கள் என்பதை இதன் மூலம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாம். எதிர்க்கட்சிகளை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, அந்த மண்ணின் மக்களை ஒடுக்க 144 போட்டு, சட்டமன்றம் செயல்படாத நிலையில் அந்த மாநிலத்தைக் கூறு போட்டதை ஒருவன் ஏற்றுக் கொள்கின்றான் என்றால், அவனது ஜனநாயகப் பண்பு எவ்வளவு கேடுகெட்டத்தனமாகவும், அழுகி நாறிப் போனதாகவும் இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற சிந்தனைகள் சங்கிகளிடம் மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பான ஒன்றாகும் என்பதை நாம் உணர்ந்து கொண்டால் ரஜினியை உணர்ந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமானதல்ல.

இது போன்ற காரணங்களால்தான் தமிழ்நாட்டு மக்கள் பிஜேபியை ஒரு மலமாகவே நினைக்கின்றார்கள். அதனால்தான் அந்த மலத்தில் கால் வைத்த யாரையுமே இந்த மண்ணில் வேர்கொள்ள தமிழ்நாட்டு மக்கள் அனுமதிப்பதில்லை. அதிமுக முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மண்ணை கவ்வியதற்குக் முக்கிய காரணமே அது மலத்தோடு கூட்டணி வைத்ததுதான். மிகப் பெரிய கட்சி வலைப் பின்னலையும், தொண்டர்களையும் வைத்திருக்கும் அதிமுகவிற்கே இந்த நிலை என்றால், ரஜினி போன்ற அற்பப் பதர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் வரும் காலத்தில் நிச்சயம் சரியான புத்தி புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

ரஜினிக்கு நடிக்கத் தெரிந்த அளவிற்கு தமிழ் மக்களின் நாடி என்ன என்று கணிக்கத் தெரியவில்லை. ரஜினியின் கருத்துக்கள் அவரை இன்னும் அதிகமாகவே இந்த மண்ணுக்கும் மக்களுக்கு அந்நியமான நபராகவே கொண்டு போய் நிறுத்திக் கொண்டு இருக்கின்றது. எப்படி எச்.ராஜா, இல.கணேசன் உட்பட பாஜக பார்ப்பனக் கும்பலின் தமிழர் விரோதப் பேச்சுகளால் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு சவக்குழி மிக எளிதாக தோண்டப்பட்டதோ, அதே போல ரஜினியின் பாசிச பேச்சுக்கள் அவரை பிஜேபியின் கைக்கூலி என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கின்றது.

ரஜினி சாவதற்குள்ளாவது அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சர்க்கரை, ரத்த அழுத்தம், முதுமை இவற்றோடு வயது முதிர்ந்த பல ரஜினி ரசிகர்கள் தன்னுடைய அந்திமக் காலத்தில், எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். சண்டைக் காட்சிகளுக்கு மட்டுமே டூப் போடும் நிலையில் இருந்த ரஜினி தற்போது முழு படத்துக்குமே டூப் போடும் நிலைக்கு வந்திருக்கின்றார். ஆனால் இன்னமும் வருவேன், வருவேன் என்று சொல்லி, பாவம் தன்னுடைய ரசிகர்களை அவர் காக்க வைத்துக் கொண்டே இருக்கின்றார்.

அதனால் ரஜினி காஞ்சிபுரம் சென்று வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தாலும், அமித்ஷாவுடன் கை குலுக்கினாலும், எந்த ஒரு சிந்தனை மாற்றமும் தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனென்றால் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது, ரஜினியின் மண்டையில் இருப்பது மூளை அல்ல, அது மாட்டுச் சாணி என்பது.

- செ.கார்கி keetru.com 16 aug 2019