தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 25) உட்பூசல்களும் முரண்பாடுகளும் பிளவுகளும்

02 07 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 25) உட்பூசல்களும் முரண்பாடுகளும் பிளவுகளும்

1968 மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டம்
தமிழர்கள், பெரும்பான்மைச் சிங்களவர்களிடையே தமக்கான உரிமைக்காகப் போராடிய வேளையில், தமிழர்களுக்குள் காலங்காலமாகச் சாதிரீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதிரீதியில் உயர்ந்ததாகக் கருதிய மக்களிடம் தம்முடைய உரிமைகளுக்காகப் போராடினர். இந்தப் போராட்டத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள், காலப்போக்கிலே, தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டமாக மாறின. தாழ்த்தப்பட்ட மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. இது சார்ந்த வழக்குகளில் வாதாட பெரும்பாலும் உயர்குழாமைச் சேர்ந்தவர்களாக இருந்த தமிழ் வழக்கறிஞர்கள் தயாராக இல்லாத போது, தெற்கிலிருந்து சிங்கள வழக்கறிஞர்கள் வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாதாடிய நிலையும் இருந்தது. இது, தமிழ் இனத்தின் அசிங்கமானதொரு குறுக்குவெட்டு முகம். சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், பாகுபாட்டினாலும் தமிழினம் இழந்தது அதிகம். இன்றும் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக இருப்பதில் பிரதேசவாதத்தினதும், சாதியினதும் பங்கு முக்கியமானது.

1968இல் நடந்த மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டமும் இந்த அடிப்படையில் முக்கியம் பெறும் நிகழ்வு ஆகிறது. கோவிலுக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்ட மக்கள், வலிந்து கோவிலுக்குள் செல்லும் போராட்டத்தை நீண்டகாலமாக நடத்தி வந்திருக்கிறார்கள். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்நுழைவதை ஆலய நிர்வாகமும், ஆதிக்கசாதி மக்களும் தடுத்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக, 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம், தாழ்த்தப்பட்ட மக்கள், மாவிட்டபுரம் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தார். சி.சுந்தலிங்கம் தன்னளிவில் ஒரு சாதி வெறியர் அல்ல, ஆனால், தன்னுடைய அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைந்தார் என்று ஒரு கலந்துரையாடலில் சச்சி ஸ்ரீகாந்தா தன்னுடைய கருத்தைப் பதிவு செய்கிறார். வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 'கணித மேதை' சி.சுந்தரலிங்கம், மாவிட்டபுர கோவில் நுழைவுப் போராட்டத்தில் தலையிட்டார். ஆனால், இறுதியில் எல்லா மக்களும் ஒன்றிணைந்தே திருவிழா நடந்தது. 1970ஆம் ஆண்டு தேர்தலில் மாவிட்டபுரம் அமைந்த தேர்தல் தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியில் 

சா.ஜே.வே.செல்வநாயகத்தை எதிர்த்து தேர்தலில் நின்ற 'அடங்காத் தமிழன்' சுந்தரலிங்கம், 'வேலா?, சிலுவையா?' என்ற ரீதியிலான பிரசாரத்தையும் மேற்கொண்டார். இறுதியில் சா.ஜே.வே.செல்வநாயகமே வெற்றிபெற்றார். சாதிரீதியிலான பிரச்சினைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி நழுவல் போக்கையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்துள்ளது. சாதிப் பிரிவினையை தாம் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்ட போதும், ஆதிக்க சாதி மக்களைப் பகைத்துக்கொள்ள தமிழரசுக்கட்சித் தலைவர்கள் விரும்பியதில்லை.

ஸ்ரீமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்

பெரும்பான்மைக் கட்சிகளிடையே அரசியல் போட்டி இருந்தாலும், 'சிங்கள-பௌத்தர்களின்' நலன் சார்ந்த விடயங்களில் அவர்கள் தங்கள் போட்டியை ஒதுக்கித்தள்ளிவிட்டு இனரீதியிலான ஒத்திசைந்து இயங்குவதை நாம் வரலாற்று ரீதியில் தொடர்ந்து காணலாம். ஸ்ரீமா - சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் குதிரைப் பேரத்தை நடைமுறைப்படுத்த டட்லி சேனநாயக்க அரசு தயாரானது.
அன்று மொத்தமாக, 975,000 அளவிலிருந்த 'நாடற்ற' இந்திய வம்சாவழி மக்களை தமக்கிடையே பிரித்துக்கொள்ள இந்தியா-இலங்கை அரசாங்கங்கள், ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இணங்கின. இந்த 975,000 பேரில் 300,000 பேருக்கு இலங்கை அரசாங்கம் பிரஜாவுரிமை அளிக்கும் எனவும், 525,000 பேரை இந்திய அரசாங்கம் மீளப்பெற்றுக்கொள்ளும் எனவும், அவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கும் எனவும், இந்தச் செயற்பாடானது இந்த ஒப்பந்தம் வலுவுள்ள காலமான 15 வருடங்களுக்கு இடம்பெறும் எனவும், மிகுதி 150,000 பேரினது நிலைபற்றி பின்னொரு காலத்தில் இருநாடுகளிடையேயும் பேசித் தீர்மானிக்கப்படும் எனவும் ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் இணங்கப்பட்டது.

அன்று ஸ்ரீமாவோ இந்த ஒப்பந்தத்தைச் செய்தபோது இதனைக் 'குதிரைப்பேரம்' என்று விமர்சித்த சௌமியமூர்த்தி தொண்டமானும், 'அதிகாரத்தின் விளையாட்டில் அரைமில்லியன் மக்கள் பகடைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று விமர்சித்த சா.ஜே.வே.செல்வநாயகமும் இப்போது கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தார்கள்.

ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டமூலம் கபினட்டில் (அமைச்சரவையில்) சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை எம்.திருச்செல்வம் ஆதரித்திருந்தார் என வி.நவரட்ணம் தன்னுடைய 'தமிழ் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் (ஆங்கிலம்)' என்ற நூலில் குறிப்பிடுகிறார். சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது இதனைத் தான் எதிர்க்க வேண்டி வந்ததாகவும், ஏனெனில், இது தமிழ் மக்களின் உரிமையை மீறும் செயல் என்றும், மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு நாடுகடத்தப்படலாம், இதற்கு சமஷ்டிக் கட்சி (தமிழரசுக் கட்சி)உடன்படுவது ஏற்புடையதல்ல என்று வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். அன்று தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரட்ணத்தினுடைய எதிர்ப்பு தமிழரசுக் கட்சிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது. ஏனென்றால், வி.நவரட்ணம் இதனை எதிர்த்து வாக்களித்தால், ஒன்றில் தமிழரசுக்கட்சி அரசிலிருந்து விலகுவதுடன், எம்.திருச்செல்வமும் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், இல்லையென்றால் வி.நவரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சி, யாரும் கட்டாயமாக நாடுகடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கையை பிரதமர் டட்லி சேனநாயக்கவிடம் முன் வைத்தது. பிரதமர் டட்லியும் யாரும் கட்டாயப்படுத்தப்பட்டு, நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த அமுலாக்கல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு முன்பதாக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நடந்தது. இந்தக் கூட்டமே தான் எதிர்த்து வாக்களிப்பதைத் தடுப்பதற்கான முயற்சியே என்று வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். அத்தோடு, முன்னர் சா.ஜே.வே.செல்வநாயகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது, இதே பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பில் இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க விளைந்ததையும் தனது

நூலில் வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். ஆனால், அன்று இதனைச் சுட்டிக்காட்டி தான் செல்வநாயகத்தை காயப்படுத்த விரும்பியிருக்கவில்லை என்றும் பதிவு செய்கிறார். இறுதியாக சா.ஜே.வே.செல்வநாயகம், குறைந்தபட்சம் வாக்களிக்காது தவிர்க்குமாறு வி.நவரட்ணத்தைக் கேட்கிறார். தான் வாக்களிப்பைத் தவிர்த்தமை பற்றி ஒரு பகிரங்க அறிக்கை விடுப்பேன் என்ற நிபந்தனையோடு வாக்களிப்பைத் தவிர்க்க வி.நவரட்ணம் உடன்படுகிறார்.

இந்தச் சட்டமூலம், ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்டிருந்தது. அதாவது 'நாடற்றவர்களாக' இருந்தவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கு, இந்திய பிரஜாவுரிமை பெற்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதுவரை காத்திருக்காது, உடனடியாகவே அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கும் ஏற்பாடு இந்தச் சட்டமூலத்தில் இருந்தது. இது நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தைத் தோற்றுவித்திருந்தாலும் சட்டமூலம் நிறைவேறுவதைத் தடுக்கவில்லை.குறித்த சட்டமூலம் ஏகமனதாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் நிறைவேறியதும், 'நீண்டகால போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. நாடற்றவர்கள் என்ற பழிச்சொல் விரைவில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் மேலிருந்து அகற்றப்படும்' என சௌமியமூர்த்தி தொண்டமான் கூறினார்.

அறிமுகமாகியது என்.ஐ.சி

இன்னொரு சட்டம் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. 1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம். இன்று 16 வயதுக்குக் கூடிய இலங்கைப் பிரஜைகள் அனைவரின் கைகளிலும் உள்ள ஐ.சி அல்லது என்.ஐ.சி என்று அனைவராலும் அறியப்படும் தேசிய அடையாள அட்டையின் தோற்றுவாய் இந்தச் சட்டமூலம்தான். டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை ஆட்களைப் பதிவு செய்ய ஒரு திணைக்களத்தை உருவாக்கவும், அங்கு 18 வயதுக்குக் கூடிய இலங்கையர்கள் யாவரும் தம்மை பதிவு செய்வதற்கும், பதிவுசெய்தவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்கவும் ஏற்பாடுகள் இருந்தன.

அத்தோடு குறித்த அதிகாரிகளும் கோரும் போது அடையாள அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு செய்யாது விடுதல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. சாதாரணமாக, ஓர் அரசாங்கம் தன் பிரஜைகளைப் பதிவதிலும், அடையாள அட்டை வழங்குவதிலும் என்ன பிரச்சினை இருக்க முடியும் என்று பலரும் யோசிக்க முடியும். அன்றும் பலரும் அப்படியே எண்ணினார்கள். ஆனால், என்.ஐ.சி. தமிழர்களுக்கு என்ன வகையான ஆபத்துக்களைக் கொண்டுவந்தது, அதிலுள்ள பிறந்த இடம், அல்லது பிற்காலத்தில் அச்சிடப்பட்ட மாவட்ட எண் எத்தகைய பாதிப்புக்களை தமிழ் இளைஞர்களுக்கு கொண்டு வந்தது என்பதற்கு வரலாற்றுச் சாட்சியம் ஒன்றே போதும்.

ஆனால், இந்த விடயம் பற்றிய தீர்க்க தரிசனம் ஒருவரிடம் இருந்தது. இந்தச் சட்டமூலத்தை வி.நவரட்ணம் எதிர்த்தார். இந்தச் சட்டமூலமானது தமிழ் பேசும் மக்களை நோக்கி சுடப்படத்தயாராக இருக்கும் ஓர் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அவர் இதனை வர்ணித்தார்.டட்லி சேனநாயக்க அரசாங்கம், ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது பற்றி தமிழரசுக் கட்சியுடன் எந்த கலந்தாய்வும் நடத்தவில்லை. ஆனால், கபினட்டில் எம்.திருச்செல்வம் இருந்ததால், நிச்சயம் அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.

வி.நவரட்ணம், சா.ஜே.வே.செல்வநாயகத்தை சந்தித்து இந்த சட்டமூலத்தின் ஆபத்து பற்றி விபரித்தார். இது எதிர்காலத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு ஆபத்தாகவும், அவர்களை துன்புறுத்தவதற்கும் பயன்படலாம். ஆகவே, இதனை தமிழரசுக் கட்சி ஏற்க முடியாது என்று கூறியதாகவும், இறுதியில் எது நடந்தாலும் தான் இதற்கு எதிராக வாக்களிக்கப்போவதாகவும், மனச்சாட்சியை விற்று விபசாரம் செய்வதிலும் அரசியல் அஸ்தமனத்தை தான் ஏற்பதாக தான் கூறியதாகவும் வி.நவரட்ணம் தனது நூலில் பதிவு செய்கிறார்

குறித்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ஆளுந்தரப்பிலிருந்து எழுந்த வி.நவரட்ணம், சட்டமூலத்தை எதிர்த்துப்பேசினார். இது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த வாக்கெடுப்பில் வி.நவரட்ணம் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார். அவருடைய ஒரேயொரு எதிர்ப்பு வாக்குடன் 1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம் நிறைவேறியது.
இதற்கு மறுநாள் கொழும்பில் கூடிய தமிழரசுக் கட்சியின் ஆட்சிக் குழு கொரடாவின் அறிவுறுத்தலுக்கு மாறாக, அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த வி.நவரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்தனர். ஒரு தீர்க்கதரிசனம் மிக்க விடயத்துக்காக, கொள்கைப்பிடிப்புடன் நின்றமைக்காக வி.நவரட்ணத்தைத் தமிழரசுக் கட்சியின் அதிகாரபீடம் தூக்கியெறிந்தது.கட்சிக்குள் உட்பூசல்கள் மட்டுமல்ல. தமிழ் கட்சிகளிடையே முறுகல்களும், ஆட்சி செய்த கூட்டணிக்குள் முரண்பாடுகளும் எட்டிப்பார்க்கத் தொடங்கின. டட்லி சேனநாயக்கவின் 'ஹத் ஹவுள' கவிழத்தொடங்கியது.

yarl.com 08 02 2016