தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 32) ஸ்ரீமாவின் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சி

20 08 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 32) ஸ்ரீமாவின் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சி

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

ஸ்ரீமாவோ அரசாங்கம், இராணுவத்தின் இரும்புக்கரம் கொண்டு, சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் உயிரிழந்திருந்தார்கள். ஏறத்தாழ 18,000 இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். 1971 ஜூலையில் 14,000 வழக்குகளை வகைப்படுத்தவும் விசாரிக்கவுமென விசேட விசாரணைப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படுவதாக, பிரதமர் ஸ்ரீமாவோ அறிவித்தார். இராணுவத்தின் வன்முறைகளுக்கெதிராகக் குரல்கள் எழுந்தபோது, இடதுசாரி மாக்ஸிஸத் தலைவர்களான கலாநிதி.என்.எம்.பெரேரா (நிதி அமைச்சர்), கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வா (பெருந்தோட்ட மற்றும் அரசியலமைப்பு அமைச்சர்) ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்கள். கலாநிதி.என்.எம்.பெரேரா 'சில ஆயிரம் இளைஞர்கள் எமது நாட்டை பிணைக்கைதியாகப் பிடித்து வைத்திருக்க அனுமதிக்க முடியாது' என்றார்.

1972 ஏப்ரலில், அரசாங்கமானது,ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கெதிரான நீதி நடவடிக்கைகள் எடுப்பதற்காக குற்றவியல் நீதி ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்குடன் குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் 109 வாக்குகள் ஆதரவாகும், 24 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஐக்கிய முன்னணியின் அங்கத்துவக் கட்சியிலொன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் 4 உறுப்பினர்கள் (எஸ்.ஏ.விக்கிரமசிங்க, சரத் முத்தேட்துவகம, ஏலியன் நாணயக்கார, எம்.ஜி.மென்டிஸ்) ஆகியோர் இந்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

இதன் விளைவாக, ஐக்கிய முன்னணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி விலக்கப்பட்டது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைச்சராக இருந்த பீட்டர் கெனமன், வாக்களிப்பு நடந்த போது நாட்டில் இருக்கவில்லை. அவர் நாடு திரும்பியதும் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்தார், அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதி அமைச்சராக இருந்த பி.வை.துடாவ, அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், தொடர்ந்தும் பிரதி அமைச்சராக இருந்தார். 1972 டிசம்பரில், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணியில் சேர்த்தக்கொள்ளப்பட்டது.

1972இல், குற்றவியல் நீதி ஆணைக்குழு எட்டு வருடகாலத்துக்கு வலுவுள்ளதாகவும் (பின்னர் ஒரு ஐந்து வருட காலத்துக்கு நீட்டிப்பு செய்யக்கூடியதாகவும்) ஸ்தாபிக்கப்பட்டது. ஆயுதப்புரட்சிசார்ந்த குற்றங்கள் மட்டுமல்லாது, பெரியளவிலான நாணயம்சார் குற்றங்கள் மற்றும் பரந்தளவிலான சொத்து அழிப்புக் குற்றங்கள் ஆகியவற்றையும் விசாரித்து, நீதி செய்யும் அதிகாரம் கொண்டிருந்தது. ஆணைக்குழுவானது ஒருவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்குமாயின், அவரைத் தண்டிக்கும் அதிகாரம் கொண்டிருந்தது.ஆனால் ஆணைக்குழுவானது ஒருவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்குமாயின் அவரை விடுதலை செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருக்கவில்லை. இதனால் அத்தகைய தீர்ப்புக்குப் பின்னும் அத்தகைய நபரைத் தடுப்பில் வைக்கக்கூடியதாக இருந்தது. அதுபோலவே சான்றுச் சட்டம் வழங்கிய சில சட்டப் பாதுகாப்புக்களையும் இது தளர்த்தியது. உதாரணமாக சித்திரவதையினூடாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலச் சான்றை அனுமதிக்கக்கூடிய அதிகாரத்தை வழங்கியது.

ஏறத்தாழ 18,000 இளைஞர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டாலும் ஏறத்தாழ 16,000 பேர் விடுதலைசெய்யப்பட்டார்கள், 2,919 பேருக்கு எதிராக குற்றவியல் நீதி ஆணைக்குழுவில், அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தல், போரில் ஈடுபட சூழ்ச்சி செய்தல் மற்றும் மகாராணியாருக்கு எதிராக போர் செய்தல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன. 2,506 பேர் குற்றங்களை ஒப்புக்கொண்டார்கள்.
அவர்களில் ஆயுதப்புரட்சியில் நேரடியாகப் பெரும்பங்கு வகிக்காத பெரும்பான்மையானவர்கள், இரண்டுவருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்கள். குற்றவியல் நீதி ஆணைக்குழு முன்பதான விசாரணைகள் 1972 ஜூன் 12ஆம் திகதி பிரதம நீதியரசர் எச்.என்.ஜி.பெர்ணான்டோ, நீதியரசர் ஏ.ஸி. அலஸ், நீதியரசர் வி.ரி. தாமோதரம், நீதியரசர் எச். தெரகொட, நீதியரசர் ரி.டபிள்யூ. ராஜரட்ணம் ஆகியோர் முன்னிலையில் ஆரம்பமாகின.

ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சி தொடர்பில் ரோஹண விஜேவீர, லயனல் போபகே, சுனந்த தேசப்ரிய, விக்டர் ஐவன், எஸ்.டி. பண்டாரநாயக்க (ஸ்ரீமாவோவின் உறவினர்) உள்ளிட்ட 41 பேருக்கெதிரான வழக்கு முக்கியம் பெற்றது. இவர்களே 1971ஆம் ஆண்டு ஆயுதப் புரட்சியின் காரணகர்த்தாக்களாகக் கருதப்பட்டனர். இதில் 32 பேர் குற்றவியல் நீதி ஆணைக்குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்கள். ரோஹண விஜேவீரவுக்;கு, முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் அது 20 வருட சிறைத் தண்டனையாக திருத்தப்பட்டது. அரசாங்கம் முன்னெடுத்த இராணுவ மற்றும் நீதி நடவடிக்கைகளின் பின்னர், ஜே.வி.பியின் இன்னொரு ஆயுதப் புரட்சிக்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், ஸ்ரீமாவோ அரசாங்கம் விட்ட அதே பிழையை அடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் விட்டதன் விளைவாக, இலங்கை பிற்காலத்தில் மீண்டும் ஒரு ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சியை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது 

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறையிலேயே, இலங்கையில் சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இலங்கையின் நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபை கீழவையாகவும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபை மேலவையாகவும் தொழிற்பட்டது. நடைமுறையில் செனட் சபையானது கீழவையின் 'இறப்பர் முத்திரையாக' செயற்படுகிறது என்ற விமர்சனம் வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியிலான செனட் சபைகள் தொடர்பில் பரவலாக அரசறிவியலாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

இது ஓரளவுக்கு உண்மையும் கூட. அமெரிக்காவின் செனட்டர்கள் நேரடியாக மக்களால் தேர்தெடுக்கப்படுவதினாலும் அமெரிக்காவின் நிர்வாகத்துறையான ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும் பல அதிகாரங்களைக் கொண்டிருப்பதனாலும் அமெரிக்க செனட் பலமானதொரு அமைப்பாகும் ஆனால், வெஸ்ட்மினிஸ்டர் செனட் அவ்வகைப் பலம் பொருந்தியதொன்றல்ல.புலமையாளர்களையும் துறைசார் விற்பன்னர்களையும் பிரதிநிதிகள் சபையில் பிரதிநிதித்துவம் இல்லாத அல்லது குறைந்த இனக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களையும் செனட் சபை நியமன உறுப்பினர்களாகக் கொண்டிருப்பினும் அதன் அதிகாரங்கள் மட்டுப்பட்டதாகவே இருந்தன. 30 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கை நாடாளுமன்றத்தின் செனட் சபையில், 15 உறுப்பினர்கள் கீழவையினால் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். மீதி 15 பேர், பிரதமரின் மதியுரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.

குறைந்தது 35 வயதுடையவர்களாக செனட்டர்கள் இருக்க வேண்டும். செனட்டர்கள் ஆறு வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு 2 வருடமும் மூன்றிலொரு பங்கினர் பதவிதுறந்து புதிய நியமனம் நடைபெறும். பதவி துறந்தவர்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட முடியும்.1971இல், இலங்கை நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பானவர்களாகவே இருந்தார்கள். செனட் சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கம் செனட் சபையில் இருந்தது. இது கீழவையில் பெரும்பான்மையைக் கொண்ட ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

எனவே செனட் சபையை இல்லாதொழிக்க ஸ்ரீமாவோ அரசாங்கம் தீர்மானித்தது. குறிப்பாக ஸ்ரீமாவின் இடதுசாரித் தோழர்கள் இதில் அக்கறையோடு செயற்பட்டனர். செனட் இல்லாதொழிப்புக்கான திருத்தச் சட்டமூலமானது, அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கீழவையில் நிறைவேற்றப்பட்டதன்படி, 1971 ஒக்டோபர் 2ஆம் திகதி முடியின் அனுமதியுடன் சட்டமானது. அத்தோடு இலங்கையில் ஏறத்தாழ 24 வருடங்கள் வலுவிலிருந்து செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது.

சீ.குமாரசுவாமி, சேர். கந்தையா வைத்தியநாதன், சேர்.சிற்றம்பலம் ஏப்ரஹாம் கார்டினர், எஸ்.ஆர்.கனகநாயகம், முத்தையா மாணிக்கம், எஸ்.நடராஜா, சோமசுந்தரம் நடேசன், சுப்பையா நடேசன், பொன்னம்பலம் நாகலிங்கம், டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன், சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம், முதலியார் ஏ.பி.ராஜேந்திரா, பெரி சுந்தரம், முருகேசன் திருச்செல்வம் போன்ற தமிழர்களும், சேர். ரஸீக் பரீட், ஐ.ஏ.காதர், சேர்.மொஹமட் மகன் மார்க்கார், மசூர் மொளலானா போன்ற முஸ்லிம்களும் செனட்டகளாக இருந்திருக்கிறார்கள். இதைவிடவும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதல் முறையாக பிரதமரானபோது, அவர் செனட்டராக நியமிக்கப்பட்டே பிரதமரானார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரிவி கவுன்ஸிலுக்கு முறையிடும் உரிமை இல்லாதொழிக்கப்பட்டது

பிரிவி கவுன்ஸில் என்பது பிரித்தானியாவின் மீயுயர் நீதிமன்றமாகும். இலங்கை ஒரு டொமினியன் நாடாக இருந்ததனால், சட்டப் பிரபுக்களைக் கொண்ட பிரித்தானியாவின் பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை, சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இலங்கையருக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் பல முக்கிய வழக்குகளும் பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டன. ஸ்ரீPமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமானது, 1971ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தினூடாக ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் முறையை இல்லாதொழித்தது. அதற்குப்பதிலான இலங்கையின் மீயுயர் நீதிமன்றமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் 1971 நவம்பர் 15ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை இல்லாதொழித்தமைக்கு கோடீஸ்வரன் வழக்கும் ஒரு முக்கிய காரணம் என்று சில அறிஞர்கள் கருத்துரைத்திருக்கிறார்கள். கோடீஸ்வரன் வழக்கில், பிரிவி கவுன்ஸில் அளித்த தீர்ப்பில் அரசாங்க சேவையாளளொருவன் தனது சம்பளத்தொகைக்காக, முடிக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்ற இலங்கை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிரான கோடீஸ்வரனின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் ஆராய வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்தத் தீர்ப்பு 1969இல் வழங்கப்பட்டது.

அப்போது டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. எந்த அரசியல் அமைப்பு சார்ந்த பிரச்சினையை இந்த வழக்கில் ஆராய்வது தேவையற்றது என உயர்நீதிமன்றம் கருதியதோ, அது ஆராயப்பட வேண்டும் என பிரிவி கவுன்ஸில் தீர்ப்பளித்தது.இப்போது அதனை மீண்டும் விசாரித்து, 'தனிச்சிங்கள' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துடன் பொருந்திப்போகிறதா, அல்லதா அதற்கு முரணாக அமைகிறதா என்று ஆராய வேண்டிய கடப்பாடு உயர்நீதிமன்றத்துக்கு ஏற்பட்டது. சட்டவியல் நிபுணர்களின் கருத்துப்படி, அன்று இந்த அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் எந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பினும் அது மீண்டும் பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டால் 'தனிச்சிங்கள' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துக்கு முரணானது ஆதலால், அச்சட்டம் வலுவற்றது என்ற தீர்ப்பே ப்ரிவி கவுன்ஸிலால் வழங்கப்பட்டிருக்கும்.

இது நடந்தால் 'தனிச்சிங்கள' சட்டம் இல்லாதொழியும் நிலை ஏற்படும். இந்நிலையில், மீண்டும் இவ்வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை உள்ளவரைதான் இதுபோன்ற சவால்கள் ஏற்படும் ஆகவே, அடுத்ததாக ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ அரசாங்கம் அவ்வுரிமையை ஒட்டுமொத்தமாக இல்லாதொழித்தது. இனியும் எவ்வகையிலும் நாம் இங்கிலாந்துக்கு அடிமையாக இருக்கக்கூடாது என்ற 'தேசியவாத' கருத்தை முன்வைத்து இக்கைங்கரியத்தை ஸ்ரீமாவோ அரசாங்கம் செய்து முடித்தது.ஆனால், இத்தோடு ஸ்ரீமாவோ அரசாங்கம் நின்று விடவில்லை. புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவோம் என்ற தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தலைப்பட்டது. தமிழ் மக்கள் தலையின் மெத்தப்பெரியதொரு இடி விழக் காத்திருந்தது.

yarl.com 28 03 2016