வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 2
15 02 25
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 2
09.தொடக்கத்தில் வேளாண்ஊர்களில் கூட்டுநிலவுடைமையும் பார்ப்பனர் ஊர்களில் தனியார்நிலவுடைமையும் நிலவின என்றும் தொடர்ந்துவந்த காலங்களில் இவ்விரு ஊர்களிலும் தனியார் நிலவுடைமை நிலவின என்றும் NK உறுதிப்படுத்தினார். தம் ஆய்விற்காக ஒரு பார்ப்பன ஊரினையும் (ஈசானமங்கலம்) வேளாண்ஊரினையும் (அல்லூர்) தேர்வு செய்தார். இவ்விரு ஊர்களும் காவிரியின் தென்கரையில் ஒரேசூழலில் இருந்தவை. ஈசானமங்கலத்தில் சபையுறுப்பினர்கள் தனியார் நிலவுடைமை கொண்டவராக இருந்தனர். சிலநிலங்கள் கோயில் நிர்வாகிகளான பருடையார்களிடத்தும் சிலநிலங்கள் சபைக்குப் பொதுவான கூட்டுடமையாகவும் இருந்தன. அல்லூரிலும் தனியுடைமை இருந்தது. அதனைப் பெற்றவர்கள்: கணி, நடனகலைஞர், இசைக்கலைஞர், மத்தியஸ்தன் போன்றோர். அக்கொடை பெற்றவர்களின் நிலத்தில் வந்த விளைச்சல் மூன்றுபங்குகளாகப் பிரிக்கப்பட்டது. ஸ்வாமிபோகம் தானம் பெற்ற கோயிலுக்கானது. ஆனால், இது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியாகும். இதுதான் கோயிலுக்குக் கொடையானது. இப்பங்கு தானமாகாளிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய்குறைந்தது. மற்றொன்று நிலவுடைமையாளரின் பங்கு. இப்பங்கு பார்ப்பனர்களுக்குச்சென்றது. மூன்றாவது பங்கு உழுபவருக்கானது. ஆனால், இங்கு இவர்கள் அரசுக்கும் கோயிலுக்கும் சேர்த்து உழ வேண்டும். வேறொரு வகையில் சொல்வதானால், இவர்கள் அரசுக்கும் கோயிலுக்கும் பார்ப்பனர்க்கும் சேர்த்து உழைக்கவேண்டும். இவர்கள் குடிகள் எனப்பட்டனர். இப்படி அரசுருவாக்கத்தில் வேளாண்தொழில்நுட்பமும் நீர்ப்பாசனத் தொழில்நுட்பமும் தெரிந்த வேளாண்குடியினரின் உழைப்புச் சுமை கூடியது. ஆனால், விளைச்சல் பங்கிடப்பட்டது.
10.ஈசான மங்கலத்தின் நிலை இப்படியென்றால், அல்லூரின்நிலை வேறானது. அங்கு, ஊராரே உழும் வேலையினை செய்ய வேண்டும். அங்கு நிலபரிவர்த்தனை பற்றிப் பேசும் கல்வெட்டுகள் நிலவுடைமை பற்றித் தெளிவான செய்திகளை தருகின்றன. அவற்றில் கண்டறிந்த தெளிவுகள்: கீழ்க்காவேரிப்பள்ளத்தாக்கில் தனியாரிடையே நிலப்பரிவர்த்தனை நடந்தன. சில பரிவர்த்தனைகளை ஊரார் கூட்டாகச்செய்தனர். சிலநிலங்கள் தனியாரால் கோயில்களுக்கு அளிக்கப்பட்டன. நிலத்தினை விற்றவர்களில் சிலர் பலஊர்களில் நிலம் வைத்திருந்தனர். அவர்கள், வட்டாரஅளவில் செல்வாக்கு பெற்றவர்கள். சுருக்கமாக நிலக்கிழார்கள் எனலாம். இவர்கள் உடையான், ஊருடையான், அரையன், பேரரையன், சோழப்பெரையன், சோழபாண்டியன் என்ற பட்டங்களைக் கொண்டவர். இப்பட்டங்கள் இவர்கள் அரசருக்கு நெருக்கமானர்வர்கள் என்பதனைக் காட்டுகின்றன. இவர்கள் அரசின் இயக்கத்தில் முக்கியமானவர் என்பதும் NK அவர்களின் கண்டுபிடிப்பு.
11.விஜயாலயன் வழிவந்த சோழர்காலத்தில் வேளாண்குடிகளின் ஊர்களில் நிலவுடைமையுள்ளோர் அவர்களின் நிலத்தில் பயிரிடுவோர், உழுவோர் என்ற ஈரடுக்கு சமூகநிலை உருவானது. நிலவுடைமை என்பது காணியுரிமையாகும். அதாவது நிலத்தின் மீதான தலைமுறை தலைமுறையான உரிமை. இக்காணியுரிமை நிலப்பரிவர்த்தனை பெரும்பாலும் உயர்நிலை சமுகத்தினரிடையே நிகழ்ந்தது. காட்டாக, பிரம்மாதராய முத்தரையன் என்பவர் அதிகஅளவில் நிலத்தினை விற்றார்; நாயன்சோறன் இருங்கோவேள் என்பவர் பெருமளவில் நிலம் வாங்கினார். 40 வேலி 60 வேலி பரப்புள்ள நிலவுடைமை கொண்ட நிழக்கிழார்களும் இருந்தனர். ஒருவர் ஒரு ஊரினை உருவாக்கி அதனை ஜன்மக்காணி என்ற உரிமையோடு அரசரின் அனுமதியினைப் பெற்றார். ஆனால், இது மேற்சொல்லப்பட்ட தலைமுறை தலைமுறையான நிலவுடைமை என்ற கருத்துக்கு மாறாக உள்ளது. சோழராட்சியின் இடைக்காலத்தில் உருவான பொருளாதாரவளர்ச்சி, அலுவலர்கள் பெருமளவில் மான்யம்பெற்றமை போன்றகாரணங்களால் நிலக்கிழார்களின் எண்ணிக்கை கூடியது. அப்போது மலைக்குடிகள் சமவெளிக்குவந்து படையணியில் சேர்ந்தனர். அவர்கள் படைபலத்தினால் நிலவுடையாளராயினர். இராஜகுலத்தார் எனப்பட்டோர் காணிநிலத்தினை தமதாக்கினர். அவர்கள் காவிரியின் வளமையான தென்பகுதியிலும் வடபகுதியிலும் நிலங்களை வாங்கினர்.
12.அரசுக்கும் பார்ப்பனர்களுக்குமான உறவு:பார்ப்பனர்கள் வசித்த பிரமதேயங்கள் அரசால் உருவாக்கப்பட்டன. ஆனால், பார்ப்பனர் ஊர்களின் ஆட்சி மன்றத்துக்கான தேர்தல் அரசுஅலுவலரின் கண்காணிப்பில் நடந்தது. தஞ்சாவூர் பெரியகோயிலில் பணிசெய்வதற்கான நபர்களை பொறுப்பில் அமர்த்துவதற்கு பிரமதேயத்துச்சபைகள் தெரிவுசெய்து அனுப்பும்படி பிரமதேயங்களின் சபைகளுக்கு அரசர் ஆணையனுப்பினார். சோழமண்டலத்தின் ஒவ்வொரு நாட்டுப் பிரிவிலும் மூன்றுமுதல் நான்கு பிரமதேயங்கள்வரை இருந்தன. வரண்டபகுதியில் உள்ள நாடுகளில் பிரமதேயங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. அதாவது நீர்வளமும் நிலவளமும் கொண்ட சோழராட்சியின் மையப்பகுதியான காவிரிச்சமவெளியில் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், அவை அளவில் சிறியன. அங்கு, நாடுகள் பரப்பளவில் சிறியனவாக இருந்தாலும் பிரமதேயங்களின் எண்ணிக்கை அதிகம். வறண்ட பகுதிகளில் நாடுகளின் எண்ணிக்கை குறைவு;பரப்பளவு பெரிது. பிரமதேயங்களின் எண்ணிக்கையும் குறைவு. எனவே, வெவ்வேறுவகையான வட்டாரத்தில் வெவ்வேறு வகையான உற்பத்திமுறையும் சமூகத்தின் அமைப்பும் நிலவியதற்கு வாய்ப்பு உண்டு. சோழர் காலத்தின் சமூகக் கட்டமைப்பினை எல்லா வட்டாரத்திற்கும் பொதுமைப்படுத்த முடியாது.
13.வேளாண்ஊர்களின் கூறுகள்பற்றி ஊரிருக்கைப்பகுதி என்ற தலைப்பில் NK தரும் குறிப்புகள் சோழர்காலச்சமூகத்தின் தலைப்படமாக (blue-print) விளங்குகின்றன. ஓர் ஊரின் பகுதிகள்: ஊர்நத்தம், ஊர்இருக்கை, பறைச்சேரி, கம்மணாச்சேரி, ஈழச்சேரி, குளம், கரை, கால்வாய், கோயில், சுடுகாடு, ஊர்க்குளம், கொட்டகாரம் போன்றவை. தஞ்சாவூர் வட்டாரத்தில் மொத்தமுள்ள 33 ஊர்களில் 19 ஊர்களில் மட்டுமே பறைசேரிகள் இருந்தன என்று NK அறியத்தந்தார். என்றால், பிற ஊர்களில் அவர்களுக்கு இணையான பிறஉழைக்கும் சமூகத்தினர் இருந்தனர் என்று பொருளாகிறது. கங்கைகொண்டசோழபுரத்தின் வட்டாரத்தில் மொத்தமுள்ள 7ஊர்களில் ஒரு ஊரில்மட்டுமே பறைச்சேரி இருந்தது. என்றால், பிற 6 ஊர்களில் அவர்களுக்கு இணையான உழைக்கும் சமூகத்தினர் இருந்தனர் என்று பொருளாகிறது. ஊரின்கூறுகளில் சுடுகாடு மிக முக்கியமானது. கல்வெட்டுகளின்படி எல்லாவூர்களிலும் ஒவ்வொரு இனத்திற்கென்றும் தனித்தனி சுடுகாடுகள் இல்லை. சுடுகாடுகளைக் கொண்ட மொத்தமுள்ள 24 ஊர்களில் 8 ஊர்களில் வேளாளருக்கும் பறையருக்கும் தனித்தனியே சுடுகாடுகள் இருந்துள்ளன. என்றால், மீதமுள்ள 16 ஊர்களில் பொதுச்சுடுகாடு இருந்தன என்று பொருளாகிறது. சிலஊர்களில் தானியம் அடிக்கும் களம், தானியக் களஞ்சியம் இருந்துள்ளன. இந்தியாவின்ஊர்கள் தன்னிறைவு பெற்றவையன்று என்பதனை அனைத்து ஊர்களிலும் சுடுகாடுஇருக்கவில்லை, சிலஊர்களில் மட்டுமேஇருந்தன என்பதன் அடிப்படையில் உறுதிப்படுத்தலாம் என்பது இவரின்கூற்று. தன்னிறைவற்ற இந்தியஊர்கள் என்பதனை D.D.Kosambi வேறுவிதமாக விளக்கினார். இந்தியாவின் உள்நிலையிருந்த ஊர்கள் உப்புவிற்கு கடற்கரை ஊர்களையும், இரும்புவிற்கு உள்நிலப்பகுதி ஊர்களை நம்பி கடற்கரைஊர்களும் இருந்தன என்பார். இங்கு, NK வேறுவிதமான உண்மைகளைக் கண்டறிந்தார். அவருக்கு கல்வெட்டுகளின் சிலதொடர்கள் பெரிதும் துணைநிற்பன. ஊடறுத்துபோன வாய்க்கால்கள், இவ்வூர்நிலத்தை ஊடறுத்து புறவூர்களுக்கு நீர்பாயப்போன வாய்க்கால், கீழ்நாட்டுக்கு நீர்பாயப்போன போன்ற தொடர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் ஒரேநீர்ப்பாசனவாய்க்காலினை சார்ந்து இருந்தன என்பதனை விளக்குகின்றன என்றார். இங்கு, தண்ணீர் நாடுகளையும் ஊர்களையும் பிணைத்தது. இச்சான்றுகளினால், தன்னிறைவு ஊர்கள் என்ற கருத்தியலை முறியடித்தார்.
14.பெயர்கள்: ஆள்பெயர்களின், பதவிகளின் அடிப்படையில் சோழர்நிர்வாகத்தினை NK விளக்கினார். இதற்கான ஆய்விற்காக வெளியிடப்பட்ட 3,543 கோயில்கல்வெட்டுகளில் இருந்து பட்டப்பெயர்களை தெரிவுசெய்தார். உடையான், மூவேந்தவேளான், நக்கன், மத்தியஸ்தன், நாடாழ்வான் போன்றவை இவற்றுள் முக்கியமானவை. இவற்றில் குரிசில் தலைவர்களின் (local chieftains) பட்டப்பெயர்களும் சேர்க்கப்பட்டன. இவற்றுள் உடையான்பட்டம் பெரும்பாலும் ஊர்ப்பெயரோடு சேர்ந்தே அமைந்துள்ளது. அதாவது இப்பட்டம் கொண்டவர் அவ்வூரில் நிலவுரிமைகொண்டவர் என்று பொருளாகிறது. இப்பெயர்களின் எண்ணிக்கை சோழமண்டலத்தில் அதிகரிக்க ஜெயங்கொண்டசோழமண்டலப்பகுதியில் (அதாவது தென்னாற்காடு, வடாற்காடு செங்கல்பட்டு வட்டாரங்களில்) காலம் செல்ல செல்ல குறைகிறது. இப்போக்கு காவிரிபகுதியில் தனியார் நிலவுடைமை அதிகரித்ததனை சுட்டும். பிரம்மராயன் பட்டத்தினைவிட மூவேந்தவேளான்பட்டம் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
மூவேந்தவேளான் பட்டத்துடன் மதுராந்தகன், இராஜேந்திரசோழன் என்ற அரசர்களின் பெயர்கள் பெரிதும்இணைந்துள்ளன. இது நிலக்கிழார்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான உறவினை வெளிப்படுத்துகின்றன. மூவேந்தவேளான் பட்டப்பெயர் கொண்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் உடையான்பட்டமும் கொண்டவர். மொத்தமாக மூவேந்தவேளான் பட்டம் கொண்டவர் 307பேர்; பிரம்மராயன் பட்டம் கொண்டவர் 94பேர். மூவேந்தவேளான்கள் பிரம்மராயர்களைவிட மூன்றுமடங்கு அதிகம். அதாவது 288%. இதில் அரசருக்கு நெருக்கமான மூவேந்தவேளான்கள் 288 பேர்; 83 பேர் பிரம்மராயர்கள். மூவேந்தவேளான்கள் அதிக எண்ணிக்கையில் அலுவலர்களாக இருந்தனர். மொத்தம் 230 பேர். இதில் 78 பேர் அதிகாரிகள், 39 பேர் ஓலை அலுவலர்கள், 32 பிரம்மராயர்கள் அலுவலராக இருந்துள்ளனர். பார்ப்பனர்களைவிட மூவேந்தவேளான்கள் 7 மடங்கு அலுவலராக இருந்துள்ளனர். 28 வகையான குரிசில்தலைவர்களின் பட்டப்பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் அந்தந்த இனக்குழுவின் பெயர்கள்போன்று தெரிகின்றன. இவற்றுள் இளங்கோவேள், இலாட, காடவ, களப்பாள, கேரள, மலையகுல, நுளம்ப, வாணக்கோ, விழுப்ப, வாண போன்றவை குறிப்பிடத்தக்கன. இவ்வினக்குழுக்களின் பெயர்கள் பெரும்பாலும் அரையன், மாராயன் போன்ற பின்னொட்டுக்களை கொண்டவை. மேற்சொல்லப்பட்ட குடிப்பெயர்களான பிரம்ம, பல்லவ, விழுப்ப என்பவை ஒரே மாதிரியானவை. பிரம்ம என்பது அரசர்பெயரோடும் அதிகாரி, ஓலை, சேனாபதி போன்றவற்றோடும் இணைந்துவரும். இது அவர்கள் நிர்வாகத்தில் பெற்றிருந்த சிறப்பான நிலையினைக் காட்டும். இதுபோன்று, விழுப்பரையன், பல்லவரையன் பட்டம் கொண்டவர்கள் வருமானவரித்துறையுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். இளங்கோவேள் பட்டம்கொண்டவரும் இதில் அடங்குவர். சோழராட்சியின் இரண்டாம் காலகட்டத்தில் (985-1020) சம்பு, மலயகுல என்ற பட்டப்பெயர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியில் கிடைத்தவை. ஆனால், இவர்களுக்கு நிர்வாகத்தில் தொடர்பில்லை. நாடாழ்வான், மத்தியஸ்தன் என்ற இரு அலுவல்பெயர்களில் முதலாவது காலம் செல்ல செல்ல அதிகரித்தும் இரண்டாவது குறைந்தும் இடத்தினைப் பெற்றன. நாடாழ்வான்பட்டம் சோழரின் இரண்டாம் காலகட்டத்தில் இடம்பெற்று நாடுஅளவிலான வட்டாராத்தலைவரை (local chiefs or lords) சுட்டுகிறது. இவர் மத்தியஅரசோடு தொடர்புடையவராக இருக்கலாம். இங்கு, வளநாடு அமைப்பு உருவாக்கப்பட்டபோது நாடுஅளவிலான முக்கியத்துவம் குறைந்தது என்ற கருத்து கேள்விக்குள்ளாகிறது. நாடாழ்வான்பட்டம் அதிகரிப்பது ஊர்ச்சபைகளின் முக்கியத்துவத்தினை குறைத்து நிலமானியமுறை எழுவதற்கு வழிவிட்டது என்று NK கேள்வி கேட்டார்.
15.சோழர்காலத்தின் பாண்டியர்காலத்தின் வருவாய்பற்றிய NK வின் ஆய்வு நுணுக்கமானது. சோழர்காலத்தின் வருவாய்பற்றிய ஆய்விற்கு கல்வெட்டுகளில் பதியப்பட்ட அனைத்து வரிகளின் பெயர்களையும் அவை இடம்பெற்ற சூழலையும் கருத்தில்கொண்டு பகுப்பாய்வு செய்தார். படியெடுக்கப்பட்ட சோழர் கல்வெட்டுகள் சுமார் 9000. என்றாலும், வெளியிடப்படாதவற்றின் தொகைஅதிகம். எனவே, இவ்வாய்வு ஓர் எல்லைக்குட்பட்டது. பொதுவாக வரிகளின் பெயர்கள் சோழமண்டலத்திலும் ஜெயங்கொண்டசோழமண்டலத்திலும் அதிகஅளவில் இடம்பெற்றன. வசூலிக்கப்பட்ட வரிகளின் பெயர்கள், விலக்கப்பட்ட வரிகளின் பெயர்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. இப்பகுப்பாய்வில் 10 தடவைகளுக்குமேல் இடம்பெற்ற 27 வரிகள் ஆண்டுவாரியாகவும் வட்டாரவாரியாகவும் (Chronological and topographical) பகுக்கப்பட்டன. இவ்வரிகள் சோழமண்டலத்திலும் தொண்டைமண்டலத்திலும் இடம்பெற்றவை. அவற்றுள் 7வரிகள் இருமண்டலங்களிலும் 20 தடவைக்கு மேல் இடம் பெற்றவை. அனால், இவற்றின் காலப்பரவல் (chronological distribution) பொதுவாக இல்லை. சோழர் அரசின் வருவாயினைப் பிரிந்து கொள்வதற்கு ஒளியூட்டும் வரிகள்: அந்தராயம், எச்சோறு, கடமை, குடிமை, முட்டயாள், தட்டார்பாட்டம், வெட்டி போன்றவை. கால வரையரைப்படி 895-1070 காலகட்டத்தில் வரிகளின் எண்ணிக்கை அதிகமாக, 1070-1179 காலகட்டத்திலும் 1179-1279 காலகட்டத்திலும் கூடிச் செல்கிறது. வருவாய்துறையில் நிகழ்ந்த நில அளவீடும் இதற்கு காரணமாகலாம்.
400 க்கு மேற்பட்ட வருவாய் சொற்களில் கடமை என்ற வரிச்சொல் 32 வெவ்வேறு வரிகளுக்கு பின்னொட்டாக உள்ளது; 16 முறை குடிமை பின்னொட்டாக உள்ளது; கூலி என்ற வரிச்சொல் 6 முறை பதியப்பட்டுள்ளது; பொன் என்ற சொல் 10 முறை வந்துள்ளது. 29 முறை காசு என்றசொல் பின்னொட்டாக வந்துள்ளது. ஏரிஆயம், ஏரிநீர்க்கோவை, ஏரிஅமஞ்சி, ஏரிமீன், ஏரிமீன்காசு, ஏரிமின்பாட்டம், ஏரிவரி, ஏரிவாய், குரப்புவெட்டி, குலைவெட்டி, குலை, நீர்க்கூலி, நீர்நிலங்காசு, நீர்வாயில் நீர்விலை, நீர்விலைக்காசு, நீர்விலைக்கூலி, நீராறு போன்ற வரிச்சொற்கள் சோழர்காலத்தின் நீர்ப்பாசனவளர்ச்சியினை நன்கு புலப்படுத்துவன.
நாட்டுவிநியோகம், நாடாட்சி, நாடென்றவரி, நாடுகாவல், நாடென்றஎலவை போன்றவரிகள் நாட்டுமன்றத்தின் ஆளுமையினை உறுதிப்படுத்துகின்றன. இது வட்டாரஅளவில் நிலக்கிழார்களின் மேலாண்மையினை வெளிப்படுத்தும். ஊர்வினியோகம், ஊர்படுகுடிமை, ஊர்குடிமை, ஊர்தனிசு, ஊரிடுவரி, ஊரிடுவரிப்பாடு போன்றவை வேளாணூர்களின் தனித்துவத்துனை விளக்குவதாக அறியலாம். தெண்டம், தண்டகுற்றம், குற்றத்தெண்டம், தண்டலில்கடமை, விளக்குஆள்தண்டம், தண்டநாயகப் பேறு, தண்டனை முதல் போன்ற சொற்கள் அரசின் வலுத்தன்மையினை உறுதிப்படுத்துகின்றன. இவ்வலுவான அரசு 33 வகையான நிலங்களிலிருந்து வரிகளை பெற்றது. வரி கொடுத்த நிலங்கள் நீர்நிலம், ஒருபூவிளையும்நிலம் (ஒருமுறைச்சாகுபடி), இருபூவிளையும்நிலம் (இருமுறைச்சாகுபடி) என்று வகைப்படுத்தப்பட்டிருந்தன. நிலத்தின்வரி அரசரால் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்டால் அது காணிக்கடன் எனப்படும். ஒருவேலி நிலத்திற்கு 95 முதல் 100 கலம்வரை வரி நெல்லாக வசூலிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி சாதிகளும் வரிகளை செலுத்தின. சோழர்கல்வெட்டில் 61 சாதிப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வள்ளூவன், பாணர், பிடாரர், நக்கன், நட்டுவன் போன்ற சொற்கள் ஒருமுறை மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை குடிப்பெயராகவும் தொழில்பெயராகவும் தோன்றுகின்றன. 28 சாதிப் பெயர்களில் வரிகள் வழக்கில் இருந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தொழில்வரிகள். கல்வெட்டுகளில் வணிகர்கள் அதிகமுறை குறிக்கப்பட்டுள்ளனர். அடுத்தநிலையில் பார்ப்பனரும் மன்றாடியாரும். மூன்றாம்நிலையில் வெள்ளாளரும் கைக்கோளரும். இது சமூகப்போக்கில் யாருடைய இயக்கம் வலுப்பெற்று இருந்தது என்பதனைக்காட்டும். பொதுமக்கள்பேரால் வந்தகடமை, பெருங்குடிகள்பேரால் வந்தகடமை என்ற வரிகள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியன.
#இக்கட்டுரை Noboru Karashima அவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட நூல் வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதையொட்டி எழுதப்பட்ட நூலறிமுக கட்டுரை. இந்நூல் பற்றி மேலும் விரிவாகவும் பேசலாம், எழுதலாம், உரையாடலாம்.
- கி.இரா.சங்கரன் keetru.com 02 12 24