தேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா? அல்லது அழிவுக்கான கொள்கையா? Featured

17 08 2020

தேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா? அல்லது அழிவுக்கான கொள்கையா?

அரசுகள் வெளியிடும் திட்டக் கொள்கை ஆவணங்களில் உள்ளவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாதென்பது நம் படிப்பினை. ஒவ்வொரு ஆவணத்துக்கும் ஓர் உள்ளடக்கம் இருக்கும். அந்த ஆவணத்தின் பலனை முடிவு செய்யும் இயக்கு விசையாக அந்த உள்ளடக்கம் அமையும். அதை மூடி மறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பகட்டுச் சொல்லாடல்கள், உயர்ந்தக் குறிக்கோள்களைப் பற்றிய விளக்கங்கள் போன்றவற்றில் இருந்து அந்த உள்ளடக்கத்தைச் சல்லடை போட்டுத் தேடிப் பிடிக்க வேண்டும்.

அண்மையில் நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ள 'தேசியக் கல்வித் திட்டக்கொள்கை - 2020' (தேககொ) ஆவணமும் இத்தகையதே. அதை உருவாக்கிய ஆட்சியாளர்களின் இயல்பைக் கணக்கில் கொண்டால் இது மேலும் தெளிவாகத் தெரியும். இந்தத் தேககொ ஏதோ திடீரென வானத்தில் இருந்து குதித்ததோ அல்லது இந்த ஆட்சியாளர்களின் பின்னணிக்குத் தொடர்பற்ற திட்டக்கொள்கையோ அல்ல.

இந்தியாவில் கல்வித் துறையைப் பொறுத்தவரை, துரிதக் கதியில் தனியார்மயமாதல், பொதுத் துறைப் பங்களிப்பு சரிதல் ஆகிய இரண்டும் கடந்த பல ஆண்டுகளாகக் குறிப்பிடத்தக்க அளவு நிகழ்ந்துள்ளன. பள்ளிக் கல்விச் சேர்க்கையில் குறைந்தது நாற்பத்தைந்து விழுக்காடும், கல்லூரிக் கல்வியில் 45.2 விழுக்காடும் தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளன. மேலும், கல்லூரிக் கல்வியில் 21.2% அரசுதவி பெறும் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன.

தொழிற்கல்வியில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது: இளங்கலைப் படிப்பில் 72.5%, முதுகலைப் படிப்பில் 60.6% இடங்கள் தனியாரிடம் உள்ளன. பல்கலைக் கழகங்களிலும் நிலைமை வேகமாக மாறி வருகிறது. 2014-15-க்கும் 2018-19-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை அதிகரித்ததில் தனியார் பல்கலைகளுக்கு 55% பங்கு உள்ளது. இதைத் தவிர, திறந்த நிலைப் பல்கலைக் கழகங்களின் பங்கு 33% ஆக உள்ளது.மேற்படிக் காலக்கட்டத்தில் கல்வித் தொடர்பான தனிநபர்ச் செலவு ஐம்பது விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதற்கு முன்னரும் அந்த விகிதம் ஏறுமுகமாகவே இருந்துள்ளது. அரசுப் பல்கலைக் கழகங்களின் கட்டணங்களும் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளன.

ஆக, *கல்வியில் தனியார்மயமாதல், செலவு உயர்தல் ஆகிய இரண்டு போக்குகள் இருப்பதற்கான தடயங்கள் நிறைய உள்ளன. இதில் குழப்பமோ ஐயமோ இல்லை*.இந்தப் பின்னணியில் உருவாக்கப்படும் கல்வித் திட்டக் கொள்கையானது இந்த மோசமான போக்கினைத் தடுத்து திசைத் திருப்ப வேண்டும் என்கிற குறிக்கோளை முன்னிலைப்படுத்தவில்லை என்பது முதன்மையானது.தேககொ-2020 இருபதுக்கும் மேற்பட்ட 'அடிப்படைக் கோட்பாடுகளைப்' பட்டியலிடுகிறது. அதில் இறுதியாக இருப்பது பின்வரும் பகுதி (பக்கம் 6). அதில் முதல் சில சொற்கள் மூல ஆவணத்தில் உள்ளபடி இங்கு அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளன:

"... *பொதுக் கல்வி முறைமையை வலுவும் உயிர்த் துடிப்பும் மிக்கதாக ஆக்குவதற்குப் பெரிய அளவில் முதலீடு செய்தல்*, உண்மையான அற நோக்கங் கொண்ட தனியார் மற்றும் குழுப் பங்களிப்பு முயற்சிகளை ஊக்குவித்து எளிதாக்குதல்."நாம் முன்னர் பார்த்த அரசியற் பின்னணியில் மேற்கண்ட பத்தியைப் படிக்கும் போது அதில் அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் அதன் இறுதிப் பகுதியில் இருப்பதற்குத் தான் நடைமுறையில் உண்மையான அழுத்தந் தரப்படும் என்பதை உணரலாம்.

பள்ளி மற்றும் உயர் கல்வி இரண்டிலும் தனியார்மயமாதல் பெருகிவிட்டது எனும் உண்மையை வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையில் தேககொ-2020 உள்ளது. ஆனால் அது முன்வைக்கும் தீர்வு என்ன? கல்வி வணிகமயமாதலை மட்டுப்படுத்தும் வண்ணம் ஒழுங்காற்று முறைமையைச் சீராக்குதல், ஆனால் அதே சமயத்தில், "பொதுச் சிந்தனை கொண்ட தனியார்/அறவுணர்ச்சி" நிறுவனங்களை முனைப்புடன் ஊக்குவித்தல் என்பதே அந்தத் தீர்வு!

பொதுத் துறை, தனியார் துறை ஆகிய இரண்டும் தரமான கல்வி தருவதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதால் அவ்விரண்டையும் ஒரே மாதிரி நடத்தவேண்டும் என்று தேககொ-2020 திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது."அறக்கட்டளை" என்ற பெயரில் ஒளிந்துக் கொண்டுதான் இதுகாறும் கல்வி தனியார்மயமாதல், வணிகமயமாதல் ஆகியன நிகழ்ந்துள்ளன, வேகமாக வளர்ந்துள்ளன என்கிற உண்மையைத் தேககொ-2020 வசதியாகப் பூசி மெழுகி மறைக்கிறது.

இந்தியக் கல்வி முறைமைத் தனியார்மயமாதல் என்பது [உலகப்] பொருளாதாரம் 'தாராளமயமாதல்', 'உலகமயமாதல்' ஆகிய தொடர் நிகழ்வுகளின் உள்ளடக்கமே . இவற்றின் விளைவாக உலகெங்கும் சொத்து, வருமானம் ஆகியவற்றில் ஏற்றத் தாழ்வுகள் பெருகி வருகின்றன. [இதன் விளைவாக] இந்தியாவில் பத்து விழுக்காட்டுப் பணக்காரர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வுகள் உயர்ந்துவிட்டன. மக்களுடைய உழைப்பின் பலன்கள் முழுவதையும் அந்தப் பத்து விழுக்காட்டினர் பெற்றுக்கொள்ள, வேலையில்லாத் திண்டாட்டம், போதுமான ஊதியந் தராத வேலைகள், ஊதியக் குறைப்பு ஆகியவற்றால் பிறர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கல்விச் செலவு அதிகரிப்பதால் ஏற்றத் தாழ்வுகள் இரண்டு வகைகளில் மேலும் மோசமாகின்றன:

(அ) கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது.

(ஆ) கல்விக் கட்டணங்கள் பிற்போக்கான மறைமுக வரிச் சுமையாக வறியோர் மீது ஏறுகின்றன.

அதிகச் சம்பளம் தரும் அலுவலக வேலைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிலஉள்ளன. அவற்றைப் பெறுவதற்கு நடுத்தர வகுப்பினர் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றனர், முயல்கின்றனர். [அதன் விளைவாக] ஏற்கெனவே வலுக்குறைந்த நிலையில் உள்ள பெரும்பாலான இந்தியர்கள் தாமும் பொருளாதார நிலையிலும் குறுகியப் படி நிலையிலும் உயரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இவ்விரண்டின் விளைவாகக் கல்வி பெறுவதன் தேவையை மக்கள் வர வர அதிகமாக உணர்கின்றனர். ஆனால், கல்வித் துறையில் அரசுகள் போதுமான அளவு முதலீடு செய்யாததால் மேற்கண்ட தேவையைத் தனியார்த் துறை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டுகிறது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொஉஉ - GDP) ஆறு விழுக்காட்டினைக் கல்வித் துறைக்குச் செலவிட வேண்டும் என்பது பல பத்தாண்டுக் காலமாக நிறைவேற்றப்படாத அரசுக் குறிக்கோளாக உள்ளது. தேககொ-2020-உம் இதை வலியுறுத்துகிறது.

மக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் வசூலிக்கும் வரிப் பணமே அரசுக்கு வருவாய்; மொஉஉ-உடன் ஒப்பிடுகையில் இந்த *வரி வருமானம் தொடர்ந்து மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், கல்வித் துறை மேம்பாட்டுக்கெனப் பல்லாண்டுகளாக ஒதுக்க முடியாத நிதியை அரசு இப்போது மட்டும் எப்படிச் செய்யப்போகிறது* என்பது குறித்த உறுதியான வழிமுறைகள் எவற்றையும் தேககொ-2020 குறிப்பிடவில்லை.

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தாங்கள் செய்த முதலீட்டின் பலனாக மிகப் பெரிய அளவில் உபரி ('லாபம்') ஈட்டிய *முதலாளிகளும் நிறுவனங்களும் செலுத்தும் வரி விகிதத்தைக் கணிசமான அளவு உயர்த்துவதன் மூலம் கல்வித் துறையில் அரசு முதலீட்டை அதிகரிப்பதற்குத் தேவையான நிதியைத் திரட்ட முடியும்*. ஆனால், தேககொ-2020 இது குறித்து வாய்த் திறக்கவில்லை.

அதற்கு மாறாக, கல்வி வணிகர்கள் இனி அறவுணர்ச்சியால் உந்தப்பட்டு, மக்களிடமிருந்து இதுவரை கறந்த பணத்தைத் தாமாக முன்வந்து பொது நலனுக்கெனக் கல்வித் துறையில் முதலீடு செய்வார்கள் எனத் தேககொ நம்புகிறது. இல்லாத ஒரு தனியார் கல்வி நிறுவனத்துக்கு 'உயர்தனிச் சிறப்பு வாய்ந்த நிறுவனம்' என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் அரசு சான்று வழங்கியதில் வியப்பில்லை!மேலும், அரசுக்கு அதிகச் செலவுப் பிடிக்காத வகையில் கல்வி வசதியை விரிவாக்குவது குறித்த முன்னெடுப்புகளைப் பற்றித் தேககொ நிறைய இடங்களில் பேசுகிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

அ) பள்ளிப் பருவத்துக்கு முந்திய 'இளங் குழந்தைப் பருவக் கவனிப்பும் கல்வியும்' (Early Child Care and Education) தரும் பணியையும் குழந்தைகள் காப்பகப் பணியாளர்கள் (Anganwadi workers) தலையில் சுமத்துதல்; தமக்கு ஏற்கெனவே இடப்பட்டுள்ள பணிகளுக்கு அதிக இடையூறில்லா வண்ணம் இந்தப் புது வேலைக்குத் தக்க திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இணையம் வழியாக அவர்களைப் பயிற்றுவித்தல்.

ஆ) "பொருளாதார உகப்பு நிலையற்ற" ("economically suboptimal") பள்ளிகளை மூடுவதற்கேற்பத் (தொழில்) 'சீரமைப்பாக்கம்', 'ஒருங்கிணைப்பாக்கம்' ('rationalization' and 'consolidation' ) ஆகிய செயற்பாடுகளை முடுக்கி விடுதல்.

இ) கணினித் தொழில்நுட்பம், தொலைவிற் கற்றல் (distance learning) போன்றவற்றின் மூலம் [அதாவது, நேரடி வகுப்புகளுக்குச் செல்லாமல்] உயர்க்கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதத்தை ஐம்பது விழுக்காடாக உயர்த்துதல்.

கல்வித் துறை வணிகமயமாதல், கல்வியில் அரசு நிதிக் குறைப்பு ஆகியன அரசுத் திட்டக் கொள்கை உருவாக்கத்தில் பணக்காரர்களின் செல்வாக்கு வர வர அதிகரிப்பதன் விளைவுகளே.

[பணக்காரர்களிடமிருந்து] அதிக வரி வசூலிக்கக் கூடாது, [அதற்கு மாறாக] அரசு தன் செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் ஆகிய நிதிக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள் மேற்கண்ட தீய விளைவுகளுக்குக் காரணமாக உள்ளன.

இந்தியாவின் மதச்சார்பற்ற மக்கள் நாயகத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகள் அண்மையில் வலுவாக முன்னெடுக்கப்படுவதும் மேற்படி நிகழ்வுகளுடன் தொடர்புடையதே.பணக்காரர்கள் அரசைக் கட்டுப்படுத்துவதன் விளைவாக மக்கள் நாயகம் படிப்படியாக வீழ்த்தப்படுகிறது. அரசமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள வாக்குரிமை உள்ளிட்ட உரிமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வளர்ந்து வரும் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை மழுங்கச் செய்வதற்கு மதவெறி, [போலியான, கற்பிதங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட] நாட்டுப்பற்று ஆகிய உணர்ச்சிகளை ஆள்வோர் தூண்டி விடுகிறார்கள். அதைப் பயன்படுத்தி வெறிமிக்க ஆட்சியாளர்கள் தம் வலுவைப் பெருக்கிக் கொள்கின்றனர்.

இந்தச் செயற்பாடுகளில் முன்னணியில் உள்ள இப்போதைய ஆளுங்கூட்டம் கல்வித் துறையைத் தன் குறுகிய நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் மிக்கதாக உள்ளது. சமன்மை (equality), விடுதலை, நயன்மை ('நீதி' - justice) ஆகிய விழுமியங்கள் அவர்களுடைய குறுகிய நலன்களுக்கு எதிரானவை. ஆகவே அத்தகைய 'அச்சமூட்டும்' விழுமியங்களை வளர்ப்பதற்கு ஏதுவான கல்வி அனைவருக்கும் கிடைக்கக் கூடாது, அத்தகைய வாய்ப்புகளை முளையிலேயே பொசுக்கி விடவேண்டும் என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளனர்.

அந்த நோக்கத்துக்கும் முதலாளிகள் உபரி ஈட்டுவதற்கும் ஏதுவாக இருப்பது கல்வி தனியார்மயமாதல். குறிப்பாக, உயர் கல்வியில் பொதுத் துறைப் பங்களிப்பு இருக்கலாகாது என்பது ஆட்சியாளர்களின் இலக்கு. அதற்கேற்ப, அரசு தன் முழு வலுவையும் பயன்படுத்திப் பல்கலைக் கழகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரையும் ஒடுக்குவதுடன் அவர்களுடைய போராட்டங்களுக்கு எதிராக மக்களிடையே கருத்து உருவாக்குவதிலும் முனைப்புடன் உள்ளது.

பல நூற்றாண்டுக் கால இந்திய வரலாற்றைப் பாடங்களில் சேர்க்காமல் தவிர்ப்பதும் பின்வரும் அடிப்படை வழிகாட்டு நெறியைத் தேககொ-வில் சேர்த்து அதைச் செயல்படுத்தத் தொடங்குவதும் மேற்கண்ட முனைப்பின் கூறுகளாகும்:

"இந்தியாவின் வளமான, பல்வகைப்பட்ட, பண்டைக்காலம் மற்றும் நவீன காலப் பண்பாடு, அறிவு முறைமைகள், மரபுகள் ஆகியவற்றில் *வேரூன்றியதாகவும் அவற்றில் பெருமிதம் கொள்வதாகவும்*" இருத்தல்.

பின்வருவனவற்றைத் தன் அடிப்படை வழிகாட்டு நெறிகள் எனத் தேககொ-2020 சொல்லிக் கொள்கிறது:

அ) எண்ணக் கருவுக்குரிய புரிதலுக்கு அழுத்தந் தருதல் ("emphasis on conceptual understanding");

ஆ) புத்தாக்கம் மட்டும் திறனாய்தலுக்குத் தேவையான சிந்தனைத் திறன்களை ("creativity and critical thinking") வளர்த்தல்;

இ) "ஒன்றுணர்ச்சி (empathy), மதிக்கை (respect - பிறருக்கு மதிப்பளித்தல்), தூய்மை, நயநாகரிக நடை (courtesy), மக்கள் நாயக மனப்பாங்கு, சேவை மனப்பாங்கு, பொதுச் சொத்துகளை மதித்தல், அறிவியற் சிந்தனைப்போக்கு, விடுதலை, பொறுப்புணர்ச்சி, பன்முகத் தன்மை, சமன்மை, நயன்மை உள்ளிட்ட அறநெறிகள் மற்றும் மாந்தவிய & அரசமைப்புச் சட்ட விழுமியங்களை" ஊக்குவித்தல்.

இது வழக்கமானச் சொல்லாடல் வகைப்பட்டது. மேலும், இந்த அரசு மேற்கண்ட விழுமியங்களுக்கு இதுவரை எந்த அளவு மதிப்பளித்துள்ளது என்பதை உற்று நோக்கினால் இதிலுள்ள பாசாங்கு விளங்கும்.

நாட்டை நவீனப்படுத்துதல் என்பதன் பொருள் தொழில்நுட்ப மேம்பாடே என்பது உபரி ஈட்டுதலை முதன்மை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரச் செயற்பாடுகளின் அடிப்படைக் கோட்பாடு. இதற்கான கட்டமைப்பு தேககொ-வில் புதைந்திருப்பதையும் மேலே கண்ட சொல்லாடல் ஓரளவுக்கு எதிரொளிக்கிறது.

'இப்போது உலகில் வெகு வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப அறிவின் விளைவாகத் திறன்குறைவான பல வேலைகளை இனி இயந்திரங்களே செய்துவிடும்; ஆகவே, பல்துறைத் திறன் மிக்க உழைப்பாளிகளே இனித் தேவைப்படுவர்' என்பது தேககொ-2020-வின் அடிப்படைக் கருத்து.

ஆகவே, 'இந்தியாவை இருபத்தோராம் நூற்றாண்டுக்கும் நான்காவது தொழில்நுட்பப் புரட்சிக்கும் இட்டுச் செல்லக்கூடிய கல்வி தான் நாட்டுக்குத் தேவை' என்பதே நம் முன் உள்ள சவால் என்று தேககொ கருதுகிறது. ஆனால், உயர்திறன் தேவைப்படும் வேலைகள் தெரிந்தெடுக்கப்பட்ட சிலருக்கே கிடைக்கும்; பிறர் கைத்தொழில் பயிற்சியுடன் வெளியேற வேண்டும் என்பதுதான் தேககொ முன்வைக்கும் வழி.

உலகளவில் தொழில்நுட்பத் திறனில் முதன்மையான இடத்தில் இந்தியாவை வைக்கும் வளமான எதிர்காலம் குறித்தக் கற்பனை மிக்க பேரவாவை (ambition) ஊட்டி வளர்ப்பதற்குத் தேககொ முனைகிறது. அதற்கெனப் பண்டை இந்தியாவின் அறிவு, மரபு ஆகியவற்றில் இருந்து அகத் தூண்டுதலைப் பெறும் முயற்சியில் முரண்கள் நிரம்பிய கதைகளை அது கட்டவிழ்த்து விடுகிறது. இது சிலருக்கு மகிழ்வூட்டக்கூடும்.யாருக்கு அந்தத் தரமான கல்வி கிடைக்கும், யாருடைய தேவைகளை அது நிறைவு செய்யும் ஆகிய கூறுகள் அடங்கிய கல்வியின் மேட்டுக்குடித் தன்மையை நிலை நிறுத்துவதற்கு இது உதவும்.ஆனால், அது நாட்டின் தற்போதைய உண்மையான கல்விச் சிக்கல்களை மூடி மறைக்கும். 'இந்தியக் கல்வியை நாட்டிடைமயமாக்கல் (internationalisation)' என்பதும் தனியார் கல்விச் சந்தையை விரிவாக்குதல், இந்தியாவின் மேட்டுக்குடியினர் உலகத் தரம் வாய்ந்த கல்வி பெறுதல் ஆகியவற்றுக்கே பயன்படும்.

அவ்வப்போது ஒன்றுக்கொன்று முரணாகச் செயல்படும் பல்வகைக் குறிக்கோள்களே தேககொ வலியுறுத்தும் ஒழுங்காற்று மற்றும் ஆளுமைக் கட்டமைப்புகளுக்கு வடிவந்தருகின்றன. அந்தக் குறிக்கோள்களில் சில வருமாறு:

அ) கல்வியைத் தனியார்மயமாக்கல்,
ஆ) இந்து தேசியப் பார்வையை வளர்த்தல்,
இ) இந்தியக் குழுமத்தில் முற்போக்குக்கான மாற்றங்களுக்கு உதவக் கூடிய கல்வி வாய்ப்புகளை மறுக்கும் அதே சமயத்தில் உபரி வேட்கை மிக்க தனியார் முதலத்தால் சமன்மையற்ற மேம்பாட்டுக்கான வழியில் இட்டுச் செல்லப்படுவதற்குத் தேவையான திறன்கள் மிக்க உழைப்பாளிகளை உருவாக்குதல்.

நடுவண்மயமான, தலைமைப் பொறுப்பிலுள்ள சிலர் மேலிருந்து கீழாக அதிகாரத்தைச் செலுத்துவதற்கேற்ற, பெருநிறுவனச் செயற்பாடுகளை ஒத்த ஆளுமை மற்றும் ஒழுங்காற்றுக் கட்டமைப்பைத் தேககொ ஊக்குவிக்கிறது. ஆனால், ஆசிரியர்களே கல்விச் செயற்பாங்கில் முதன்மைப் பங்கு வகிப்பவர்கள் என்று வார்த்தை விளையாட்டுக் காட்டுகிறது.இந்தக் கட்டமைப்பில் 'தன்னாட்சி' (Autonomy) என்பது கல்வியில் உபரி ஈட்டுவதற்கு முழு உரிமையும் வழங்கும் செயற்பாடாகவே இருக்கும். அத்துடன், கல்வி, ஆராய்ச்சி, அவற்றின் உள்ளடக்கம் ஆகியவற்றில் அரசுக் கட்டுப்பாடு மேலும் வலுவூட்டப்படும்.

மாணவர்கள் தம் விருப்பத்துக்கேற்பப் படிக்கலாம், எளிதில் இடைநிற்கலாம் ஆகியன உள்ளிட்ட 'வசதிகள்' கல்வித் தரத்தைக் கேள்விக்கு உட்படுத்தும். அதைவிட முதன்மையாக, இத்தகைய வசதிகள் கல்வி வணிகர்களுக்கே அதிகம் பயன்படும்: பல்வேறு, பொருளாதார நிலைகளில் உள்ளவர்களையும் கவர்வதற்கேற்பப் பற்பல வகையான பாடத் தொகுப்புகளை முன்வைப்பதற்கு அந்த 'வசதிகள்' வழிகோலும். மேலும், முழுமையான கல்விப் பெறுவதற்குத் தேவையான பண வசதி இல்லாதவர்களும் தவணை முறையில் கல்விப் பெற முடியும் என்கிற மாயையை உருவாக்குவதற்கு இது உதவும்.

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கோட்பாடுகள் சந்தித்த இடர்கள் காரணமாக ஏற்கெனவே வீழ்ச்சியை எதிர்க் கொண்டிருந்த உலகளாவிய முதலாண்மைப் பொருளாதாரம் கோவிட்-19 நோயால் மேலும் வடுப்பட்டது. ஆகவே, புதிதாக முதலீடு செய்வதற்கு உகந்த வழிகள், வரி விலக்கு உள்ளிட்ட வசதி வாய்ப்புகளைப் பெறுவதற்கான அரசியல் நகர்வுகள் ஆகியன வலுப்பெற்று வருகின்றன. ஆனால், அரசுகளின் நிதி நிலைமை மேலும் சிக்கலுக்கு உள்ளாகிவருகிறது. மக்களுடைய பொறுமை மேன்மேலும் சோதிக்கப்படுகிறது.

இந்த அரசியற் பொருளாதாரப் பின்னணியில் தேககொ-2020-வை வெளியிட்டு இருபத்தோராம் நூற்றாண்டுக்கான முதல் கல்வித் திட்டக் கொள்கையைச் செயற்படுத்துவதில் அரசு அவசரமாக ஈடுபடுகிறது.இந்நிலையில், அந்தக் கல்வித் திட்டக் கொள்கையின் செயலியக்குக் குறித்த [அதாவது, உள்ளார்ந்த நோக்கங்களைப் பற்றிய] எந்தவகை திரித்துணர்வுக்கும் இடமில்லை.

மூலக் கட்டுரை: Surajit Mazumdar, "NEP 2020: Path Breaking Policy or the Path to Destruction?", Newsclick, 2020 Aug 03,
- பரிதி  Keetru.com aug 5 2020