மாநிலங்களுக்கான நிதி உரிமையைப் பறிக்கும் நடுவண் ஆட்சி
28 10 2019
மாநிலங்களுக்கான நிதி உரிமையைப் பறிக்கும் நடுவண் ஆட்சி
பாஜக தலைமையிலான மத்திய அரசு 'ஒரே நாடு - ஒரே சந்தை - ஒரே வரி' என்பதை படிப்படியாக செயல்படுத்தியது போலவே, 'ஒரே நாடு - ஒரே ஆட்சி' என்ற நிலைக்கும் திட்டமிடுகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது, மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே மக்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகவே இருக்கின்றன
இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப் போக திட்டமிடுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் மத்திய அரசு நினைத்தால்தான் முடியும் என்று நம்ப வைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. இந்தியா கூட்டுறவு - கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், சந்தை, மக்கள் தொகை என தனித்துவமாக விளங்கி வருகின்றன.அந்தந்த மாநிலத்துக்குத் தேவையானதை மாநில அரசுகள்தான் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் முடியும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், எல்லாவற்றையும் மத்தியில் இருந்தே கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிடுகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 15ஆவது நிதிக்குழுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள குறிப்பு விதிமுறைகளுடன் (Terms of Reference - TOR) கூடுதலாக ஒரு விதிமுறையினை வழங்கியுள்ளது.அது மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 42 சதவீத நிதி நிலையை மேலும் குறைக்கும் நடவடிக்கையாகும். ஏற்கெனவே வழங்கப்பட்ட குறிப்பு விதிமுறைகளே தமிழகம் உள்ளிட்ட அனைத்து தென் மாநிலங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் அவை கடுமையாக எதிர்க்கப்பட்டன. இப்போது சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் குறிப்பு விதிமுறை மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 42 சதவீதத்தை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் விதிமுறை வெளிநாட்டு, உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒரு நிரந்தர நிதியினை (non lapsable fund) உருவாக்க வேண்டும் என்று நிதிக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அதாவது மாநிலங்களுக்கான 42% நிதியினை ஒதுக்குவதற்கு முன்பே, பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் விளைவு மாநிலங்களுக்கான நிதி வெகுவாக குறைக்கப்படும். நிதிக்குழு தன் அறிக்கையினை சமர்ப்பிக்கவிருக்கும் இந்த கடைசி நேரத்தில், அதுவும் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதற்கான பின்னணியைப் பார்ப்போம்.
நிதிக் குழுவின் விதிமுறை
ஒய்.வி.ரெட்டியின் தலைமையிலான 14-ம் நிதிக்குழுவின் காலம் (2015-20) முழுமையடைவதால், என்.கே.சிங் தலைமையிலான 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஐந்தாண்டுகளுக்கான (2020-25) பரிந்துரைகளை வழங்கும். அதற்காக வழங்கப்பட்ட குறிப்பு விதிமுறைகள், முக்கியமாக நிதி பகிர்வுக்கு 2011 மக்கள் தொகையை பயன்படுத்துவதை, மக்கள் தொகையினை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ள தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. இதைவிட, மாநிலங்களுக்கான நிதியை மேலும் குறைக்கக்கூடிய மற்ற குறிப்பு விதிகளும் உள்ளன.முதலில், பிரிவு 275-ன் படி, மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் வருவாய் பற்றாக்குறை நிதி உதவிகளை இனிமேல் கொடுக்க வேண்டுமா என்று நிதிக்குழுவை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த உதவி என்பது கடந்த அனைத்து நிதிக் குழுக்களின் அணுகுமுறையில் ஒருங்கிணைந்து ஏற்றுக் கொண்ட ஒன்று. இதை நிறுத்த பரிந்துரைப்பது சட்ட அங்கீகாரம் பெற்ற நிதிக் குழு உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டு ஆணையிடுவதற்கு சமமானது.
அடுத்து, மத்திய நிதியில், "புதிய இந்தியா 2022" கீழுள்ள தேசிய வளர்ச்சி திட்டங்களின் அவசியத்தை கவனத்தில் கொண்டு, 14ஆம் நிதிக்குழு உயர்த்தி வழங்கிய நிதி பகிர்வை மறுஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது. முந்தைய நிதிக் குழுக்களின் பரிந்துரைகளை அதற்குப் பின்வரும் நிதிக்குழு இதுவரை மறு ஆய்வு செய்ததில்லை. காரணம் நிதிக்குழு நடுநிலையான, சட்டபூர்வ நிறுவனம், அதன் பரிந்துரைகள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணையானவை.
எல்லாவற்றுக்கும் மேலாக, மத்திய அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்துவது, மாநிலங்களின் "கவர்ச்சித் திட்டங்களுக்கான (Populist measures)" செலவுகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கங்களை நிதிக்குழு முன்மொழிய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஒரு திட்டத்தை 'கவர்ச்சியானதா' இல்லையா என்று யார் தீர்மானிப்பது? நிச்சயமாக, மத்திய அரசல்ல. இதை அந்தந்த மாநிலங்கள்தான் முடிவு செய்ய முடியும். மேலும் மாநில திட்டங்கள் 'கவர்ச்சியானவை', மத்திய திட்டங்கள் 'சிறப்பானவை' அல்லது 'கவர்ச்சியற்றவை' என்றால் அது கேலிக்கூத்தாகும்.
மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு
பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து "கூட்டுறவு- கூட்டாட்சி" என்று மேடையில் பேசிவிட்டு, மாநிலங்களின் அதிகாரங்களை நிதியாதாரங்களை சுரண்டும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்து. மத்திய வருவாயில் 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான பகிர்வினை 14ஆவது நிதிக்குழு 42 சதவீதமாக உயர்த்தியது. இதை மத்திய அரசு ஏதோ தாங்களே உயர்த்திக் கொடுத்ததுபோல சொல்லிக் கொண்டுள்ளது. முதலில் இது மத்திய அரசு கொடுப்பதல்ல; நிதிக் குழு வழங்கியது. மேலும் இது 10 சதவீத உயர்வு கிடையாது.திட்டக்குழு மூடப்பட்டு விட்டதால், அது வழங்கி வந்த பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவிகள் மத்திய அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 5.5 சதவீதம் ஆகும். மேலும் துறைவாரியான உதவிகள் 1.5 - 2 சதவீதம். இவையிரண்டையும் இணைத்து இப்போது நிதிக்குழு வழங்குகின்றது.
ஆக, மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே 14 வது நிதிக்குழு உயர்த்தி வழங்கியது. மத்திய அரசு இதை ஏற்றுக் கொள்ள முடியாததால், மாநிலங்களுக்கான 42 சதவீத பங்கை மறைமுகமாக குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலில் திட்டத்துக்கான மாநிலப் பங்களிப்பு 10-25% என்றிருந்ததை, 40% உயர்த்தியது. பிறகு மத்திய அரசு எந்த ஒரு புதிய வரியினையும் செஸ், சர்சார்ஜ் என்று வசூல் செய்யத் தொடங்கியது.காரணம் செஸ் சர்சார்ஜை மாநிலங்களோடு பகிரத் தேவையில்லை. எனவே மத்திய அரசின் வருவாயிலிருந்து தொடர்ந்து உயர்த்தி, 2016-17-ல் 15 சதவீதத்தை (ரூ.2.55 லட்சம் கோடி) மத்திய அரசு எடுத்துக் கொண்டது. விளைவு மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மொத்த வருவாயில் கிடைக்க வேண்டிய நியாயமான 42 சதவீத வருவாய் குறைந்து, 2016-17இல் மாநிலங்கள் பெற்றது வெறும் 35.4 சதவீதம் மட்டுமே.
அண்மையில் நிதியமைச்சர் நிறுவன வரிகளைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், மத்திய அரசின் இழப்பு 52 சதவீதம் மட்டுமே. நிறுவன வரி குறைப்பால் ஏற்படக் கூடிய வரி இழப்பு ரூ.1.45 லட்சம் கோடி ரூபாய். ஏற்கனவே ஏற்றுமதியை ஊக்குவிக்க வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் ரூ.45 ஆயிரம் கோடி ரூபாய். இவையிரண்டும் சேர்ந்து ஏற்படக்கூடிய ரூ. 1.90 லட்சம் கோடி வரியிழப்பில் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு ரூ.85,000 கோடி (42%) ஆகும்.
தொடரும் நிதிச் சுரண்டல்
இதன் தொடர்ச்சிதான், பாதுகாப்புக்கான "நிரந்தர நிதி" உருவாக்கம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆன பொறுப்புகளை அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியல், மத்திய பட்டியல் என்ற இரண்டிலும் தனித் தனியாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அரசுக்கும் பொதுவான துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு இரண்டுமே மத்திய பட்டியலிலுள்ள மத்திய அரசின் தலையாய அடிப்படை பொறுப்புகள். இதற்கு மத்திய அரசுதான் இதுவரை செலவு செய்து வந்தது.இந்த வருட பட்ஜெட்டில் மத்திய அரசின் உயர்ந்தபட்ச செலவான கடனுக்கு செலுத்தும் வட்டிக்குப் பிறகு (ரூ.6.6 லட்சம் கோடி), அடுத்த அதிகபட்ச செலவு உள்நாட்டு (ரூ.71,714 கோடி) வெளிநாட்டு (ரூ.4,31,011 கோடி) பாதுகாப்புக்காக செய்யப்படும் ரூபாய் ரூ.5.2 லட்சம் கோடி. இதற்காக, மத்திய அரசு வேண்டுவதுபோல், மாநிலங்களுக்கான 4% நிதியினை பகிர்வதற்கு முன்பே ரூ. 5.02 லட்சம் கோடியினை நிதிக்குழு ஒதுக்குமேயானால், இதில் மாநிலங்கள் 42%, அதாவது ரூ. 2.11 லட்சம் கோடியினை இழக்க நேரிடும்.
மேலே குறிப்பிட்ட இழப்புகள் அனைத்து மாநிலங்களும் சந்திக்கவிருக்கும் இழப்புகள். இதை நிதிக் குழு ஏற்கக் கூடாது. மத்திய பட்டியலிலுள்ள பொறுப்புகளுக்கு மத்திய அரசுதான் செலவு செய்ய வேண்டும். மாறாக, நிதிக் குழு இந்த பரிந்துரைகளை ஏற்குமேயானால், மாநிலங்கள் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும். keetru.com oct 2019