யார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன
26 09 2019
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 17 செப்டம்பர் 2019
யார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன
இன்று (திங்கள்கிழமை) பெரியாரின் பிறந்த நாள். கடந்த ஆண்டு பெரியார் சிலை ஒன்று உடைக்கப்பட்டபோது, பெரியாரின் வாழ்க்கை குறித்து பிபிசி தமிழில் வெளியான இந்தக் கட்டுரையை இன்று மறுபிரசுரம் செய்கிறோம்:
பெரியாருக்கு ஏன் இத்தனை சிலைகள்? அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் முரண்படும் பல அமைப்புகள் கூட பெரியாரை ஏற்றுக் கொண்டாடுவது ஏன்? யார் இந்த பெரியார்?திரிபுராவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் தோற்ற நிலையில், அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. அதையடுத்து தமிழ்நாட்டில் பெரியாரின் சிலைகளை அகற்றப்போவதாக பாஜகவினர் ஏன் கோபம் காட்டவேண்டும்?கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதிகள் என்று பல்வேறு நிறங்களும், முழக்கங்களும் உடைய அமைப்புகளும், இயக்கங்களும், தனி நபர்களும் ஏன் பெரியாரைப் போற்றவேண்டும்?ஈரோட்டில் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி-யை மதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கும் எதிராகத் திருப்பியது எது?
விதவை மறுமணம்
குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ நேர்ந்த பல்லாயிரம் பெண்களின் துயரம் அவரை ஆட்கொண்டது.அவ்விதம் குழந்தைப் பிராயத்திலேயே கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர் மறுமணம் செய்வித்தார்.
காசி பயணம்
நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.பிறகு அவர் தமது துறவு எண்ணத்தைக் கைவிட்டு ஊருக்குத் திரும்பினார். இயல்பாகவே இருந்த ஆர்வத்தினால் அவர் பல பொதுப் பணிகளை சொந்த ஊரான ஈரோட்டில் மேற்கொண்டார்.
காங்கிரசில்...
காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார்.விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தாம் வகித்த நகரமன்றத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான பொதுப் பதவிகளைத் துறந்தார்.
- வாழும்போது எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?
- பெரியார் சிலை விவகாரம்: பா.ஜ.கவின் சேதத் தடுப்பு முயற்சிகள் பலனளிக்குமா?
தமது மனைவி நாகம்மையையும், சகோதரி பாலாம்பாளையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தார் பெரியார். அவர்கள் இருவரும் தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர்.கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என்று, தமது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்தார் பெரியார்.
வைக்கம் போராட்டம்
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இந்நிலையில், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் நடமாட தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர்.போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த போராட்டத் தலைவர்கள் பெரியாருக்கு கடிதம் எழுதி போராட்டத்தை தலைமையேற்று நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
- "மக்கள் மனதில் பெரியார் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்"
- சுதந்திரத்திற்கு முன் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாகாணம் எது?
அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெரியார் காந்தியின் அறிவுரையையும் மீறி தமது கட்சிப் பதவியைத் துறந்து திருவிதாங்கூர் விரைந்தார்.திருவிதாங்கூர் மகாராஜா பெரியாரின் நண்பர் என்பதால் அவர் அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார். ஆனால், தாம் அரசை எதிர்த்துப் போராட வந்திருப்பதால் அரசு மரியாதையை ஏற்க முடியாது என்று மறுத்த பெரியார் தொடர்ந்து வைக்கத்தில் போராட்டம் நடத்திக் கைதானார். இதையடுத்து அவரது அவரது மனைவி நாகம்மை பெண்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடர்ந்தார்.போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே அவர் ஊருக்குத் திரும்பினார். இதனால், வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.
காங்கிரசில் இருந்து வெளியேறுதல்
இதனிடையே சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோற்றுப் போனார் பெரியார்.இந்நிலையில், சேரன்மாதேவி என்ற இடத்தில் காங்கிரஸ் மானியத்தில் வ.வே.சுப்ரமணிய ஐயர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலப் பள்ளியில் பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பறிமாறப்படுவதை அவர் எதிர்த்தார்.ஆனால், வ.வே.சு. ஐயர் தமது போக்கை மாற்றிக் கொள்ள மறுத்ததுடன், காங்கிரசும் அந்த பள்ளிக்கான மானியத்தை நிறுத்த மறுத்தது.
இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். வைதீக மதத்தையும், கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். பிராமணர் அல்லாதவர்கள் தம்மையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.இந்த நிலையில், 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்று பரவலாக அறியப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராமணர்கள் ஆரிய இனத்தில் தோன்றியவர்கள் என்றும் பிராமணர் அல்லாதோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வாதிட்ட பெரியார் திராவிடர்களை மானமும் அறிவும் மிக்கவர்களாக மாற்றுவதற்காகத் தாம் பாடுபடுவதாக கூறினார்.
பெண்ணுரிமை
குழந்தை திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, தமது துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒத்துவராத திருமணத்தை முறித்துக் கொள்ளும் உரிமை ஆகியவை வேண்டும் என்று வாதிட்ட பெரியார், பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக இருக்கத் தேவையில்லை என்று வாதிட்டார். அவரது பெண்ணுரிமைக் கருத்துகள் இன்றைய நிலையில் கூட புரட்சிகரமாகத் தோன்றக்கூடியவை.சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர். இந்தியா முழுவதும் ஒரே நாடாக ஆவதை எதிர்த்த அவர் தென்னிந்தியப் பகுதிகள் இணைந்து திராவிட நாடாக ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தார்.
திராவிட நாடு
ஆனால், தமிழ்நாடு தவிர்த்த பிற பகுதிகளில் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கத்தை மாற்றினார்.இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வாதிட்ட, பெண்ணுரிமைக்காக வாதிட்ட, மூடப் பழக்கங்களை எதிர்த்த, மதத்தை எதிர்த்த பெரியார் தமது கருத்துகள் பரவ தமிழ்நாடு முழுவதும் நீண்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டார் அவர்.
பொதுவுடமை ஈடுபாடு
ரஷியாவுக்குப் பயணம் சென்று வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. உலக கம்யூனிஸ்டுகளின் முதல் ஆவணமான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்ற புத்தகத்தை தமிழில் முதன் முதலில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தவர் பெரியார். தமது கருத்துகளைப் பரப்ப 'குடியரசு' முதற்கொண்டு பல பத்திரிகைகளையும் நடத்தியவர் பெரியார்.