பகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்.. Featured

26 08 2020

பகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்..
முனைவர்.வா.நேரு,
(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
சில செய்திகளைப் படிக்கிறபோது மனம் பதை பதைக்கிறது, நெஞ்சு பதறுகிறது, இப்படியெல்லாம் நிகழுமா, இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? நடக்கிறதா? அய்யகோ என மனம் அரற்றுகிறது, அழுது புலம்ப துடிக்கிறது. என்னய்யா உலகம், பச்சைக்குழந்தை தன்னுடைய அப்பாவை நம்பாமல் உலகில் வேறு யாரை நம்பும்? அவன் ஒரு மூட நம்பிக்கை பிடித்த நோயாளி என்பதனை பச்சிளங்குழந்தை எப்படிக் கண்டு பிடிக்க இயலும்? பாடங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள்-இல்லையே,ஊடகங்களில் உண்டா மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் -இல்லையே,சிரிக்க சிரிக்க பேசும் நாவல்லவர்களைக் கொண்ட ஆன்மிகப் பட்டிமன்றங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் - இல்லையே? கேள்விகளை கேட்பதை ஊக்குவிக்கும் பாடத்தையா நாம் பள்ளியிலே பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம், இல்லையே, நொடியூர் கிராமத்து பன்னீரின் மகள் வித்யா பலிகொடுக்கப்பட்டிருப்பதற்கு எத்தனை பேர் காரணம்? ஏதோ ஒரு செய்தி என கடந்து செல்ல நினைக்கும் படித்தவர்களே ஒரு கணம் நில்லுங்கள், இதற்குப் பதில் சொல்லுங்கள்...
பணப்பிரச்சினை.இந்தக் கரோனா காலத்தில் நாட்டில் உள்ள ஏழைகள் அனைவருக்கும்தான் உள்ளது. அந்தப் பிரச்சினையை தீர்க்கவென்று புதுக்கோட்டை மந்திரவாதி வசந்தியிடம் போயிருக்கிறான் இந்தப்பன்னீர் என்னும் ஆள். மந்திரவாதியிடம் போவது தவறு என்பதனை அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் 'தாயத்து, அம்மா தாயத்து' என்று பாட்டுப்பாடினார், ஆனால் இன்று நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். இன்னும் பக்தி என்னும் பெயரால் மூட நம்பிக்கைகள் நம்மைச்சுற்றி நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு மூட நம்பிக்கையைப் பரப்பும் ஊடகங்கள் காரணமில்லையா? தொலைக்காட்சிகளைத் திறந்தாலே ஏதோ ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடரில் மந்திரவாதிகள் வருகிறார்கள், பூசை செய்கிறார்கள், பலி வாங்குகிறார்கள்,பலி கொடுக்கின்றார்கள்.இப்படி ஓடிக்கொண்டேயிருக்கும் தொலைக்காட்சித்தொடர்களை அரசு தடை செய்யவேண்டாமா? படித்தவர்கள்,சமூக அக்கறை உள்ளவர்கள் இப்படிப்பட்ட தொடர்களை ஒலி--ஒளி பரப்புவர்களுக்கு எதிராக, நடிப்பவர்களுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை எழுப்ப வேண்டாமா? எழுப்பினோமா?
அப்பா சொல்வதை மகள் கேட்கவேண்டும்.உண்மைதானே,அப்பா பன்னீர் நொடியூர் கிராமத்தில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுத்து வரச்சொல்கிறார்.அக்கா தண்ணீர் எடுக்கப் போக, துடிப்பான இளைய மகள் வித்யா (வயது 13-8ஆவது படிக்கும் வயது) நான் போய் எடுத்து வருகிறேன் என்று போகிறாள். மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு அவள் சொன்னதை செய்வதற்காக மகள் பின்னாலேயே சென்று மகளின் கழுத்தை துணியைப் போட்டு இறுக்குகிறான் அப்பன்.ஒருவன் செய்யவில்லை இந்தக் கொலையை. பன்னீர், அவனது இரண்டாவது மனைவி மூக்காயி, பன்னீரின் உறவினர் குமார், மந்திரவாதி வசந்தி என்னும் இந்த நாலு பேர்கள் சேர்ந்து இந்தப் பச்சைப் பிள்ளையை கொலை செய்திருக்கிறார்கள்.
டெல்லியில் நிர்பயா கொலை வழக்கில் 5 பேர் சேர்ந்து அப்பாவிப் பெண் நிர்பயாவை வன்புணர்வு செய்தார்கள். அதனைக் கண்டித்துப் போராட்டங்கள் நடந்தன. நிர்பயா சட்டம் என்று ஒன்று வந்ததா இல்லையா?இப்போது இந்த வித்யா அநியாயமான கொலைக்கு ஒரு சட்டம் வரவேண்டாமா? அதற்கான போராட்டங்கள் வேண்டாமா? பன்னீர் தன்னுடைய மகளை, சிறுமியைக் கொலை செய்ததற்கு என்ன காரணம்? இந்த சமூகத்தில் நிகழும் மூடநம்பிக்கையல்லவா?அதனைப் பெருக்கி வளர்த்து வரும் ஊடகங்கள் அல்லவா? அதற்குத் துணை போகும் பத்திரிகைகள் அல்லவா? மந்திரவாதிகளை அழைத்துக்கொண்டு வந்து தங்கள் வீடுகளில் பூசை செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லவா? இவர்களின் போக்கினைத் தடுக்கும் வண்ணம், இனிமேல் இவைகள் நிகழாவண்ணம் இருக்க சட்டங்கள் வேண்டுமா? இல்லையா? வாசிப்பவர்களே பதில் கூறுங்கள். பி.பி.சி.யின் தமிழ் செய்தியினை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.
இந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழிடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விரிவாக பேசினார்.
"பன்னீர் தனது வறுமை மற்றும் பண ஆசை காரணமாக மந்திரவாதியான வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் அப்போது மந்திரவாதி 'உன் மகளை நரபலி கொடுத்தால் உனக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், புதையல் கிடைக்கும், செல்வாக்கு பெருகும்' எனக் கூறியதால் அதனை நம்பி மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார். "கடந்த மே மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு பிடாரி அம்மன் கோயில் அருகே பூஜை செய்துள்ளனர். மறுநாள் காலை 7 மணியளவில் பன்னீர் தனது இரு மகள்களிடம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி கூறியுள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைய மகள் வித்யா 'அக்கா நீ வர வேண்டாம் வீட்டில் இரு, நான் போய் தண்ணீர் எடுத்து விட்டு வருகிறேன்' என சொல்லி விட்டு குடத்துடன் சென்றுள்ளார்.''
"சிறுமியை பின் தொடர்ந்து சென்ற பன்னீர், தனியாக பேச வேண்டும் என்று தைல மரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமி தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துண்டால் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அந்த காட்டில் மறைந்திருந்த பன்னீரின் உறவினர் குமார், பன்னீர் இரண்டாவது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி, ஆகியோர் சிறுமியின் கை, கால்களை இறுக்கமாக பிடித்து மூச்சு திணற செய்துள்ளனர்.''
"சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் மூக்காயியை மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மந்திரவாதி உள்ளிட்ட அனைவரையும் அனுப்பிவைத்துள்ளார் பன்னீர்.''
தங்கள் ஜாதியைப் பற்றி,மதத்தைப் பற்றி ஏதேனும் சொல்லி விட்டால் பொங்கி எழுபவர்கள், இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.பி.பி.சி.யில் வந்த செய்தியை அப்படியே கொடுத்துள்ளேன். இது மதம் சம்பந்தப்பட்ட விசயம், இதனைத் தடுக்கக்கூடாது என ஒரு மேதகு நீதிபதியார் எழுதக்கூடும்.அவருக்கான சட்ட விளக்கத்தினை தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் அறிக்கையாகக் கொடுக்கக்கூடும்.
தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் தொலைக்காட்சி இப்படி நமது வீடுகளுக்குள் வரவில்லை. ஆனால் அய்யா அவர்கள் நம்மைப் பிடித்துள்ள அய்ந்து நோய்களுள் ஒன்று சினிமா என்றார். இன்றைக்கு சினிமா, தொலைக்காட்சித் தொடர் என்று நமது வீடுகளை ஊடகக் காட்சிகள்ஆக்கிரமித்திருக்கின்றன. எந்தப் பெண்கள் படிக்கவேண்டும், பட்டம் பெற வேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்று தந்தை பெரியார் பாடுபட்டாரோ அந்தப் பெண்களில் சிலர் பட்டம் பெற்று பதவி பெற்று உள்ள நிலையில் இந்த மூட நம்பிக்கைகளுக்கும் முட்டாள்தனத்திற்கும் ஆட்பட்டு ஊடகங்கள் வழியான மூட நம்பிக்கைத் தொடர்களை கண்கொட்டாமல் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
'விடுதலை' தனது தலையங்கத்தில் 8.6.2020
21-ஆம் நூற்றாண்டிலும் நரபலியா? என்னும் சிறப்பான தலையங்கத்தைத் தீட்டியுள்ளது. நரபலி நம்பிக்கைக்கு ஊற்றுக்கண்ணாக 'அரவான்' என்னும் மகாபாரதக் கதாபாத்திரம் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு... "நமது நாட்டு ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சியில் விஞ்ஞான கருவியைப் பயன்படுத்தி அஞ்ஞான மூடத்தனங்களை ஒளி பரப்புவதை நிறுத்திட வேண்டும்''. என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
தமிழ் நாட்டை, இந்திய நாட்டை ஆக்கிரமித்திருக்கும் மிகக் கொடிய நோய் மூடநம்பிக்கை நோய். இது வீட்டை, நாட்டைப் பாழ்படுத்தும் நோய். சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றி தீவிரமாகப் பிரச்சாரம் நடைபெறல் வேண்டும். டுவிட்டர் போன்ற இணையதளங்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு கேஷ்டாக் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டங்களைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க வேண்டும். unmaionline.com aug 2020