புலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள்

10 12 2015

புலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள்

தமிழ்த் தேசிய அரசியலும், அதன் விடுதலை முனைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை, கோட்பாடு மற்றும் ஆளுமை சார்ந்து வரையறுக்கப்பட்டு மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாகிவிட்டது. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அவர்களின் ஆளுமை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து நீக்கப்படவில்லை. அது, விமர்சனங்களை மீறிய விசுவாசமாகவும் பிணைப்பாகவும் நீடிக்கின்றது. தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆளுமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. அதில், சந்தேகம் கொள்வதற்கு ஏதுமில்லை. ஆனால், அதன் சாத்தியப்பாடுகள் எப்படிப்பட்டது, தற்போதைய அரசியலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள்? என்கிற விடயங்களை கொஞ்சமாக ஆராய்ந்தால் ஓரளவு தெளிவான முடிவுக்கு வரலாம். அது, விமர்சன ரீதியிலானதாகவும் இருக்க வேண்டியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அரங்கிலிருந்த காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலும், அதன் முனைப்பும் ஆயுதப் போராட்டங்களின் வெற்றி தோல்வி சார்ந்தே இறுதி செய்யப்பட்டு வந்தது. அதாவது, இராணுவ ரீதியிலான முடிவுகளே ஆதிக்கம் செலுத்தின. அங்கு, ஜனநாயக அரசியல் முனைப்புக்களுக்கு வாய்ப்புக்கள் காணப்படவில்லை. அது, தமிழ்த் தேசிய அரசியலை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மயப்படுத்துவதிலிருந்து தவிர்த்திருந்தது. இவ்வாறான நிலை, 2000மாம் ஆண்டுக்குப் பின்னரான உலக அரசியல் ஒழுங்கில் பல பின்னடைவுகளை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆயுதப் போராட்டத்தினை அதன் போக்கில் மக்கள் மயப்படுத்துவதும், ஜனநாயக ரீதியிலான அணுகுமுறைகளோடு மக்கள் மயப்படுத்துவதும் ஒன்றுக்கு ஒன்று முரணானது. விடுதலைப் புலிகள் தங்களை அரசியல் ரீதியாக மக்களிடம் கொண்டு செல்ல எடுத்த முனைப்புக்கள் சில தோல்வியில் முடிந்ததற்கும், அதுவே காரணம். ஏனெனில், அரசியல் ரீதியான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை, இராணுவ அணுகுமுறை சார்ந்தே வடிவமைக்கப்பட்டன. அது, மக்களை அரசியல் ரீதியான வெளிப்பாடுகளை குறிப்பிட்டளவு மட்டுறுத்த வைத்தது. அங்கு, உரையாடல்களுக்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை. பெரும்பாலும், விடுதலைப் புலிகள் முன்மொழிந்த இறுதி முடிவொன்றை ஆதரிக்கும் நிலை சார்ந்த அளவுக்கே தமிழ் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தனர். அதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்திலும், அதன் இன்றைய நீட்சியிலும் (கூட) பெரும்பாலும் பிரதிபலிக்கின்றது. அதற்கு இன்னொரு உதாரணம், 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பகிஸ்கரிப்பு.

இறுதி மோதல்களுக்குப் பின்னர் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட்டதுடன், அவர்களின் ஆளுமையை மெல்ல மெல்ல தமிழ் மக்களிடம் இருந்து நீக்கிவிடலாம் என்று அன்றைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் குறிப்பிட்டளவு நம்பியது. அதற்கு, இராணுவ ரீதியிலான அணுகுமுறை- அடக்குமுறை சார்ந்தும் பெரும் முயற்சிகளையும் எடுத்தது. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை.  அப்படியொரு நிலை என்றைக்குமே வெற்றியளிக்காது. மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக பெரும் அர்ப்பணிப்புக்களை வழங்கி விடுதலைப் புலிகளினால் கட்டமைக்கப்பட்ட ஆளுமையை சில காலத்துக்குள் நீக்கிவிடலாம் என்பது அபத்தமானது. ஏனெனில், விடுதலைப் புலிகளின் காலத்துள், அவர்களின் வெற்றி தோல்வி உள்ளிட்ட அனைத்தையும் உள்வாங்கிய மூன்று தலைமுறைகள் தான் இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தீர்மானிக்கும் தரப்பாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இறுதி இரண்டு தலைமுறைகளே இனி வரும் 15 வருடங்களுக்கும் மேலான அரசியல் களத்தினை தீர்மானிக்கும் பெரும் சக்தியாக இருக்கப் போகின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில், புலிகளின் ஆளுமை நீக்கத்தினை செய்வது அவ்வளவு சாத்தியமானது அல்ல. புலிகளின் ஆளுமை என்பது தமிழ்த் தேசிய விடுதலைக்கான அர்ப்பணிப்பு, போராட்டத்தின் மீதான தீர்க்கம் சார்ந்தது. மாறாக, இன்றைய அரசியல் யதார்த்தம் சார்ந்த அணுகுமுறை குறித்தானது அல்ல. புலிகளின் ஆளுமையை இன்றைய உலக அரசியல் ஒழுங்கினை உள்வாங்கி பிரதிபலிக்க வேண்டும். அது, இராஜதந்திர அரசியல் வெற்றிகளை பெற்றுத்தருவதற்கான முனைப்புக்களை விட்டுக் கொடுக்காது நகர்வதாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் பெரும் ஆணையும், கூட்டமைப்புக்குள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களும் புலி நீக்க அரசியலுக்கான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தி விடும் என்கிற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக சில தரப்புக்களினால் முன்வைக்கப்படுகின்றன. அதில், சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்து தேர்தல் அரசியலை தமிழரசுக் கட்சி அணுகினாலும், தன்னுடைய தனித்துவம் சார்ந்து தன்னுடைய நிலைபெறுகை தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற ஆசை அந்தக் கட்சிக்கு உண்டு. அதன் வெளிப்பாடுகளை அந்தக் கட்சியின் தலைவர்கள் கடந்த காலத்தில் முன்வைத்திருக்கின்றார்கள். ஆனால், இன்னொரு யதார்த்தத்தினை அவர்கள் உணராமலும் இல்லை. அதாவது, புலிகள் செலுத்துகின்ற ஆளுமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிகளில் அதிகம் பிரதிபலித்து வந்திருக்கின்றது என்பதுவும், அதனை, நீக்குவதற்கான முனைப்புக்கள் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்கால அரசியலை சிக்கலாக்கிவிடும் என்பதுவுமாகும். தமிழரசுக் கட்சியின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் தம் கட்சி சார்ந்து முனைப்பு பெற வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்துவதற்கான வழிகள் என்பது ஆங்காங்கே புலிகளின் ஆளுமை எனும் வடிவில் அடைக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்துள்ளனர். அப்படிப்பட்ட நிலையில், புலிகள் மீதான அபிமானத்தையும், அதன் சார்பிலான அரசியலையும் தொடர்ந்தும் முன்வைக்கும் அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் போன்றவர்களை சமநிலைப்படுத்தும் தரப்பாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகளை பிரதானமான முன்மொழியும் தரப்புக்கள் என்று தம்மை காட்டிக் கொள்ளும் கட்சிகள் சில தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் எழுச்சிபெற முடியாமல் இருப்பதற்கான காரணத்தினையும், 'புலி நீக்க அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்' என்கிற கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனெனில், மாற்று அரசியல் என்பது விமர்சனங்கள் மற்றும் அபிமானங்கள் சார்ந்து மாத்திரம் வடிவமைக்கப்படுவது இல்லை. அதற்கு, மக்கள் தொடர்பிலான புதிய அணுகுறையும், அரசியல் தீர்க்கதரிசனமும் வேண்டும். புலிகள் மீதான பேரபிமானத்தை வெளியிடும் தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள் உண்டு. அப்படிப்பட்ட நிலையில், புலிகள் மீதான பேரபிமானம் எனும் தொனியில் புலிகளின் பெயரினை வைத்து மாத்திரம் அரசியல் முனைப்பு பெறுவது என்பது ஏமாற்றுவித்தை. அதனை, மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். அதனை, புலிநீக்க அரசியலோடு ஒப்பிடுவது அபத்தமானது. இன்னொரு பக்கம், புலம்பெயர் தேசங்களின் தமிழ் அரசியல் புலிகளின் ஆளுமையை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், புலம்பெயர் தேசங்களின் தமிழ் அரசியலை அந்தந்த நாடுகளின் அரசியலோடு சமாந்தரமாக அணுகும் தலைமுறையே எதிர்வரும் காலத்தில் தீர்மானிக்கப் போகின்றது. அப்படிப்பட்ட நிலையில், புலம்பெயர் தேசங்களின் புலிகளின் ஆளுமையோடு தற்போது ஆதிக்கம் செலுத்தும் தரப்புக்களின் விடைபெறுவதற்கான காலம் நெருங்குகின்றது. இந்த நிலைமை, புலிகளின் ஆளுமையை புலிகள் மீதான அடையாளத்தோடு மாத்திரம் நிறுத்தி வைத்துவிடலாம். அது, அரசியல் ரீதியான விடயங்களில் தாக்கம் செலுத்தும் அளவினைக் குறைக்கும். அந்த நிலை மெல்ல மெல்ல மறைந்து குறியீட்டு வடிவத்தோடு மாத்திரம் நிறுத்தப்பட்டுவிடும் சூழல் உண்டு. அப்போது, தாயகத்துக்கும் புலம்பெயர் தேசங்களுக்குமிடையிலான வேர்- விழுது உறவும், அரசியலும், புலிகளின் ஆளுமையும் விடுபட்டுப் போகலாம். இதனால், புலம்பெயர் ஊடகங்கள், அரசியல் கருத்தியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. அது, குறிப்பிட்டளவில் இரண்டு தளத்திலும் (தாயகம்- புலம்பெயர் தேசங்கள்) பின்னடைவினை ஏற்படுத்தும். அந்தப் புரிதல் அவசியமானது. அது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு அத்தியாவசியமானது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு வடக்குக்குள் மாத்திரம் சுருங்கும் சூழலொன்று குறிப்பிட்டளவு உருவாகியிருக்கின்றது. இது, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலின் அடர்த்தி தொடர்பிலான அக்கறையை குறிப்பிட்டளவு விட்டுக் கொடுத்து விட்டதோ என்று அச்சம் கொள்ள வேண்டியிருக்கின்றது. புலி நீக்க அரசியல் முனைப்புக்களை இனங்கண்டு புறம் தள்ளுதல் என்பது தமிழ்த் தேசியத்தின் நிலப்பரப்புக்கள் சார்ந்து நிலைபெறுவதிலும் தங்கியிருக்கின்றது. அதற்கு, கட்சி சார்ப்பு அரசியலும்- மக்கள் சார்ப்பு அரசியலும் தீர்க்கமாக்கப்பட வேண்டும். அதற்கு, புலிகளின் ஆளுமை பெருமளவு ஊக்கமாக இருக்கும். மாறாக, உரையாடல்கள் அளவில் மாத்திரம் எல்லாவற்றையும் கடத்தல் என்பது தமிழ்த் தேசியத்தின் அத்திவாரத்தினை அசைத்துவிடும். அப்போது, புலிகளின் ஆளுமை மாத்திரமல்ல எல்லாமே காணாமற்போய்விடும். அந்த நிலையை தக்க வைப்பது தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும். அதுவே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அர்ப்பணிப்புக்களுக்கு அர்த்தம் சேர்ப்பதாக இருக்கும்.

tamilmirror.lk09 12 2015