சாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார்? - நேரடி கள ஆய்வு Featured

25 07 2020

சாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார்? - நேரடி கள ஆய்வு

சம்பவம் 1:

கொரோனா தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் இன்றைய நெருக்கடியான காலத்தில் காவல்துறையினரின் பல்வேறு சித்திரவதைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தகப்பன், மகன் என இருவர் சித்திரவதைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர்.கடந்த 18.6.2020 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைவீதியில் கடைகளை அடைக்கச் சொல்லி காவல் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்கள் ரோந்து வந்துள்ளனர். அப்போது "GG பாக்கியம் டிரேடர்ஸ் மரக் கடைக்கு" முன்பாக, கடையில் வேலை செய்து வரும் துரை என்பவரோடு சுமார் ஐந்து நபர்கள் பேசிக் கொண்டு நின்றுள்ளார்கள். அப்போது அவ்விடத்திற்கு வந்த சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கடையை பூட்டிவிட்டு போக வேண்டியது தானே பிறகு ஏன் ரோட்டில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் உடனே அவ்விடத்திலிருந்து மூன்று நபர்கள் சென்றுவிட்டனர்.

மீண்டும் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறிது நேரத்திற்கு பின்பு "GG பாக்கியம் டிரேட்டர்ஸ் மரக் கடைக்கு" முன்பாக தனது பைக்கில் வந்து துரை என்பவரிடம் ஒரு முறை சொன்னால் கேட்க மாட்டீர்களா என்று கேட்டுள்ளார். மேலும் உடனே இடத்தை காலி பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அப்போது சிறிது நேரம் கழித்து அவ்விடத்திற்கு வந்த ஜெயராஜ் என்பவர் "போலீசு ஏன் மக்களை ரோட்டுல நிக்க விடாமல் விரட்டுறாங்க, எதுக்காக மரியாதை இல்லாமல் பேசி வியாபாரிகளையும் கடையை அடைக்கச் சொல்றாங்க, போலீஸ் என்ன பெரிய மயிரா **ட மவன்கள்" என்று திட்டியுள்ளார். அப்போது ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த விடுப்பில் உள்ள சீருடை அணியாத காவலர் ஒருவர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலமாக ஜெயராஜ் தெரிவித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் 2:

19.6.2020 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் மலச்ச அம்மன் கோவிலுக்கு மேல்புறம் உள்ள மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்விடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் "நேற்று இரவு எவனோ ஒருவன் என்னைப் பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளான். அவன் யார் என்று தெரிந்தால் சும்மா விட மாட்டேன்" என சத்தம் போட்டுள்ளார். அந்நேரத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஒரு நபர் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணனை போன் மூலமாக தொடர்பு கொண்டு, நேற்று உங்களை தப்பா பேசிய நபர் தற்சமயம் GG பாக்கியம் டிரேட்டர்ஸ் மரக்கடைக்கு முன்பாக வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கொண்டிருக்கக் கூடிய நபர் தான் என்று ஜெயராஜ் குறித்த அடையாளத்தைக் கூறியுள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியோடு நின்று கொண்டிருக்கக் கூடிய நபரை அழைத்து வாருங்கள் என்று காவலர் முத்துராசை அனுப்பி உள்ளார். காவலர் முத்துராஜ், ஜெயராஜ் அருகாமையில் சென்று கூப்பிட்டவுடன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் ஆய்வாளர் ஸ்ரீதர் அமர்ந்திருந்த டாடா சுமோ வாகனத்திற்கு சென்றுள்ளார். அப்போது சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஜெயராஜிடம் அங்கிருந்த போலீஸ் வாகனத்தில் ஏறச் சொல்லியுள்ளார். ஆனால் வாகனத்தில் ஏற மறுத்து ஜெயராஜ் சிறிது நேரம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் அருகிலிருந்த காவலர்கள் ஜெயராஜை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் 3:

APG மொபைல் கடையின் உரிமையாளரான பென்னிக்ஸ் இமானுவேல் தனது அப்பா ஜெயராஜை போலீசார் பிடித்துச் சென்றார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் தனது நண்பர்களான ரவிசங்கர் த/பெ இசக்கி பாண்டித்தேவர் மற்றும் வழக்கறிஞர் ராஜாராம் ஆகியோரோடு காவல் நிலையம் செல்ல பைக்கில் கிளம்பியுள்ளார். அப்போது நண்பரும் வழக்கறிஞருமான ராஜாராம் தற்சமயம் லுங்கி அணிந்திருப்பதால் நான் வீட்டிற்கு சென்று பேண்ட் மாற்றி விட்டு உடனடியாக காவல் நிலையம் வருகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

அதனால் பென்னிக்ஸ் இமானுவேலும் அவரது நண்பர் ரவிசங்கரும் பைக்கில் சாத்தான்குளம் காவல் நிலையம் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் காவல் நிலையம் வந்திருந்த நேரத்தில் காவல் நிலையத்திற்கு முன்பாக வேறு வழக்குகளின் பணி நிமித்தமாக வழக்கறிஞர் வேணுகோபால், வழக்கறிஞர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் மணிமாறன், அவரது ஜூனியர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்துள்ளனர். மேலும் சிறிது நேரத்தில் பென்னிக்ஸ் இமானுவேல் நண்பரும் வழக்கறிஞருமான ராஜாராமும் காவல் நிலையம் வந்துள்ளார். ஜெயராஜ் என்பவர் காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு வந்ததையும் அங்கு அவரை மீட்பதற்காக மகன் பென்னிக்ஸ் இமானுவேல் காவல் நிலையம் வந்ததையும் அவ்விடத்தில் இருந்த வழக்கறிஞர்கள் பார்த்தார்கள் என்பதை பென்னிக்ஸ் இமானுவேலின் நண்பர் வழக்கறிஞர் ராஜாராம் உறுதிப்படுத்துகிறார்.

சம்பவம் 4:

பென்னிக்ஸ் இமானுவேல் மற்றும் அவரது நண்பர் வழக்கறிஞர் ராஜாராம் இருவரும் இரவு சுமார் 8.30 மணி அளவில் காவல் நிலையத்திற்கு வந்து ஜெயராஜை தேடி உள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் "லாக்கப்பில்" தனது அப்பா அடைத்து இருந்ததை நேரடியாகப் பார்த்த பென்னிக்ஸ் இமானுவேல் அதிர்ச்சி அடைந்த நிலையில் மிகவும் கோபப்பட்டு, எனது அப்பாவை யார் சிறையில் அடைத்தது, என்ன தப்பு செய்தார் என கோபமாக கேட்டுள்ளார். இதனைக் கண்ட ஆய்வாளர் ஸ்ரீதர் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளயே வந்து நீ எங்களை மிரட்டுகிறாயா? என்று சொல்லி பென்னிக்ஸ் இமானுவேலை அடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனே சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் அடித்துள்ளார்.

அடி தாங்க முடியாத பென்னிக்ஸ் இமானுவேல், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மார்பில் கைவைத்து வேகமாகத் தள்ளியுள்ளார். இதனால் நிலை தடுமாறி சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கீழே விழுந்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்த மற்ற காவலர்களும் தாக்குவதற்குத் தயாரான போது காவலர்கள் தவிர்த்து, வழக்கறிஞர் ராஜாராம் உட்பட மற்ற அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பிவிட்டு காவல் நிலையக் கதவுகள் மூடப்பட்டுள்ளது.

சம்பவம் 5:

பூட்டப்பட்டிருந்த காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் பால்துரை, தலைமைக் காவலர்கள் முருகன் மற்றும் ரேவதி, காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, இவர்களோடு காவல்துறை நண்பர்கள் அமைப்பை சார்ந்த (Friends of Police) கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா ஆகியோரும் இருந்துள்ளனர்.சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது கைவைத்து தள்ளியதால் பென்னிக்ஸ் இமானுவேலின் உடைகள் களையப்பட்டு ஜட்டியோடு நிறுத்தப்பட்டுள்ளார். அதன் பின்பு இரு கைகளும் விரிக்கப்பட்ட நிலையில் சுவற்றில் முகம் பாதிக்கப்பட்டு இரு கைகளையும் போலீஸ் நண்பர் குழுவினர் இரு பக்கமும் பிடித்துக் கொண்டனர். அதன்பின் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் புட்டத்தில் லத்தியால் தொடர்ந்து அடித்துள்ளார்கள். அதன் பின்பு மற்ற காவலர்களில் சிலரும் மாறி மாறி அடித்துள்ளார்கள்.

மகன் அடி வாங்குவதை நேரடியாக பார்த்து கதறி அழுத அப்பா ஜெயராஜ் மகனை விட்டு விடக்கோரி கெஞ்சி கதறி உள்ளார். மகன் சித்திரவதையில் இருந்து மீள முடியாத நிலையில் திட்டி உள்ளார். இதனால் மகனுக்கு பின்பு தந்தை ஜெயராஜ் மீதும் தொடர்ந்து காவல்துறையினர் லத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார்கள். தகப்பன் மகன் இருவரையும் சுமார் ஒரு மணி நேரமாக அடித்து சித்தரவதை செய்துள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து சித்திரவதையில் ஈடுபட்ட போது ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இமானுவேல் இருவரின் அலறல் குரல்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தின் பூட்டப்பட்டிருந்த கதவுகளைக் கடந்து வெளியே கேட்டது என வழக்கறிஞர் வேணுகோபால் உறுதிப்படுத்துகிறார்.

இரவு சுமார் 9.30 மணி அளவில் படுவேகமாக டூவீலரில் காவல் நிலையத்திற்கு சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் வந்தவுடன் காவல் நிலையக் கதவுகள் திறக்கப்பட்டு மீண்டும் பூட்டப்பட்டது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் காவல் நிலையத்திற்குள் நுழைந்த பின்பு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இமானுவேல் மீதான சித்திரவதைகள் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தலைமையில் செயல்பட்ட சித்திரவதை குழுவினர் வெவ்வேறு வடிவிலான சித்திரவதைகளை நிகழ்த்தியுள்ளனர். இதனால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இமானுவேல் ஆகியோரின் அலறல் சத்தங்கள் சாத்தான்குளம் காவல் நிலைத்திற்கு வெளியே சுமார் 300 அடி தூரம் வரை கேட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் உயிர் காக்க அவர்கள் எழுப்பிய அபாயக்குரல் கேட்டு அருகாமையில் உள்ள மக்கள் சுமார் 25 நபர்கள் வரை காவல் நிலையத்திற்கு முன்பாக திரண்டுள்ளார்கள். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் இரவு சுமார் 12 மணி வரை தகப்பன், மகன் இருவரும் காவல் நிலைய சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.

சம்பவம் 6:

மறுநாள் 20.6.2020 அன்று காலை சுமார் 8.00 மணியளவில் பென்னிக்ஸ் இமானுவேலுவின் நண்பர்கள் வழக்கறிஞர் ராஜாராம் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் காவல் நிலையம் வந்துள்ளனர். அப்போது அவர்களை காவல் நிலையத்தில் பார்த்த சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் டீ வாங்கி வரச் சொல்லியுள்ளார். அதன்படி சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவலர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்துவிட்டு பென்னிக்ஸ் மற்றும் அவரது அப்பா ஜெயராஜ் எங்கு உள்ளார்கள் எனக் கேட்டுள்ளார்கள் ஆனால் பதில் இல்லை. இதனால் காவல் நிலையத்திற்குள் தங்களது கண்களால் தேடி உள்ளார்கள். ஆனால் அவர்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. இதனால் சார்பு ஆய்வாளரிடம் இருவரையும் எங்கே எனக் கேட்டுள்ளார்கள். அதற்கு பார்ப்பதற்கு அனுமதி இல்லை எனக் கூறி காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றி உள்ளார்.

சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் பென்னிக்ஸ் இமானுவேல் மற்றும் அவரது அப்பா ஜெயராஜ் ஆகியோரை காவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு காலை சுமார் 8.00, மணியளவில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதை அறிந்த நண்பர்களான வழக்கறிஞர் ராஜாராம், ரவிசங்கர் மற்றும் உறவினர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வாகனத்தில் இருந்து இறங்கியவுடன், அதன்பின் ஜெயராஜ் மெல்ல இறங்கிய நிலையில் அவரை அரசு மருத்துவரிடம் காட்டுவதற்காக மருத்துவமனைக்குள் காவலர் ஒருவர் அழைத்துள்ளனர். அப்போது ஜெயராஜின் பிட்டத்திலிருந்து இரத்தம் ஒழுக அவர் அணிந்திருந்த லுங்கி இரத்தத்தால் நனைந்த நிலையில் மருத்துவமனைக்குள் மெல்ல நடந்து சென்றுள்ளார்.

அப்போது போலீஸ் வாகனத்தில் உட்கார்ந்திருந்த பென்னிக்ஸ் இமானுவேலுவிடம் அவரது நண்பர் வழக்கறிஞர் ராஜாராம் "நடந்ததை நினைத்து கவலைப்படாதே. போலீசார் உன்னை அடித்து சித்திரவதை செய்ததை மேஜிஸ்டிரேட்டிடம் பதிவு செய்து விடு, அதன்பின் பிரவேட் கம்ளைண்ட் மூலமாக வழக்கு நடத்தி போலிசுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்" என்று கூறியுள்ளார். அதற்கு பென்னிக்ஸ் இமானுவேல் "என்னால் போலீஸ் அடியைத் தாங்க முடியவில்லை, இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. எனவே என்னை உடனே பெயிலில் எடு" என்று கூறியுள்ளார்.

சம்பவம் 7:

ஜெயராஜ் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் காத்திருந்த நிலையில் மருத்துவர் வினிலா வந்து ஜெயராஜின் உடல்நிலையை பரிசோதித்த போது, அவருக்கு பிளட் பிரஷர் 180 அளவு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பென்னிக்ஸ் இம்மானுவேல் மருத்துவ பரிசோதனைக்காக காவலர்கள் கூப்பிட்டு வந்துள்ளனர். அவரையும் பரிசோதித்த மருத்துவர் அவருக்கும் பிளட் பிரஸர் அளவு 180 இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் இருந்த அறையில் இருந்து தந்தை, மகன் இருவரையும் காவலர்கள் வெளியே கூப்பிட்டு வந்துள்ளனர்.

வெளியே வந்த தகப்பன், மகன் இருவரும் நின்று கொண்டிருந்த நிலையிலே அவர்களுக்கு இரத்த கசிவு அதிகமாக ஏற்பட்டு அவர்கள் இருவரும் கட்டியிருந்த லுங்கியின் பின் பக்கம் முழுமையாக இரத்தத்தால் நனைந்திருந்தது. இதனை பார்த்த உறவினர்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த லுங்கியை கொடுத்தார்கள். அப்போது ஜெயராஜ் மாற்றி கட்டிய லுங்கி மீண்டும் இரத்த கசிவால் நனைந்தது. இதனால் அப்போதே இரண்டு லுங்கிகள் மாற்றி உள்ளனர். இதேபோல் மகன் பென்னிக்ஸ் இமானுவேலும் அதிகமான இரத்த கசிவால் மூன்று லுங்கிகள் மாற்றி உள்ளார். இந்நிலையில் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அரசு மருத்துவருக்கு தொடர்ந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுத்து மருத்துவ தகுதிச் சான்று பெற்றுள்ளார்.

சம்பவம் 8:

பென்னிக்ஸ் இமானுவேல் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவருக்குமான மருத்துவ தகுதிச் சான்று அரசு மருத்துவரிடம் பெற்றுக் கொண்ட சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், அவர்களை ரிமாண்டு காட்டுவதற்காக காலை சுமார் 10.30 மணியளவில் நீதிமன்ற நடுவர் B.சரவணன் அவர்களின் வீட்டிற்கு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகிய இருவரையுமே போலிஸ் வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார்கள்.

இருவரும் போலிஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கப்படாத நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் நடுவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் காவல்துறையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலையை நேரடியாக நீதிமன்றம் நடுவர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெறக்கூடிய வழக்கில் பதிவு செய்திருந்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கூடாது என்று 'அருண் குமார் யாதவ் எதிர் பீகார் அரசு' உயர்நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது.எனவே நீதிமன்ற நடுவர் B.சரவணன் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டு உள்ளார் என்பதனை அவரின் செயல்பாட்டின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.

சம்பவம் 9:

நீதிமன்ற நடுவர் B.சரவணன் அவர்களின் உத்தரவின் கீழ் நீதிமன்ற காவலுக்கு உள்ளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இமானுவேல் ஆகியோரை சாத்தான்குளத்தில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கோவில்பட்டி கிளை சிறைக்கு கொண்டு சென்று அடைப்பதற்கு முடிவு செய்த போலீசார் ஜெயராஜ் உறவினர்களிடமே காவலர்கள் வாகன ஏற்பாடு செய்யக் கேட்டுள்ளனர். இதனால் ஜெயராஜின் உறவினர்கள் ஏற்பாடு செய்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வாடகை கார் CHEVROLET-B2, TN.92 9302 என்ற பதிவு எண் கொண்ட காரில் பென்னிக்ஸ், அவரது அப்பா ஜெயராஜ் மற்றும் காவலர் முத்துராஜ், மற்றொரு காவலர் இவர்களோடு டிரைவர் நாகராஜ் ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரமுள்ள கோவில்பட்டிக்கு சுமார் இரண்டரை மணி நேரம் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இமானுவேல் இருவருக்கும் கார் சீட்டில் உட்கார முடியாத நிலையில் இரத்த கசிவு ஏற்பட்டு கட்டியிருந்த லுங்கி நனைந்திருக்கிறது. இதனால் உறவினர்கள் கொடுத்த போர்வையை சீட்டின் மேல் விரித்து அதன் மீது இருவரும் உட்கார்ந்து உள்ளனர். ஆனால் கோவில்பட்டி செல்வதற்குள் இரத்தக் கசிவால் போர்வையும் முழுமையாக நனைந்து காரின் சீட்டிலும் இரத்தக்கறை ஏற்பட்டுள்ளது. இதனை கார் ஓட்டுனர் நாகராஜ் உறுதிப்படுத்துகிறார்.

அன்று மதியம் சுமார் 2 மணி அளவில் கோவில்பட்டியில் உள்ள தனலட்சுமி ஹோட்டலில் டிரைவர் நாகராஜ், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் உடன் வந்த காவலர்களுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இதற்கான பணத்தை ஜெயராஜ் உறவினர்கள் கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என்பதனையும் டிரைவர் நாகராஜ் மூலமாக உறுதிப்படுத்த முடிகிறது.

சம்பவம் 10:

சாப்பிட்டு முடித்தவுடன் மதியம் சுமார் 2.30 மணி அளவில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைப்பதற்காக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இமானுவேல் ஆகியோரை சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கொண்டு சென்று கிளை சிறையில் ஒப்படைத்துள்ளனர். அப்போது கிளைச் சிறையில் பொறுப்பில் இருந்த அழகர்சாமி என்ற காவலர் காயத்துடன் வந்த இருவரையும் பார்த்த பின்பு கிளைச் சிறையில் அட்மிசன் போட மறுத்துள்ளார். இதனால் காவலர் முத்துராஜ் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் இருவருக்கும் கோவில்பட்டி கிளை சிறையில் அட்மிசன் மறுக்கின்றார்கள் என்ற தகவலை தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதன்பின் சிறிது நேரத்தில் சப்ஜெயிலரிடமிருந்து அனுமதிக்கான உத்தரவு வந்துள்ளது. அதன்பின் இருவரும் கோவில்பட்டி கிளை சிறைக்குள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இமானுவேல் ஆகிய இருவரும் கோவில்பட்டி சிறையில் அனுமதிக்கப்பட்ட பின்பும் அவர்களுக்கு மருத்துவ உதவி ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் என்பவருக்கு அவரது லுங்கியை கட்டுகிற அளவுக்கு கூட உடம்பில் தெம்பு இல்லாமல் அப்படியே சுருண்டுபடுத்து கிடந்துள்ளார். சாப்பிடக்கூட எழுந்து செல்ல முடியாத நிலையில் இருந்தார். அதேபோல் பென்னிக்ஸ் இமானுவேல் உடம்பு முழுவதும் போலீசாரின் லத்தியால் அடித்த காயங்கள் இருந்துள்ளன. அவரது விலா எலும்பு பகுதியில் போலீஸ் லத்தியால் குத்தியதில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு இருந்துள்ளார். உட்காரவும் முடியவில்லை, எழுந்திருக்கவும் முடியவில்லை. இதனால் இராத்திரி முழுவதும் தூக்கமில்லாமல் நின்று கொண்டே இருந்துள்ளார். இருவருக்குமே அவர்களது பிட்டத்தில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டே இருந்துள்ளது. இருவரையும் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று தற்போது கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக் கைதியாக உள்ளவரும் ஏற்கனவே சாத்தான்குளம் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவருமான பனைகுளத்தைச் சேர்ந்த ராஜா சிங் உறுதிப்படுத்துகிறார்.

இருவர் கொலைக்கும் யார் காரணம்?

22.6.2020 அன்று இரவு சுமார் சுமார் 9.00 மணி அளவில் பென்னிக்ஸ் இமானுவேல் உயிரும், அவரது தந்தை ஜெயராஜின் உயிரும் 23.6.2020 அன்று அதிகாலை 5.40 மணி அளவிலும் பிரிந்தது. எந்தக் குற்றத்திலும் ஈடுபடாத தந்தை, மகன் இருவரையும் சாத்தான்குளம் போலீசாரால் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தி வலி மிகுந்து, உயிர்போக காரணமாக இருந்தது சாத்தான்குளம் காவல் நிலையத்தாரா?

தந்தையும், மகனும் இரவு முழுவதும் காவல் சித்திரவதையில் சிதைக்கப்பட்டு உயிர் காக்க மரண ஓலம் எழுப்பிய போதும் அதனைக் கேட்டும் அவலத்தின் அருகாமையிலே அமைதியாக நின்று கொண்டிருந்தவர்கள் காரணமா?

உயிர்காக்கும் மருத்துவரின் எதிரே பிட்டத்திலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்த தந்தை, மகனுக்கும் உயிர்காக்கும் சிகிச்சை வழிகாட்டாமல் அதிகார வர்க்கத்தின் உத்தரவுக்கு அடிபணிந்த மருத்துவர் காரணமா?

கண்கள் கட்டப்பட்ட நீதித்தாயின் பின்னமர்ந்து நீதியை நிலைநாட்ட பணிசெய்யும் சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர், பாதிக்கப்பட்டவர்களை பார்க்கக் கூட முன் வராமலேயே காணொலிக் காட்சி மூலம் தானே தன் கண்ணை மறைத்துக் கொண்டது காரணமா?

தந்தையும், மகனும் குத்துயிரும் கொலை உயிருமாய் கிளை சிறைச்சாலையில் அனுமதித்த பின்பும் உயிர்ப் பிரியும் கடைசி நேரத்திலும் கூட குறைந்தபட்ச மனிதாபிமானமும் எட்டிப் பார்க்காத சப் ஜெயிலர் தான் காரணமா?

தந்தையும், மகனும் கொலையுண்டதால் குடும்பம் நடுத்தெருவில் நின்றபோதும் கொலைகார பாதகர்களை பாதுகாக்கத் துடிக்கும் அரசு தான் காரணமா?

- இ.ஆசீர், மக்கள் கண்காணிப்பகம் keetro.com  july 6 2020