தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 39) தரப்படுத்தல்' எனும் ஓரவஞ்சனை

17 10 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 39) தரப்படுத்தல்' எனும் ஓரவஞ்சனை

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் நிலை
1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம் அமைத்த அரசியலமைப்புப் பேரவையினால் உயிர்கொடுக்கப்பட்டு, முதலாவது குடியரசு யாப்பு அமுலுக்கு வந்தது. தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகிய இந்தப் புதிய அரசியலமைப்பு, அதன் சட்டவாக்கத்துறையிடம் அதிகாரங்களைக் குவித்தது. முதலாவது குடியரசு யாப்பின் கீழான சட்டவாக்க சபையான 'தேசிய அரசு சபைக்கு' எத்தகைய சட்டத்தையும் உருவாக்கத்தக்க வலு இருந்ததுடன், நீதித்துறையின் நீதி மறு ஆய்வு அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள், அரசியலமைப்புப் பேரவையைப் புறக்கணித்திருந்தனர், இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியலமைப்புப் பேரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டேயிருக்கவில்லை. ஆகவே, தமிழர்களைப் புறக்கணித்த, தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியலமைப்பாகவும், சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் முன்னுரிமையளிக்கும் அரசியலமைப்பாகவுமே முதலாவது குடியரசு அரசியலமைப்பு அமைந்தது. தமிழ் ஐக்கிய முன்னணி, தமது ஆறு அம்சக்கோரிக்கைகளான:

01. தமிழ் மொழிக்கு, சிங்கள மொழிக்குச் சமனான அந்ஸ்து வழங்கப்பட வேண்டும்.
02. இலங்கையை தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கும் எந்தவித பாகுபாடுமற்ற குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் எந்தக் குடிமகனதும் குடியுரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கக்கூடாது.
03. அரசானது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதுடன், எல்லா மதங்களுக்கு சம அளவில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
04. சகல மக்களுடையதும், இனத்தவர்களுடையதுமான அடிப்படை உரிமைகள் அங்கிகரிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.
05. சாதீயம், தீண்டாக்கெதிராக அரசியலமைப்பு பாதுகாப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்.
06. ஜனநாயக சோசலிஸ சமூகமொன்றில், அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட அரசாங்கக் கட்டமைப்புத்தான் மக்களதிகாரம் கொண்ட பங்குபற்றல்மிகு ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பும்.
என்பவற்றை பிரதமரிடம் சமர்ப்பித்தும் அதனால் ஒரு பயனும் இருக்கவில்லை.

பதவி விலகினார் செல்வா

இந்நிலையில், புதிய அரசியலமைப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டிய கட்டாயம் அமைச்சர்கள், தேசிய அரசு சபை உறுப்பினர்கள் (நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள்), நீதிபதிகள் போன்றோருக்கு இருந்தது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பை எதிர்த்த தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு, இதுவொரு சிக்கல் நிலையைத் தோற்றுவித்தது. 'இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக இருக்கவும், இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின்படி ஒழுகவும் சத்தியப்பிரமாணம் செய்கிறேன்' என்ற வகையிலமைந்த சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியிருந்தது.

குறித்த அரசியலமைப்பை எதிர்த்தவர்கள், புறக்கணித்தவர்கள் அதே 'அரசியலமைப்பின்படி ஒழுகுவதற்கு' சத்தியப்பிரமாணம் செய்வது ஏற்புடையதா, என்பதே சிக்கல் நிலைக்குக் காரணம். இலங்கைத் தமிழரசுக் கட்சி, இளைஞர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தமது சட்டவாக்கத்துறை பிரதிநிதிகள் குறித்த சத்தியப்பிரமாணத்தை எடுத்து, தேசிய அரசு சபைக்குச் செல்ல அனுமதியளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, 1972ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி, தமிழரசுக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளும் தேசிய அரசு சபையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தமிழரசுக் கட்சியினரின் இந்தச் செயல், இளைஞர்களிடையே கடும் அதிருப்தியையும் விசனத்தையும் உருவாக்கியது. தமிழர்களின் பிரதிநிதிகளும் முதலாவது குடியரசு அரசியல் யாப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்தமையானது, தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதாக அமையும் என்பது, இளையோர் தரப்பின் வாதமாக இருந்தது. தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாஷைகளுக்கும் இடமளிக்காத, அதேவேளையில், எல்லாச் சமரச முயற்சிகளுக்கான வாயில்களையும் அடைத்துவிட்டுள்ள இந்தப் புதிய அரசியலமைப்பை, தமிழ் மக்கள் எந்தவகையிலும் ஆதரிக்க முடியாது என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது.

சட்டவாக்க சபையிலிருந்து வெளியேறி, வெகுஜனப் போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என இளைஞர்கள் தமது பிரதிநிதிகளுக்கு அழுத்தம் தந்தனர். இந்த நிலையில், தமிழ் பிரதிநிதிகளும் சத்தியப்பிரமாணம் செய்தமையை அரசாங்கம் தமக்குச் சாதகமானதொன்றாகவும், தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் காட்டிக்கொண்டது.

இந்நிலையில், இளைஞர்களது எதிர்ப்பு, தமிழரசுக்கட்சிக்குள் அதிகமாகத் தொடங்கிய வேளையில், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான சா.ஜே.வே.செல்வநாயகம், 1972 ஒக்டோபர் 3ஆம் திகதி தன்னுடைய தேசிய அரசு சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இடைத்தேர்தல் நடத்தட்டும், அதில் தமிழ் மக்கள், புதிய அரசியலமைப்பு தொடர்பான தமது நிலைப்பாடு என்னவென்பதைப் புரியவைப்பார்கள் என்று சொன்னார் செல்வநாயகம்.

தனது இராஜினாமாத் தொடர்பில், தேசிய அரசு சபையில் உரையாற்றிய சா.ஜே.வே.செல்வநாயகம், 'முடிவு தமிழ் மக்களுடையதாகும். நடைபெற்ற விடயங்களைக் கருத்தில்கொள்ளும் போது, என்னுடைய கொள்கையானது, இலங்கை தமிழர்களுக்கு தாம் அடிமை இனமாக இருக்கப் போகிறார்களா, சுதந்திர மக்களாக இருக்கப் போகிறார்களா என அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது.

இந்த நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம், என்னோடு மோதட்டும். நான் தோற்றால், என்னுடைய கொள்கையை நான் கைவிட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோற்குமானால், அது தன்னுடைய கொள்கையையும், அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லுவதை நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டார். செல்வநாயகத்தின் இந்த இராஜினாமாவானது, தமிழ் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழ் இளைஞர்கள், காந்திய வழியினை விட, சேர்ச்சிலின் 'இரத்தம், வேதனை, கண்ணீர், வியர்வை' என்ற வழியை விரும்பினார்கள். ஏனெனில், சிங்கள-பௌத்த தலைமைகள், பிரித்தானியரைப்போல நாகரிகமடைந்தவர்களாக இல்லை என்று அவர்கள் கருதினார்கள் என பேராசிரியர்.ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். இந்தப் பதவி விலகல் அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் செல்வநாயகம் செய்தபோது, ஓர் இளைஞன் அவருக்கு இரத்தத் திலகமிட்டான்.

'நாம் இந்த நாட்டிலே மரியாதையோடு வாழ வேண்டுமென்றால், நாம் இந்த அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும், இல்லையென்றால், நாம் அடிமைகளாக வாழவேண்டியதுதான்' என்று அந்தக் கூட்டத்தில் செல்வநாயகம் பேசினார். செல்வநாயகம் பதவி விலகியவுடன் இடைத் தேர்தல் நடத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை. அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்ததால், 1975ஆம் ஆண்டுவரை காங்கேசன்துறை இடைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவேயில்லை.

பல்கலைக்கழக அனுமதியில் 'தரப்படுத்தல்'

இலங்கைத் தமிழ்ச் சமூகமானது, அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழ் சமூகமானது காலனித்துவக் காலகட்டத்திலிருந்து கல்விச் சமூகமாக தன்னை வடிவமைத்திருந்தது. தன்னுடைய பிரதான வாழ்வாதாரமாக கல்வியினாலும் விளையும் தொழில்வாய்ப்பை, குறிப்பாக அரசதுறை வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்வியில் உயர் தேர்ச்சி பெற்றிருந்தது. அதனால்தான் இலங்கையின் காலனித்துவ வரலாற்றிலும், சுதந்திரத்தின் பின்னரும் கூட, மிக முக்கிய பதவிகளிலும் மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் சிவில் உத்தியோகத்திலும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க நிலையிலிருந்தனர்.

சிறிமாவோ தலைமையிலான அரசாங்கத்தினால் 1971இலும், 1972இலும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'தரப்படுத்தலானது' தமிழ் மக்களின் அடிமடியிலேயே கைவைப்பதாக அமைந்தது. 'தரப்படுத்தலின்' மூலம் பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பில், வெளிப்படையாக இன ரீதியாக ஓரவஞ்சனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. இதுவே தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணமாகவும் அமைந்தது. ஏனெனில், கல்வி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வின் உயிர்நாடியாக இருந்தது, 'தாம் திட்டமிட்டமுறையில் உயர் கல்வியிலிருந்து ஒதுக்கித்தள்ளப்படுகிறோம் என்பதைவிடக் கொடும் வேதனை தமிழர்களுக்கு இருக்கமுடியாது' என வோல்டர் ஷ்வாஸ் குறிப்பிடுகிறார்.

1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்கள'ச் சட்டத்தின் அறிமுகத்தோடு, தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தன. 1956இல் இலங்கை நிர்வாகச் சேவையில் 30 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமானார்கள். 1956இல் மருத்துவம், பொறியியல், விரிவுரை போன்ற துறைகளில் அரசபணியில் 60 சதவீதமாக இருந்த தமிழர்கள், 1970இல் 10 சதவீதமாக ஆனார்கள்;. 1956இல் எழுதுவினைஞர் சேவையில் 50 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 5 சதவீதமாக ஆனார்கள். 1956இல் ஆயுதப் படையில் 40 சதவீதம் இருந்த தமிழர்கள், 1970இல் 1 சதவீதம் ஆனார்கள். தமிழ்ப் புலமையாளர்கள், தொழில்நிபுணர்கள் என பலரும் புலம்பெயர்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தமிழ் மக்கள், அரச சேவையில் வஞ்சிக்கப்பட்டிருந்த நிலையில், சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களின் உயர் கல்விக்கும் குந்தகம் விளைவிக்கும் 'தரப்படுத்தல்' நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

அன்றைய பல்கலைக்கழக அனுமதிகள், தகுதி அடிப்படையிலேயே அமைந்தன. அதிக புள்ளிகள் பெறுபவர்களுக்கு முன்னுரிமை. இதனால் அதிக போட்டி நிறைந்த மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு பெருமளவு மாணவர்கள், வடக்கு-கிழக்கிலிருந்தும் கொழும்பிலிருந்துமே தெரிவாகினர். 1970இல், பொறியியல்துறைக்கு ஏறத்தாழ 40 சதவீதமும், மருத்துவத்துறைக்கு ஏறத்தாழ 50 சதவீதமும், விஞ்ஞானத்துறைக்கு ஏறத்தாழ 35 சதவீதமும் தமிழ் மாணவர்கள் தகுதியடிப்படையில் அனுமதி பெற்றனர். இந்த நிலையை மாற்றவேண்டும் இனவாரிஃமதவாரி ஒதுக்கீட்டு முறை வேண்டும் என சிங்கள-பௌத்த அமைப்புக்கள் குரல் கொடுக்கத் தொடங்கின.

1971ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், 'இனவாரி' தரப்படுத்தல் முறையை சிறிமாவோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது, குறித்த துறைக்கு பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகளைவிட, தமிழ் மாணவர்கள் பெற வேண்டிய புள்ளிகள் அதிகமாக இருந்தன. இரு இன மாணவர்களும், பரீட்சையை ஒரே மொழியில் (ஆங்கிலத்தில்) எழுதியிருப்பினும் இருவருக்குமான வெட்டுப்புள்ளிகளில் அதே வேறுபாடு இருந்தது. மருத்துவத்துறைக்கு அனுமதி பெற தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 229 புள்ளிகளே தேவை என நிர்ணயிக்கப்பட்டது. பௌதீகவியல் விஞ்ஞானத்துக்கு, தமிழ் மாணவர்களுக்கு 204 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 183 புள்ளிகளே வேண்டப்பட்டது. பொறியியலில், தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் தேவை என நிர்ணயிக்கப்பட்ட போது, சிங்களவர்களுக்கு அது வெறும் 227 ஆக அமைந்தது. இந்தத் 'தரப்படுத்தல்' முறையை விமர்சித்த தேவநேசன் நேசையா, இதனை 'பாரதூரமான இனவெறி நடவடிக்கை' என்று குறிப்பிடுகிறார். இந்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்ட கே.எம்.டீ சில்வா, இது ஐக்கிய முன்னணி அரசு, இலங்கையின் இன-உறவுக்கு ஏற்படுத்திய பெருந்தீங்கு என்கிறார்.

1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 'இனவெறி' 'தரப்படுத்தல்' முறை கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதால், அடுத்தடுத்த வருடங்களில் அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் விளைவாக நான்கு வருடங்களில், 'மாவட்ட ஒதுக்கீட்டு முறையின்' அடிப்படையில், நான்கு வேறுபட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெளிப்படையான இனவாரி ஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, மறைமுகமாக அதனைச் சாத்தியமாக்குவதாகவே 'மாவட்ட ஒதுக்கீட்டு முறை' அமைந்தது. தகுதி அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்று வந்த தமிழ் மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்வதை மட்டுப்படுத்துபவையாகவே, இந்த ஒவ்வொரு முறைகளும் இருந்தன. இது பற்றி குறிப்பிடும் பேராசிரியர்.சீ.ஆர்.டீ சில்வா 'அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு மாற்றமும் சிங்களவர்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தன, இது சிங்கள மக்களிடையே பெரும் ஆதரவு பெற்ற ஒன்றாக மாறியது. மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர, தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சி கண்டது' என்கிறார்.

இந்த இனவாரி ஒதுக்கீட்டு முறை, பல தகுதிவாய்ந்த தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகம் செல்வதைத் தடுத்தமை, தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழ முக்கிய காரணம் என, தனது இலங்கை இன முரண்பாடு பற்றிய அறிக்கையொன்றில் வேர்ஜீனியா லியரி குறிப்பிடுகிறார். இதையே பேராசிரியர் சீ.ஆர்.டீ.சில்வாவும் 'பல்கலைகழக அனுமதியில் பாகுபாடு என்ற விடயமே, யாழ்ப்பாண இளைஞர்களை களத்திலிறங்கிப் போராடச் செய்தது. அதுவே, தமிழ் ஐக்கிய முன்னணி தனிநாடு பிரிவினையைக் கோரவும் செய்தது' என்கிறார்.ஆனால், இலங்கை அரசாங்கம் 'தரப்படுத்தலுக்கு' வேறு நியாயங்களைச் சொன்னது.

(அடுத்தவாரம் தொடரும்...)

yarl.com 16 05 16