மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி – 1

11 07 2019

மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி –1

கோவில் வாழ்வு

மனித இனம் கடந்து வந்த காலடிச் சுவடுகளை அறிய விரும்பும் எவரும் கோவில்களைப் புறக்கணித்துவிட்டு, உண்மை காண இயலாது, வழிபடுவது வேறு; வரலாற்றைக் காண்பது வேறு. நம் முன்னோரின் வாழ்வும் வளர்ச்சியும் கனவும் முதிர்ச்சியும் வீழ்ச்சியும் சாதனையும் - இன்றளவும் கோவில்களில் தான் வீற்றிருக்கின்றன. கோவில்கள் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல. கலை, பண்பாடு, வரலாறு, சமுதாயம், அரசியல் - அனைத்தின் வேர்களும் கோவிலோடு பின்னிக் கிடக்கின்றன.

கோவில் வரலாறு

தமிழ்நாட்டில் முன்பு கற்கோவில்களே இல்லை. செங்கற்களினாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட கோவில்களே இருந்தன. பல்லவ மன்னர்களே முதன் முதலாகக் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கற்கோயில் அமைத்தனர். பல்லவர்களைப் பின்பற்றி, ஊர்தோறும் கற்கோவில்களை எழுப்பத் தொடங்கினர்.

முதற் கோவில்

கடைச் சங்க காலத்திற்குப் பின்பே கோவில் வழிபாடு தோன்றியது. செங்கற்கலாலும் சுண்ணாம்பினாலுமே கட்டப்பட்ட அன்றைய கோவில்கள், பின்பு கற்கோவில்களாக மாறத்தொடங்கின. கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பல்லவமன்னன் மகேந்திரவர்மன் (கி.பி.600 – 300) முதன் முதலாகக் கற்கோவில் எழுப்பினான். குன்றுகளைக் குடைந்து கோவில் அமைக்கும் முறையைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவன் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 - 668) மகேந்திரவர்மனின் மகனாகிய இவன் எழுப்பிய கோவில்களில் சிங்கத் தூண்கள் முதன் முதலாக இடம் பெற்றன. கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கிக் கோவில் கட்டத் தொடங்கியவன் இரண்டாம் நரசிம்மவர்மன். முதலாம் நரசிம்ம வர்மனின் பெயரன் இவன். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் - இவை இரண்டும் தமிழ்நாட்டின் தொடக்ககாலக் கோவில்கள். பல்லவர் தொடங்கி வைத்த கற்கோவில் முயற்சியை, சோழரும், பாண்டியரும் தொடர்ந்து நிறைவேற்றிப் பரவலாக்கினார். திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் என்னும் சமயக்குரவர் மூவரும் வழிப்பட்ட சிவத்தலங்கள் யாவும் - செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களே என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

வழிகாட்டும் வரலாறு

நாட்டையும் நாட்டின் சமுதாயத்தையும் பற்றி அறிய வேண்டும் என்றால் ஊரையும் ஊரில் உள்ள கோவில்களைப் பற்றி ஆய்வதே முதற்படி. காரணம் இல்லாமல் எந்த ஒன்றும் எழுவதில்லை. காரணத்தை உணர்ந்து கொண்டால், கடந்து காலம் தெளிவாகப் புலப்படும். காரணத்தை அறிவதற்கு முயற்சியும் உழைப்பும் தேவை. கைகூப்பித் தொழுவதற்குப் பழக்கம் மட்டும் போதும். கோவில்களைக் கூர்ந்து நோக்கினால், அவை எத்தனையோ தேவைகளை நிறைவேற்ற எழுந்தவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கோவில்களில் தான் - ஆடலும் பாடலும் அன்றாடம் நிகழ்ந்தன. இசையும் நடனமும் போற்றப்பட்டன. மாலை கட்டுவோரும் மடைப்பள்ளி பணியாற்றுவோரும் அலுவல் பெற்றனர்., உடலுழைப்பாளரும் கலைத்திறனாளரும் ஊழியர் தகுதி பெற்றனர். கோவில் விழாக்களில் சந்தைகள் கூடின. புலமைப் போட்டியும் கலை அரகேற்றமும் நிகழ்ந்தன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள் அணிவகுத்து நின்றன. கோவில் மண்டபங்கள் - அறிவு புகட்டும் பள்ளிகளாய் திகழ்ந்தன; பிணியகற்றும் மருத்துவ மனைகளாய் விளங்கின; ஊர்ச்சிக்கலைப் பேசித்தீர்க்கும் அறமன்றமாகவும் இருந்தன. மக்களின் சமுதாயத் தேவைகள் பலவும் கோவில்கள் மூலமே அந்நாளில் நிறைவேறின. இதனால், கோவில்கள் மீது மக்கள் நம்பிக்கை வளர்ந்தது. மன்னர்களும்த் தலைமை தாங்கியோரும் - இந்த நம்பிக்கை குறைந்து விடாது காப்பதில் விழிப்பாக இருந்தனர்.

உருவம் இல்லை

கோவில்களின் கடந்தகாலச் செய்திகள் பலவும் கேட்பதற்கு வியப்பாய் இருக்கும். அண்மை காலம் வரை - சிற்றூர்க் கோவில்களில் தெய்வங்கள் உருவ ஒழுங்கு இல்லாமல் தான் காட்சியளித்தன. அடி பருத்தும் நுனி சிறுத்தும் இருந்த நீண்ட கற்சிலையைத் திருமால் என்றனர். சிறிதாய் இருப்பதைச் சிவலிங்கம் என்றனர். சிறுத்துத் தட்டையாய் இருப்பதைப் பிள்ளையார் என்றனர். யானை முகமோ வேறு முகமோ எதுவும் இல்லாத பிள்ளையாரே முன்பு இருந்தார்.

 

உருவக் கடவுள்

நடுகல் வழிபாடே - உருவ வழிபாட்டிற்கு அடித்தளம் ஆனது. போரில் இறக்கும் வீரன் நினைவாக, அவன் பெயரும் பெருமையும் எழுதப்பட்ட கல் ஒன்றை நாடுவதே நடுகல் (hero stone).

நடுகற்கள் - உருவம் இல்லாமல் நீண்டு உயர்ந்து நிற்கும்.

பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி

மரல் வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு

அணிமயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து

இனிதுநட் டனரே கல்லும்

நடுகல் பற்றி இளம் பொன் வணிகனார் புறநானூற்றில் இவ்வாறு பாடுகிறார்.

நடுகல் வழிபாடே - உருவ வழிபாடாகவும் குலதெய்வ வழிபாடாகவும் வளர்ந்தது.

பட்டவன், கருப்பண்ணன், சடையப்பன், அண்ணன்மார், வேடியப்பன், எனப் பல்வேறு பெயர்களில் - சிற்றூர் மக்கள் இன்றும் நடுகற்களை வணங்கி வருகின்றனர்.

பழங்காலச் சிறுதெய்வங்களான இவை - தொடக்கத்தில் புத்த, சமண சமயங்களுடன் இணைந்திருந்தன. கொங்கு நாட்டு பெருவழி வணிகம் வீழ்ச்சியடைந்தபின், புத்த, சமண சமயங்களும் செல்வாக்கு இழந்தன. அதன் பின்னும் - சிறு தெய்வவழிபாடு மட்டும் இன்று வரை தொடர்ந்து நிலைபெற்றுள்ளது.

வீரமரணம் அடைந்த வீரர்களை மட்டுமில்லாமல் - விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட நடுகல் நட்டு வழிபட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. (1)

இறந்தோரை வணங்கி வழிபடுவதில் - பத்தினிப் பெண்டிர் இறப்பிற்குச் சிறப்பிடம் இருந்தது.

கணவனுடன் இறந்த பத்தினிப் பெண்களுக்குக் கோவில் எழுப்பி வழிப்படும் வழக்கம் தமிழகத்தில் நீண்ட காலமாய் இருந்து வந்துள்ளது. (2)

ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்

இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த

சுடுமண் ஓங்கிய நெடுநிலை மாடம்

                                                                  (மணிமேகலை., 6:55 – 57)

மணிமேகலை காப்பியத்தில் இடம் பெற்ற இவ்வரிகள் மேற்சொன்ன நிகழ்ச்சியை உறுதிசெய்பவை. வீரமா (ப)த்தி(னி) வழிபாடே இப்போது வீரமாத்தி என வழிபடப்படுகிறது; வீரமாச்சி, வீரமாஸ்தி, வீரமாத்ரே எனப்பல பெயராலும் வழங்கப்படுகிறது.

அழிந்த கடவுள்கள்

பூத தெய்வ வழிபாடும் கண்ணகி வழிபாடும் மறைந்துவிட்டதால் இப்போது அவை கைவிடப்பட்ட கடவுள்களாகிவிட்டன. சங்க காலத்தில் பூத வணக்கம், தெய்வ வழிபாடாக நிகழ்ந்துள்ளது. பூத தெய்வவழிபாடு பிற்காலத்தில் மறைந்துவிட்டது. (3)

திருச்செங்கோடு மலையில் பத்தினித் தெய்வம் கண்ணகிக்கு கொங்கு இளங்கோசர் கோவில் அமைத்தனர்.

கண்ணகி கோவில், தேவார காலத்திலேயே அர்த்த நாரீசுவரர் கோயில் என மாற்றப்பட்ட அவலம் நிகழ்ந்துவிட்டது.(4)

வழிபாட்டு வகை

பெருந்தெய்வ வழிபாடு, இடைத் தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு எனக் கடவுள் வழிபாட்டில் மூவகையுள்ளன.

சிவன், திருமால், பிரம்மன் வழிபாடு பெருந்தெய்வ வழிபாடு. காளியம்மன், மாரியம்மன், அய்யனார் முதலிய வழிபாடு - இடைத் தெய்வ வழிபாடு.

மதுரை வீரன், சுடலை மாடன், வீரமாச்சியம்மன், மீனாட்சியம்மன், பட்டத்தரசியம்மன், அத்தனூரம்மன் என நீளும் வழிபாடு - சிறு தெய்வ வழிபாடு.

காக்கையை முன்னோராகக் கருதுவதும் நம் மக்களின் நம்பிக்கை, படைப்புச் சோற்றை வீட்டுக் கூரைமீது போட்டு, காக்கை உண்டபின்பே உண்ணத் தொடங்குவது இன்றும் தொடரும் வழக்கம். (விருந்தில் நஞ்சு கலந்துள்ளதா என்பதைக் காக்கைக்கு முதலில் வைத்து அறிந்து கொள்வதே இதன் உண்மை நோக்கம்.

புலவர்செந்தலை.கவுதமன்சூலூர் - பாவேந்தர்பேரவைகோவை keetru.com jun 3 2019