உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் ஜெனீவா செல்வது தொடர்பில் இன்னும் முடிவில்லை; அனந்தி சசிதரன் -

Thinakural.lk 06 02 2014

உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் ஜெனீவா செல்வது தொடர்பில் இன்னும் முடிவில்லை; அனந்தி சசிதரன் -

பல்வேறுவிதமான உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச் செல்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் நாட்கள் இருப்பதனால் தற்போது இதுபற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

வியாழக்கிழமை காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் கூறுகையில் ; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன், அண்மையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடருக்குச் செல்ல வேண்டும் என்ற பிரேரணையினை வடமாகாண சபை அமர்வில் முன்வைத்திருந்தேன். அப்போது அப்பிரேரணை தனி நபருடைய விருப்பு , வெறுப்பு என்று சபாநாயகர் தெரிவித்ததையடுத்து முதலமைச்சர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதாவது போரினால் பாதிக்கப்பட்டவர் என்ற வகையிலும் காணாமல் போனவர்களுடைய உறவினர் என்ற வகையிலும் வடமாகாணத்தில் இருந்து அனந்தியை ஜெனீவாவுக்கு அனுப்புவது பொருத்தம் என்று கூறினார். அது பெரிய செய்தியாக வெளிவந்தது. அந்தச் செய்தி வெளிவந்ததையடுத்து பெரும் உயிர் அச்சுறுத்தலை நான் சந்திக்க நேரிட்டது.

பொதுவாக நான் வடமாகாண சபை வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறுவிதமான உயிர் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டிருக்கின்றேன். அவ்வச்சுறுத்தல்கள் இன்றுவரைக்கும் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் சாதாரணமாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றேன். இதனால் இன்றுவரைக்கும் ஜெனீவா செல்வது தொடர்பான முடிவு எதனையும் நான் எடுக்கவில்லை. காலத்திற்கு ஏற்றவாறு முடிவுகள் எடுப்பேன் என்றார். -