வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 3
22 02 25
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 3
16. NK தம் ஆய்வில் காவிரிச் சமவெளியினை மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளாமல் புதுக்கோட்டை போன்ற வரண்டபகுதியினையும் எடுத்துக்கொண்டார். புதுக்கோட்டை வட்டாரத்தின் மொத்தமுள்ள 381 சோழர் கல்வெட்டுகளில் 197 கல்வெட்டுகளில் வரிகளின்பெயர்கள் பதியப்பட்டுள்ளன. சோழர்கல்வெட்டுகளில் இல்லாத பலவரிகளின் பெயர்கள் புதுக்கோட்டை வட்டாரத்தின் பாண்டியர்கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. அங்கு அச்சுவரி, அந்தராயம், இறை, கடமை, குடிமை என்ற வரிகள் பலமுறை கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கடமையும் அந்தராயமும் அதிகமுறை இடம்பெற்றவை. இவ்விரண்டும் நிர்வாகத்தில் மிக முக்கியமானவை. புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வட்டாரங்களில் கிடைக்கின்ற 250 பாண்டியர்கல்வெட்டுகளில் மொத்த்ம் 140 வரிகள் பதிவாகியுள்ளன. சோழர் காலத்தில் வழக்கில் இல்லாத 85 புதிய வரிகள் பாண்டியர் காலத்தில் அறிமுகமாயினை, 43%. தஞ்சாவூர் வட்டாரக்கல்வெட்டுக்களில் அடிக்கடி குறிக்கப்படும் வாய்க்கால் என்றசொல் நீர்ப்பாசனவளார்ச்சியினை நன்கு விளக்கும். வயக்கல், மயக்கல், மயக்கி, திருத்தி போன்ற சொற்கள் வேளாண்நிலத்தின் விரிவாக்கத்தினை குறிக்கின்றன.
17.மேலே பத்திகளில் சொல்லப்பட்டவை பேராசிரியர் NK அவர்களின் ஆய்வு முடிவுகள். அவர் காலந்தோறும் வேளாண்வளர்ச்சியும் நீர்ப் பாசன வளர்ச்சியும் நிகழ்ந்ததன் அடிப்படையில் இந்திய சமூகம் தேக்கநிலை சமூகம் என்ற கருதுகோளினை உடைத்தார். பலவேளாண் ஊர்கள் ஒரு குறிப்பிட்ட நீர்ப்பாசன வாய்க்காலை சார்ந்து இருந்தன என்பதன் அடிப்படையில் இந்திய வேளாண்ஊர்கள் தன்னிறைவு பெற்றவை என்ற கருத்தினையும் முறியடித்தார். அனைத்து ஊர்களிலும் சுடுகாடு இல்லை என்ற கருத்தினையும் இதற்காக சேர்த்துக் கொண்டார். ஆனால், சுடுகாடுகள் இல்லாதஊர்களில் இடுகாடுகள் இருந்திருக்கலாம். வளநாடுகள் உருவாக்கத்தால் நாடு அளவிலான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது என்ற கருத்தினையும் முன்வைத்தார். ஆனால், மேலே வரிசைப்படுத்தப்பட்ட நாடு தொடர்பானவரிகள் நாடுகளின் உயிர்ப்புநிலை தொடர்ந்து இயங்கியது என்று கருதவைக்கிறது. அதேபோன்று ஊர்தொடர்பானவரிகள் ஊர்களின் தொடர்ந்த இருப்பினை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. இக்கருத்து K.A.Nilakanta Sastri முன்மொழிந்த ஊர்கள் அதிகாரத்தில் சற்றுவளம் பெற்றிருந்தன என்ற கருத்துக்கு துணை போவதாக உள்ளது. NK நூல் வெளிவந்ததற்குப் பிறகு தென்னிந்தியா பற்றி குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாறுபற்றிய அறிஞர்களின்பார்வை புத்தொளிபெற்றது எனலாம். சோழர்காலம் பற்றிய பொதுநிலைபேச்சு (public speech) சூடுபிடித்த்து எனலாம்.
18.இந்நூலில் NK தம் ஆய்வினை சோழர்காலத்திலிருந்து அடுத்தகட்டத்திற்குத் தொடர்ந்தார். வரலாற்றுப்போக்கினை அறிவதற்கு இவர் நிலவுரிமையினை ஒரு தளமாகக் கொண்டார் என்று முன்னர்பார்த்தோம். எனவே, சோழர்காலத்திய நிலவுரிமை அடுத்தகட்டமான விஜயநகராட்சியில் எவ்வாறு மாறியது (transformed) என்பதனையும் தனித்தலைப்பில் ஆய்ந்தார். விஜய நகர ஆட்சிக் காலத்தில் புதுவகை நிலவுரிமை எழுந்தது. அக்காலத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தினை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது ஒரு வழக்கமாக இருந்தது. தமிழ்நாட்டின் வடக்கில் தேவிகாகாபுரம் எனுமிடத்திலுள்ள கோயில்கல்வெட்டுகள் இந்நிலவுரிமை மாற்றம் பற்றிப் பேசுகின்றன. அவ்விடத்தில் கிடைக்கும் 13 கல்வெட்டுக்கள் அடிப்படையில் மத்திய அதிகாரத்திற்கும் மாநில அதிகாரத்திற்கும் இடையிலான சிக்கல் பற்றிப் பேசினார். கோயில் நிலத்தினை குத்தகைக்கு மாற்றியவர்கள் தானத்தார், மகேஸ்வரர், குருக்கள், கைக்கோலர் முதலிகள் போன்றோர். இவர்கள் குழுக்களாக இயங்கினர்’ தனித்தும் செயற்பட்டவர்கள் ஈசான சிவாச்சாரியார்கள், விஸ்வேஸ்வர சிவாச்சாரியா போன்றோர். இவர்கள் தேவிகாபுரத்திலிருந்து இயங்கிய பிக்ஷாடனம் என்ற சமைய நிறுவனத்தினைச் சேர்ந்தவர்கள். இவர்கள்தான் தேவிகாபுரத்தின் சிவன்கோயிலின் சொத்தினை பரிபாலனம் செய்தோர். தானத்தார், மகேஸ்வரர், தானமகேஸ்வரர் என்ற 3 குழுவினரும் சேர்ந்தே இயங்கினர். கோயிலின் நிலத்தினை குத்தகைக்குப் பெற்றவர்கள் 5 நாயக்கர்கள்: திருமலை நாயக்கார், சதாசிவ நாயக்கர், கோனியப்ப நாயக்கர்,…சிவாநாயக்கார், நமசிவாய நாயக்கர்.
19. தேவிகாபுரம் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட பலநாயக்கர்கள் கன்னடநாயக்கர்களின் படையணியில் இருந்தோராவர். அவர்கள் மருதராசர் படைவீட்டினை சார்ந்தவர். படைவீடு என்பது நிலைப்படையாகும். அப்படைவீடு மருதராசர் என்ற உயர்அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருமலைநாயக்கர் துளுவ அரச வம்சத்தின் நரசநாயக்கருக்கான தமிழ்நாட்டின் முகவர். துளுவஅரசவம்சம், சளுவஅரசவம்சத்தின்பேரில் ஆண்டது. திருமலைநாயக்கரின் சகோதரர் ஈஸ்வர நாயக்கர் நரசநாயக்கரின் பிரிதொரு முகவர். ஆனால், இவர்கள் கர்நாடகத்தில் இருந்த அரசோடு நேரடியான தொடர்பில் இல்லை. காட்டாக, சேத்துப்பட்டு நாயக்கரின் மகனான கொண்டமநாயக்கர், படைவீட்டுசீர்மையின் காலாட்டிசூர்யநாயக்கரின் அனுமதியோடு தேவிகாபுரம்கோயிலின் ஆயர்குடும்பத்திற்கு கொடையளித்தார்.
20.நாயக்கர்கள் மத்திய அதிகாரிகளுடன் பல அடுக்குநிலைகளில் அரசியல் உறவு கொண்டிருந்தனர். இவ்வுறவினை உள்ளடுக்குநிலமானியமுறை (sub-ifeudation) என்றார் NK. கோயில் நிலங்கள் சிலநேரங்களில் நாயக்கர் அல்லாதாருக்கும் குத்தகைக்கு விடப்பட்டன. அவர்கள் மன்றாடி (shepherd) வித்வான் (scholar) போன்றோர். சிலநேரங்களில் குளத்தினையும் அதனைசுற்றியுள்ள நிலங்களையும் சேர்த்து குத்தகைக்கு விட்டனர். அவை, பொதுவாக தாங்கல் எனப்பட்டன. இதுபோன்ற நிலங்கள் 500 குழியிலிருந்து 700 குழிகள்வரை இருந்தன. சிலநேரங்களில் 1500 குழிகள். இக்குத்தகை நிலங்கள் காணியாட்சி, காணிப்பற்று, உழவுகாணியாட்சி உரிமைகளுடன் விடப்பட்டன. சிலவற்றில் உழவு உரிமை தரப்படவில்லை. சிலநிலங்கள் அஷ்டபோக உரிமையுடன் வழங்கப்பட்டன. இது, பரம்பரை உரிமையினை உறுதிப்படுத்தின. குத்தகைதாரர்கள் உழவர்களை குடியமர்த்திக் கொள்ளும் உரிமையினையும் பெற்றனர். அவர்கள் குடியேற்றப்படுவது குடியேற்றி என்ற கல்வெட்டுத் தொடரால் பதியப்பட்டுள்ளது. இவ்வுழவர்கள் பொதுவாக குடிகள் எனப்பட்டனர்.
21.நிலவுடைமையில் அடுத்தகட்ட காலமாற்றம் 17-18ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததனை மிராசிதார் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் NK ஆய்ந்தார். இவ்விரு நூற்றாண்டுகளில் உருவான மாற்றம் 13 ஆம் நூற்றாண்டில் உருவானதைப் போன்றது. இவ்விரு காலகட்டங்களும் போரின் துயரங்களை அனுபவித்தன. முதல்கட்டத்தில் சோழர்அரசு நழுவி விஜயநகர அரசுக்குப் போனது; இரண்டாம் கட்டத்தில் உள்ளூர் அதிகாரம் பிரிடிஷ்ஆட்சிக்குள் விழுந்தது. இன்றைக்கு தென்னிந்தியா எதிர்கொள்ளும் வேளாண்சிக்கல்கள் (agrarian problems) 19 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்திய ரயத்தவாரிமுறையினால் ஆகும். இம்முறை முன்பிருந்த வேளாண்குடிகளை (prevailing system) மாற்றியதால் உறபத்தி முறையும் (production pattern) மாற்றியது. நிலவுடைமைமுறைப் (landholding system) போன்றவற்றைப் பாதித்தன. இதன் தாக்கம் இன்றும் நடப்பில் உள்ளது என்றார் NK. ரயத்வாரி முறை பற்றி அறிவதற்கு பிரிடிஷாரின் ஆவணங்கள், அறிக்கைகள் பயன்படும். இவற்றில் Fifth Reports, Paers on Misasi Right, The Baraamahal Records என்பன பெரிதும் பயன்படும் என்றார். 1770-1820 காலகட்டத்தின் அலுவல்சான்றுகள் ஆய்விற்கு மிகவும் பயனுள்ளவை எனப்பரிந்துரைத்தார். இவற்றில் உள்ளூர் சான்றுகளும் அடங்கும். இவை பெரும்பாலும் பனையோலைகளில் எழுதப்பட்டவை. இவற்றுடன் மெக்கன்சி தொகுத்த ஆவணங்களின் முக்கியத்துவத்தினையும் உணர்த்தினார். கிறித்தவ மிசினரிமார்களின் ஆவணங்களும் பயணியர்களின் குறிப்புகளும் பயனுள்ளவை என்பதனையும் உணர்ந்திருந்தார். காலனிய அலுவலர் எல்லிஸ் தொகுத்தவை மிராசி ஆவணங்கள் எனப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனியார் தமிழ்நாட்டின் வடக்கில் (northern circar) சமீன்தார், முட்டாதார் முறையினை நிலவுடைமையில் அறிமுகப்படுத்தினர். இம்முறை செயலிழந்தபின் 1810களில் ஊர்குத்தகைமுறையினை (village lease system) அறிமுகப்படுத்தினர். இவ்வகை ஊர்கள் ஒரு வருமான அலகு (revenue unit) எனப்பட்டன. இவ்வகை ஊர் ஓர் ஊர்த்தலைவரால் (headman) ஆளப்பட்டன. இம்முறையும் வெற்றியடையவில்லை. எனவே, அடுத்து ரயத்வாரிமுறையினை அறிமுகப்படுத்தினர். இது ஒருசோதனை முறையில்தான் (trial and error) அறிமுகமானது.
22. இந்திய நிலமுறை (land system) பற்றிய ஆய்வில் சிறந்தவரான (Baden Powell) மிராசி உரிமையின் தோற்றுவாய் பாண்டியர், சோழர்காலத்தின் அரசரும் அலுவலாரும் பார்ப்பனர்க்கு கொடையளித்த முறையிலிருந்து தொடங்குகிறது என்றார் என்பது Noboru Karashima யின் கூற்று. சோழர், விஜயநகராட்சி கல்வெட்டுச் சான்றுகளில் நிலவிற்பனை, கொடை பற்றிய செய்திகள் போன்றே மிராசிபற்றிய எல்லிஸ் தொகுத்த ஆவணங்களும் நிலவுடைமைகளை விளக்குகின்றன. மிராசி உரிமையின் கூறுகள்: (1)தலைமுறை தலைமுறையான உரிமை (hereditay right) ஆனாலும், விற்கும் உரிமை உண்டு. (2) மிராசி உரிமை வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும். (3)இது தொண்டைமண்டலத்தில் (மான்யம்) வரிவிலக்கு பெற்றவை. இதுதவிர, ஒருமிராசி பிறவகை வரிகட்டும் நிலங்களில் இருந்தும் ஒருபாதி விளைச்சலில் உரிமை கோரலாம்.(4) ஒரே ஊரின்மேல் பலமிராசிகள் உரிமை கொண்டிருந்தால் அவர்களின்பங்கு பசுங்கரை அல்லது அறுதிகரை எனப்பட்டது. இங்கு கரை எனும் சொல் பங்கு என்ற பொருளில் ஆளப்படுகிறது. கரை எனுல் சொல் ஒரு குழுவின் பகுதி/குலத்தின் பகுதி (share of clan or lineage) என்றும் பொருள்படும். பசுங்கரையின்படி மிராசிகள் ஓராண்டு விளைச்சலை பங்கிடுவர் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான விளைச்சலை பங்கிடுவர். அறுதிகரை என்றமுறையின்படி மிராசிஊர் பகுதிகளாகப் பங்கிடப்பட்டு தனித்தனியே சாகுபடிசெய்யப்படும். மிராசிநிலத்தில் உழும் உரிமை பெற்றவர் (right to vultivation) பயறுகாரி எனப்பட்டனர். இவர்கள் உள்குடிகள், பறகுடிகள் எனப்பட்டனர். உள்குடிகள் சாகுபடிசெய்யப்படும் ஊரிலேயே வசிப்பர். அவர்களின் உழும் உரிமையினை மிராசிகளால் மாற்ற முடியாது. பறகுடிகளின் உழும் உரிமை இதற்கு மாறானது. மிராசிகள் உரிமைபெற்ற தங்கள் நிலங்களுக்கு அருநீர், முறைநீர் முறையில் பாசனம் பெற்றனர். பாசனம் தொடர்பான மேலும் சில உரிமைலையும் பெற்றனர். இவ்வுரிமைகள் பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் நிலவுரிமை பெற்றவர்களை நினைவூட்டுகிறது. இவர்கள் நிலத்திற்கு உரமிடும்உரிமையும் பெற்றனர் என்று அறிய முடிகிறது. இது போன்றதொரு கல்வெட்டு குறிப்பு சோழர் காலத்தில் உண்டு. மிராசி நிலபரிவர்த்தனை பல சாதிகளுக்கு இடையே நிகழ்ந்தது. முதலிகள், பார்ப்பனர்கள், கிராமணிகளிடையே நிகழ்ந்தது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் 800 முதல் 1800 வரையிலான ஓராயிரம் ஆண்டுகாலத்தில் நிலவுரிமை சிறு சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வந்ததனை தம் ஆய்வில் Noboru Karashima வெளிக்கொணர்ந்தார். இவரலாற்றுப் போக்குளை அறிவதற்கு கல்வெட்டு சான்றுகள், செப்புப் பட்டயச் சான்றுகள், ஓலைச்சுவடிகள், தாள்களில் கிடைத்த சான்றுகள் என அனைத்துவகை சான்றுகளையும் பயன்படுத்தியுள்ளார். சான்றுகளின் தன்மை (medium) மாறினாலும் நிலவுடைமை பொறுத்து பொருள் (contents) பெரிதாக மாறவில்லைபோல் தோன்றுகிறது. இதனை நுணுகிப் பார்த்தால் நிலவுரிமைகள் ஆட்சியதிகாரத்தினை மாற்றினாலும் ஆட்சியதிகாரம் நிலவுரிமைகளை மாற்றினாலும் கோயில்கள் எவ்வித இழப்பும் இன்றி இன்றும் நிற்கின்றன. இதற்கான காரணிகள் தென்னக மக்களின் உளவியலை ஆய்ந்தால் பிடிபடும்.
#இக்கட்டுரை Noboru Karashima அவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட நூல் வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதையொட்டி எழுதப்பட்ட நூலறிமுக கட்டுரை. இந்நூல் பற்றி மேலும் விரிவாகவும் பேசலாம், எழுதலாம், உரையாடலாம்.
- கி.இரா.சங்கரன் keetru.com 02 12 -24