இனவாதப் 'பிசாசுகளை' விரட்டுவதே இன்றைய தேவை; ஜனாதிபதியும் பிரதமரும் திடசங்கற்பத்துடன் செயற்படுவது அவசியம்

05 06 2016

இனவாதப் 'பிசாசுகளை' விரட்டுவதே இன்றைய தேவை; ஜனாதிபதியும் பிரதமரும் திடசங்கற்பத்துடன் செயற்படுவது அவசியம்

யுத்த வெற்றியை இன, மத வித்தியாசம் பாராது எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று"மெகாலோ பொலிஸ்' மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க பின்வருமாறு கூறி தமிழ் மக்களே எல்லோரைக் காட்டிலும் வெகு சந்தோசமாகக் கொண்டாட வேண்டுமென்று பின்வருமாறு கூறியுள்ளார்: "இன்று மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தையிட்டு அவர்கள் நன்றியுடையவர்களாயிருத்தல் வேண்டும். இன, மத வேறுபாடின்றி நாம் எல்லோரும் யுத்த வெற்றியைக் கொண்டாட வேண்டும். தமிழ் மக்கள் கூட இந்த வெற்றிக்கனியை அனுபவித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் வெறுப்போ, கசப்புணர்வோ அடையாமல் வாழலாம்.

யுத்த காலத்தில் தமிழ் மக்கள் படுமோசமாக பாதிக்கப்பட்டவர்களாகையால் இப்போது நாட்டில் சமாதானம் நிலவுகின்ற படியால் அவர்கள் தான் வேறு எவர்களைக் காட்டிலும் மிகச் சந்தோசமடைய வேண்டியவர்களாவர். சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடுகின்ற படியால் அவர்கள் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் மற்றும் துன்பதுயரங்கள் பற்றி அசட்டையாய் இருக்கவில்லை. மாறாக, நாட்டு மக்களாகிய நாம் எல்லோரும் தொடர்ந்தும் அச்சத்தோடு வாழ வேண்டியதில்லை என்ற நிம்மதி கிடைத்துள்ளதை நினைத்து சந்தோசமடையலாம். தமிழ் மக்கள் நாடு சுதந்திரமடைந்த நாள் முதல் ஆளாக்கப்பட்ட அடக்கு முறைகள் அழித்தொழிப்புக்கள் அதாவது, குறிப்பாக 1958 இல், 1977 இல், 1983இல் அவர்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள் உள்ளிட்ட உயிர், உடைமை அழிப்புக்கள் கொஞ்சநஞ்சமல்ல. 30 வருட காலமாக தமிழர் முன்னெடுத்து வந்த சாத்வீகப் போராட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டு, தமிழ்த் தலைவர்கள் கூட களத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டது மட்டுமல்லாமல் பனாகொடை போன்ற இராணுவ முகாம்களில் அடைத்தும் வைக்கப்பட்டனர். 1961 இல் யாழ். கச்சேரி முன்றிலில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் பொலிஸாரால் அடித்து நொருக்கப்பட்டதோடு, முதன் முதலாக சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் வடக்குக்கு இராணுவம் அனுப்பப்பட்டது.

1958 இல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் எத்துணை மோசமான தென்பதையும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பிரிந்து செல்லும் தருணம் வந்து விட்டதா என எண்ணத் தோன்றுகின்றது என்று "அவசரகாலம் "58 இலங்கை இனக் கலவரத்தின் பதிவு“ என்ற நூலில் அன்றைய ஊடகத்துறை ஜாம்பவான் காசி வித்தாச்சி கூறிவைத்ததையும் மக்கள் அறிவார்கள். 1958 இல் பிரதமர் பண்டாரநாயக்காவுடனும் பின்பு 1965 இல் பிரதமர் டட்லி சேனநாயக்காவுடனும் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மேற்படி இரு பிரதமர்களாலும் ஏறத்தாழ அவற்றின் மை காய முன்னரே ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறியப்பட்டன. அவ்விரு ஒப்பந்தங்களில் ஒன்றாவது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், ஒரு பிரபாகரன் தோற்றம் பெறுவதற்கோ, முழுநாட்டையும் உலுக்கிய யுத்தத்துக்கே இடமிருந்திருக்காது. இது இன்றைய மைத்திரிபால ரணில் அரசாங்கத்தாலேயே உணரப்படுவதைக் காண முடிகிறது.

ஜயவர்தன ஆட்சியில் நடந்தது என்ன?

1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன பதவியேற்று 2 மாத காலத்தில் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்ற கோசமெழுப்பியதோடு, தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் 1958 இல் முடுக்கிவிட்ட கலவரத்தை விட மோசமானதாயிருந்தது. அன்றைய சில அமைச்சர்களே அதனை முன்னின்று அரங்கேற்றியவர்கள் என்ற வரலாற்றுப் பதிவு உண்டு. அன்றைய காலகட்டத்தில்தான் தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டம் துளிர் விடத் தொடங்கியது. எனவே, நாடு சுதந்திரமடைந்து 30 வருட கால சாத்வீகப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, 1976 ல் "வட்டுக் கோட்டை தீர்மானம்' மற்றும் ஆயுதப் போராட்ட முனைப்பு தோற்றம் பெற்றது என்பதை எந்த ஒரு அரசாங்கமோ கிஞ்சித்தும் கணக்கில் எடுக்காதது மட்டுமல்லாமல், தென்னிலங்கையில் விசமத்தனமான இனவாதப் பிரசாரம் செய்து மக்களைத் திசை திருப்பிய வண்ணம் தேசத்துரோக பாணியில் காய்கள் நகர்த்தப்பட்டு வந்தன. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் உள்ள சில தவறுகள் ஒருபுறமிருக்க, அத்தீர்மானம்தான் பிரச்சினையின் ஆரம்மாயிருந்ததாக பல தென்னிலங்கை சார்ந்த அரசியல் விமர்சகர்கள், (உதாரணமாக உலகறிந்த ஊடகவியலாளர் எச்.எல்.டி. மகிந்தபால) ஒன்றுக்குப் பல தடவைகள் தீவிரமான பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

யாழ். நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது எதற்காக?

1981 இல் அரும் பெரும் பொக்கிஷமான யாழ். நூலகம் அரச தரப்பினரால் தீ மூட்டிச் சாம்பலாக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தல் நடைபெறவிருந்த சமயத்தில், யாழ்ப்பாணத்தில முகாமிட்டிருந்த ஒரு சில அமைச்சர்களின் கைவண்ணமாகவே இந்த கைங்கரியம் நடந்தேறியது அன்று பகிரங்க இரகசியமாயிருந்தது. எனவே, தமிழரை அடக்கியாள்வதிலும் பல்வேறு வழிகளில் பொருளாதார, சமூக, கலாசார துறைகளில் அழித்தொழிப்பதற்கும் வெகு காட்டுமிராண்டித் தனமாகச் செயற்பட்டு வந்தனர். அடுத்து, 1983 இல் கறுப்பு ஜூலை என்று வர்ணிக்கப்பட்டதாகிய படுமோசமான இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்தே, யுத்தம் வெடிக்கத் துவங்கியது. கூடவே தனிநாட்டுக் கோரிக்கையும் மேலெழத் தொடங்கியது. 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் மேற்குறித்த இரு ஒப்பந்தங்களும் இரு பெரிய ஆளும் கட்சிகளின் தலைவர்களால் பேரினவாத சக்திகளுக்கு அடிபணிந்து கிழித்தெறியப்பட்டதன் காரணமாகவே யுத்தத்துக்கு வழிசமைக்கப்பட்டது. அத்தோடு தனிநாட்டுக் கோரிக்கையும் வலுப்பெற்றது.

தனிநாட்டுக் கோரிக்கையும் யுத்தமும் தமிழர் மீது திணிக்கப்பட்டவை

எனவே தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையும் யுத்தமும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்மீது திணிக்கப்பட்டன என்ற வரலாறுதான் நேர்மையான வரலாற்றாளர்களால் பதிவு செய்யப்பட வேண்டியதாகும். அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் இன்று மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இயங்கும் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பல தலைவர்கள் என்றாவது ஒரு நாள் உணர்வார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எனவே, மைத்திரிபால ரணில் அரசாங்கம் தீவிரமாக நகர்ந்து இனவாதத்தை துடைத்தெறிவது இலங்கையின் சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்கும் இன்றியமையாததாகும். மறுபுறத்தில், தேசிய இனப்பிரச்சினைக்கு காலாகாலத்தில் ஒரு ஆக்கபூர்வமான தீர்வு காணப்பட்டிருந்தால் பிரபாகரன் தோற்றம்பெற்றிருக்க மாட்டார் என்று குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறி வைத்துள்ளதைக் காணலாம். மைத்திரிபால சிறிசேன 1950 களில் அரசியலில் தடம் பதித்திருக்கவில்லையாயினும், 30 வருட கால யுத்தத்தின் ஊடாகப் பயணித்த அனுபவம் உள்ளவர் என்ற படியால், “சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது“ என்ற வகையில் சிந்தித்து வருகின்றார் போலத் தெரிகிறது. அவ்வாறாயின் அது நல்லதொரு சகுனமாகும்.

மறுபுறத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜயவர்தன, பிரேமதாச அரசாங்கங்கள் இழைத்த தவறுகளும் இழுத்தடிப்புகளும் அவ்வரசாங்கங்களில் அங்கம் வகித்தவர் என்ற வகையில், தான் பெற்ற பட்டறிவின் காரணமாகவும் பிராயச்சித்தமாகவும் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வு காண்பதற்குச் சிந்தித்திருப்பது போல் தோன்றுகின்றது. எனவே இவர்கள் திடசங்கற்பத்துடன் இணைந்து எதிரணியினர் என்ற இனவாதப் “பிசாசுகளை“ முறியடித்து முன்னேற வேண்டுமென்பதே ஒட்டுமொத்தமான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு எனலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் வகிபாகம்

இறுதியாக, இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அப்பதவியைப் பயன்படுத்துவது அரிது என்ற பரவலான குற்றச்சாட்டு, ஒன்றும் புதிய விடயமல்ல. நாடு பூராகவும் உள்ள சிக்கலான பிரச்சினைகளில் அவர் கரிசனை கொண்டு ஈடுபட்டு வந்தால் இனவாத சக்திகள் பின்வாங்குவதற்கு அது சிறந்த உபாயமாக இருக்கும். முன்பு ஒரு சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக வெலிவேரிய ரத்து பஸ்வலவில் சுத்தமான குடிநீர் வேண்டி போராடிய மக்கள்மீது ராஜபக்ஷ அரசாங்கம் சிலரை சுட்டுக் கொண்ட சம்பவத்தை கண்டித்து அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்படப் பலரால் வரவேற்கப்பட்டது. இனவாதம்தான் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்கு பலத்த தடைக்கல்லாக இருந்து வந்துள்ள வகையில் இனவாதத்தை மழுங்கடிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சம்பந்தனின் வகிபாகம் மிக முக்கியமானது என்பது கிஞ்சித்தும் மறந்துவிடக் கூடியதல்ல.

thinakural.lk 02 06 2016