மாநி­லப் பட்­டி­ய­லில் கல்வி!

22 05 25

மாநி­லப் பட்­டி­ய­லில் கல்வி!#

பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி எழு­திய, ‘தேசி­யக் கல்­விக் கொள்கை – 2020 எனும் மத­யானை’ நூல் வெளி­யீட்டு விழா­வில் உரை­யாற்­றிய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும், துணை முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­க­ளும் மிக­மிக முக்­கி­ய­மான கோரிக்கை ஒன்றை வைத்­துள்­ளார்­கள். ‘கல்­வியை மாநி­லப் பட்­டி­ய­லுக்கு மாற்­றுங்­கள்’ என்­ப­து­தான் அந்­தக் ரிக்கை. இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் பிர­த­மர் மோடி அவர்­கள் முன்­னி­லை­யில் பேசும் போது முத­ல­மைச்­சர் அவர்­கள் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­னார்­கள்.

அர­ச­மைப்­புச் சட்­டம் எழு­தப்­பட்­ட­போது கல்­வி­யா­னது, மாநி­லப்­பட்­டி­ய­லில்­தான் இருந்­தது. 1975 ஆம் ஆண்டு இந்­தி­யா­வில் அவ­சர நிலை பிர­க­ட­னம் செய்­யப்­பட்ட போது கல்­வி­யா­னது பொதுப் பட்­டி­ய­லுக்கு மாற்­றப்­பட்­டது. 42 ஆவது சட்­டத்­தி­ருத்­தம் மூல­மாக இது செய்­யப்­பட்­டது. 1976 ஆம் ஆண்­டுக்கு முன்பு இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டம் பிரிவு 246, ஏழா­வது அட்­ட­வ­ணை­யில் பட்­டி­யல் இரண்­டில் இருந்­தது. கல்வி குறித்து அனைத்து முடி­வு­களை எடுக்­கும் அதி­கா­ர­மும் மாநில அர­சு­க­ளின் கையில் இருந்­தது. இப்­போது கல்வி, பொதுப்­பட்­டி­யல் வரிசை 25 இல் இருக்­கி­றது.

“நாட்­டில் நெருக்­கடி நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட போது, கல்­வியை மாநில பட்­டி­ய­லில் இருந்து பொதுப்­பட்­டி­ய­லுக்கு மாற்றி நிறை­வேற்­றப்­பட்ட அர­சி­யல் சாசன திருத்­தத்தை ரத்து செய்ய வேண்­டும்” என்று கோரி தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் எழி­லன் அவர்­கள் ‘அறம் செய்ய விரும்பு’ அமைப்­பின் சார்­பில் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் பொது­நல வழக்­கைத் தாக்­கல் செய்­தார். நீதி­ப­தி­கள் மகா­தே­வன், சுந்­தர் மற்­றும் செந்­தில்­கு­மார் ராம­மூர்த்தி அடங்­கிய முழு அமர்­வில் இந்த வழக்கு விசா­ரணை நடத்­தி­யது. இன்­ன­மும் அந்த வழக்கு விசா­ர­ணை­யில்­தான் இருக்­கி­றது.

மாநி­லக் கல்­விக் கொள்­கையை வகுக்க நீதி­பதி டி.முரு­கே­சன் தலை­மை­யில் ஒரு குழுவை அமைத்­தார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள். இக்­குழு தனது அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­துள்­ளது. அக்­குழு தனது முதல் பரிந்­து­ரை­யாக, ‘கல்­வியை மாநி­லப் பட்­டி­ய­லுக்கு மாற்ற வேண்­டும்’ என்று கூறி இருக்­கி­றது. இன்­றைய பா.ஜ.க. அர­சா­னது, கல்­வித் துறை முழுக்க முழுக்க ஒன்­றிய அர­சின் பட்­டி­ய­லில் இருப்­ப­தைப் போலவே செயல்­பட்டு வரு­கி­றது.

ஒன்­றிய அர­சின் பட்­டி­ய­லில் கல்வி இருப்­ப­தைப் போலச் செயல்­ப­டும் அவர்­கள், அதற்­கான நிதி ஒதுக்­கீடு செய்­கி­றார்­களா என்­றால் அது இல்லை. தமிழ்­நாடு அரசு பள்­ளிக் கல்­வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.40 ஆயி­ரம் கோடி செலவு செய்­கி­றது. ஆனால் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்­கும் செலவு செய்­யும் தொகை ரூ.70 ஆயி­ரம் கோடி தான். நிதி ஒதுக்­கீடு செய்­யா­ம­லேயே கல்­வித் துறையை ஆக்­கி­ர­மித்து வரு­கி­றது

ஒன்­றிய பா.ஜ.க. அரசு. 2022 ஆம் ஆண்டு ஒன்­றிய கல்வி அமைச்­ச­கத்­தால் ஒரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டது. ‘கல்­விக்­கான நிதி நிலை செல­வின பகுப்­பாய்வு’ என்று இதற்­குப் பெயர். இந்­தி­யா­வில் கல்­வித் துறை­க­ளின் மொத்த வரு­வாய் செலவு ரூ.6.25 லட்­சம் கோடி என மதிப்­பி­டப்­பட்­டது. இதில் ஒன்­றிய அர­சால் செலவு செய்­யப்­ப­டும் தொகை 15 விழுக்­காடு மட்­டுமே. 85 விழுக்­காடு தொகையை மாநில அர­சு­களே செலவு செய்­கின்­றன என்று அந்த அறிக்கை சொல்­கி­றது. 85 விழுக்­காடு தொகையை செலவு செய்­யும் மாநில அர­சு­க­ளால், கல்­விக் கொள்­கையை தீர்­மா­னிக்க முடி­யாது என்­பது அவ­மா­னம் அல்­லவா?

அனைத்­துச் செல­வு­க­ளை­யும் செய்­வது மாநில அரசு. ஆனால் பாடத்­திட்­டத்தை மட்­டும் அவர்­க­ளது பாடத் திட்­ட­மாக வைத்­தி­ருக்க வேண்­டு­மாம். மருத்­து­வக் கல்­லூ­ரியை கோடிக்­க­ணக்­கில் செலவு செய்து நடத்­து­வது மாநில அரசு. ஆனால் மாண­வர் சேர்க்­கையை ‘நீட்’ தேர்வு மூல­மாக நடத்­து­வது ஒன்­றிய அரசு. இதைப் போல எதேச்­ச­தி­கா­ரப் புத்தி இருக்க முடி­யுமா? அனை­வ­ருக்­கும் கட்­டா­யக் கல்வி, அனை­வ­ருக்­கும் அடிப்­ப­டைக் கல்வி, அனை­வ­ருக்­கும் குறைந்த பட்­சக் கல்­வித் தகுதி – இது­தான் பள்­ளிக் கல்­வி­யின் அடிப்­படை ஆகும். பள்­ளிக் கல்­வி­யின் இந்த முகத்தை, அடிப்­ப­டை­யைச் சிதைக்­கவே, ‘தேசி­யக் கல்­விக் கொள்கை’ கொண்டு வரப்­ப­டு­கி­றது. தேசி­யக் கல்­விக் கொள்கை, நீட் தேர்வு ஆகி­ய­வை­தான், ‘மாநி­லப் பட்­டி­ய­லில் கல்வி’ என்ற முழக்­கத்­துக்கு முக்­கிய அடிப்­ப­டை­யாக உள்­ளது.

ஒன்­றிய அர­சாங்­கம் ‘ஒரே மாதிரி பாடத்­திட்­டத்­தில்’ தான் கவ­னம் செலுத்­து­கி­றது. இங்கே தேவை­யா­னது, தனித்­தனி கவ­னிப்­பு­க­ளும், அக்­க­றை ­க­ளும் தேவை. ஒரு பி.எம்.ஸ்ரீ. பள்­ளியை கட்­டு­வது முக்­கி­ய­மல்ல. அதில் படிக்­கும் பிள்­ளை­க­ளுக்கு எந்த அடிப்­ப­டை­யில் கல்வி கற்­பிக்­கப்­ப­டப்போகி­றது என்­ப­து­தான் முக்­கி­யம். உயர் தர­மான கட்­ட­டத்தை விட, கற்­பிப்பு அக்­க­றையே அவ­சி­யம். பள்­ளிப் படிப்பை முடித்து உயர் கல்வி செல்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை தேசிய அள­வில் 27.1 சத­வி­கி­த­மாக உள்­ளது. ஆனால் தமி­ழ­கத்­தில் உயர் கல்­விக்­குச் செல்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 51.4 சத­வி­கி­தம் ஆகும். அதா­வது இந்­திய சரா­ச­ரியை விட தமி­ழ­கத்­தின் சரா­சரி இரண்டு மடங்கு ஆகும். தேசிய தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 14 பல்­க­லைக் கழ­கங்­கள் இடம் பெற்­றுள்­ளன. முதல் 100 இடங்­க­ளுக்­குள் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 33 கல்­லூ­ரி­கள் இடம் பெற்­றுள்­ளன. இதே போன்ற உயர்­நி­லை­யில் பல மாநி­லங்­கள் இல்லை. எனவே, அந்­தந்த மாநி­லங்­க­ளுக்கு ஏற்ற கவ­னிப்­பு­கள் தான் தேவை.

கல்வி அறி­வில் இந்­தி­யா­வின் முதன்மை மாநி­ல­மாக கேரளா இருக்­கி­றது. 96.2 விழுக்­காடு பெற்­றுள்­ளது கேரளா. மிகக் குறை­வான கல்வி அறிவு கொண்ட மாநி­ல­மாக பீகார் இருக்­கி­றது. இது 61.8 விழுக்­காடு மட்­டுமே. இரண்டு மாநி­லக் கல்­வி­யை­யும் ஒரே மாதி­ரி­யாக நடத்த முடி­யுமா? ‘நெருக்­கடி நிலை காலம் இந்­தி­யா­வின் இருண்ட காலம்’ என்று சொல்­கிறார் பிர­த­மர் மோடி. இருண்ட காலத்­தில் எடுக்­கப்­பட்ட முடிவை எதற்­காக அவர் பின்­பற்ற வேண்­டும். ‘இருண்ட காலம்’ என்­பது அர­சி­ய­லுக்­காக சொல்­லப்­ப­டும் கருத்­தல்ல என்று மெய்ப்­பிக்­கும் வகை­யில், கல்­வியை மாநி­லப்பட்­டி­ய­லுக்கு மாற்ற பிர­த­மர் மோடி முடி­வே­டுக்க வேண்­டும்.

murasuoli.in  20 05 2025