சுயமரியாதை - 40 கூடுதல் தண்டனை கோரிய பெரியார்!

29 09 2018

சுயமரியாதை - 40 கூடுதல் தண்டனை கோரிய பெரியார்!

பொதுவுடைமைக் கட்சியினரின்  'அறிவுரையைமீறித் தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தி எதிர்ப்பு என்னும் "விஷ வலையை" விரும்பி ஏற்றனர் என்பதே வரலாறு. தெருக்களில்மேடைகளில் மட்டுமின்றிசட்டமன்றத்திலும் 1938ஆம்  ஆண்டு முழுவதும் அதே பேச்சாகத்தான் இருந்தது. குறிப்பாக, 1938 ஆகஸ்ட் 18ஆம் நாள் சட்டமன்றத்தில் பெரும் புயலே வீசியது. சர் ஏ.டி. பன்னீர்செல்வம்,அப்துல் அமீத்கான்அப்பாதுரை (பிள்ளை)கான்பகதூர் கலிபுல்லா ஆகிய நால்வரும் ஆட்சியாளர்களின் மீது கடும் குற்றச்சாற்றுகளை முன்வைத்தனர்.

எந்தக் குற்றவியல் திருத்தச் சட்டத்தைக் காங்கிரஸ் கட்சி1935ஆம் ஆண்டு எதிர்த்ததோஅதே சட்டத் திருத்தத்தை இப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்குவதற்காக ராஜாஜி தலைமையிலான அரசு  கொண்டுவர முயன்றது. அதனால்தமிழ்நாட்டில் மட்டுமின்றி,இந்திய அளவிலேயே அது எதிர்ப்புகளையும்கண்டனங்களையும் எதிர் கொண்டது. ரவீந்திரநாத் தாகூரும்,  ஜனாப் ஜின்னாவும் கூட அதனை எதிர்த்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி,இந்தி எதிர்ப்புப் போரை ஒடுக்குவதில் அரசு முனைப்புக் காட்டியது. பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டது. நாடெங்கும் பலர் கைது செய்யப்பட்டனர். ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையில் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எல்லோருக்கும் மூன்றாம் ('சிகிளாஸ்) வகுப்புச் சிறைதான் என்றானது.  

ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல்தமிழர் பெரும்படை ஒன்று,தளபதி அழகிரிசாமி தலைமையில், 1938 ஆகஸ்ட் முதல் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டு, 42 நாள்கள் நடைப்பயணத்தின் பின்செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையை வந்தடைந்தது. அந்தப் பேரணி தமிழகத்தில் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியது. அந்தப் பேரணி சென்னை வந்தடைந்த நாளில்கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில்தான் 'தமிழ்நாடு தமிழருக்கேஎன்னும் முழக்கம்,மறைமலை அடிகள்நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் முன்னிலையில்,  பெரியாரால் எழுப்பப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரில் இளைஞர்கள்பெண்கள்அவர்களுடன் சில கைக்குழந்தைகள் என எல்லோரும் சிறை சென்றனர். இறுதியில்1938 டிசம்பரில் பெரியாரும் சிறை புகுந்தார். அவர் சிறை சென்ற நாளில்,தமிழ்நாடே ஆர்ப்பரித்து நின்றது. அப்போது அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் வரலாற்றுப் புகழ் பெற்றது. நீதிபதியின் முன்னால் நின்றுதன்னுடைய கூற்றை எழுதிப் படித்தார் பெரியார்.

"இந்த நீதிமன்றம் காங்கிரஸ் மந்திரிசபைக்குக் கட்டுப்பட்டதாக உள்ளது. நீங்களும் ஒரு பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர். எனவே இந்த நீதிமன்றத்தில் நான் நியாயத்தை எதிர்பார்க்கவில்லை" என்று வெளிப்படையாகக் கூறினார்.  இப்படி ஒருவர் எங்கேனும் நீதிமன்றத்தில் கூறியிருப்பாரா என்று தெரியவில்லை. இறுதியில் அவர் கூறியுள்ள வரிகள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன.  அந்த வரிகளை அப்படியே பார்க்கலாம்:"எனவே கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம்,எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும்பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும்எவ்வளவு தாழ்ந்த வகுப்பு உண்டோ அதையும் கொடுத்துஇவ்வழக்கு விசாரணை நாடகத்தை இத்துடன் முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்." இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் பெரியார்!

(தொடரும்) subaveeblog 15 11 2016