இயற்கையைப் போற்றுவோம்

03 08 2016

இயற்கையைப் போற்றுவோம்

இயற்கை பற்றிப் பாடிய வள்ளலார் பெருமான் “இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம்” என்கிறார். இதைவிடச் சுருக்கமாக முழுமையாக யாராலும் சொல்ல முடியாது.செயற்கை எப்படி பொய்யானதாக இருக்கிறதோ, அதுபோல இயற்கை உண்மையானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பொய் பேசுவது, போலியாகச் சிரிப்பது, ஒழுக்கமின்றி வாழ்வது என நமது இயல்புக்கு எதிராக இயங்குவது செயற்கையானவை. செயற்கையில் உண்மை இல்லாமல் இருப்பதால் அதிலிருந்து எந்தவிதமான ஆக்க சக்தியும் வெளிப்படுவதில்லை, எனவே அது யாரையும் கவருவதுமில்லை. செயற்கைத்தன்மை இல்லாமல், நாம் நாமாக இயல்பாக வாழும்போது, நம்மில் ஒரு காந்தசக்தி எழுகிறது. அந்த உண்மைத்தன்மை நம்மில் ஓர் ஓர்மையை உருவாக்குகிறது; அது பிறரைக் காந்தமெனக் கவர்கிறது.

திருவள்ளுவர் சொன்னது, “வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.” ஒருவருக்குள் பூதங்கள் ஐந்தும் அவரைப்பற்றி எள்ளி நகையாடும்போது, அவர் இயற்கைக்கு எதிராக இயங்குகிறார் என்பதை அறியலாம். இப்படிப்பட்டவர்கள் பலரைச் சில காலம் ஏமாற்றலாம், சிலரைப் பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அதனால்தான் “உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்” என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன்.இயற்கை உண்மையானது மட்டுமல்ல, இனிமையானதும்கூட. எப்போதும் லஞ்சம் வாங்கும், ஊழல் செய்யும், ஒழுக்கமற்ற ஓர் அதிகாரி நிச்சயம் இன்பமாக வாழ இயலாது. ஆனால் நேர்மையான, உண்மையான ஓர் அலுவலர் இயல்பாகவே இன்பமாக இருக்கிறார். அவருக்குள் அச்சமிருக்காது, நிமிர்ந்து நிற்பார்; கூச்சமிருக்காது, வளையமாட்டார்.

இப்படியாக, உண்மையாக இருக்க உதவுவதாலும், ஈடிலா இன்பம் அளிப்பதாலும் நாம் இயற்கையை விரும்புகிறோம். தனிமனித வாழ்வில் இயற்கையின் தன்மைகள் இப்படி அமைந்தால், அது பொதுவாழ்வில் எப்படி பரிணமிக்கிறது?இயற்கை அரசியலின் அடிப்படை நம்பிக்கைகளுள் முக்கியமானவை சிலவற்றை அறிஞர்கள் பட்டியலிடுகிறார்கள்:* வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும், அனைவரையும் காத்துக்கொண்டி ருக்கும் உயிர்ச் சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம்.

* அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கும் உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவை; எனவே அவற்றை அங்கீகரிப்பதும் மதிப்பதும் காத்துக்கொள்வதும் முக்கியமானது.
* சிறியவையோ பெரியவையோ அனைத்து மனித நடவடிக்கைகளும் உயிர்ச்சூழல்மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்வோம்.
* மேற்குறிப்பிட்ட தாக்கங்கள் வருங்காலத்தின்மீது படிந்து, மனிதர்களையும், ஏனைய உயிரினங்களையும் பல தலைமுறைகளுக்குப் பாதிக்கும். எனவே வருங்காலத் தலைமுறைகளின் உடல்நலம், நல்வாழ்வு போன்றவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
* தனிநபராக தனிப்பட்ட வாழ்விலும், கூட்டாக அரசியல் வாழ்விலும் நாம் பொறுப்புடையவராக இருத்தல் அவசியம்.
* தனிநபர் பங்கேற்பையும் தனிப்பட்ட பொறுப்புணர்வையும் அதிகரிக்கும், மையப்படுத்தப்படாத, அடிமட்டத் தன் னாட்சி வழங்கும் பசுமை சனநாயகத்தைப் போற்றுவோம்.
மேற்குறிப்பிட்ட நம்பிக்கைகளை ஏற்று வாழ்வதென்றால், இயற்கையை மதிப்பதும் போற்றுவதும்தான் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். செயற்கையான சாதி, மதம், இனம், நிறம், தேசம் போன்ற வேறுபாடுகளைப் புறந்தள்ளி,
“காக்கைக் குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”எனும் பாரதியின் பரந்த பார்வையை நமதாக்க வேண்டும்.

வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இயற்கையைப் புகட்டுவது, போற்றுவது என்று முடிவெடுத்தாக வேண்டும். அப்படி செய்யும்போது இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கைக் கல்வி, இயற்கை வேலை என நமது வாழ்க்கையில் செயற்கையைப் புறந்தள்ளியாக வேண்டும். செயற்கை உரங்கள், இடுபொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைத் தவிர்த்து, இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை இயற்கை வேளாண்மை என்கிறோம். மேற்குறிப்பிட்ட நச்சுப் பொருட்கள் இல்லா உணவே இயற்கை உணவு என்றாகிறது.

ஆபத்தான பின்விளைவுகள், பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் வேதியியல் பொருட்களைத் தவிர்த்து, இயற்கையான மூலிகைகளை, காய்களை, பழங்களை மருந்தெனக் கொள்வதே இயற்கை மருத்துவம் எனப்படுகிறது. “ஓடி விளையாடு பாப்பா” என்று குழந்தைமையை அனுமதித்து, தாய்மொழி வழிக் கல்வியோடு குழந்தைகளை இயல்பாக வளர்ந்தோங்கச் செய்வதைத்தான் இயற்கைக் கல்வி என்றழைக்கிறோம். உடன்பிறந்து, உள்ளுக்குள் ஊற்றெடுத்துப் பெருகி நிற்கும் ஆற்றல்களை, திறமைகளை வெளிக்கொணர்ந்து, உலகத்தார் பயன்பாட்டுக்குக் கொடுக்கும் வேலைகளே இயற்கை வேலைகள் எனப்படும். இப்படியாக இயற்கையோடு இயைந்து, இயற்கையாக, இயற்கைக்காக வாழ்வதுதான் ‘இசைபட வாழ்தல்’ என்றாகும்.

இத்தருணத்தில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. பூமி எனும் தோட்டத்தை நிர்வாகம் செய்யும் ஒரு தோட்டக்காரனைப் போல நம்மைக் கருதுவதா அல்லது ஒருங்கமைக்கப்படாத வனாந்திரத்திலுள்ள ஓர் உயிரியாக மட்டுமே நம்மைப் பார்ப்பதா? அதாவது இயற்கையின் மீதும், பிற உயிர்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தி, அதிகாரத்தை நிறுவி மேலாண்மை செய்வதா அல்லது இயற்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு நமது பங்களிப்பை மட்டும் செய்வதா?உண்மையில், இரண்டு மாதிரிகளின் அம்சங்களையும் கலந்து செயல்படுவதே சிறப்பு. ‘சூழல், மாளல், ஊழல்’ எனும் மும்மைதான் இன்றைய நமது பொதுவாழ்வை ஆட்டுவிக்கிறது. எனவே ‘வளங்களைக் காப்போம்; வாழ்வை வளர்ப்போம், வருங்காலத்தை தகவமைப்போம்’ என்பதுதான் நமக்கேற்ற இயற்கை அரசியலின் தாரக மந்திரமாக இருக்க முடியும்.

வளங்களைச் சூறையாடுவதும் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். தமிழக வளங்கள் அனைத்தும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே மேலாண்மை செய்யப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களோ குழுமங்களோ எக்காரணம் கொண்டும் அவற்றைச் செய்ய அனுமதிக்கக் கூடாது. தொழில் வருமானம் போன்ற ஈடுபாடுகளுக்குத் தரப்படும் அதே முக்கியத்துவம் சூழலியல் அம்சங்களுக்கும் அவற்றின் பாதுகாப்புக்கும் தரப்பட்டாக வேண்டும்.இயற்கையாகத் தோன்றி, வாழ்ந்து, வளர்ந்து,முழுமை அடைய வேண்டிய உயிர்கள், சாதி ஆணவக் கொலை, கூலிப்படைக் கொலை, சாலை விபத்து, சாராயச்சாவு, தற்கொலை எனும் செயற்கை வழிகளில் அழித்தொழிக்கப்படுவது மாபெரும் தவறு. மனித உயிருக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாக வேண்டும்.

வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்வு, மகிழ்ச்சி என்ற பெயர்களில் மதுபானம், இலவசம், விரயம், இயற்கைவளக் கொள்ளை, நில அபகரிப்பு, நீர்நிலை அழிப்பு, அணுத்தீமை என பல்வேறு தீங்குகள் நமக்கு இழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே ஊழலின் ஊற்றுக்கண்கள்தான். இவற்றைத் தவிர்த்து, பசுமைகரமான மாற்றுக்களைக் கண்டறிந்து வருங்காலத்தைத் தக்க வழிகளில் தகவமைத்தாக வேண்டும்.

இம்மாதிரியான இயற்கை நெறிமுறைகளில் ஆழமான நம்பிக்கை கொள்ளும்போது, தமிழக சமூக-பொருளாதார-அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவது அடுத்த கட்டமாக அமையும். அதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கீழ்ப்படியாமை, ஒத்துழையாமை, அறவழிப் போராட்டங்கள் போன்ற இயற்கை இயக்கங்களாகவே இருக்க முடியும். வலிந்து மேற்கொள்ளும் தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறை போன்ற செயற்கையான செயல்பாடுகள் பயன்படாது. அவை நீடித்த நிலைத்த நன்மைகளைத் தரவும் முடியாது.மொத்தத்தில், பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளி, உண்மையாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம். பாரதி ஃபார்முலாவும் அதுதான்:
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!

kalachuvadu.com/ may 2016