தமிழ்த் தேசியத்தின் பிரச்சினைகள் - பகுதி 1 Featured

10 09 2020 

தமிழ்த் தேசியத்தின் பிரச்சினைகள் - பகுதி 1

தமிழ்த் தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள். தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரிடம் அது குறித்த ஒத்த கருத்து இல்லை. இதனால் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படும் குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏராளம். இந்நிலையில் தமிழ்த்தேசியம் என்பதன் சாரம் என்ன, அதன் நோக்கம் என்ன என்பதைப் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாக உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை அறிவியல் பூர்வமாக முன்வைத்து வளர்த்தெடுத்த மார்க்சிய அடிப்படையிலான தமிழ்த்தேசிய இயக்கங்களின் வரலாற்றை அறிந்துக் கொள்ளாமல் தமிழ்த் தேசியத்திற்கான தத்துவத்தையும், அரசியலையும், நடைமுறையையும் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால், இன்று தமிழ்த்தேசியம் பேசுகிறோம் என்று சொல்லக்கூடிய பலர் அத்தகைய வரலாற்றை அறிந்திருக்கவில்லை அல்லது செழுமையான முந்தைய வரலாற்றையும் அதன் பங்களிப்பையும் புறக்கணிக்கிறார்கள்.

அப்படி நாம் அறிந்துக்கொள்ள வேண்டிவற்றினுள் தமிழ்நாடு பொதுவுடமை கட்சியின் வரலாறு குறிப்பிடத்தகுந்ததாகும். அதை புலவர் கலியபெருமாளுடன் இணைந்து நிறுவியவர் தோழர் தமிழரசன் ஆவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைவர் சாரு மஜூம்தாரின் அழைப்பினை ஏற்று புரட்சிகர வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களுள் அவரும் ஒருவர். தன் கல்லூரி படிப்பை துறந்துவிட்டு நக்சல்பாரி புரட்சியாளரானார். கட்சி பிளவுபட்ட பின்னர் மக்கள் யுத்தக் குழுவின் தமிழக செயலாளராக பொறுப்பு வகித்தார். தேசிய இனப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தரமறுத்து "ஒன்றுபட்ட இந்தியா" என்ற போக்கில் கட்சி செயல்படுகிறது என்ற விமர்சனத்தை கட்சிக்குள் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார். ஈழத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற காரணத்தைச் சொல்லி இ.க.க (மா.லெ) யுத்தக்குழு அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

அதுவரையிலும் தமிழ் உணர்வும், தமிழர் உணர்வும் மட்டுமே பேசி தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடான சாதிப் பிரச்சனைகளை புறந்தள்ளி வந்த தமிழ்த்தேசிய தலைவர்களிடமிருந்து முழுமையாக மாறுபட்டு தமிழகம் விடுதலை பெற வேண்டுமென்றால் மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் சாதி ஒழிப்பு போராட்டத்தை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து நடத்த வேண்டும் என்று மிகத்தெளிவாக வரையறுத்தார் தோழர் தமிழரசன்.

தமிழ்நாட்டிற்கான தேசிய இன உரிமைகளை இந்திய அரசு ஒருபோதும் ஏற்காது; நமது உரிமைகளை பெறுவதற்கு ஆயுதந்தாங்கிய போராட்டத்தால் மட்டுமே முடியும் என்று போர்தந்திரம் வகுத்தார். தமிழ்நாடு பொதுவுடமை கட்சி என்ற கட்சியும், தமிழ்நாடு விடுதலைப்படை என்ற படையையும் புலவர் கலியபெருமாளின் உதவியோடு உருவாக்கி தமிழ்நாட்டின் விடுதலைக்காக ஆயுதந்தாங்கிய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தார்.ஈழம் குறித்த பெண்ணாடம் அறிக்கையும், மீன்சுருட்டி மாநாட்டில் வைக்கப்பட்ட "சாதி ஒழிப்பின் அவசியமும் தமிழக விடுதலையும்" என்ற அறிக்கையும் தமிழ்நாடு பொதுவுடமை கட்சியின் தெளிவான அரசியல் கொள்கையை பறைசாற்றுகிறது.

சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள், நிலமீட்பு போராட்டங்கள், ஈழ ஆதரவு செயல்பாடுகள் என்று ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் இயங்கியது அக்கட்சி.

அரசுக்கு சொந்தமான முந்திரிக் காடுகளை கைப்பற்றி மக்களுக்கு பிரித்துக் கொடுப்பது, பெரும் பண்ணையார்கள் நிலத்தை கைப்பற்றி மக்களுக்கு பிரித்துக் கொடுப்பது என்று ஒருசேர நிலமற்ற கூலி விவசாயிகளை பண்ணையார்களிடமிருந்தும், சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினரிடமிருந்து விடுவிப்பது என அவர் சாதி ஒழிப்பிற்கும், தமிழக உழைக்கும் மக்களின் மீட்சிக்குமான நடவடிக்கைகளை தமிழ்நாடு பொதுவுடமை கட்சி முன்னெடுத்தது.

தமிழ்நாடு பொதுவுடமை கட்சியின் ஆயுதந்தாங்கிய பிரிவான தமிழ்நாடு விடுதலைப் படையின் செயல்பாடுகள் தமிழக, இந்திய அரசுகளுக்கு கடுமையாக சவால் விடுத்த ஒரு வரலாறாகும். இதனால், தவிர்க்கவியலாமல் தமிழக அரசும், மத்திய அரசும் தோழர் தமிழரசனையும், தமிழ்நாடு விடுதலைப்படையையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளில் இறங்கினர். விடுதலைப் போராட்டத்தின் பாதையிலே தோழர் தமிழரசன் அரசின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டாலும் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் கொள்கைகளும், பணிகளும் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை.

அதே போல தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கமும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கமும், தமிழ்த்தேசிய பொதுவுடமை கட்சியும் (தமிழ்த்தேசிய பேரியக்கம்) மார்க்சிய அடிப்படையில் தமிழ்த்தேசியக் கருத்துக்களை முன்வைத்தவர்கள் ஆவர். 2009 -ம் ஆண்டுக்கு பின்னர் உருவான தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவைகளால் தமிழகத்தின் தமிழ்த்தேசிய வரலாறு தொடர்ந்து புறக்கணிப்படுவது ஏன்? என்ற புதிருக்கு விடை காண வேண்டும்.

அது அவ்வளவு கடினமானதல்ல.

இத்தகைய 'தமிழ் தேசிய' அமைப்புகள், கட்சிகள், தமிழ்நாடு பொதுவுடமை கட்சி முன்வைத்த அரசியலை தவிர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்த்தேசிய இலட்சியங்களை திரித்தும், மடைமாற்றியும் இந்திய அரசின் ஆதிக்கத்திற்கும், இந்துத்துவத்திற்கும் சேவை செய்கின்றன. அதன் பொருட்டு இளைஞர்களுக்கு தமிழ்த்தேசியம் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தி, தவறான வழிமுறைகளையும் கற்பிக்கின்றனர். இத்தகைய தமிழ்த் தேசியவாதிகள் மார்க்சிய அடிப்படையிலான தமிழ்த் தேசியத்தை அகற்றிவிட்டு அதனிடத்தில் இந்துத்துவ, இனவெறி, சாதிவெறி தேசியத்தை முன்வைப்பதற்காக சில பிரதான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அவற்றையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து பரப்பியும் வருகிறார்கள். இது போன்ற பிற்போக்கான தமிழ் தேசிய அமைப்புகளை அடையாளம் காண்பதும், அம்பலப்படுத்துவதும் தமிழ்த்தேசியத்தின் உண்மையான இலட்சியங்களை, இலக்குகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இன்று நமது தவிர்க்க இயலாத கடமையாக மாறி நிற்கிறது.

பிற்போக்கு தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயல்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

1) தமிழ்த்தேசியத்தின் தத்துவத்தை சிதைப்பது.

2) ஈழவிடுதலை குறித்த தவறான நம்பிக்கையை விதைப்பது.

3) தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது மூலம் தமிழ் தேசியத்தின் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்பது.

4) தமிழ்ச்சாதிகளை உயர்த்தி பிடிப்பது.

5) திராவிடத்தை வேரறுப்போம் என்று செயல்படுவது

6) வெளியாரை வெளியேற்றுவதாக பிரச்சாரம் செய்வது

இந்த நிலைப்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக விவாதிப்போம்.

1. தமிழ்த்தேசியத்தின் தத்துவத்தை சிதைப்பது.

சரியான கோட்பாட்டின் வழிகாட்டல் இல்லையேல் எந்த நடைமுறையும் வெற்றியை நோக்கி பயணிக்க முடியாது. எனவே, தமிழ்த் தேசியமும் தனக்கான சரியான தத்துவத்தை வரித்துக் கொள்வது இன்றியமையாதது.இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை மையமாக கொண்டுதான் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய விழிப்பு நிலை உருவாக துவங்கியது. இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள், எல்லை மீட்பு போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களாக பார்க்கப்பட்டன.

அதற்கு முன்னர் தமிழ் உணர்வு என்பது சமயம், இலக்கியம் சார்ந்ததாக இருந்ததே தவிர அது தமிழ்நாட்டு மக்களின் பொருளியல் வாழ்நிலையை, சமூக ஏற்றத்தாழ்வுகளை ஆய்வு செய்து அதிலிருந்து உருவான கோரிக்கையாக இல்லை.தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சூழலிலிருந்து கிளம்பியது. இந்திய துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் பிரிந்து தனிநாடு அடைய வேண்டும் என்ற விருப்பம் பலருக்கு இருந்தாலும் அது பரந்துபட்ட மக்களின் கோரிக்கையாகவோ அல்லது அதை நோக்கி செயல்பட உறுதியான இயக்கங்களோ உருவாகிவிடவில்லை. உருவானவைகளும் மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் நாளடைவில் உருத்தெரியாமல் போய்விட்டன.

பார்ப்பனீய எதிர்ப்பு நிலை இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனத்தின் உள்முரண்பாடான, பார்ப்பனீயம் கெட்டிப்படுத்திய சாதியக் கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று யாரும் அக்கறை கொள்ளவில்லை. அன்றைய தமிழ் தேசியத்தின் தமிழ், தமிழர் உணர்வு- ஒடுக்கப்படும் மக்களை பற்றி நினையாது மொழியின் தனித்தன்மை, பெருமை, வரலாறு போன்றவற்றின் பெருமிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேசியத்தை, தேசத்தை பற்றி கனவு கண்டது.

தேசியம், தேசம், தேசிய இனம் ஆகியவை விருப்பம் சார்ந்து உருவாகும் கருத்து நிலைகள் இல்லை. நீண்ட வரலாற்று பின்னணி கொண்ட ஒரு மக்கள் சமூகம், தங்கள் சமூகத்தை பிரித்து சிதைக்கும் பிளவுகளை உதறித் தள்ளிவிட்டு முன்னேறிய சமூகத்தை நோக்கிய பயணத்துக்காக ஒன்றுபட்டு எழுந்து நிற்பதே அது. எதிர்காலத்தில் சிறந்த சமுகத்தை படைப்பதற்காக ஓற்றுமையாக எழுந்து நிற்பதே, தேசியம் என்ற கோட்பாட்டின் அடிப்படை.இந்தியாவில் ஒரு தேசிய இனத்தை மற்றொரு தேசிய இனம் அடக்குவது பிரதான பிரச்சனையா? அல்லது சமூக வளர்ச்சியின் மூலமாக ஒரு தேசியமாக பரிணமிக்க முடியாமல் பிற்போக்கான சாதியை பற்றிக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் பிளவுபட்டு இருப்பது பிரதான பிரச்சனையா என்பதை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்தின் நேரடி விளைவாக சிங்களர்- தமிழர் முரண்பாடுகள் ஓரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நோக்கி நகரலாயிற்று. ஆனால் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் இந்திய அடிவருடிகள் ஆட்சியையும், ஆளும் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர்.அந்த ஆட்சி தங்களின் சுரண்டல் வசதிகளுக்காக இதுவரை தேசமாக இல்லாதிருந்த இந்தியாவை "ஒரு தேசமாக" மக்களை நம்பச் செய்வதற்கான முயற்சிகளை துவங்கியது. இந்தியாவில், இலங்கையை போல எந்த ஓரு குறிப்பிட்ட தேசிய இனமும் மற்றொரு தேசிய இனத்தை ஒடுக்கவில்லை, உண்மையில் பிரிட்டிஷ் காலனியாதிக்க வாதிகளிடமிருந்து ஆட்சியதிகாரத்தை கைமாற்றிக் கொண்ட முதலாளித்துவ கும்பலே இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும், அதன் மொழிகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு அதன் மேல் "ஒரு புதிய இந்தியாவை" அமைப்பதற்கு தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

மேலும் இந்திய அரசு தன் ஆதிக்க, அராஜக போக்கின் மூலமாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதை இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் மீது ஒரு ஒற்றை அடையாளத்தை திணிப்பதை முழுமூச்சுடன் நிறைவேற்றி வருகின்றனர்.இதற்கான சித்தாந்தமாக அவர்கள் பயன்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் முன் வைக்கும் இந்து ராஷ்டிரம் என்பது. இந்து - இந்தி - இந்தியா என்ற ஒற்றை மொழி, ஒற்றை பண்பாட்டு, பெரும்பான்மைவாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் வளர்ச்சியை ஒடுக்குகின்றனர்.

குஜராத், ராஜஸ்தான், மராட்டியத்தைச் சேர்ந்த முதலாளிகளின் நலன்களுக்காக அந்த மாநில மொழிகளே அழிக்கப்பட்டு அவ்விடத்தில் இந்தி திணிக்கப்படுகிறது. வடமாநிலங்களின் பிரதேச மொழிகள் ஒழித்துக் கட்டப்பட்டு இந்தி திணிக்கப்பட்டது, தொடர்ந்து திணிக்கப்படுகிறது..இவ்வாறாக, இந்தியாவின் இந்துத்துவ, பார்ப்பனீய, ஆளும் அதிகார வர்க்கம், இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுடன் முரண்பாட்டை உருவாக்கிக் கொள்வதோடு தேசிய இனங்களுக்கிடையே பகைமையை வளர்ப்பதையும் செய்து வருகிறது.அவ்வகையில் இந்துத்துவா அடிப்படையிலான இந்திய 'தேசியமும்' அவர்களது பிரதிநிதியாக உள்ள இந்திய அரசும் நம்முடன் நேரடியாக கொண்டிருக்கும் பிரச்சனைகளையும், நம்மை போன்ற பிற தேசிய இனங்களுடன் தோற்றுவிக்கும் பிரச்சனையையும், தமிழ்நாட்டிற்குள்ளேயே உருவாக்கும் பிரச்சனைகளையும் பற்றி நாம் எந்த அளவிற்கு தெளிந்து கொள்கிறோமோ அந்த அளவில்தான் நாம் அவற்றை எதிர்ப்பதற்கான தயாரிப்புகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்.

அந்தவகையில் தமிழ்நாட்டில் நிலவும் உள்முரண்பாடுகளை பார்த்தோமானால், இதுவரை வளர்ந்து வந்திருக்கும் தேசிய உணர்வையும், தேசியத்தின் வளர்ச்சியையும், தேசத்திற்கான திட்ட வரைவையும் காண விரும்பினோமென்றால் நாம் விரும்பும் விடைகள் நமக்கு காண கிடைப்பதில்லை. தமிழ்நாடு எனும் நிலப்பரப்பில் வாழும் அனைவரையும் தமிழ்நாட்டின் குடிமக்களாக ஏற்று சமத்துவத்தை பேணாமல் அவர்களுள் பிரிவினையை விதைக்கும் தமிழ் தேசியமாக மட்டுமே இப்போது அது வளர்ந்து வருகிறது.

தமிழை தாய்மொழியாக கொண்ட சக தமிழர்களையே சாதி அடிப்படையில் தனக்கு சமமாக கருதாமல், இழிவாக பார்க்கும் மற்றொரு தமிழ் பேசும் பிரிவினர் இங்கே நீடிக்கும் போது இன்னும் தமிழ்த்தேசிய ஒற்றுமை உருவாகிவிடவில்லை என்பதையே இது காட்டுகிறது.அதாவது நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கும், ஒரே இனமாக ஒன்றுபட்டு நிற்பதற்குமான வளர்ச்சியை தமிழ்நாடு இன்னும் அடையவில்லை என்பதே அதன் பொருள். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய உணர்வை விதைத்து அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும் எனில் முதலில் சாதிஒழிப்பு களத்தில் பணியாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு பொதுவுடமை கட்சிதான் மார்க்சிய அடிப்படையில் அதற்கான தத்துவார்த்த அடிப்படைகளை வகுத்து தந்தது. இந்தியா, தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருக்கிறது, அதனால் இந்தியாவிடமிருந்து விடுவித்துக் கொள்ள, இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தை பெற, நாம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது என்பதை தெளிவாக முன்வைத்தது.அதோடு, மார்க்சிய அடிப்படை என்றவுடன் வர்க்கம் ஒழிந்தால் சாதி தானே ஒழிந்துவிடும் என்ற வழக்கமான மார்க்சியர்களின் பார்வையோடு அவர்கள் உடன்பட்டு நிற்கவில்லை. வர்க்கத்திற்குள் வர்க்கம் (அ) மூடுண்ட வர்க்கம் (அ) வர்க்கம் எனப்படும் சாதிதான் தமிழினம் ஒன்றிணைந்து போராடுவதற்கு தடையாக இருக்கிறது என்பதை ஆய்வுப் பூர்வமாக விளக்கி சாதி ஒழிப்பை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார்கள்.

தேச விடுதலை போராட்டம், சாதி ஒழிப்பு இவற்றை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து அசைக்க முடியாத வலுவான, பிழையில்லா தத்துவார்த்த பின்னணியோடு தமிழ்தேசிய விடுதலைக்கான கொள்கைகளை வகுத்து தந்தார்கள்.இவைதான் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகள். இன்று இந்த அடிப்படை கொள்கைகளை பற்றி பேசாமல் இந்துத்துவ வெறி, இனவெறி, மதவெறி, மொழிவெறி என்று தமிழ் தேசிய புரட்டர்கள் தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் வேலையை திட்டமிட்டு செய்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த போலி தமிழ்த்தேசியம் இந்துத்துவத்தையும், இந்திய அரசையும் எதிர்க்கும் தேச விடுதலை போராட்டத்திற்கும் தயாராக இல்லை, இந்திய அரசின் சூழ்ச்சியினால் பகை சூழ்ந்து நிற்கும் அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையை கட்டவும் முன்வரவில்லை. இதெல்லாம் அவர்களுடைய ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டதாக வைத்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டில் உள்ளே தமிழர்கள் மத்தியில் ஓர்மையை வளர்ப்பது எங்கள் லட்சியம் என்பவர்கள் தமிழர்களுள் பெரும்பகையாக நிலவும் இழிவான சாதியக் கட்டமைப்பை ஒழிக்கவும் தயாரில்லை.அப்படியானால் இவர்கள் பேசும் தமிழ்த்தேசியம் என்பதுதான் என்ன? அவர்கள் பேசுவது இந்துத்துவ, சாதிய இனவெறியாக இருக்கிறது.தமிழ்த்தேசிய ஒர்மையை கட்ட விரும்புவதாக கூறும், இந்த தமிழ்த் தேசியவாதிகள் சாதியை ஒழிக்க விரும்பவில்லை என்பதோடு அதைப்பற்றி பேசவும் விரும்பவில்லை. அதன் ஆதிக்கத்தை மட்டும் ஒழித்தால் போதுமென நம்மிடம் பகடி செய்கிறார்கள்.

இவர்களால் ஒழிக்க முடியாதென்பது தெரிந்த விடயமே. ஆனால் கருத்தியலாகவாவது சாதி ஒழிப்பு எங்கள் இலட்சியம் என்று முழங்குவதில்லையே, ஏன்? ஏனென்றால் அப்படி பேசினால் இன்று இந்தக் கட்சிகளை சூழ்ந்து நிற்கும் சாதியவாதிகள் வெளியேறிவிடுவார்கள். அவர்கள் வெளியேறிவிட்டால் கூடாரம் காலியாகிவிடும்.இன்று சாதி ஆதிக்கமும், சாதி வெறியுமே அத்தகைய தமிழர்களின் உணர்வாக இருக்கிறது. அவர்களின் இந்த பிற்போக்குத்தனத்தையும், தமிழின விரோத போக்கினையும் மறைக்கவும், மறக்கடிக்கவுமே போலியான எதிரிகளை வடிவமைத்து, உண்மையான எதிரிகளை பத்திரமாக பாதுகாத்து, இந்தியத்திற்கும், இந்துத்துவத்திற்கும் இவர்கள் சேவை செய்கிறார்கள்இந்தியாவில் இந்துத்துவத்திற்கு கடும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் பெரியாரின் முற்போக்கான திராவிட கருத்தியலை வீழ்த்தி இந்துத்துவத்திற்கும், இந்தியத்திற்கும் தொண்டாற்றும் பெரும்பணியையும் இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த போலி தமிழ்த்தேசியர்களுக்கு ஒரே இலக்காக தேர்தல் அரசியலே இருப்பதாலும், தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக மக்களின் உரிமைகளை எல்லாம் பெற்று விடலாம் என்று கருத்தை வலிமையாக வைப்பதாலும் திராவிட கட்சிகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் சற்றுப் பார்க்க வேண்டியிருக்கிறது.ராஜாஜி, பக்தவச்சலம், காமராஜர் போன்ற தமிழர்களின் ஆட்சிகள் தங்களது இந்திய முதலாளிகளை திருப்திப்படுத்த, தமிழ் மக்களுடைய தேசிய எழுச்சிக்கு எதிராக நின்று தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை திணிப்பதையும் அதற்கெதிராக எழுந்த தமிழர் போராட்டங்களை ஒடுக்குவதை இந்திய விசுவாசத்துடன் செய்து வந்தனர்.

இந்தியை கொண்டு வந்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றவர்கள்தான், தமிழக எல்லைக்கான போராட்டம் நடந்துக் கொண்டிருந்த போது குடகு, கோலார், பீர்மேடு, தேவிகுளம், மூணாறு, திருப்பதி போன்ற தமிழர்களின் பூர்வீக வாழிடங்களை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர்கள்; இன்றளவும் நாம் தண்ணீருக்காக மூன்று மாநிலங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் சூழலையும் உருவாக்கியவர்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தையும் இவர்கள் தாரை வார்க்கத் தயாரான போதுதான் திரு. நேசமணி, குளச்சல் சைமன், அப்துல் ரசாக் ஆகியோரின் சீரிய தலைமையில் நடைபெற்ற பெரும்போராட்டமும், 16 தமிழர்களின் உயிர்த் தியாகமும்தான் கன்னியாகுமரி மாவட்டம் இன்று நம்முடன் இருப்பதற்கான காரணம் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.

இவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு பதிலடியாகவும், பாடம் புகட்டவும்தான் தமிழக மக்கள் அன்றைய சூழலில் புத்தொளி போல வந்த பெரியாரின் திராவிடக் கொள்கைகளை பேசியவர்களையும், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டக் களத்தில் நின்றவர்களையும் தேர்வுசெய்தனர்.கடந்த சில வருடங்களாக நடக்கும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய தமிழர்களின் ஆட்சியில்தான் தமிழகம் இதுவரை பெற்றிருந்த உரிமைகளையெல்லாம் முற்றிலுமாக இழந்துவிட்டு நிற்கிறது. இதுவரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மோசமாக விளங்கும் இவர்கள் ஆட்சியில்தான் ஒடுக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

இது தமிழர் ஒருவர் ஆட்சியில் அமர்வதால் அவர் தமிழ்நாட்டின், தமிழர்களின் நலன்களுக்காகத்தான் செயல்படுவர் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படி உத்தரவாதம் அளிப்பவர்கள் சாதீய, இன, மத வெறியர்களாக இருப்பதால் இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நின்று தமிழ்நாட்டின் நலன்களை பெறுவது அவர்களால் இயலாத காரியம் என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

மேலும் அதனுடன் இணைந்து நின்று இந்துத்துவ, சாதீய, இன வெறி அரசியலைத்தான் முன்கொண்டு செல்வார்களே தவிர தமிழ்த்தேசிய அரசியலை அல்ல.

மாற்று இனத்தவர் வந்து அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டனர், ஆளுகின்றனர், தமிழருக்கு துரோகம் செய்கின்றனர், தமிழரை அழிக்கப் பார்க்கின்றனர் என்று பேசுகின்றனர்; ஆனால் இந்த சாதித் தமிழர்கள் சாதிக் கூட்டணியில் அவர்கள் மாற்று இனத்தாராக குறிப்பிடுபவர்களோடு இணைந்து நிற்பதற்கும், அவர்களோடு இணைந்து சக தமிழர்களை ஒடுக்குவதற்கும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. தமிழர்களை பிளவுப்படுத்தும் இந்த சாதீயத்தை தூக்கி எறிந்துவிட்டு தேசியமாக ஒன்றுபடுவதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை.வீட்டுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளை ஓழிக்க முடியாமலும், ஊரில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் பக்கத்து வீட்டுக்காரன் வைக்கோல் போரை கொளுத்திவிடும் கதையாக இங்கே மடைமாற்றும் அரசியல்தான் நிகழ்கிறது.

மார்க்சிய அடிப்படையிலான தேச சுயநிர்ணய உரிமை கொள்கை, கோட்பாடுகளை முன்வைத்து அரசியல் செய்வதற்கான தகைமை இல்லாததால் அதை தவிர்ப்பதும், சிதைப்பதுமாக அவர்கள் இந்திய, இந்துவ ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வதைத்தான் இலட்சியமாக கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசிய ஒற்றுமையோ, தமிழீழ விடுதலையோ அவர்களின் இலட்சியமல்ல.

2. ஈழவிடுதலையை குறித்த தவறான நம்பிக்கையை விதைப்பது.

இன்றைய ஈழ அரசியல் மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை-ஈழம், புலம்பெயர் ஈழமக்கள் வாழும் நாடுகள், தமிழ்நாடு.

இதில் இதுவரையும் ஈழத்தில் நடந்த அரசியல் நடவடிக்கையை பின் தொடர்ந்தே புலம்பெயர் சமூகமும், தமிழ்நாடும் செயலாற்றி வந்திருக்கிறது. ஆனால் 2009-ல் ஈழப்போர் பாரிய பின்னடைவுக் குள்ளான பிறகு ஈழவிடுதலையின் மையமான தமிழீழத் தாயகத்தில் செயல்பாட்டு பரப்பு மிகவும் சுருங்கி விட்டதால் புதிய தளங்களை நோக்கிய கவனங்கள் திரும்பியது.

சர்வதேச அழுத்தத்தை உருவாக்க வேண்டி புலம்பெயர் சமூகங்கள் வாழுகின்ற நாடுகளிலும், இந்தியாவிற்கு அழுத்தத்தை உருவாக்க வேண்டி தமிழ்நாட்டிலும் போராட்டக் களங்கள் உருவாகின.குறுகிய காலம் எழுச்சியுடன் நடந்த இந்த போராட்டங்கள் விரைவிலேயே சோர்வடைய துவங்கின, காரணம் ஈழவிடுதலை போராட்டத்தின் உண்மையான தளம் என்பது எப்போதும் தமிழீழத் தாயகம்தான். அங்கே அரசியலும், நடவடிக்கைகளும் நிகழாமல் அதற்கு வெளியில் நின்று போராடி தீர்வு பெற்று தந்துவிட ஓருபோதும் இயலாது.புலம்பெயர் ஈழமக்கள் துவக்கத்தில் தங்களுக்காக யார் பேசினாலும், போராடினாலும் அதனை வரவேற்று இயன்றவரை உதவிகள் செய்யத் துவங்கினர். அவர்களுக்கு தமிழீழத்தை அடைவது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் புலம்பெயர் ஈழச் சமுகத்தில் பல்வேறு போக்குகள் வெளிப்பட்டன.பெரும்பான்மையோர் தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு என்று இருக்க, சிலர் மாறிவிட்ட சூழலில் தமிழர் விரோத தமிழ்த்தேசிய கூட்டணி சம்பந்தன், சுமந்திரன் போன்றோருடன் இணக்கம் காட்டி நின்றனர். இன்னும் சிலர் தமிழ்நாட்டு அரசியலை, தமிழ்நாட்டு களத்தை சாதகமாக்குவது ஈழவிடுதலைக்கு உதவியாக இருக்கும் என்று நகர்ந்தனர்.

இந்த நகர்வு தமிழ்நாட்டில் புதிதாக உருவாகி ஈழ அரசியலை முன்வைத்து இயங்குகின்ற கட்சிகள், அமைப்புகளுக்கு உகந்ததாக மாறின. அவர்களும் ஈழத்தில் உள்ள மக்களுக்காக குரல் கொடுக்காமல், புலம்பெயர் தமிழர்களின் (பல்வேறு குழுக்கள்- பல்வேறு நோக்கங்கள்) அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டனர்.இந்தப் போக்கு மெல்ல தமிழீழ தாயகத்தில் மக்களின் உண்மையான வாழ்வியல், பொருளியல், சமூக வாழ்க்கை அவலங்களை உலகத்திற்கு உணர்த்துவதை தவிர்த்துவிட்டு ஒரு சாகசவாத பரப்புரையாக பரிணமிக்க துவங்கிற்று.

அனைவரும் விரும்பிய பலனோ தமிழகத்தின் தமிழ்த்தேசிய அரசியல் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்திற்கு அரணாக மாற வேண்டும் என்பது, ஆனால் இங்கே தோன்றிய தமிழ்த்தேசிய கட்சிகளின் இலக்கோ தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை அடைவது.அதாவது பெரும் வஞ்சகத்துடன் இலங்கை அரசுக்கு துணை நின்று ஈழமக்களை கொன்றொழித்த இந்திய அரசுடன் நேர்எதிர் நின்று போராடுவதற்கு பதிலாக இந்திய அரசின் சட்டகத்திற்கும், விதிகளுக்கும் ஒப்புக்கொண்டும், இந்திய அரசிற்கு விசுவாசமாக இருப்பேன் என்று எழுதி கையொப்பமிட்டுவிட்டு தங்களுடைய குறுகிய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வது.

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலின் இலக்காக தி.மு.க எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு மட்டுமே இலக்காக மாற்றி விடப்படுவதால் ஈழம் அமைவதற்கு உண்மையான எதிரியாக விளங்கும் இந்திய அரசு காப்பாற்றப்பட்டு வருகிறது. தி.மு.க வை எதிர்க்கக் கூடாதா? நிச்சயம் எதிர்க்க வேண்டும். தி.மு.க துரோகம் செய்ததா? ஆம், செய்தது. ஆனால் தி.மு.க வகித்தது துணைபாத்திரமே, துணையாக நின்றவர்களையே இந்த தமிழ்த்தேசியர்கள் இந்தளவிற்கு எதிர்க்கும்போது, பிரதானமாக நின்று மக்களை கொன்றவர்களை எந்தளவிற்கு எதிர்க்க வேண்டும்?

காங்கிரசுதான் ஈழத்தை அழித்தது. பா.ஜ.க ஒன்றும் செய்யவில்லை என்று கூறினால் அவர்கள்தான் மிகப்பெரிய அயோக்கியர்கள். பா.ஜ.க வந்தால் நிலை மாறும் என்று பரப்புரை செய்தவர்கள் ஏராளம். இந்துக்கள், இந்துக்களுக்கு உதவி செய்வார்கள் என்பதை விதைத்தவர்கள், ஆரியர்களும், ஆரியர்களும் இணைந்து கொண்டதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.இந்த தமிழ்த்தேசியத் தலைவர்களுக்கு புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுவருவதிலே உள்ள நாட்டம், இன்றைக்கும் இலங்கை அரசினால் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ தாயகத்திற்கு செல்வதற்கு வழித்தெரியவில்லை.

அங்கே வாடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் துயரினை துடைக்க வேண்டாம், துயரினை பற்றி பேசுவதற்கு கூட எண்ணமில்லை. மிகவலிமையான தேசிய விடுதலைப் போராட்டத்தையே இந்திய- இலங்கை அரசுகள் கொடூரமாக நசுக்கியிருக்கும் போது அதே தமிழீழ தாயகத்தை வெல்வதற்கு தமிழ்நாட்டு முதல்வர் பதவி போதும் என்ற நிலை கேள்விக்குரிய ஓன்று.ஈழவிடுதலை போராட்டத்தை அழித்தொழிப்பது என்பது இந்திய அரசின் நிலைப்பாடு. அது ஏதோ ராசீவ் காந்தியை கொன்றதால் காங்கிரசுக்கு ஏற்பட்ட கோபம் என்பதெல்லாம் அல்ல. ஈழம் விடுதலை அடைந்திருந்தால், இந்தியா முழுவதும் தேச விடுதலை போராட்டங்கள் வெடித்திருக்கும். அதற்காகவே இந்திய அரசு ஈழவிடுதலை போராட்டத்தை அழித்தது.

இந்திய அரசின் நோக்கத்தை குறித்து தமிழ்நாடு பொதுவுடமை கட்சி முன்வைத்த கருத்துகளை சற்றே பார்த்துவிடுவோம்.

தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய அரசே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் நசுக்குகிறது. எனவே பொது எதிரியான இந்திய அரசுக்கு எதிராக ஈழ, தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும், இன்று இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தியாவில் தமிழ்த் தேசிய இனம் உட்பட பிற தேசிய மக்களுக்குத் துரோகம் இழைக்கவே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிடுகின்றன.இலங்கைத் தமிழரின் மீதான ஒடுக்குமுறையும் இலங்கைத் தமிழர்களின் விடுதலை எழுச்சியும் தமிழ்நாட்டு மக்களிடையே தேசிய விடுதலை எழுச்சியை மேலும் விரைவுப்படுத்திவிடும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன.இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையைக் கொஞ்ச காலத்திற்கு ஒத்திப்போடவே இலங்கைத் தமிழின விடுதலைக்கு எதிராக இந்திய பிரதமர் சமரசம் பண்ணப் பார்க்கிறார். (இந்திரா காந்தி வங்கத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்தது போல ஈழத்திற்கும் வாங்கி கொடுப்பார் என்பது ஏமாற்றே)

அதனால்தான் மிகச்சரியாக "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்" என்றது த.பொ.க.

தமிழக மக்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி தமிழ் தேசிய விடுதலையைப் பெறுவதே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்பதுதான் தமிழ்நாடு பொதுவுடமை கட்சியின் நிலைப்பாடு.அந்தக் காலகட்டத்திலேயே தேசிய இனச் சிக்கலையும், தேசிய இன விடுதலையையும் பற்றி தோழர் தமிழரசன் நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.ஒருபோதும் தமிழீழ விடுதலைக்கு இந்தியம் ஆதரவளிக்காது, எதிராகவே செயல்படும் என்ற உண்மையை அப்போதே தெளிவுப்படுத்தியுள்ளார்.

அந்த உண்மையை நாம் இன்றைய நிகழ்வுகளோடு பொருத்தி பார்த்துக் கொள்ள முடியும்.

தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய கட்டமைப்பை வீழ்த்துவதற்கான முன்னெடுப்புகளை பல்வேறு தளங்களில் மிகப்பெரிய ஒருங்கிணைப்போடும், உறுதியான செயல்பாடுகளின் மூலமாகவும் செய்யப்பட வேண்டியிருக்கிறது.இங்கோ, ஒரு மாபெரும் போராட்டத்தின் உன்னதமான தலைவனையும், போராளிகளையும், மக்களையும் சிலர் தங்கள் குறுகிய தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துவதோடு அதன் திசைவழியை விடுதலைப் போராட்ட குறிக்கோளிலிருந்து வேறுதிசையை நோக்கி நகர்த்த முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.

தாங்கள் மட்டுமே ஈழத்திற்கான தமிழகப் பிரதிநிதி, ஈழவிடுதலை தங்கள் கையில் மட்டுமே இருக்கிறது என்று இளைஞர்களையும், தமிழக மக்களையும் தொடர்ந்துக் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.ஈழப் போராட்டத்தின் வீரியத்தை முடக்கியும், வளரவிடாமலும், தமிழக தேர்தல் அரசியலின் பரப்பெல்லைக்குள் வெற்று பேசுபொருளாகவும், பரப்புரைக்கான செய்தியாகவும் மட்டும் குறுக்கி விட்டிருக்கிறார்கள்.

ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி 2009-ல் பெரும் பின்னடைவுக்குள்ளான ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு பிறகு, ஈழவிடுதலையை பெறுவதற்கு இன்று என்னன்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்த்தால்...

(1) ஐ.நா சபை மூலமாக தீர்வை பெறுவது அல்லது

(2) விடுதலை போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்பது ஆகிய இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

அதில் ஐ.நா சபையில் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் போராட்டம் ஒரு தசாப்தத்தை கடந்து விட்டிருக்கும் நிலையிலும் நாம் எதிர்ப்பார்த்த முன்னேற்றங்களை அடைந்து விடவில்லை. உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் போக்கு முழுமையாக ஈழவிடுதலைக்கு எதிராக இருக்கும் நிலையில் ஐ.நா மன்றத்தில் படிப்படியாக நீர்த்துப்போகச் செய்யப்படும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கும், ஈழமக்களின் தேச உரிமைகளை மீட்பதற்கும் எதிர்வரும் காலத்தில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்துவதால் மட்டுமே சாத்தியப்படும் என்பதே நிதர்சனம்.

அப்படி ஈழத்தில் விடுதலைப் போராட்டம் துவங்கப்பட்டால் தமிழகத்தின் ஈழ ஆதரவு அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ்த்தேசிய அமைப்புகள் அந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுப்பார்களா என்று கேட்டால் தமிழகத்தில் நடந்தேறியிருக்கும் சம்பவங்கள் அதற்கு சான்றளிப்பவையாக இல்லை!பரமக்குடி படுகொலை, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம், தருமபுரி கலவரம், தாது மணல் திருட்டுக்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தமிழகம் முழுவதும் நடந்தேறும் சாதி வெறிக் படுகொலைகள் என்று பல்வேறு சம்பவங்களில் கொன்றொழிக்கப்பட்ட தமிழகத் தமிழர்களின் உயிர்களுக்கு பதில் செய்யத் துணியாதவர்கள் இலங்கை இராணுவத்திற்கு முன் உயிர்விட துணிவார்களா? வாய்ப்பே இல்லை.

தமிழீழ தனியரசு அமைக்கப் போராடுவதே தமது இலட்சியம் என்பவர்கள், மேடையிலும், தேர்தலிலும்தானே போட்டியிடுகிறார்கள். அதையும் தாண்டினால் சில அடையாள போராட்டங்களை நடத்துகிறார்கள். மேடையிலும், தேர்தலிலும் போராடுவதன் மூலம் தமிழீழ தனியரசை எப்படி அமைப்பார்கள் என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.

2014- க்கு முன் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டால் ஈழம் அமைத்து விடுவோம் என்று பேசித் திரிந்தனர் சில தமிழ்த்தேசிய தலைமைகள். இன்றும்கூட ஈழத் தமிழர்களான காசி ஆனந்தன், சச்சிதானந்தன் போன்றவர்கள் இந்து அடையாளங்களை முன்வைத்து பா.ஜ.க வின் பின் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களுக்கும், அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களால் இன்னொரு நாட்டில் ஓரு தனியரசை அமைத்து தர இயலுமென்றால், ஏன் அவர்கள் தமிழ்நாட்டை தனியரசாக்க போராடக் கூடாது. இங்கே அப்படி பேசினால் இந்திய அரசு இவர்களை இல்லாமலாக்கி விடும், அப்படித்தானே! இங்கேதான் அறிவியல் பூர்வமான தமிழ்த் தேசியத்திற்கும், அடையாள தமிழ்த் தேசியத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இது போன்ற சந்தர்ப்பவாத உணர்வாளர்களுக்கும், புரட்சிகர தமிழ்த்தேசியத்தை பின்பற்றுபவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கத்தானே செய்யும். ஈழத்தை அமைத்து தருவேன் என்று சொல்பவர்கள் ஈழத்திற்காகவும் போராடத் தயாரில்லை, தமிழகத்திற்காகவும் போராடத் தயாரில்லை.அதனால்தான் இன்றைக்கு ஈழப் போராட்டத்தின் எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியாத சூழலிலும், ஈழவிடுதலைக்கு உருப்படியாக உதவமுடியாத நிலையிலும், தமிழகத்தின் ஆட்சியில் அமர்வதன் மூலம் ஈழவிடுதலையை பெறமுடியும் என்ற தவறான நம்பிக்கையை தமிழக இளைஞர்களிடம் விதைத்து கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மையென நம்பி, அதுதான் தமிழ்தேசியம் என நம்புபவர்கள் தமிழ்த்தேசியத்தின் உண்மைகளை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள்.

இன்று தாங்கள் இல்லையென்றால் தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிரபாகரன் என்றால் யார் என்று தெரிந்திருக்காது என்று பரப்புரை செய்பவர்கள் தலைவர் பிரபாகரன் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டால் என்ன நிகழ்ந்து விடும்? அவர்களுக்கு, புலம்பெயர் ஈழச்சமுகத்தில் இருந்து அளிக்கப்படும் பெரும்நிதி நின்றுவிடும், ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் அவர்களை முற்றிலுமாக புறக்கணித்து விடுவார்கள். அவ்வளவுதான்.

ஆனால் உலகளாவிய தன்மை கொண்ட ஈழவிடுதலைப் போராட்டமும், அதன் தலைவனின் புகழும் வேட்கையோடு பற்றி பரவுமே தவிர சிறுமணியளவிலும் குன்றாது. ஈழப்போராட்டத்தின், புலிகளின், தலைவர் பிரபாகரனின் பெயரால் இந்த புதிய தமிழ்த்தேசிய தலைவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர, இவர்களின் தயவில் வாழ்ந்துவர வேண்டிய அவசியம் அந்த மாபெருந் தலைவனுக்கும், ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் இல்லை.

இவர்களால் எதிர்கால ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லையென்பதோடு, மாறாக தீமையே அதிகம். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு பாரிய செயல்பாட்டினை கட்டமைக்காமல் இருப்பதும் இது போன்ற போலிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதற்கான காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்

- இளந்திரையன் keetru.com  08 09 2020