திருவள்ளுவர் ஆண்டு வரலாறு

28 02 2020

திருவள்ளுவர் ஆண்டு வரலாறு

தமிழ் வரலாற்றுப் பெருமையைச் சுட்டும் முறையில் தமிழில் தொடர் ஆண்டு மேற்கொள்ளப்படாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.திருவள்ளுவர், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும், அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிற்கு ஆங்கில (கி.பி.) ஆண்டுடன் _ 31அய்க் கூட்ட வேண்டும். இப்போது கி.பி.1999+31=(கி.பி.2030), 2000+31=2031) வரலாற்றுக் கண்கொண்டு, தொன்மையைக் கணக்கிடும்போது கி.மு. ஆண்டு எண்ணில் 31அய் கழித்தால் கி.மு. ஆண்டு பெறப்படும்.

திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் முதல் மாதம் தை (சுறவம்), இறுதி மாதம் மார்கழி (சிலை). புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். வழக்கில் உள்ள ஏழு கிழமைகளும் தமிழ்க் கிழமைகளை கொண்டது. தனித்தமிழில் புதன் கிழமையினை அறிவன் (கிழமை) எனவும், சனிக் கிழமையினைக் (காரி)க்கிழமை எனவும் குறிப்பிடுவார்கள்.திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு அரசு ஏற்று 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட் குறிப்பிலும், 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

திருவள்ளுவர் நாள் வரலாறு

தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் (தை_2) திருவள்ளுவர் நாள் என்றும், அன்று பொது விடுமுறை அளிப்பது என்றும், இது 1.1.1970 முதல் செயல்முறைக்கு வருகிறது என்றும் தமிழக அமைச்சரவை 1969ஆம் ஆண்டு முடிவு செய்தது. இந்த முடிவு அரசு ஆணை எண்:2723 பொதுத் (குடிமைப் பாதுகாப்பு) துறை நாள்: 3.11.1969 மூலமாக வெளியிடப்பெற்றது.

unmaionline.com jan 15 31, 2020