கடினமான நிபந்தனையுடன் அரசாங்கத்துக்கு ஹுசைன் வழங்கிய சலுகை

24 02 2016

கடினமான நிபந்தனையுடன் அரசாங்கத்துக்கு ஹுசைன் வழங்கிய சலுகை

நாம் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இலங்கைக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதியில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் இளவரசர் செய்த் ரஅத் அல் ஹ§சைன் தெரிவித்த கருத்துக்கள் சாதகமானவையாகவும் பாதகமானவையாகவும் இருந்தன. இலங்கையின் நீதித்துறை கடுமையாக அரசியல்மயமாக்கப்பட்ட, நடுநிலைமையற்ற, நம்பகத்தன்மையற்ற ஒன்று என்று அவர் தமது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். இலங்கை பொலிஸார் தொடர்ந்தும் எப்போதும் போலவே வன்முறையை பாவிப்பதாகவும் வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மறுபுறத்தில், நாட்டில் பாரிய மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம், அரசியல் உறுதி பூண்டுள்ளதாக தெரிகிறது என்றும் இலங்கையில் பல சிறந்த நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் சட்டத்தை அமுலாக்குவோரும் இருப்பதாகவும் அவர் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, பொறுப்புக் கூறல் விடயமும் அதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதும் இலங்கை அரசாங்கத்தின் இறையான்மைக்குட்பட்ட உரிமையாகும் என்றும் அவர் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தபோது, அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்தை நிராகரித்தார். அரசியல் கைதிகள் நீதித்துறையூடாகவே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அல் ஹுசைன் கூறினார். ஆனால், அந்த நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். ஹுசைன், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தெரிவித்த கருத்துக்களில் நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டது போன்ற சிலவற்றை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் போது சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள். சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டுமா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பபு வழங்கக் கூடாது என்பதைப் போன்ற கருத்துக்களை தமிழர்கள் எதிர்கின்றார்கள். வழமைப் போல் ஊடகங்களும் அவரது கருத்துக்களில் தத்தமது இரசனைக்கு ஏற்றவைக்கு முக்கியத்துவம் அளித்தே செய்தி வெளியிட்டு இருந்தன. உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சில பத்திரிகைகள், இளவரசர் ஹுசைன் கூறியவற்றில் சிங்கள மக்கள் விரும்பாதவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தன.

கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்களுக்கு முரணாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்த நிலையில், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் வருகைக்கு மேலதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருந்தது. பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில வெளிநாட்டவர் தலையிடுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேஷய நடத்திய பேட்டியொன்றின் போது ஜனாதிபதி கூறியிருந்தார். பொறுப்புக் கூறலுக்கான உள்ளூர் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளடங்குவர் என மேற்படி பிரேரணையில் கூறப்பட்டது. எனவே, ஐ.நா. உயர் அதிகாரி இலங்கையில் வைத்தே ஜனாதிபதியின் அக்கருத்தை நிராகரிப்பார் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு நினைத்த பல அரசியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கி மஹிந்த தலைமையிலான எதிர்க் கட்சிக் குழுவை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இளவரசர் ஹுசைன், ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொண்டதை போன்றதோர் அபிப்பிராயத்தை கொடுத்தார்.

'மனித உரிமைகள் விடயத்தில் தமது பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிச் செல்லுமோ என தாம் அஞ்சுவதாக வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பலரும் சில அரசியல் ஆய்வாளர்களும் என்னிடம் கூறினர்' என ஜனாதிபதியின் கருத்தை சூசகமாக சுட்டிக் காட்டுவதைப் போல் அவர், அந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறினார். அத்தோடு, அரசாங்கத்தை சமாதானப்படுத்தும் தொனியிலும் இராஜதந்திர தெளிவற்றச் பேச்சிலும் 'ஜனாதிபதியும் பிரதமரும் இவ் விடயத்தில் தமது உறுதிப்பாட்டை நேற்றுக் காலை மீண்டும் என்னிடம் வலியுறுத்தினர்' என்றார். அதாவது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை வலியுறுத்திய கடந்த வருட ஜெனிவா பிரேரணையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டாரா? அதனைத் தான் அவர் கூறினார் என்று வைத்துக் கொண்டாலும் அத்தோடு, அல் ஹுசைன் இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் எதிர்ப்பாராத மாபெரும் சலுகையை வழங்கினார். 'போர் குற்றங்களைப் பற்றிய நீதித்துறை பொறிமுறை தொடர்பாகவோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாகவோ மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகம், பரிந்துரை செய்தாலும் முடிவெடுப்பது இலங்கையின் இறையான்மைக்குரிய உரிமை' என்றார் இளவரசர் ஹுசைன்.

அரசாங்கத்தின் எதிரிகளும் சில தமிழ் குழுக்களும் எவ்வாறு இந்த சலுகையை வரைவிலக்கணம் செய்தாலும் கடந்த வருடம் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையோடும் அதனை அடுத்து, மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையோடும் ஒப்பிடும் போது இது அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட பெரும் சலுகை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முன்னாள் மனித உரிமை உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, தமது பதவிக் காலத்தின் இறுதியில் 2014ஆம் ஆண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு உத்தரவிட்டு இருந்தார். அதன் அறிக்கையை இளவரசர் ஹுசைனே கடந்த வருடம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்தார். நடத்தப்பட்டது மனித உரிமை தொடர்பான பொது விசாரணையேயன்றி மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான குற்றவியல் விசாரணையல்ல என தெரிவித்த ஹுசைன், அரச படைகளும் புலிகளும் பொதுவாக மீறிய மனித உரிமைகளையும் அதில் பட்டியல் போட்டு இருந்தார்.

அத்தோடு, அந்த மனித உரிமை மீறல்களை தனித்தனி சம்பவங்களாக விசாரணை செய்யும் குற்றவியல் விசாரணைகளுக்கான பொறிமுறையொன்றை அவர் அந்த அறிக்கையின் மூலம் பரிந்துரை செய்தார். இலங்கையின் நீதித்துறை வரலாறு முழுவதிலும் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள தவறியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த குற்றவியல் விசாரணைக்காக உள்நாட்டு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் (ர்லடிசனை உழரசவ) ஒன்றையே பரிந்துரை செய்திருந்தார். அது இலங்கையின் அரசியலமைப்புக்குட்பட்ட விசாரணையாகாது. அதனை அடுத்து, அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கை தொடர்பான நான்காவது பிரேரணையை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தன. அப்போது அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, அந்த கலப்பு நீதிமன்ற யோசனையை வெளிநாட்டு நீதிபதிகளும் கலந்து கொள்ளும் உள்நாட்டு விசாரணையாக மற்றிக் கொண்டு தாமும் பிரேரணைக்கு அனுசரணை வழங்க முன்வந்தது. அந்த நீதிமன்றம் இலங்கையின் அரசியலமைப்புக்குட்பட்டதாகவே நிறுவப்படும்.

அந்த நிலையிலேயே, இலங்கைக்கு விஜயம் செய்த மனித உரிமை உயர் ஸ்தானிகர் அந்த உள்நாட்டு விசாரணையிலும் வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டுமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என் இப்போது கூறுகின்றார். அதாவது, இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்படாத கலப்பு நீதிமன்றம் நியமிக்கப்படவிருந்த நிலையில், அது அரசியலமைப்புக்கு உட்பட்டு வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்ளும் உள்நாட்டு நீதிமன்றமாக மாறியது. இப்போது, வெளிநாட்டு நீதிபதிகளை ஐ.நா. வலியுறுத்துவதில்லை. 'நாம் எமது புறத்திலிருந்து எவ்வாறு பார்த்தாலும் முடிவு எடுப்பதானது உங்கள் இறையாண்மைக்கான உரிமையாகும்' என்றே அவர் கூறினார். அதனை ஹுசைன், தமது பத்திரிகையாளர் மாநாட்டின் போது பல்வேறு விதமாக விவரித்தார். அவரது உரையில் எவ்விடத்திலும் வெளிநாட்டு நிதிபதிகளைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அத்தோடு, அவர் பல தமிழ் குழுக்களின் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 'சர்வதேச விசாரணையொன்று விதிக்கப்படவில்லை. நடவடிக்கை இலங்கை நடவடிக்கையாகப் போகிறது' என்றார் அவர்.

இது இலங்கை அரசாங்கத்துக்கு வெகுவாக சாதகமான நிலைமையாகும். அதேவேளை, இது ஐ.நா. அதிகாரிகளுடன் மோதும் மஹிந்தவின் அரசாங்கத்தின் கொள்கையை தற்போதைய அரசாங்கம் கைவிட்டதன் பயனாகும். அதற்கு முன்னர் ஹுசைன், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது என்று கூறியதையும் இதனோடு சேர்த்துக் கொள்ளும் போது புதிய அரசாங்கம், சர்வதேச ரீதியில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுள்ளமை தெளிவாக தெரிகிறது. ஆனால், வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான விடயத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் கூறிய போதிலும் அவர் அதனோடு ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளார். 'சர்வதேச சட்ட அதிகாரத்தின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என நாம் நினைத்தோம். ஆனால், இப்போது வேறு பல கருத்துக்களும் இருக்கலாம். நிச்சயமாக பாதிக்கப்பட்டோரின் கருத்துக்கள் கலந்துரையாடலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.' என்பதே அவரது நிபந்தனையாகும். மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கூறினார்.' முக்கியமாவது என்வென்றால் இறுதியில் பாதிக்கப்படடோருக்கு நீதி வழஙகப்பட வேண்டும் என்பதே. அதற்காக இலங்கையில் பேச்சுவார்த்தை முக்கியமானதாகும்.'

அதாவது, வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டுமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால், பாதிக்கப்பட்டோரின் கருத்துக்கள் கலந்துரையாடலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்படடோருக்கு நீதி வழங்குவதற்காக பேச்சுவார்த்தை முக்கியமானதாகும். போரினால் பாதிக்கப்பட்டோர் யார்? தென் பகுதியில் அக்குரஸ்ஸையில் உள்ளவர்களும் போரினால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இங்கு அவர்கள் குறிப்பிடப்படவில்லை. இது போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையே குறிக்கிறது. அவர்களது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று ஹுசைன் கூறினார் என்றே மொத்தத்தில் நாம் அவரது செய்தியாளர் மாநாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக

தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பது யார் என்பது அடுத்த கேள்வியாகும். நிச்சயமாக அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும். அக் கூட்டமைப்பு, ஹுசைனை சந்தித்த போது வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளிட்ட ஜெனிவா பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினாலும் அது கடுமையான நிபந்தனையுடன் வழங்கப்பட்ட சலுகையாகவே தெரிகிறது. தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சுமூக உறவைக் கொண்டிருந்த போதிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ்த் தேசியப் பேரவையின் அழுத்தத்தின் காரணமாக கூட்டமைப்புக்கு தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது. எனவே இளவரசர் ஹுசைன், சலுகை வழங்கினாலும் அது கடினமான நிபந்தனையுடனான சலுகையாகவே இருக்கிறது

tamilmirror.lk 22 02 2016