இனவாத தேசியத்துவத்தை அரசியல் உபாயமாக இடைவிடாது பயன்படுத்தும் எதிரணி முயற்சிகள்

28 02 2016

இனவாத தேசியத்துவத்தை அரசியல் உபாயமாக இடைவிடாது பயன்படுத்தும் எதிரணி முயற்சிகள்

தைப்பொங்கல் திருநாளன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் சகிதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டமை அரசாங்கம் வட பகுதி அரசியலில் சிறப்பு கவனம் செலுத்துகின்றமைக்கானதோர் அறிகுறியாகும். இதுவரை காலமும் இடம்பெற்றிராத வகையில் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் அடிக்கடி வட பகுதிக்குச் சென்று வருகின்றனர். யுத்த காலக் கட்டத்தில் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களினால் தாக்குதல்களுக்கு உட்படலாம் என்பதால் அரசாங்கத் தலைவர்களுக்கு வட பகுதிக்குச் சென்றுவருவது ஆபத்தானதாக இருந்தது. யுத்தத்திற்கு முன்னரும் கூட அரசாங்கத் தலைவர்கள் தரப்பில் வட பகுதி சென்றுவர தயக்கங்கள் காணப்பட்டே வந்தன.

அக் காலப் பகுதியில் அரசாங்கத் தலைவர்கள் வட பகுதி சென்றுவரக் கிடைத்த சந்தர்ப்பங்களை அற்பமான வகையில் தவிர்த்து வந்தமை பற்றி இற்றைக்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்க அதிகாரியாக வட பகுதியில் பணியாற்றிய கால தனது நினைவுகள் பற்றி எழுதிய போது குதவில் ஜயவீர குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவற்றிற்கு மாறாக ஜனாதிபதி சிறிசேனவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் வடபகுதிக்கும் அடிக்கடி சென்று வருகின்றனர். இருந்தபோதிலும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய அமைச்சர் ஹியூகோ போன்றோரது முன்னிலையில் வட மாகாண முதலமைச்சர் நாட்டு நிலைமைகள் பற்றி கருத்துரை கூறிய போது முற்றிலும் தீவிரமான விமர்சகராக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினர் வட பகுதியில் இன்னும் குடிகொண்டிருப்பது வழமை வாழ்க்கைக்கு பாதகமானது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவம் சுவீகரித்துக் கொண்ட பொது மக்களது நிலங்கள் போதியளவில் திருப்தியளிக்காதிருப்பது பற்றியும் பயங்கரவாத தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படாதிருப்பது பற்றியும் கூட தனது அதிருப்தியை எடுத்துக் கூறத் தவறவில்லை. மத்திய அரசாங்கம் வட மாகாண சபையின் அலுவல்களில் அரசாங்கம் தலையிடுவது பற்றியும் அரச நிறுவனங்கள் தனக்கு எழுதும் கடிதங்களை இன்னும் சிங்களத்தில் மாத்திரமே எழுதுவதாகவும் கவலை தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வரும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதில் மெதுவான மேம்பாடுகளே காணப்படுவதால் அவற்றைப் பற்றி பலதரப்பட்ட அரசியல் வாதிகளும் சிவில், சமூக ஆர்வலர்களும் கடுமையான தொனிகளில் விமர்சித்து வருகின்றனர் என்றும் கூறினார்.

அரசாங்கம் விரைவாகவும் முழுமையான வகையிலும் களநிலையில் தமிழ் மக்களது மனக்குறைகளை தணிக்கவும் அவை தொடர்பிலான ஆர்வம் காரணமாக அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்திக்கும் நோக்கத்துடனும் தமது நல்லெண்ணங்களை எடுத்துக்காட்ட அடையாள நடவடிக்கையாக தைப்பொங்கல் நிகழ்ச்சி போன்றவற்றில் ( அரசாங்க உயர்மட்ட தலைவர்கள் ) கலந்து கொண்டு வருவதாக தெரிகிறது. அதுபோன்றே வட பகுதி மக்களுடன் நல்லிணக்கம் கொள்வதில் உள்ள தமது அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் இன்றைய ஜனாதிபதி 2005 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்திக்கான அமைச்சராயிருந்த போது முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் சிவராஜா ஜெனிபன் அவரை கொலை செய்ய முயன்றமைக்காக குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை மன்னித்து விடுதலை செய்திருக்கிறார். குற்றஞ் செய்தவர்களுக்கு எத்தனை வருடங்களின் பின்னரும் தண்டனை வழங்க அரசாங்கத்திற்கு அதிகாரமிருந்த போதிலும் இனிமேலும் அச்சுறுத்தல் தொடரப்போவதில்லை என்பது உறுதியாகியிருக்குமானால் அவ்வாறாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து வரையறையில்லாது தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வளர்ந்து செல்லும் பொறுமையின்மை

குற்றச்சாட்டுகள் ஏதுமின்றியும் விசாரணைகளை மேற்கொள்ளாதும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட இருநூறுக்கு மேற்பட்டவர்களை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பது தொடர்பில் கடந்த சில வருடங்களாக பெரும் முரண்பாடான கருத்துகள் நிலவி வருகின்றன. அவர்களை முறையான சட்ட விசாரணைகளுக்குட்படுத்தி குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டிக்கலாம். இல்லாவிடில் இனியும் தாமதிக்காது விடுவிக்க வேண்டும். இது அரசியல் பிரச்சினை மாத்திரமல்ல. ஆனால், பல குடும்பங்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்ததாகும். அவர்களால் தமது உறவினர்களுக்கு நடப்பது என்ன என்ற ஒரு முடிவுக்கு வர முடியாது நொந்து போயுள்ளனர். காணாதிருக்கும் மற்றும் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது பெரும் வேதனையுடன் வாழும் குடும்பத்தவர்கள் பல முன்னாள் யுத்த களப் பகுதிகளில் ஒரு பெரும் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானவர்களது வழக்குகளை விரைவாக செய்து முடிக்க அரசாங்கம் அர்த்தமிக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுண்டு. அவ்வாறு செய்வதன் மூலம் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் காணாதிருக்கும் நபர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் தமது குடும்ப வாழ்வை மீளக் கட்டியெழுப்பிக் கொள்ள முடிவதுடன் நல்லாட்சி அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டதாகவும் அர்த்தமிக்கதாகவும் அரசாங்கம் செயற்படுவது தெரியவரும்.

அரசாங்கம் கடந்த காலம் நோக்கி பின் நோக்கிச் செல்கின்றது என்பது பிரதான முறைப்பாடல்ல. ஆனால் அது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி அதன்மூலம் மக்களுக்கு நன்மைகளையும் நலன்களையும் வழங்குவதற்கு தாமதமாகி வருகின்றது என்பதாகும். எவ்வாறாயினும் இம் மனக்குறைகள் வட பகுதிக்கு மட்டுமோ அல்லது தமிழ் மக்களுக்கோ மாத்திரம் ஏற்புடையதல்ல. அவர்களே தமது மனக்குறைகளை எடுத்துக் கூறி தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தாமதமாவது பற்றிய அரசாங்கத்தின் குறைபாடு பற்றி முறைப்பாடு செய்து வருகின்றனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தாமதமாவது பற்றிய மனக்குறை இதைவிட இன்னும் பரந்தளவினதாகும். நல்லாட்சி மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகியவற்றை வழங்கப் போவதாக கூறப்பட்ட உறுதிமொழிகளை நம்பி வாக்களித்த முழு நாட்டு மக்களும் இது குறித்து அதிருப்தியுடனேயே காணப்படுகின்றனர். ஊழல்களில் ஈடுபட்டவர்களையும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் விரைவாக விசாரித்து சிறையிலடைக்காமல் இருப்பது அரசாங்கத்தின் பலவீனமாக கருதுவதுடன் இக் குற்றவாளிகள் மீண்டும் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களையே செய்வர் என்ற விசனத்திலும் காணப்படுகின்றனர். இன்னுமோர் தரப்பினர் ஆனால், மிகப் பெரும்பாலானவர்கள் தமது வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வறுமை வட்டத்திலிருந்து வெளிவரவேண்டும் என்ற அபிலாஷையுடன் வாழ்பவர்கள். இப்பிரிவினர் அரசாங்கம் பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்தி தமக்கு சுபீட்சத்தை காட்டவில்லை என்ற பெருங்குறையுடன் காணப்படுகின்றனர்.

இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தனது பயணத்தின் இறுதி நாளான மூன்றாம் நாள் ஊடகங்களுக்கு அளித்த செய்தியில் ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான பேரவை ஜெனீவாவில் செய்துள்ள தீர்மானத்தின்படி அப்போது எழுப்பப்பட்ட பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தான் இதுவரை அடைந்த பெறுபேறுகள் பற்றி இவ்வருடம் ஜூன் மாதம் வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றி சம்பந்தப்பட்ட சர்வதேச சமூக தரப்பினர் அக்கறையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளமை முக்கியமானதாகும். அரசாங்கம் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை செய்து முடிப்பதற்காக பல பிரேரணைகளை மேற்கொண்டு பொறிமுறையினை திருப்திப்படுத்த முயற்சி செய்துவருவதாகக் கூறியது. அவை இலங்கைச் செய்முறையாக சர்வதேச ஆக்கக் கூறுகளையும் கொண்டதாக இருந்த போதிலும் அவை பற்றி தெளிவாக கலந்துரையாடிப் பார்க்கப்படல் வேண்டும். அவை இலங்கை மீது திணிக்கப்பட்ட சர்வதேச முறைமையல்ல'. சர்வதேச முறைமையின் பொறிமுறைக்கு முக்கியத்துவம் தராத வகையில் அரசாங்கத்திற்கு ( உள்நாட்டில் ) அனுகூலமாயிருக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கைக்குள் கிளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் யுத்தம் பற்றிய பிரச்சினைகள் பற்றி பதிலளிக்க வேண்டியிருப்பதனை அசட்டை செய்யவும் முடியாது.

பிரதான பாதுகாப்பு

நாட்டில் சடுதியாக "சிங்க லே ' பற்றிய விளம்பரத் தட்டிகள் ( போஸ்டர்கள்), ஸ்டிக்கர்கள் என்பன பொது இடங்களிலும் பஸ்கள் மற்றும் மூன்று சக்கர (ஆட்டோ) வண்டிகள், தனியார் வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ளமை காரணமாக அவை தேசியத்துவ உணர்வலைகளை உசுப்பிவிட்டு சுரண்டும் அரசியல் பிரசார ஏற்பாடாயிருக்கலாம் என்ற அனுமானத்தை ஏற்படுத்தியுள்ளது. "சிங்க லே' என்னும் சொல் நாடு குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த கால கட்டத்தில் குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டின் போது குடியேற்ற ஆட்சிக்கு உட்படாதிருந்த சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுச் செய்திகளின் மூலம் தெரிய வருகிறது. எவ்வாறாயினும் இப்போது சிங்கள இரத்தம் என கருத்தைக் கூறும் வகையில் சிங்க லே ( சிங்க இரத்தம்) என்றும் அதில் இரண்டாவது பகுதியில் சிவப்பு நிறத்தை ( இரத்தச் சொட்டை) காட்டும் வகையிலும் வரையப்பட்டு காணப்படுகிறது.

இது சிறுபான்மையின சமயப் பிரிவினரது உடைமைகளில் வரையப்பட்டு , ஒட்டப்பட்டிருப்பது என்பது வெறுப்பேற்படுத்தும் பேச்சுகள் என்னும் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட சட்டத்தினை எமக்கு நினைவூட்டுகின்றது. இச் சட்டத்தை அங்கீகரித்து ஏற்று இலங்கை அரசாங்கமும் கையெழுத்திட்டுள்ளமை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியதொன்றாகும். இந்த "சிங்க லே' பிரசாரத்திலிருந்து அது அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்களால் மீறப்படுவதால் இது தொடர்பில் ஒரு புதிய சட்டம் நாட்டிற்குள் தேவைப்படுகின்றது என்பதனையே அது நினைவுபடுத்துகின்றது. எனவே தான் சட்டங்களை மீறுபவர்களை மட்டுப்படுத்த குறிப்பிட்ட சில சட்டங்கள் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இனத்துவ ( வாத) தேசியத்துவ வாதம் உச்ச நிலையிலிருந்த 2015 ஆம் ஆண்டுக்கு சற்று முந்திய காலப் பகுதிகளில் தீவிரமான இனவாத பிரசாரங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக அதுவும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. சில சந்தர்ப்பங்களில் மோசமான வன்முறைகள் இடம்பெற்று நகரங்களின் சில பகுதிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருந்தன.

இப் பிரசார நடவடிக்கை பௌத்த பிக்குவான பொதுபல சேனா இயக்கத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் அரசாங்கத்தினால் ஆதரிக்கப்பட்டு குற்றஞ் செய்தாலும் தண்டிக்காது பாதுகாக்கப்பட உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தவருமானவரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. வெறுப்பேற்படுத்தும் உரை ( பேச்சு) என்பது கேட்போரை இன, நிறம், சமயம், தேசிய அடையாளம், பலவீனம், ஊனப்பட்டிருத்தல் அல்லது ஏனைய பண்புகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டி அச்சுறுத்தலுக்கு ஆளாக்கவும் அல்லது குழுக்களை அவமதிப்பதும் மனதை புண்படுத்தி வெறுப்படையச் செய்வதும் என்பவற்றை உள்ளடக்கிய நடத்தையாகும். எவ்வாறாயினும் இனவாதமோ அல்லது சகிப்புத்தன்மை இன்மையோ அதுவும் இரத்தத்தின் அடிப்படையில் இனங்காணப்படல் போன்றவை பௌத்த பண்பாடும் ஆகாது. எனவே,"சிங்க லே' பிரசாரத்தை ஊக்குவிக்கும் சக்தி கட்சிசார் அரசியலுக்கு குறுகிய இனத்துவ தேசியத்துவத்தினை அனுகூலமாக்குவதற்கான முயற்சியே இது என்பது தெரியவருகிறது. இவற்றிலிருந்து எதிரணியின் ஒரு பகுதியினர் சிங்கள தேசியத்துவ சக்திகளை தமக்கு ஆதரவாக அணிதிரட்ட பயன்படுத்துகின்றனர் என்பது நன்கு தெளிவாகிறது. இதற்கு இத் தரப்பு பயன்படுத்தும் இன்னுமோர் ஆயுதம் தான் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபையின் தீர்மானம் என்னும் உருவில் இலங்கை மக்கள் பயங்கரவாதத்தை வென்று சுதந்திரமடைந்தமைக்கு எதிரான சதித் திட்டம் என்ற திரிபுவாதமாகும். எவ்வாறாயினும் அரசாங்கம் மெதுவாகவே தனது உறுதிமொழிகளை நிறைவேற்றி வருகின்றது என்றும் எதிரணியினர் இனவாத தேசியத்துவத்தையும் வெறுப்பேற்படுத்தும் பேச்சுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டாலும் அரசாங்கத்தின் அதிகாரம் உறுதியாகவே இருந்து வருகிறது.

பாராளுமன்றத்தில் இந்த எதிரணியினருக்கு சார்பான பிரதிநிதிகளின் எண்ணிக்கை போதாது மற்றும் இவ்வெதிரணித் தலைவர்கள் முன்னர் ஆட்சியில் இருந்தபோது செய்த காரியங்களால் மக்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனம், தமது ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றால் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை என்பவற்றால் பலமிழந்ததாகவே காணப்படுகிறது. பிரதம மந்திரி விக்கிரம சிங்கவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி சிறிசேன தலைமையில் இயங்கும் இலங்கை சுதந்திரக் கட்சியும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இப்போது செயற்படுவது போன்று இணைந்ததாக தொடர்ந்தும் பணியாற்றி வந்தால் எதிரணியினால் எதுவித அச்சுறுத்தலையும் அரசாங்கத்தின் மீது ஏற்படுத்த முடியாது என்பதே இன்றைய அரசியல் நிலைவரமாகும்.

thinakkural.lk 12 02 2016