இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 2

03 05 25 

இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 2

பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது இறுதிக் காலத்தில் உறுதியாய் பேசியதில் அதிகம் மாநில சுயாட்சிக் கருத்துக்களைத்தான்! 1968 ஜூலை மாதம் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா, “இது அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சிகளின் கோரிக்கை அல்ல” என்றார். 1969 ஜனவரி மாதம் ‘காஞ்சி’ பொங்கல் மலரில் எழுதிய முதலமைச்சர் அண்ணா, “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்கள் பெறத் தக்க வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்” என்று எழுதினார்.

இதே கருத்தை ‘ஹோம் ரூல்’ பத்திரிக்கையிலும் முதலமைச்சர் அண்ணா எழுதினார்; “வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக்கூறி நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற நமது அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை” என்று எழுதினார். ‘அண்ணாவின் உயில்’ என்று போற்றப்படும் கட்டுரை இது. அண்ணாவின் உயிலாக, உயிராக இருந்தது மாநில சுயாட்சி!

இந்திய எல்லைக்குள் அதிக அதிகாரங்களைக் கொண்டதாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்பதை தனது கொள்கையாக திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துக் கொண்டது. மாநில அமைப்பு ஆணையத்திடம் 1954ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வழங்கிய அறிக்கையில், “பரந்த இந்திய உபகண்டமானது இன்றைய தினம் வலிந்து திணிக்கப்பட்ட பல நிர்வாகப் பகுதிகளின் தொகுப்பாகக் காட்சியளிக்கிறது” என்று சொன்னார்.

“union என்கிற ஒற்றுமைதான் வலுவான இந்தியாவை உருவாக்கும். வெவ்வேறு மொழி, கலை, கலாச்சாரங்களை அடையாளம் தெரியாமல் மாற்றி உருவாக்கப்படும் ஒன்றிப்போன தன்மை uniformity, வலுவான இந்தியாவுக்கு ஆக்கமளிக்காது. இந்திய அரசியல் முறை கூட்டாட்சி Federalism) முறையாக அமைய வேண்டும்” என்றது 1971 ஆம் ஆண்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை.

“பல்வேறு இன, கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் நிலையான வளமான எதிர்காலத்துக்கும் தேவையான கூட்டாட்சி கொண்டதாக உருவாக்க மாநில சுயாட்சியில் கழகம் அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டுள்ளது” என்று 1977 தேர்தல் அறிக்கை சொன்னது. இந்தியாவின் ஒற்றுமையை மாநில சுயாட்சியுடன் கூடிய முழுமையான கூட்டாட்சி முறைதான் காப்பாற்ற முடியும் – wholesome federalism with autonomy for the states – என்பதில் கழகம் உறுதியாக இருந்து வருகிறது. ( 1980 தேர்தல் அறிக்கை) ஆளுநர் பதவியை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தியது.

“அரசியல் துறை, சட்டம் இயற்றும் துறை, பொருளாதாரத் துறை, நிதிப் பங்கீடு, நிர்வாகத்துறை – இவை அனைத்திலும் மாநிலங்கள் மத்திய அரசின் முன்னால் தங்கள் சுயமரியாதையை இழந்து பிச்சைப்பாத்திரத்துடன் கெஞ்சி நிற்கும் நிலையை மாற்றி அவை உண்மையான கூட்டாட்சியைப் பெற வேண்டும்” என்று 1989 தேர்தல் அறிக்கை வலியுறுத்தியது. மத்தியில் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டு பழைய அன்னிய ஏகாதிபத்திய பாணியில் ( as a kind of imperial rule on a republican basis) ஆட்சி நடத்துவது சரியா எனக் கேள்வி எழுப்பியது 1996 தேர்தல் அறிக்கை.

“தமிழ்ச் சமுதாயத்தைக் காக்க, இந்தியாவிலுள்ள தேசிய இனங்களைக் காக்க, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளைக் காக்க, இந்தியாவிலே இருக்கிற மாநிலங்கள் சுயமரியாதையோடு வாழ – பொருளாதாரத்திலே வளமும், சுயமரியாதைத் தன்மையிலே தன்னிகரற்ற நிலையும், விட்டுக் கொடுத்துப் போகிற நேரத்தில் மத்திய அரசுக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம். உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று, மாநில சுயாட்சி தீர்மானத்தை 1974 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கொண்டு வந்தபோது முதலமைச்சர் கலைஞர் குறிப்பிட்டார்.

இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இதனைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். “நம் இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். நம் நாட்டு மக்களின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கின்ற வகையில், அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்” – என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

இது தமிழ்நாட்டுக்கான குரல் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான குரல்தான். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் இந்த நிலைமையில்தான் இருக்கிறது. மாநிலங்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. எனவேதான் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சுயாட்சி கேட்கும் குரலை ஓங்கி ஒலித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாடு என்ற மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமல்ல, இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சுயாட்சி கேட்கும் முதலமைச்சராக உயர்ந்து காட்சி அளிக்கிறார்.

murasoli.in 18 04 25