சாதிய அமைப்பு அரசியல் -2

21 09 2016

சாதிய அமைப்பு அரசியல் -1

யமுனா ராஜேந்திரன்

அவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் புலிகள் உருவாக்கிய சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிச்சார்பற்ற மதச்சார்பற்ற (secular) தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் கீழிருந்த சட்டமுறைகளையும் சமூக மதிப்பீடுகளையும் ஒரு வகையில் ஸதாம் ஹுசைனின் கீழிருந்த ஈராக்குடன் நாம் பல வகைகளில் ஒப்பிட முடியும். ஸதாம் ஹுசைனின் சமூகம் ஒரு மதச்சார்பற்ற சமூகமாகவே இருந்தது. ஈரான், சவுதி அரேபியா போன்ற பிற அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈராக்கியப் பெண்கள், கல்வி, சிவில் சமூகப் பங்கேற்பு போன்றவற்றில் விடுதலை பெற்றவர்களாகவே திகழ்ந்தனர். சியா-சன்னி என்ற இரு இஸ்லாமியப் பிரிவுகளின் மதச் சடங்குகள் பொதுவெளிகளில் நடத்தத் தடைசெய்யப்பட்டிருந்தது.

ஸதாம் ஹுசைனின் சன்னி இனக்குழு அதிகாரத் தன்மையிலும், விடுதலைப் புலிகளின் இயல்பாக அமைந்த கரையார் இனக்குழு அதிகாரத்தன்மையிலும் நாம் ஒப்புமைகளைக் காணமுடியும்.
மேம்போக்காக சிவில் சமூகத்தில் ஜனநாயக மரபுகளை இவர்களது சட்டங்கள் பிரதிபலிப்பதாகத் தோன்றினாலும், இரண்டு விதங்களில் மிகக் கடுமையான ஒடுக்குமுறைச் சமூகங்களாகவே இவை இரண்டும் இயல்பில் இருந்தன. எடுத்துக்காட்டாக நீதித்துறையின் மீதோ, சட்டநிறுவனச் செயல்பாட்டின் மீதோ ஸதாம் ஹுசைனின் பாத் கட்சியினருக்கும், பிரபாகரனின் விடுதலைப் புலிகளுக்கும் இருக்கும் ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் ஒரு வரையறுக்குள் கொண்டுவருவதற்கான கடிவாளம் என்ன?

அதைப் போலவே தாம் பிற சமூகக் குழுவொன்றினால் ஒடுக்கப்படுகிறோம் எனக்கொண்டு, பிறிதொரு சமூகக் குழு ஒன்றுதிரண்டு போராடுவதற்கான வாய்ப்பு இந்தச் சட்டவரம்புக்குள் இருக்கிறதா?
இரண்டு கேள்விகளுக்கும் இல்லை என்பதுதான் பதில்.
ஸதாம் ஹுசைன் ஈராக்கிய ஒற்றுமையின் பெயரிலும், விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய ஒற்றுமையின் பெயரிலும் எந்தவிதமான எதிர்ப்பையும் ஒடுக்கி, தமது அமைப்பின் கட்டுப்பாட்டையே நிலை நிறுத்த முனைவர். ஸதாமின் ஈராக்கில் அதுதான் நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் இடைக்கால அரசின் நிலைமையை ஈராக்கைப் போல நாம் இப்படிக் கறுப்பு வெள்ளையாக மதிப்பிட முடியாது.

அடுத்ததான கேள்வி : விடுதலைப் புலிகள் அமைப்பின் சாதியத் தன்மை(caste character) குறித்த கேள்வி. விடுதலைப் புலிகள் அமைப்பு என்கிற போது, தலைமை மற்றும் கீழ்மட்ட அணிகள் இரண்டும் இணைந்ததாகவே அமைகிறது. உள்நாட்டுப்போரின் காரணத்தினால், பொருளாதாரரீதியில் வளம் கொண்டவர்கள் பெரும்பாலுமானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள். இயல்பாகவே அவர்கள் வெள்ளாளர்களாக இருக்கிறார்கள். நாட்டில் தங்கிவிட்டவர்களில் பெரும்பாலுமுள்ளவர்களில் கணிசமானோர் பஞ்சமர் அல்லது தலித்தியர்களாகவே இருக்கிறார்கள். மரபான யாழ்ப்பாண சமூகத்தில் 18 சதவீதமான பஞ்சமர்கள்தான் அதிகமும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் போராளிகளாகச் சேர்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நோக்கம் என்பது தமிழ் தேசிய ஒற்றுமையாக இருக்கிறது. சாதி ஒதுக்கத்தை அவர்கள் தடைசெய்கிறார்கள். சமவேளையில் தமது அமைப்பின் பெரும்பாலுமான போராளிகள் தலித்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதை விரும்புவதும் இல்லை. இவ்வகையிலான குறிப்பிட்டுக் காட்டல் யாழ் பல்கலைக்கழக ஆய்வு அமர்வொன்றில் யத்தனிக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான மாணவர்கள் அந்த நிலைப்பாட்டை திரும்பப் பெறச் செய்தார்கள் என்பதனை நூலின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பைக் குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் பிணைப்பதை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை. ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது. மரபாக வெள்ளாளர்கள் சாதி எனும் அளவில் யாழ்ப்பாணத்தின் 50 சதவீதமானவர்கள் எனும் அளவில், பொருளியல் ரீதியில் அனைவருமே செல்வந்தர்கள் இல்லை. அவர்களிலும் பொருளியல் ரீதியில் மேல்-இடை-கடைத் தட்டுகளில் இருந்தவர்களும் இருந்தார்கள். தமிழ் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி போன்றவர்கள் கரையாரான பிரபாகரனைக் கடுமையாக எதிர்ப்பதற்கு, அவர்தம் யாழ் மேல்குடி வெள்ளாளப் பின்னணியும் காரணமாகச் சுட்டப்படுவது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

விடுதலைப் புலிகளின் தலைமை சார்ந்தும் சரி, போராளிகள் சார்ந்தும் சரி, ஆய்வாளர்கள் தாம் ஆய்வில் ஈடுபடும் காலகட்டத்தில் திட்டவட்டமான சாதியப் புள்ளிவிவரங்கள் பெறுவது சாத்தியமாயிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். யுத்த நிலைமையும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் இவ்வகையில் தமது ஆய்வை மட்டுப்படுத்துகிறது என்பதனையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். புலிகளின் பதவிகளும் சரி, பொறுப்புகளும் சரி படைப் பயிற்சி, தேர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதேயொழிய, சாதியப் பிரதிநிதித்துவம், பிரதேசப் பிரதிநிதித்துவம் போன்றவற்றின் அடிப்படையில் அல்ல என்பதனையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஈழத்தில் சாதியப் பிரச்சினையின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் மீது தமிழக தலித்தியக் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கிற விமர்சனம் ஒன்றுதான் : விடுதலைப் புலிகள் தலைமையேற்பதற்கு முன்பாகத் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான, திரட்டிக் கொண்ட இயக்கத்தை நடத்துவதற்கான சூழல் இருந்தது. விடுதலைப் புலிகள் அதனை முற்றிலும் மௌனமாக்கிவிட்டார்கள். இயக்கரீதியிலான தலித்துக்களின் செயல்பாட்டை விடுதலைப் புலிகள் மௌனமாக்கிவிட்டார்கள் எனும் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

ரவிக்குமார் முன்வைத்த பிறிதொரு விமர்சனம் விடுதலைப் புலிகள் இஸ்லாமியத் தமிழர், மலையகத் தமிழர் என இரு வேறுபட்ட சமூகத்தின் பிரதிநிதிகளோடு உரையாலை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான பிரதிநிதித்துவத்தையோ அல்லது உலையாடலையோ தலித் சமூகத்தைப் பொறுத்து விடுதலைப் புலிகள் வழங்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

சாதியப் பிரச்சினை தொடர்பான விடுதலைப் புலிகளின் பார்வை தொடர்பாகவும், அவர்களின் மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாகவும் இதிலிருந்து நாம் சில நிலைப்பாடுகளுக்கு வந்து சேரலாம். புலிகள் தமது அமைப்புக்குள் சாதிய ஒடுக்குமுறையைக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொண்ணூறுகளிலிருந்து 2009 மே வரையிலுமான இரண்டு தசாப்தங்கள் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைமையாக அல்லது வெள்ளாளர்களின் அல்லது கரையார்களின் தலைமையாக இருந்தது என்பதற்கான புள்ளிவிரங்களோ சான்றுகளோ இல்லை. அவ்வாறே இருந்தாலும் அவர்கள் விடுதலைப் புலிப்போராளிகளை சாதியரீதியில் ஒடுக்கினார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தடைசெய்து அதனைக் குற்றத்தன்மை வாய்ந்ததாக ஆக்கியதன் பின், அவர்கள் திட்டமிட்டு தலித்தியர்கள் மீதான வெள்ளாளர்களின் ஒடுக்குமுறைக்குத் துணைபோனார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை.

இதுவன்றி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிற ஒரு முக்கியமான விடயம், மாவீரர்களின் கல்லறை அமைக்கப்பட்ட விதம். அனைவருக்கும் ஒரே மாதிரியான நினைவு மண்டபங்கள்தான் அமைக்கப்பட்டன. சாதிய அடையாளங்கள் அங்கு துப்புரவாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத அடையாளங்களும் அங்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்து மதம் இறந்தவர்களை எரிக்கச் சொல்கிறது. விடுதலைப் புலிகள் போராளிகளைப் புதைத்திருக்கிறார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சாதிய அமைப்பு என்று சொல்வதற்கோ, அது சாதியத்தைக் கடைப்பிடித்த அமைப்பு என்று சொல்வதற்கோ, அது உருவாக்க விரும்பிய அமைப்பு - அது சர்வாதிகார அமைப்பே ஆயினும் - அது சாதிய அமைப்பு என்று சொல்வதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை.
விடுதலைப் புலிகளை தலித்தியப் பெருஞ்கதையாடலுக்குள் கொணரப் பிரயத்தனப்படும் புகலிட புலி எதிர்ப்பாளர்களுக்கும் சரி, அவர்களது பிரயத்தனங்களுக்குக் கோட்பாட்டு அடிப்படைகளையும், அரசியல் அடிப்படைகளையும் தமிழகத்தில் உருவாக்கிக் கொடுக்கும் அ.மார்க்சுக்கும் சரி, ஆதவன் தீட்சண்யாவுக்கும் சரி, இருக்கிற ஒரே காரணமெல்லாம், விடுதலைப் புலிகள் தமது ஆளுகையைத் ஸ்தாபிப்பதற்கு முன்னால் திரட்டிக் கொள்ளப்பட்ட வகையில் நடத்தபட்ட தலித்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை, அவர்கள் முற்றிலும் இல்லாதாக ஆக்கினார்கள் என்ற காரணம் மட்டும்தான் எஞ்சி நிற்கிறது.

விடுதலைப் புலிகள் அவ்வாறான நிலைப்பாடு மேற்கொண்டதற்கான அவர்களுக்கான காரணங்கள் தெளிவாக இருக்கின்றன. சாதிய முரண்பாடுகள் வெளிப்படையாகக் கிளம்புவதற்கான வாயப்புகளைத் தாங்கள் தருவதனால், சிங்கள பௌத்த பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றுமை பாதிக்கப்படும் என அவர்கள் கருதினார்கள். ஒரு வகையில் வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து சகலமுரண்பாடுகளையும் இரண்டாம்பட்சமாக முன்வைத்த மரபான மார்க்சிய நிலைப்பாட்டை ஒத்தது விடுதலைப் புலிகளின் இந்த நிலைப்பாடு.
II

தேசியமும் மார்க்சியமும் பிற முரண்பாடுகளும் தொடர்பான இந்த விவாதவெளிக்குப் போவதற்கு முன்னால், ஈழ விடுதலைப் போராட்டமும், உள்நாட்டு இடப்பெயர்வும், புகலிட நாடுகள் நோக்கிய மக்களின் வெளியேற்றமும் யாழ்ப்பாணத்தின் சாதியக் கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் ஆய்வாளர்களின் சில அவதானங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
விடுதலைப் புலிகளின் சாதிய ஒதுக்குதலின் மீதான தடையால் வெளிப்படையாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாத நிலை வெள்ளாளர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளிடம் இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது அவர்கள் திட்டவட்டமாக பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறார்கள். நிலங்கள் தொடர்பான சில தகராறுகள் தங்களிடம் வந்தபோது, தலித்துகளுக்கு அனுசரணையாகவே புலிகள் செயல்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டின் இடப்பெயர்வு காரணமாக கறாரான சாதிஒதுக்குதலையும் தீண்டாமையையும் பஞ்சமர்களின் மீது சுமத்தமுடியாத சூழலுக்குப் பிற சாதியினர் தள்ளப்பட்டார்கள்.

 https://groups.google.com/forum/#!myforums