பாஜக கூட்டணி ஊழலற்ற கூட்டணியா?

07 04 2019

பாஜக கூட்டணி ஊழலற்ற கூட்டணியா?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து நீதிமன்றத்தால் 4 வருடத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, குட்கா ஊழல், முட்டை ஊழல், மணல் குவாரி ஊழல், மின்சாரம் வாங்கியதில் ஊழல், பேருந்துக் கட்டண ஊழல் என துறைதோறும் ஊழலை ஊக்குவித்து வருகிற இபிஎஸ், ஓபிஎஸ் இவர்களின் அதிமுக. மருத்துவக் கல்லூரி முறைகேட்டில் சிபிஐயால் குற்றஞ்சாட்டப்பட்டு இன்றும் நீதிமன்றத்திற்கு வர அஞ்சி வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கும் முன்னாள் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் அன்புமணியின் பாமக.

ஊழலின் தாய் என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட ம.பியின் வியாபம் ஊழல், உ.பியில் கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டத்தில் ஊழல், மகராஷ்டிராவில் சத்துணவில் வழங்கப்படும் கடலை மிட்டாய் ஊழல், சத்தீஸ்கரில் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் ஊழல், இராஜஸ்தானில் மார்பிள் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல், ஹரியானாவில் பொது விநியோகத் திட்டத்தில் ஊழல், குஜராத்தில் மீன்பிடி ஏரிகள் குத்தகை ஊழல், கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது ஏற்றுமதி ஊழல் என, தான் ஆண்ட, ஆளும் மாநிலங்களில் அனைத்துத் துறைகளிலும் ஊழலில் ஊறிப்போயுள்ள பாஜக வின் மோடி அரசு செய்துள்ள ரஃபேல் ஒப்பந்த ஊழலை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் வெளியிட்ட பிறகும் இன்று வரை வழக்கைக்கூடப் பதிவு செய்யாமல் பயந்து நடுங்குகிற ‘செளகிதார்' மோடி ஆவணங்கள் தொலைத்து விட்டதாக புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இப்படி ஊழல்வாதிகளின் கூடாரமாகத் திகழ்கிற பாஜக - அதிமுக - பாமக கூட்டணியை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதே நாம் நாட்டுக்குச் செய்கிற நன்மை.keetru.com 31 03 2019