வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 1
08 02 25
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 1
01.எழுவர் கூட்டாகத் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் Noboru Karashima அவர்கள் South Indian History and Society: Studies from the Inscriptions from C850 to 1800, (1984) என்ற தலைப்பில் எழுதிய நூலினை 1995 இல் வரலாற்றுப்போக்கில் தென்னகச்சமூகம் என்று தலைப்பிட்டு தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர் வெளியிட்டது. அவர், சோழர் காலத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய வரலாற்றினை கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் புள்ளியியல் முறையினை பயன்படுத்தி ஆய்ந்தார். சோழர்காலத்தினை தொடர்ந்த நூற்றாண்டுகளுக்கு ஓலைச்சுவடிகளையும் தாள் ஆவணங்களையும் பயன்படுத்தினார். அந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு 40 ஆண்டுகளும் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்து 30 ஆண்டுகளும் ஆகின்றன.
இந்தியாவின் பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டனவா? தெரியவில்லை. புள்ளியியல் முறையினை ஒரு கருவியாகவும் (tool) மார்க்சிய கோட்பாட்டினை ஒரு அணுகுமுறையாகவும் (methodology) ஆய்விற்குப் பயன்படுத்தினார். இவ்விரு அணுகுமுறையும் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கு உதவும். வரலாற்றில் பொருளியல் அடிப்படையில் இயற்கையும், உற்பத்திக்கான தொழில்நுட்பமும் மாற்றங்களை உருவாக்கும் முதன்மைக் காரணிகள் என்பதனை தம் ஆய்வில் தெளிவாக்கினார். இப்பின்ணணியில் சோழர் காலத்தின்/ சோழரின் அரசு பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தினார். சோழர் அரசின் மாதிரியினை கண்டறிவதற்கு அக்காலத்தில் நிலவிய நிலவுரிமை, நிலவருவாய், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், சமூகக் கட்டமைப்பு போன்ற கருத்துகள் அவருக்கு பெரிதும் உதவியுள்ளன. அரசு பற்றியும் சமூகம் பற்றியும் புரிந்து கொள்வதற்கு குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற தலைப்பில் (The Origin of the Family Private Property and the State) Friedrich Engels எழுதிய நூல்தான் இவருக்கு உந்துசக்தியாக அமைந்திருக்கும்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்கு சற்று முன்பும் கீழைத்தேய சமூகம், குறிப்பாக இந்தியா தேக்கநிலை சமூகத்தினை கொண்டிருந்தது என்று மேலைநாட்டு அறிஞர்கள், குறிப்பாக ஓரியண்டலிஸ்ட்கள் சொல்லிவந்தனர். இதனை கீழ்த்திசை வல்லாட்சி (Oriental Despotism) என்று வகைப்படுத்தினர். இக்கருத்து காலனிய காலத்துப் பார்வை என்பர் அறிஞர். காலனியகாலத்தில் மேற்கத்திய வரலாற்றறிஞர்கள் காலனியமாக்கப்பட்ட நாடுகளையும், அம்மக்களையும் இழித்தும் பழித்தும் எழுதி வந்தனர். கீழைத்தேயத்து மக்களின் சமையங்கள், சமூகங்கள் முதல் அன்றாட வாழ்வு முறை வரைக்கும் வசவுக்கு உள்ளாயின. மேலைநாட்டு அறிஞர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் என்று வலியுறுத்தினர்.
02.கீழ்த்திசை வல்லாட்சி (Oriental Despotism) என்ற கோட்பாட்டின் கூறுகள்: ஒரு நாட்டின்நிலம் அரசருக்குமட்டும் சொந்தம், தனியார்நிலவுடைமை இல்லை, நீர்ப்பாசனஉரிமை அரசரின் பிடியில், ஊர்கள் தன்னிறைவு பெற்றவை போன்றன. இக்கோட்பாட்டினை மேல்நாட்டார் வகுத்தளித்த சூழல் புதுமையானது. அவர்கள் இந்தியாவினை ஆட்சி செய்த சுல்தானியர்கள், முகலாயர்கள் ஆட்சியினை விமர்சிக்கிறபோது மேற்சொல்லப்பட்ட கூறுகள் நிலவியிருந்ததாகவும் எனவே, இஸ்லாமியரின் ஆட்சி நலம் பெற்ற ஒன்றல்ல என்றும் அதனால் பிரிட்டிஷ் அரசும் அவர்களின் வழித்தோன்றல்களும் இந்தியரை மீட்க வந்த மீட்பர்கள் என்றும் வரித்துக் கொண்டனர். உண்மை அதுவல்ல. பிரிடிஷ் ஆட்சியில் இந்தியரிடமிருந்து நிலவருவாயினை வசூலிப்பதில் சிக்கல் நிலவியது. பிரிடிஷாரால் நிலவுரிமை அமைப்பினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் நிலம் யாருக்குச்சொந்தம் யாரிடம் நிலவரியினை வசூலிக்க வேண்டும் என்பதில் தெளிவற்றிருந்தனர். அவர்களுக்கு, இந்தியரை ஆட்சி செய்வதில் தடுமாற்றம் இருந்தது. எனவேதான், நிலச் சீர்திருத்தத்தம் என்ற உத்தியினை மேற்கொண்டனர் (இக்கருத்தினை இரு கடைசி பத்திகள் விளக்குகின்றன). இந்தியாவில் ஊர்/கிராமம் என்பது ஒற்றை ஊர்/ஒற்றைக் கிராமம் என்று பொருளல்ல. ஓர்ஊர்/ஒருகிராமம் என்பது ஊர்களின்/ கிராமங்களின் தொகுப்பு (cluster of villsges). அங்கு குடியுடைமை என்பது கிராமத்திலுள்ள பலரும் என்று பொருளாகும். தனிநபர் முக்கியமல்ல; தலைகட்டுதான் (household) முக்கியம். ஒரு தலைகட்டில் பலகுடும்பங்கள் இருக்கலாம். ஒரு ஊரில் தனியார் ஒருவரின் பெயரில் நிலம் இருந்தாலுமே அவரை அண்டி பலகுடும்பங்கள் (families) பல தலைகட்டுக்கள் (household) இருந்தன. எனவே, இங்கு யாரிடம் வரிவசூலிப்பது என்பதில் பிரிடிஷ் அரசுக்கு சிக்கல் இருந்தது.
03.ஆனால் பிரிடிஷார், பழியினை இந்தியர்கள்மேல் திருப்பினர். இந்தியர்கள் நிர்வாகம், ஆட்சிமுறைப்பழக்கத்தினை அறியாதவர் என்று சொல்லி வந்தனர். ஆனால், பிரிட்டிஷார்தான் காட்டுத் தர்பார் நடத்திவந்தனர் என்பதனை அவர்கள் இந்தியவிடுதலைப்போராட்ட வீரர்களை பல கொடிய முறைகளில் கொன்றொழித்தனர் என்பதனை உலகறியும். விளையாத நிலத்திற்கும் வரிவசூல் செய்தனர். அப்போது அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிலவடமொழிநூல்களில் விளக்கப்பட்டிருந்த சமூகப்பிரிவுகள் என்ற கருத்து பெரிதும் கைகொடுத்தது. நிலச்சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்தும்போது பெரும்பாலும் நிலவுடைமை பற்றிய புனைவுகளையே சான்றுகளாக கணக்கில் எடுத்தனர்.
04.இப்பின்ணணியில் மேல்நாட்டு அறிஞர்களின் இந்தியா பற்றிய பிழையான பார்வையினை தக்க கல்வெட்டுச் சான்றுகளின் வழியே Noboru Karashima (hereafter NK) மறுத்தார். பத்தி ஒன்றில் குறிப்பிடப்பட்ட (South Indian History and Society: Studies from the Inscriptions from C850 to 1800) அவருடைய மொழிபெயர்க்கப்பட்ட நூல் 3 இயல்களில் 11 கட்டுரைகளை கொண்டது. 8 பின்ணிணைப்புகள், 4 நிலப்படங்கள், நோக்கீட்டு நூல்கள் (bibliography) இவரின் கருத்துகளை வலுப்படுத்துகின்றன. இந்நூலின் முகவுரை மிகவும் முக்கியமானது. குறிக்கோளும் அறிமுகவுரையும் என்ற Introductory Note அதனினும் முக்கியமானது. இந்நூலின் மையப்பிரச்சினை பண்டைய மற்றும் இடைகாலத் தென்னகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளியல் வளர்ச்சியினை அளந்தறிதல் ஆகும் என்றும் இதனைப் புரிந்துகொள்வதற்கு புள்ளியியல் முறை பயன்பட்டது என்றும் பதிவு செய்துள்ளார். இன்னொன்று, வரலாற்றினை குறுநில வட்டத்திலிருந்து புரிந்து கொள்ளத் தொடங்கி பெருநிலவட்டத்திற்கு நகர வேண்டும் என்பதாகும். வரலாறு எழுதுதலை (Euro-centrism) ஐரோப்பிய மையத்திலிருந்து விலக்க வேண்டும் என்றார். அதாவது, வரலாற்றை ஐரோப்பிய பாணியில் எழுதுவதனைத் தவிர்த்து ஒவ்வொரு நிலவட்டத்தின் இயற்கைக்கு ஏற்ப எழுத வேண்டும் என்றார்.
05.தரமான வரலாற்றுநூல்கள் தமிழில் இல்லையென்பதாலும் கற்போரின் ஆங்கிலஅறிவு குறைந்து வருவதாலும் இந்நூல் தமிழாக்கம் செய்யப்படுவதாகவும் மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்பு உள்ளது. சென்ற நூற்றாண்டின் முதல் கால்கூற்றில் இந்திய சமூகத்தையும் இந்தியவரலாற்றையும் கேலி செய்த ஐரோப்பிய அறிஞர்களுக்கு பதிலிறுக்கும் பொருட்டு S.Krishnaswamy Ayyangar, K.A.Nilakanta Sastri போன்றோர் தென்னிந்திய வரலாற்றினை எழுதினர். ஆனால், சற்று கூடுதலாக தம் உணர்வினை வெளிப்படுத்தினர். தேசியவாதக் கருத்து செழித்து தலையெடுத்திருந்ததாலும் விடுதலைப் போராட்ட உணர்வு மேலோங்கியிருந்ததாலும் இவர்கள் மிகையான கூற்றுகளை வெளிப்படுத்தியிருக்கலாம். K.A.Nilakanta Sastri சோழர்கள் பற்றிய தம் ஆய்வில் சோழர்அரசு மையப்படுத்தப்பட்ட ஒன்று எனச் சொல்லும் அதேவேளையில் ஊர்சபைகள் தனித்து செயற்பட்டன என்றும் முன்மொழிந்தார். மக்கள், அரசுடன் சமரசத்துடன் வாழ்ந்தனர் என்றும் சொல்லியிருந்தார். இவரின் ஆங்கில நூலினை பயின்று தமிழியல் புலமைத்துவத்துடன் தம் கட்டுரைகள் வழியே க.கைலாசபதி (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966) ஓரளவிற்கு பதிலளித்தார். இருந்தாலும், க.கைலாசபதி தம் பதில்களுக்குக் கல்வெட்டுச் சான்றுகளைப் பயன்படுத்தவில்லை. ஆனால், இவருடைய விமர்சனக் கட்டுரைகளில் ஓர் ஆய்வு உத்தி பளிச்சிட்டது.
06.இங்கு NK கல்வெட்டுகளை சலித்தெடுத்து தென்னிந்தியா பற்றி ஆய்வுசெய்த பல வரலாற்று அறிஞர்களுக்கு பதிலிறுப்பதாக தம்நூலினை இயற்றினார். தம் முன்னுரையில் வரலாற்றியல் பூர்வமாக தென்னிந்திய வரலாற்றைனைப் புரிந்து கொள்வதில் உள்ள கருத்தியல் ரீதியான இடர்பாடுகளை விளக்கி அவற்றினை சரியாகப் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைத்தார். மார்ச்சியத்தின் அடிப்படையில் பிற அறிஞர்களிடமிருந்து தாம் வேறுபடுவதனை கருத்தூண்றி நுணுக்கமாக காரண காரியத்துடன் பின்வருமாறு விளக்கினார். தம் கருத்துகளை நிறுவும் பொருட்டு கல்வெட்டுச் சான்றுகளை புள்ளியியல் முறையில் ஆய்ந்து வலுசேர்த்தார். அதற்குமுன், அடுத்த பத்தியில் சொல்லப்பட்டதுபோல் தென்னிந்தியாவின் வரலாற்று வரைவியலை சுருக்கித் தந்தார்.
07.1960கள் வரை தென்னிந்திய சமூகத்தின் வரலாறு காத்திரப்படவில்லையென்றும் Burton Stein, Kathleen Gough, M.G.S.Narayanan, Y.Subbarayalu, R.Champakalakshmi, D.N.Jha, K.Indrapala போன்றோரின் ஆய்வுகள் மரபுவழிப்பட்ட வரலாற்றுப் பார்வையிலிருந்து விலகி புதுநோக்கில் தென்னிந்திய வரலாற்றினை பார்த்தன என்றும் அவர்களில் இருவரின் ஆய்வுகளைப் பற்றிப் (Burton Stein, Kathleen Gough) பேசப் போவதாகவும் NK தம் முன்னுரையில் கூறினார். Kathleen Gough-வின் நூல் (1981) பற்றியும், Burton Stein நூல் (1980) பற்றியும் அவருடைய மறுபார்வை மிக முக்கியமானது. K.A.Nilakanta Sastri முன்வைத்த மையப்படுத்தப்பட்ட சோழர்அரசு என்ற கோட்பாட்டிற்கு மாறாக Burton Stein பங்குநிலை அரசு (segmentary state) என்ற கோட்பாட்டினை முன்வைத்தார். பல நிலைகளில் Burton Stein இன் நூல் The Colas க்கு அடுத்த நிலையில் மதிப்புடன் கருதப்பட்டாலும் அந்நூலின் கருதுகோள் (speculative) அடிப்படையில் இயற்றப்பட்டது என்றார் NK. காரணம் Burton Stein தென்னிந்தியக் கல்வெட்டுகளின் ஆங்கிலத்தில் கிடைத்த சுருக்கக்குறிப்புகளை பெரிதும் நம்பியதாகும் என்றார். Burton Stein பிரமதேயம், கோயில்களின் நிலப்பரவல் போன்றவற்றின் அடிப்படையில் அலுவல்நிலை (bureaucracy) சோழர்அரசில் இல்லை என்றார். நாடு பற்றி Burton Stein சொல்லும் கருத்து Political Geography of the Chola Country (1974) யிலிருந்து எடுக்கப்பட்டதாகும் என்றார் NK. நாடு என்றஅமைப்பு சமூக உற்பத்தியினை கொண்ட ஓர்அலகு (Social production system) என்பதனை Burton Stein கவனிக்கவில்லை. சோழராட்சியில் 3 முறை விளைநிலத்தின் அளவீடு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சியியல் வலைப்பின்னலின் இயக்கம் (bureaucratic network) இல்லாமல் இப்பரந்த அளவிலான நிலத்தின் அளவீடு நிகழ்ந்திராது. அதிகாரி, புரவுவரி போன்ற அலுவலர்களை குறிக்கும் சொற்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவ்வலுவலர்கள் பெரும்பாலும் பிரம்மராயன், மூவேந்தவேளான் போன்ற மதிப்புரு பட்டம் பெற்றவர்கள். இவர்கள் நிலப்பிரபுக்களும் கூட. இவையெல்லாம் NK அவர்களின் கண்டுபிடிப்பு.
07.சோழர்அரசில் சமூகம் மாறி வந்துள்ளது என்பதற்கு NK தரும் சரியான சான்று: முதலாம் இராஜராஜன் நாடுஅமைப்புகளை ஒருங்கிணைத்து வளநாடுகளாக மாற்றியமை. இதனால், நாடு அளவிலான மரபான இனக்குடித் தலைவர்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. அவர்களில் பலர் வட்டாரத் தலைவர்கள் என்ற நிலையிலிருந்து அலுவலர்கள் என்றநிலைக்கு மாற்றப்பட்டனர். வளநாடு உருவாக்கத்தில் கோட்டம் என்ற நில அலகினுடைய கோட்பாடு மறைந்தது. இவரது காலத்திலிருந்து முதல் குலோத்துங்கன் காலம்வரை சோழ ர்அரசு மையப்படுத்தப்பட்ட அரசாக இயங்கியது. இதன் உச்ச அடையாளம்தான் தஞ்சாவூர் பெரிய கோயிலும் அதற்கான வருவாய் கடல்தாண்டிய ஈழமண்டலத்திலிருந்து வந்ததும். நாடு அளவில் Buron Stein சொல்வதுபோல் நாட்டாரின் அதிகாரம் இருந்தாலும் அவர்கள் அரசரின் கட்டுக்குள் இருந்தனர்.
08.காத்லின் கோ, ஒரு மார்க்க்சியராக இருந்தாலும் ஆசியஉற்பத்திமுறை (Asiatic Mode of Production = AMP) என்ற கோட்பாட்டின் பின்ணணியில் ஆய்வுசெய்தாலும் மார்ச்சிய சிந்தனையின் அடிப்படையில் சமூக வளர்ச்சியினைப் புரிந்துகொள்ளவில்லை. Darcy Rebeiro முன்மொழிந்த அரசு பற்றிய கோட்பாட்டினையே பயன்படுத்தினார். இவர் ஆய்விற்கு தேர்வு செய்த காலம் மிக நீண்டது (சோழர் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை). Darcy Rebeiro முன்மொழிந்த சோழர் அரசு சமையம்சார் நீர்ப்பாசன அரசு என்ற கருத்தினை Kathleen Gough ஏற்றார். இவர் வகுத்த சோழர் அரசு ஆசிய உற்பத்தி முறையினைக் (AMP) கொண்டது என்றும், அதில் வேளாண்குடிகளான வெள்ளாளர்கள் அரசின் அடிமைகளாக இருந்தனர் என்றும் இவர்களின்கீழ் பறையடிமைகள் இருந்தனர் என்றும் கூறினார். ஆனால், இவ்விருகுடிகளுக்கும் இடையிலான உறவினை சரியாக வாதிக்கவில்லை என்றார் NK. மேலும், மார்க்ஸ் ஆசியஉற்பத்திமுறை பற்றிப் போதிய அளவிற்கு வாதிக்கவில்லை என்பதாலும் இக்கோட்பாடு கீழைத்தேய வல்லாட்சி என்ற கோட்பாட்டிற்கு நெருக்கமானது என்பதாலும் இதன் மையக்கரு தேக்கநிலை இந்தியச்சமூகம் என்பதாலும் இக்கோட்பாட்டினை வரலாற்றாய்விற்குப் பயன்படுத்த அறிஞர்கள் தயங்குகின்றனர் என்றும் கூறினார்.
தொடர்ந்து D.D.Kosambi மார்க்சியத்தினை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர அங்கலாய்ப்பிற்காகப் பயன்படுத்தக்கூடாது என்றார் என்றும் எடுத்துச் சொன்னார். அடுத்துவந்த D.N.Jha-வும் குப்தர்காலத்தின் இறுதிக்கட்டத்தில் நிலவிய நிலவுடைமை ஐரோப்பிய நிலவுடைமையினை ஒத்தது என்றும் அந்நிலை அடுத்த ஓராயிரமாண்டு தொடர்ந்தது என்றும் கூறினார். ஆனால், NK-வின் கருத்து தென்னகத்தில் சோழர்காலத்தின் முடிவிற்குப் பின்னரே நிலமானியமுறை தோன்றியது என்பதாகும். இது, அப்போது நிலவிய சமூகச் சிக்கலால் (social disorder) எழவில்லை. அப்போதுநிலவிய வெவ்வேறுவிதமான உற்பத்தி முறையினால் உருவானது (two-different modes of production) என்றார். Kathleen Gough சோழர் சமூகத்தினை (Chola society) ஆய்வதற்கு ஆசிய உற்பத்தி முறை கோட்பாட்டினை பயன்படுத்தத் தயங்கினார் என்றார். D.N.Jha-வும் Kathleen Gough-வும் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் நிலக்கொடைகள் வழங்கப்பட்டதாலேயே இந்திய நிலமானிய முறையும், நிலப்பரபுத்துவமும், அடிமைமுறையும் தோன்றின (landlords and sefdom) என்றனர். தென்னிந்தியாபொறுத்து இவ்விரண்டும் வேறுவேறானவை. பார்ப்பனர்களுக்குக் கொடையளிக்கப்பட்ட நிலப்பகுதி பிரமதேயம் எனப்பட்டது. இது காணியாட்சிஊர்கள். அதாவது அந்நிலத்தின்மேல் உரிமை கொண்டவர்கள் அதன்மேல் உழும் உரிமையினையும் கொண்டவர் என்று பொருள். இரண்டாவதுகொடை, நிலமல்ல; நிலத்தின்மீதான வரிகள். வரிவிதிக்கப்பட்ட இந்நிலங்கள் தேவதானம் எனப்படும். ஆனால், இவற்றை தானமளித்தது அரசர்கள். இவ்வகைக் கொடைகளும் நிலங்களும் சொற்பமே என்றார் NK. நிலமானிய முறை பற்றி ஆய்வதற்கு கொடையளிக்கப்படாத (non-granted villages) ஊர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றார். இங்கு, தம் கருத்துகளை நிறுவுவதற்கு NK கூட்டுநிலவுடைமை, தனியார்நிலவுடைமை என்ற கோட்பாட்டினை தளமாகப் பயன்படுத்தினார். (தொடரும்)
கி.இரா.சங்கரன் keetru.com 02 12 24