தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 193)

28 02 2020

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 194)

எந்தவோர் பிரச்சினைக்கும், சிக்கலுக்குமான தீர்வை, அந்தப் பிரச்சினையின் இரு முரண்பட்ட எல்லைகளில் தேடுவதைவிட, அதன் நடுப்பகுதியிலான ஒரு சமரசமே, இருதரப்புக்கும் உகந்ததொன்றாக அமையும். இது சமரசத்தின் அடிப்படையிலான அணுகுமுறையாகும்.இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படையை, நாம் உற்று அவதானித்தால், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளான 'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்பதற்கும், பெரும்பான்மைப் பலம் கொண்ட சிங்கள-பௌத்தர்களின் அரசியல் அடிப்படையாக மாறிப்போயுள்ள, 'மஹாவம்சக் கனவுக்கும்' இடையிலான இடைவௌியில் இலங்கையின் இனப்பிரச்சினை உருப்பெற்றுள்ளதை அவதானிக்கலாம்.

இலங்கை என்பது, அதாவது இந்தத் தீவு மொத்தமும் 'சிங்கள-பௌத்த' நாடு என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை, கடந்த கால வரலாறு தௌிவாக உணர்த்தி நிற்கிறது.அதேவேளை, இலங்கையில் தமிழர்கள் என்போர் தனித்த தேசம் என்பதையும், இலங்கையின் குறித்ததொரு பகுதி, தமிழ் மக்களின் தாயகம் என்பதையும், அத்தகைய தமிழர்கள், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் ஆகிறார்கள் என்பதையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் வரலாறு தெட்டத்தௌிவாக வௌிக்காட்டி நிற்கிறது.

இதில் தமிழ் மக்கள், இது 'சிங்கள-பௌத்த' நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாமைக்கான காரணம், அவ்வாறு, அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழ் மக்கள் தம்முடைய தாய்மண்ணிலேயே, இரண்டாந்தரப் பிரஜைகள் என்பதை ஏற்றுக்கொண்டதற்குச் சமனாக அது அமைந்துவிடும் என்பதுதான். இது என்னுடைய வீடு; இங்கு நீ வாழலாம். இங்கு நீ வாழ்ந்தாலும், இந்த வீடு என்னுடையது மட்டும்தான் என்பதைப் போன்றதே, இந்தச் 'சிங்கள-பௌத்த' நாடு என்ற கருத்தும்.

மறுபுறத்தில், தமிழ் மக்களின் 'தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை' ஏற்றுக்கொள்ள, சிங்கள மக்கள் காட்டும் தயக்கத்தின் அடிப்படையாக, நாம் இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.முதலாவது, தமிழ் மக்களது 'தேசியம், தாயகம், சுயநிர்ணயமானது', 'மஹாவம்சக் கனவோடு' ஒத்துப்போகாது. அதாவது, 'மஹாவம்சக் கனவின்' தாற்பரியம் என்பது, ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் 'சிங்கள-பௌத்த' இறைமையின் கீழ் கொண்டுவரப்படுதல் எனும் எண்ணப்பாடாகும்.

உண்மை வரலாற்றில், இது ஒருபோதும் நடந்திராதது என்பதை, பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இங்கு சிலர் இடைமறித்து, துட்டகைமுனு, பராக்கிரமபாகுவை உதாரணம் காட்டலாம். துட்டகைமுனுவின் காலத்திலும் சரி, பராக்கிரமபாகுவின் காலத்திலும் சரி மேற்கத்தேய அடிப்படையிலான நவீன இறைமைக் கோட்பாட்டின் படி, இலங்கை ஒரே இறைமையின் கீழ் இருந்தது என்று சொல்லமுடியாது.நவீன அரசாங்கங்களின் கட்டமைப்புக்கும், வரலாற்றில் அமைந்த முடியாட்சி அரசுகளின் கட்டமைப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதனை இந்தத் தொடரின் முன்னைய பகுதிகளில் சற்று விளக்கமாக பார்த்திருந்தோம்.

ஆகவே, 'மஹாவம்சக் கனவை' நவீன அரசாங்கக் கட்டமைப்பின் மேல்வைத்து, இலங்கையை 'சிங்கள பௌத்த' ஒற்றையாட்சி அரசாகக் கட்டமைக்க விளைவதானது, இலங்கையின் இயல்பான அரசியல் கட்டமைப்புக்கு முரணானதாகவே அமையும். 'சிங்கள பௌத்த' தேசியவாதத்தின் சிக்கல், இந்த இடத்தில்தான் தொடங்குகிறது.இரண்டாவது, தமிழ் மக்களின் 'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்ற கோரிக்கையானது, நிச்சயமாகப் பிரிவினைக்கே வழிவகுக்கும் என்ற தவறான புரிதல், மிக ஆழமாகச் 'சிங்கள-பௌத்த' மக்களிடையே, அவர்களது அரசியல் தலைமைகளால் விதைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு அளிக்கப்படும் எந்தத் தீர்வும், நாட்டைத் துண்டாடிவிடும் என்ற 'பேயை'க் காட்டி, பேரினவாதத் தலைமைகள், சிங்கள மக்களின் மனங்களில், அதன் மீதான ஆழமான நம்பிக்கையை விதைத்துவிட்டார்கள்.'சிங்கள-பௌத்த' பேரினவாத அரசியல் நிலைப்பாட்டை, நாம் அவதானித்தால், அதில் ஆகக் குறைந்தது, இரண்டு வகையான அரசியலைக் காணலாம்.

ஒன்று, மிக நேரடியானது. "இலங்கை என்பது, சிங்கள-பௌத்த நாடு; இதை ஏற்றுக்கொண்டு, இங்கு சிறுபான்மையினர் வாழலாம்" என்ற 'வழவழா கொழகொழா' எதுவுமற்ற, மிக நேரடியான, 'சிங்கள-பௌத்த' பேரினவாதத் தேசியவாத நிலைப்பாடு.இதைச் சமகாலத்தில் அதீத வலதுசாரிகள் என்று பெயரிடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் இதுபோன்ற, அதீத வலதுசாரிகள் இருக்கவே செய்கிறார்கள்; இருக்கவே செய்வார்கள். ஆனால் பெரும்பாலும் நேரடி அரசியற்பலம் என்பது இவர்களிடம் இருப்பதில்லை. இவர்கள், பலமான அழுத்தக்குழுக்களாகவே தொடர்வார்களேயன்றி, நேரடிப் பலத்தைப் பெறுவது என்பது அரிதிலும், அரிது.ஆனால், இரண்டாவது வகையொன்று இருக்கிறது. இவர்கள், "இலங்கை என்பது பல்லினம் வாழும் நாடு" என்பதையே தமது பதாகையாகக் கொண்டிருப்பார்கள்,

அடிப்படையில் மேற்கத்தேய தாராளவாதத்தின் தன்மைகளைத் தமது பதாகையில் கொண்டிருப்பார்கள். "அனைவரும் சமம், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமில்லை" என்ற மேற்கத்தேய தாராளவாதக் கருத்துகள், அவர்கள் பேச்சில் நிறைந்திருக்கும். இத்தகையவர்களே, மிகப்பெரும்பான்மையான அளவில் நேரடி அரசியற்பலத்தைப் பெற்று, ஆட்சி நடத்துபவர்களாக இருக்கிறார்கள்.

அப்படியானால் என்ன பிரச்சினை? இங்கு பிரச்சினை என்பது, 'முரண்பாட்டுப் போலித்தனத்தில்' (hypocrisy) இருந்துதான் எழுகிறது. இந்தத் தாராளவாதக் கருத்துகளை வௌியிடும் தலைமைகளின் பேச்சுக்கும் நடத்தைக்கும் இடையிலான இடைவௌிதான், அந்த முரண்பாட்டுப் போலித்தனம்.சர்வதேசத்தில் தன்னை மிகப்பெரிய தாராளவாதியாக முன்னிறுத்திய ஜே.ஆர், தன்னை 'மஹாவம்சக் கனவின்' படி, தன்னை அடுத்த துட்டகைமுனுவாகவும் காட்டிக்கொள்ள எத்தனித்தார். இந்தத் தன்மைய ஜே.ஆரிடம் மட்டுமல்ல, அவருக்குக்கு முன்னிருந்த சில தலைமைகளிடமும், அவருக்குப் பின்வந்த அனைத்துத் தலைமைகளிடமும் வேறுபட்ட அளவுகளில் காணக்கூடியதாகவே இருந்தது.

தன்னிடமிருந்த 5/6 பலத்தைக் கொண்டு, ஜே.ஆர் ஒரு சிவில் தேச அரசாங்கத்தை, இனம், மதம் சாராத அரசாங்கத்தைக் கட்டமைத்திருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. சிங்கப்பூரில் லீ க்வான் யூ சாதித்ததை, இலங்கையில் செய்யும் துணிவு, இலங்கையின் எந்தத் தலைமைக்கும் இருக்கவில்லை என்பது, ஒவ்வோர் இலங்கையரும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.இவை இவ்வாறு இருக்கும் பட்சத்தில், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, உண்மையில் சாத்தியமா என்ற கேள்வி எழுவது, தவிர்க்க முடியாததாக இருக்கிறது. உலகிலுள்ள இன மதப் பிரச்சினைகளோடு ஒப்பிடும் போது, இலங்கையின் இனப்பிரச்சினை என்பது, தத்துவார்த்த ரீதியில் தீர்ப்பதற்கு சிக்கலானதொரு பிரச்சினையே இல்லை.

இலங்கையின் இனப்பிரச்சினையானது, குறைந்தது இரண்டு, அதிகபட்சம் மூன்று மக்கள் குழுக்களிடையேயான, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் மூலம், இலகுவில் தீர்த்துவிடக் கூடிய ஒன்று.உலகின் சில நாடுகளில் இருபது, முப்பது, ஏன் அதற்கும் மேற்பட்டளவு மக்கள் குழுக்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றோடெல்லாம் ஒப்பிடும் போது, இலங்கையின் இனப்பிரச்சினையென்பது, தீர்ப்பதற்கு இயலாததொன்றல்ல, ஆனால், இங்கு காணப்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைவதுதான், இன்றுவரை சவாலானதொன்றாகத் தொடர்கிறது.இங்கு முதன்மையானதும், பிரதானமானதுமான நடைமுறைச் சவாலாக இருப்பது, தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அரசியல் மூலதனம், அரசியல்வாதிகளிடம் இல்லாதிருப்பதேயாகும்.

'இனப்பிரச்சினையில் குளிர்காய்தல்' என்ற சொற்பிரயோகத்தை, நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். இருதரப்பு அரசியல்வாதிகளும், தம்முடைய அரசியலை, இனமுரண்பாட்டை முன்னிறுத்தி, தத்தம் இன நலன்களின் அடிப்படையில், இன ரீதியாகப் பிளவுற்றுள்ள வாக்கு வங்கிகளிடம், வாக்கு வேட்டை நடத்தும் அரசியலை முன்னெடுப்பதால், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதைவிட, அதன் ஏதோ ஒரு வகையான தொடர்ச்சியே, அவர்களின் வாக்கு வங்கி அரசியலுக்குச் சாதகமாக அமைகிறது.ஆகவே, இனமய்ய அரசியலைக் கடப்பதில் அரசியல்தலைமைகள் தயக்கத்தை வௌிப்படுத்துவதாக நாம் உணர்ந்தால், அதற்கு இதுவே காரணம். ஒவ்வொரு தரப்பின் இனமய்ய மற்றும் இனவாத அரசியல், மறுதரப்பின் இனமய்ய மற்றும் இனவாத அரசியலுக்கு உரமாக மாறுகிறது. காலப்போக்கில் இதுவே பெரும் இனமய்ய இனவாத விஷச்சுழலாக உருவாகிவிடுகிறது. இதை ஓரிடத்திலேனும் தகர்க்க வேண்டிய தேவை உணரப்பட்டாலும், அதைச் செய்யத்தயாராகவுள்ள, தீர்க்கமான தலைமைகள் இங்கு இல்லை.

'சமஷ்டி' என்ற வார்த்தையையே உச்சரிக்கத் தயங்கும் தலைமைகளால், மக்களின் மனங்களில் சமஷ்டி மீதும் அதிகாரப் பகிர்வு மீதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகத்தவறானதும், அடிப்படையிலேயே பிழையானதுமான அபிப்பிராயத்தை மாற்றிவிட முடியாது.தாராளவாத முகமாக, 'மஹாவம்சக் கனவின்' முகமா என்று முடிவு செய்யமுடியாதபடி, முகமூடிகளை மாற்றி மாற்றி மாட்டிக்கொள்ளும் தலைமைகளால், ஒரு போதும் அர்த்தமுள்ள தீர்வொன்றை அடையப் பெறமுடியாது.ஆகவே, இந்த நடைமுறைச் சிக்கலைக் கடக்கும் போது மட்டும்தான், இனப்பிரச்சினைக்கானதொரு தீர்வு என்பது சாத்தியமாகும்.

அப்படியானால், அத்தகைய தீர்வின் வடிவம் எதுவாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்.தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது, தீர்வின் வடிவம் சார்ந்ததல்ல; அது தீர்வின் அடிப்படை சார்ந்தது. 'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்ற தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைத் தரவல்ல, எந்தத் தீர்வு வடிவமும் தமிழர்களுக்கு ஏற்புடையதாகவே அமையும்.

ஆனால், அது வெறும் பெயரளவிலான, சாக்குப்போக்கான தீர்வாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதுதான், தமிழ் மக்களின் முக்கிய கரிசனை.நாம், முன்னர் இந்தத் தொடரில் அவதானித்தததைப் போலவே, 'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்ற அடிப்படை அபிலாஷைகளை, 'சமஷ்டி' என்ற கட்டமைப்பினூடாக வழங்க முடியும். ஆனால், அது மட்டுமே ஒரேயொரு பொருத்தமான தீர்வு வடிவமல்ல.'தேசியம், தாயகம், சுயநிர்ணயம்' என்பவற்றை 'ஒற்றையாட்சி'க் கட்டமைப்புக்குள்ளும் வழங்க முடியும். அதற்கான முன்னுதாரணங்களும் உண்டு என்பதை நாம் கண்டுகொண்டோம்.

மேலும், சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற பாரம்பரிய வகைப்படுத்தலைத் தாண்டியும் புத்தாக்க சிந்தனைகளூடாகவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள முடியும். 'பன்மைத் தேசியம்' என்ற சித்தாந்தம் கூட, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாகும்.இலங்கையைப் 'பன்மைத் தேசிய அரசாக' அரசமைப்பு ரீதியாகக் கட்டமைப்பதன் வாயிலாக, இலங்கையிலுள்ள பல்வேறுபட்ட தேசங்களும் அரசமைப்பு ரீதியிலான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதோடு, அதன்பாலான அதிகாரப்பகிர்வு, சுயநிர்ணயம் என்பவற்றையும் அடைந்துகொள்ள முடியும்.

இதை ஓர் அரசாங்கத்துக்குள் பிரிவினையைத் தவிர்த்து, அடைந்துகொள்ள முடியும். இது ஒரு மாற்று உதாரணம் மட்டுமே; இதைப் போன்ற பல்வேறு புத்தாக்க வடிவங்களை நாம் கைக்கொள்ளலாம்.ஆனால், இங்கு சிக்கல் என்பது, தீர்வின் வடிவத்தில் இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு சிக்கல் என்பது, தீர்வை ஏற்படுத்துவதற்கான நடைமுறை அரசியலின் விருப்பில் தங்கியிருக்கிறது. அது, நடைமுறை அரசியலில் மக்கள் விருப்பத்தைக் கட்டமைப்பதனூடாக மட்டுமே அடையப்பெற முடியுமேயன்றி,மந்திரத்தால் தீர்வெனும் மாங்கனியைப் பெற்றுவிட முடியாது என்பதுதான் கவலைக்குரிய யதார்த்தம்.

(முற்றும்) yarl.com  may 7 2019