இந்திய ஹிட்லரிசம்
30 09 2019
இந்திய ஹிட்லரிசம்
இந்திய தேசம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. இந்த எழுபது ஆண்டுகளில் பல கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. ஆனால், அரசியல் நோக்கர்களும், ஜனநாயக சக்திகளும் இந்திரா காந்தியின் அவசரநிலை பிறப்பித்த காலத்தையே கறுப்பு நாள் என்று அழைக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அனைத்து உரிமைகளையும் இந்திரா அரசு முடக்கியது. பத்திரிக்கைகள் அவர்களின் தலையங்கத்தை “என்னத்த எழுத“ என்ற ஒரு வார்த்தையை மட்டும் எழுதி இதர இடங்களை வெற்றிடமாக விட்டனர். ஒரு சர்வாதிகாரி போல நடந்த இந்திரா அரசை மக்கள் தூக்கி வீசினார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக அம்சங்கள் சேர்ந்து இருக்க வேண்டும். அது நீர்த்துப் போவதை மக்கள் எப்போதும் விரும்புவதில்லை என்ற பாடம் வரலாறு முழுக்க உண்டு.
ஹிட்லர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் ஊழியராக வந்தவன். தலைமை பீடத்துக்கு வந்த பின்பு அவனின் சர்வாதிகார முகம் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்தது. அவனும் வளர்ச்சி, தேசப் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்தே மக்களை நோக்கி வந்தவன். பின்னால் அவனுக்குள் இருந்த இனவெறி ஜெர்மானிய மக்களை படாதபாடு படுத்தியது. அவனது நாசிப்படை ரஷியாவின் மக்கள் படை முன்பு மண்டியிட்டு மாண்டு போனது. அத்தோடு அவனின் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. எல்லா சர்வாதிகாரமும் வீழும் என்பது வரலாறு.
ஹிட்லர் தனது காலத்தில் படிப்படியாக செய்த அனைத்து செயல்பாடுகளும் இப்போது இந்தியாவில் நிகழ்வதுதான் பெரும் அச்சமாக உள்ளது. பல ஆண்டுகளாக மக்கள் தங்களது அடிப்படை உரிமை என்று நினைத்துக் கொண்டு இருந்த பல அம்சங்கள் அரசால் கபளீகரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நினைத்ததைப் பேச, எழுத, கருத்து சொல்ல, விரும்பியதை சாப்பிட என்று எதனைச் செய்தாலும் அதன்மீது அரசு தனது வல்லாண்மையைக் காட்டுகிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி நெருக்கடியை உண்டாக்குவது என்று உளவியல் ரீதியாக தாக்குதலை குடிமக்கள் மீது அரசு நேரடியாகவும் அல்லது அவர்களின் ஏஜென்ட் மூலமாகவும் நடத்துகிறது. ஒரு பெரும் அச்சத்தின் பிடியில் மக்கள் இருக்க வேண்டுமென்று நினைப்பது ஹிட்லரிசம். இந்தியாவில் இப்போது ஹிட்லரிசம் என்ற தத்துவத்தின் கீழ்தான் மக்கள் அணி திரட்டப்படுகின்றனர். தேச பக்தியையும், மதப் பற்றையும் பெரிதுபடுத்தி மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதார ஒடுக்குமுறையை சிதறடிக்கும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்கு ஏற்படும் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும், வாங்கும் திறன் குறைந்து போவதையும் எதிர்கொண்டு சரி செய்ய முடியாத இயலாமையை பல்வேறு பதற்றம் தரும் செயல்கள் மூலம் திசை திருப்பும் நுட்ப நகர்வை பாசிசம் செய்கிறது.
கடந்த ஐந்த ஆண்டுகளில் இந்தியாவின் பல அறிவுஜீவிகள் இந்துத்துவ நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இஸ்லாமியர்களும், தலித்துகளும், மாட்டுக்கறி வைத்து இருந்தார்கள் என்றும், சாப்பிடுபவர்கள் என்று சொல்லியும் இருநூறுக்கும் அதிகமான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து கொலைகளும் தேசம் முழுவதும் நடந்து உள்ளது.
ராமனை வணங்குபவர்கள் உச்சரிக்கும் “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கம் இப்போது கொலைக்கான முழக்கமாக திட்டமிட்டு மாற்றப்படுகிறது. பெரும்பான்மை இந்துக்கள் பலரும் ராமனின் பெயரில் நடக்கும் இந்தக் கொலை பாதக நடவடிக்கைகளை விரும்புவது இல்லை. இது ராமனை வேண்டுமென்றே “கொடூர வில்லனாக” உருவகப்படுத்தும் மோசமான நடவடிக்கை என்று கருதுகின்றனர். ஆனால் இந்துத்துவவாதிகள் இது குறித்து எந்தக் கவலையும் கொள்வதில்லை. அவர்களுக்கு வேண்டிய அரசப் பாதுகாப்பும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் தாராள உதவியும் பொதுமக்கள் மனநிலை குறித்து கவலைப்படத் தேவையில்லாத நிலையை உருவாக்கி உள்ளது. அவர்களைப் பொருத்தவரை “இந்து தேசியம்” அமைப்பது, அதற்குத் தடையாக இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் மோசமாக ஒடுக்குவது.
அனைத்தையும் ஒற்றையாக்குவது. ஒரே நாடு, ஒரே கார்டு, ஒரே சட்டம், ஒரே கல்வி, ஒரே உணவு என்று அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் செயல் திட்டம் பாசிச தத்துவத்தால் வகுக்கப்படுகிறது. இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழும் தேசத்தில் ஒற்றைப் பண்பாடு என்பது மக்களின் வாழ்வியல் முறையை எந்தக் கருணையும் இல்லாமல் நசுக்குவதாகும். ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கும் ஒவ்வொரு பண்பாடும், வாழ்வியல் முறையும் இருக்கும். அந்தந்த நிலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு எம்மாதிரியான உணவுமுறை தேவையோ, அது அங்கு விளைவிக்கப்படும், விளையும். அதுபோலவே கலாச்சரமும். ஆனால் தற்போது அது திட்டமிட்டு அழிக்கப்படுவதும், ‘எல்லாமும் ஒற்றை’ என்ற முழக்கமும், ஹிட்லரின் நாசிசக் கொள்கைகளின் நீட்சியே. இந்த வல்லாதிக்க செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள் என்றும், அர்பன் நக்சல்கள் என்றும் முத்தரை குத்தப்பட்டு, அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் குறுக்குப் புத்தியும் அரசால் கட்டமைக்கப்படுகிறது.
இந்துக்களைத் தவிர இந்தியாவில் உள்ள இதர மதங்களைச் சேர்ந்தவர்களை இரண்டாம் குடியுரிமை மக்களாக கட்டமைப்பதும் (புத்த, சீக்கிய மதத்தை இந்து மதத்தின் துணை மதமாக உள்வாங்குவதும்), இந்துக்கள் மட்டுமே இந்தியாவின் குடிமக்களாக அறிவிப்பதும், அதற்காக வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகள் மூலம் தொடர்ச்சியான கருத்துத் திணிப்பை செய்வதுமாக இருக்கிறார்கள்.
1925 ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கப்பட்டாலும் அமைப்பை எங்குமே பதிவு செய்யாமல் (உறுப்பினர் பதிவும் இல்லை) அதனின் சித்தாந்தத்தை துணை அமைப்புகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளகிறது. உறுப்பினர் பதிவு என்ற முறைமை இல்லாதது அவர்களுக்குப் பல வகையில் உதவிகரமாக உள்ளது. குண்டு வெடிப்போ, கலவரமோ செய்த நபர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று சொன்ன மறுநிமிடம், அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்து விடுகிறார்கள். மகாத்மா காந்தியின் கொலையின் போதும் அதுதான் நடந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. வல்லபாய் பட்டேல் அவர்கள் தடையை நீக்கினார். (பட்டேல் சிலை நிறுவப்பட்டதற்கான காரணத்தை இதற்குள்ளும் தேடலாம்) தொடர்ந்து, 1970களில் அவசர நிலைக் காலத்தில் இரண்டு ஆண்டுகளும், 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது சில மாதங்களும் தடை செய்யப்பட்டது.
அவர்கள் உருவாக்கியிருக்கும் துணை அமைப்புகள் சமூகத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் இயங்கும் சங்பரிவார் அமைப்புகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள தன்மைக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்கி, அதன்மீது வெகுமக்களை ஈர்க்கிறது. இளைஞர்களை அந்த கோரிக்கையின் மீது கவனப்படுத்த தொடர்ச்சியான திட்டங்களை வகுத்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் தங்களது கொள்கைகளை வெளிப்படுத்த மோசமான நடவடிக்கைகளிலும் இயங்குகிறது. இந்தியாவில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கும் கலவரங்களுக்கும் துணை அமைப்புகளே காரணம் என்று பல வழக்குகளில் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன; பல வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. மலேகான், ஜும்மா மசூதி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமான அசிமானந்தாவின் வாக்குமூலங்கள், இந்து தேசியத்தைக் கட்டமைக்க பொதுமக்கள் பலியானாலும் பரவாயில்லை என்று அவர்கள் எந்த உச்சத்துக்கும் செல்வார்கள் என்பதைக் காட்டுகின்றன.. தேசத்தின் பல இடங்களில் அவர்கள் தங்களுக்குச் சொந்தமான இடங்களில் வெடிகுண்டு வைக்கும்போது, வெடித்து இறந்த சங்பரிவார் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம். இஸ்லாமியர் போல வேடமிட்டு குண்டுகளை வைப்பதுதான் அவர்கள் திட்டம் என அவர்களின் முகம் அம்பலப்பட்ட பல விபத்துகளின் அறிக்கை குறிப்பிடுகிறது (மஹாராஷ்டிரா பர்பானி, ஜால்ரா, பூர்னா , கான்பூர்... பட்டியல் நீளும்).
அவர்களின் இந்து தேசியத்தை அமைக்கத் தடையாக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டுமென்பதுதான் அவர்களின் முதல் இலக்கு. அந்த இலக்கில்தான் பல செயல்பாட்டாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டனர். தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, எழுத்தாளர் கௌரி லங்கேஷ் என்று பலரை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அனைத்தும் ஒரேமாதிரி இருப்பதை போலீசார் விசாரணையில் தெரிந்தது. நரேந்திர தபோல்கர் மகராஷ்டிராவில் தொடர்ச்சியாக மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம் கொண்டுவரச் சொல்லி போராடிக் கொண்டு இருந்தார். இந்தக் கொலைக்குப் பின்னால் சனாதன் சன்சாத் என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாக காவல்துறை சிலரைக் கைது செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள சரத் கலாஸ்கர் தன்னுடைய வாக்குமூலத்தில், நரேந்திர தபோல்கரை எவ்வாறு சுட்டேன் என்று வாக்குமூலம் அளிக்கிறார். “நரேந்திர தபோல்கரை தலையில் சுடுமாறு எனக்கு சொல்லி அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தலையில் ஒரு குண்டும், கண்ணுக்கு மேல் ஒரு குண்டும் என இரண்டு குண்டுகள் அவர் தலையை துளைத்துச் சென்றது. என்னுடன் வந்த சச்சின் அந்துரே என்ற கூட்டாளியும் அவரைச் சுட்டார். பின்னர், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவின் பெல்காமில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இந்துத்துவ கருத்துக்கு எதிராக செயல்படுபவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் கௌரி லங்கேஷ் பெயரும் இருந்ததால் அவரையும் கொலை செய்தோம்.”
இந்துத்துவா தலைமை அமைப்புகள் அதனின் துணை அமைப்புகளைக் கொண்டு தேசம் முழுக்க வன்முறை மூலமாவது இந்துத்துவா தத்துவத்தை நிறுவப் பார்க்கிறார்கள். அந்த வன்முறையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பலியாக்கப்படுகின்றனர். 2008ம் ஆண்டு தானே மற்றும் வஷி பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் சனாதன் சன்சாத் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு 2011 ஆகஸ்ட் மாதம் மும்பை உயர்நீதி மன்றம் பத்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கியது. இப்படி தேசம் முழுக்க பல்வேறு இடங்களில் இந்துத்துவ கருத்துக்காக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
இன்னொருபுறம் “கர்வாபசி” என்ற பெயரில் வடமாநிலங்களின் பல இடங்களில் கட்டாய மத மாற்றம் நடைபெறுகிறது. மதம் மாறாதவர்களை அடிப்பதும், பல்வேறு வகையில் நெருக்கடியை உண்டாக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. அசாமில் தாய் மதத்திற்குத் திரும்பவில்லை என்றால் ரேசன் பொருட்கள் இல்லை என்று கிருஸ்துவர்களை நிர்பந்திப்பதும் நடைபெறுகிறது. நாடு முழுக்க மசூதி, சர்ச்சுகளைத் தாக்குவது, எல்லாவற்றையும் மத மோதலாக மடை மாற்றுவது என்று “இந்து தேசத்தை” கட்டியமைக்க அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை யாவும் தேசத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கவே. எல்லாம் இந்துமயம் என்று சொன்னாலும் இந்து மதத்திற்கே உண்டான சாதியப் படிநிலை குறித்து எங்கும் பேசுவது இல்லை. அதனைப் பேசினால் தங்களது அடிப்படையே தகர்ந்து போய் விடுமென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பட்டியல் இன மக்களும் இந்துக்கள்தான் என சொல்லிக் கொண்டே, அவர்கள்மீது இரக்கமற்ற தாக்குதல்களைத் தொடுப்பது. அவர்களின் குலதெய்வ வழிபாட்டில் பார்ப்பனிய வழிபாட்டு முறையை உட்புகுத்துவது (ஆனால் தொட்டால் தீட்டு), அவர்களின் உணவு முறையை மறுப்பது என்று அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலும் நடைபெறுகிறது.
அவர்களின் இந்து சாம்ராஜ்யத்துக்காக பொது சிவில் சமூகத்தையே கிரிமினல் சமூகமாக மாற்றுவது, இந்துக்களைத் தவிர இதர மதங்களைச் சேர்ந்தவர்களை பொது இடத்தில் வைத்து அடித்தால் அது தவறில்லை என்ற மனநிலையை அவர்களின் அனைத்தை வாய்ப்புகளையும் பயன்படுத்தி உருவாக்குவதுதான் பெரும் ஆபத்தான நகர்வாகும். இது மாற்று மதத்தவர்கள் தெருவிலே நடக்க முடியாத சூழலை உருவாக்கி விடும். தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் “ஷாகா’ என்ற பெயரில் சின்ன குழந்தைகளுக்கு அந்த விஷம் ஏற்றப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எல்லோரும் இந்துக்கள், இது இந்துக்கள் நாடு, இந்துக்கள்தான் ஆள முடியும், இந்து மட்டும்தான் இருக்க முடியும் என “இந்து, இந்து” என்ற சொல்லை திரும்பத், திரும்ப முன்மொழிந்து, எல்லோரையும் ஒரு குடுவைக்குள் அடைத்து, மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரச் சுரண்டலை வெகு நாளைக்கு செய்ய முடியாது. இந்த அரசு கார்ப்பரேட்களின் பாதுகாவலன். நம்மை ‘இந்து” என்ற மாயவலையில் வைத்து, கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கிறது என்று மக்கள் தெளிவு பெறும் கணம் அவர்களின் தலைப்பாகை தரையை நோக்கி விழத் தொடங்கி விடும்.
- அ.கரீம்