தி.மு.க.வின்மீது 'விஜயபாரதங்களின்' எரிச்சல்!

14 06 2019

தி.மு.க.வின்மீது 'விஜயபாரதங்களின்' எரிச்சல்!

'துக்ளக்'காக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸின் 'விஜயபாரத' வார ஏடாக இருந்தாலும் சரி, 'தினமலராக' இருந்தாலும் சரி - இவைகளுக்குச் சதா தி.க. - தி.மு.க. இவற்றின் தலைவர்கள் மீதான சிந்தனைதான். கரிச்சிக் கொட்டா விட்டால் இந்தக் கூட்டத்துக்குத் தூக்கம் வரவே வராது போலும்!

7.6.2019 நாளிட்ட ஆர்.எஸ்.எஸின் வார இதழான 'விஜயபாரதம்' தனது தலையங்கம் பகுதியில் இவ்வாறு எழுதுகிறது. "திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றாலும், நாடாளுமன்றத்தில் கூச்சல் போடுவது, வெளி நடப்பு செய்வது தவிர, அவர்களால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை" என்று தலையங்கத்தில் தீட்டியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். வார இதழ். இதன் மூலம் ஒன்றை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை தகுதியை இவர்கள் அளிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்பதுதான் பாசிசக் குணம். அந்தக் குணம் அளவுக்குஅதிகமாகவே பிஜேபிக்கு இருக்கிற காரணத்தால் நாடளுமன்றத்தில் பெரும்பான்மைக்கும் அதிக மான இடங்கள் இருப்பதால், ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சிக்குரிய மரியாதையை பிஜேபி அளிக்கத் தயாராக இல்லை என்பதை இதன் மூலம் ஒப்புக் கொண்டு விட்டார்கள். ஜனநாயகத்தில் உண்மையிலேயே பிஜேபி ஆட்சிக்கு நம்பிக்கை இருக்குமேயானால் எதிர்க்கட்சிகளுக்குரிய நேரத்தைக் கணிசமாக ஒதுக்கி, எதிர்க் கட்சிகள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கப் போதுமான நேரத்தையும் அல்லவா ஒதுக்கித் தர வேண்டும். அதை விட்டு விட்டு வெளி நடப்பு செய்வது, கூச்சல் போடுவது தான் எதிர்க் கட்சிகளின் வேலை என்று ஆர்.எஸ்.எஸ். எழுதுவது - அதன் கோணல்தனமான கொச்சைப் புத்தியைத் தான் படம் பிடித்துக் காட்டுகிறது.

மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த பிஜேபி நடந்துகொண்ட விதம் என்ன?நாடாளுமன்றத்தை சுமுகமாக நடக்கவிட்டதா? சதா அரட்டைக் கச்சேரி நடத்தியும், கூச்சல் போடுவதும் - சபாநாயகரை முற்றுகையிடுவதும், வெளி நடப்பு செய்வதுமான காரியத்தில்தானே ஈடுபட்டது. 'நினைப்புப் பிழைப்பைக் கெடுக்கும்' என்பதுபோல, 'தான் திருடி பிறரைத் திருடி என்பார்' என்று சொல்லுவதுபோல, 37 இடங்களைப் பிடித்து மக்களவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடும், வெளி நடப்புச் செய்யும் என்று எழுதுகிறது. எதிர்க் கட்சிகளின் நியாயமான குரலை செவி மடுக்கப் போவதில்லை மத்திய பிஜேபி ஆட்சி என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலும்! பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் பிஜேபிக்கு அதிலும் குறிப்பாக நரேந்திர தாமோதரதாஸ் மோடியைப் பொருத்தவரை ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கை என்பது அறவே கிடையாது. 'எல்லாம் நானே ராஜா' என்கிற தர்பார் புத்திதான் அவர் தலைக்கு ஏறிய விடயமாகும். தன்னதிகாரம் கொண்ட அத்தனை அமைப்புகளையும், நிறுவனங்களையும் தன்முன் கைகட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிடவில்லையா? இந்த நிலையில் இவரின் ஆலோசகர்கள் பலரும் விலகிச் செல்லவில்லையா? அமைச்சர்களின் செயலாளர்கள் எல்லாம் நேரடியாக தம்மோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொன்னவர்தானே இவர். 'விஜயபாரதம்' இன்னொரு கருத்தையும் தனது தலையங்கத்தில் பதிவு செய்திருக்கிறது. "இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் திமுக அரியணையில் ஏறக் கூடாது என்கிற கட்சிகள் இப்போதிலிருந்தே முனைப்புடன் செயல்பட வேண்டும்" என்று எழுதி இருக்கிறது.

இதனைத் திமுக கவனித்தாக வேண்டும். இடையில் இரண்டாண்டுகள் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்குக் கால அவகாசம் இருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் தங்களிடம் இருக்கும் அதிகாரப் பலம், பண பலம், ஊடக பலங்களைக் கொண்டு திமுகவுக்குப் பல வகைகளிலும் நெருக்கடி கொடுப்பார்கள். போதும் போதாதற்குக் காலால் இடக் கூடிய கட்டளைகளைத் தலையால் செய்யக் கூடிய அடிமை ஆட்சி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கவே இருக்கிறது. ஒவ்வொரு பார்ப்பனருமே ஓர் இயக்கமாக இருந்து பிஜேபிக்குச் சேவகம் செய்து கொண்டேதான் இருப்பார்கள். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்கான சகல வேலைகளிலும் ஈடுபடுவார்கள். திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிரிகளின் வியூகங்களைப் புரிந்து கொண்டு இப்பொழுது முதலே வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னெடுப்பு வேலைகளில் ஈடுபட்டு, பிஜேபியையும், அதனோடு தோள் கொடுக்கக் காத்திருக்கும் கட்சிகளையும் கட்டிய பணத்தைத் திருப்பி வாங்க முடியாமல் செய்வதற்கான தேர்தல் பணிகளுக்கான திட்டங்களில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் - அலட்சியம் வேண்டாம்! viduthalai jun 17 2019