தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 42) தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 42) தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்
என்.கே.அஷோக்பரன் LLB (Hons)தமிழ் ஆயுதக் குழுக்களின் வரலாறு, தனித்து ஆராயப்பட வேண்டிய ஒரு பரப்பு. இதுபற்றிக் குறிப்பிடத்தக்க சுதந்திர ஆய்வுகள் ஏதும் இல்லை. ஒரு புறத்தில், ஆயுதக்குழுவுக்குச் சார்பான பிரசாரங்களும், மறுபுறத்தில் ஆயுதக்குழுக்களுக்கு எதிரான பிரசாரங்களுமே அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்களின் உருவாக்கம், டட்லி-செல்வாவின் தோல்வியின் பின்னரான காலப்பகுதியிலேயே இடம்பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது 'தோழர்களின்' அரசாங்கம், தமிழர்கள் மீது காட்டிய மெத்தனப்போக்கு, இந்தத் தமிழ் ஆயுதக் குழுக்களின் எழுச்சிக்கு உரமிட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சிறு குழுக்கள், சிறியளவிலான வன்முறைச் சம்பவங்கள் மூலம் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தன. பஸ்களை எரித்தல், வங்கிக்கொள்ளை, நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தல் என, வன்முறைப் பாதையைத் தேடிச் சில தமிழ் இளைஞர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். இதை அரசாங்கமும் நிச்சயம் அறிந்திருந்தது. தமிழ்த் தலைமைகளும் அறிந்திருந்தன. வன்முறை நிறைந்த விடுதலைப் போரொன்றின் பின்னர், கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, அன்று பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு பிறந்திருந்தமை இந்த இளைஞர்களையும் அதே பாதையில் செல்லத் தூண்டியது.
விசாரிக்க மறுத்த அரசாங்கம்
1974 ஜனவரி 10ஆம் திகதி, தமிழாராய்ச்சி மாநாட்டில் விழுந்த அடி, தமிழ் மக்களுக்கு இடியாக இருந்தது. அந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்று விசாரிக்கக்கூட அரசாங்கம் முன்வராதது, தமிழ் மக்களிடையே அதிருப்தியையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடும் சினத்தையும் உருவாக்கியது. ஆயுதக்குழு இளைஞர்களிடையேயும் குறித்த தாக்குதலுக்கு பழிவாங்கும் எண்ணம் வேரூன்றியது. இந்த இடத்தில்தான் குறித்த தாக்குதலுக்கு சிறிமாவோ அரசாங்கத்தையும், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அமைப்பாளரும் யாழ்ப்பாண நகரபிதாவுமான அல்ஃப்றட் துரையப்பாவையும் காரணமாக்கிய பிரசாரம், தமிழர்தரப்பில் பரவத் தொடங்கியது. நிச்சயமாக, தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிறிமாவோ தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதற்கு அல்ஃப்றட் துரையப்பாவைப் பலிக்கடாவாக்கியமை தொடர்பில் பல அரசியல் ஆய்வாளர்களும் வேறுபட்ட அபிப்பிராயங்களை முன்வைக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி அல்ஃப்றட் துரையப்பாதான் என்று, தமிழ் ஐக்கிய முன்னணியினரின் பிரசாரம் ஒரு புறத்திலிருக்க, மறுபுறத்தில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக இருந்த தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஐக்கிய முன்னணியாகச் சங்கமித்துவிட, அன்று யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு சிம்மசொப்பனமாக அல்ஃப்றட் துரையப்பாவே இருந்தார்.
ஆகவே, அவரை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்காகவே தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு அல்ஃப்றட் துரையப்பா மீது பழியைச் சுமத்துகிறது என சில விமர்சகர்கள் தமது கருத்தை முன்வைக்கின்றார்கள். இந்த விடயத்தில், இந்தப் புரியாச்சிக்கல் ஏற்பட சிறிமாவோ அரசாங்கமும் ஒரு முக்கியகாரணம். ஒழுங்கான முறையில் விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைத்து சுதந்திரமான ஒரு விசாரணையை சிறிமாவோ அரசாங்கம் நடத்தியிருந்தால், நிச்சயமாக குறித்த சம்பவத்துக்கான காரணங்கள் ஓரளவேனும் புலப்பட்டிருக்கும், ஓரளவேனும் வெளிவந்திருக்கும். எந்த விசாரணையையும் நடத்தாதுவிட்டதன் ஊடாக சிறிமாவோ அரசாங்கம், தன்னுடைய பிரதிநிதியான அல்ஃப்றட் துரையப்பாவை பலிக்கடாவாக்கிவிட்டது என்றும் சொல்லலாம். எந்தவொரு குற்றச் சம்பவத்திலும் இடம்பெறும் நீதவான் விசாரணை மட்டுமே இங்கும் இடம்பெற்றது. மின்சாரம் தாக்கி மக்கள் மரணமானார்கள் என்பதற்கு, உரிய மின்பிறப்பாக்கி உரிமையாளரை விசாரிக்க நீதவான் உத்தவிட்டார். பொலிஸார் ஏன் அப்பாவி மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டார்கள், இதன் பின்னாலிருந்த அரசியல்கரம் யாருடையது போன்ற கேள்விகள் இன்றுவரை தொக்கி நிற்கின்றன.
அரசுசாரா அமைப்பு நடத்திய சுதந்திர விசாரணை
அரசாங்கம் நடத்தியிருக்க வேண்டிய சுதந்திர விசாரணையை, யாழ்ப்பாணக் குடிமகன் குழு என்ற அரசசார்பற்ற அமைப்பு நடத்த விழைந்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஓ.எல். டீ க்றெஸ்டர், வி.மாணிக்கவாசகர் மற்றும் முன்னாள் ஆயர் வண.சபாபதி குலேந்திரன் ஆகியோர் சுதந்திர விசாரணையை மேற்கொள்ள அழைக்கப்பட்டனர். அவர்கள் 1974 மார்ச் மாதத்தில் தங்களுடைய அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கை, குறித்த சம்பவத்துக்கான காரணமாக பொலிஸாரைச் சுட்டியது. ஓர் அரசுசாரா விசாரணைக்குழுவுக்கு இருக்கக்கூடிய வரையறைகளுக்குள்ளாகவே விசாரணைகள் நடத்தப்பட்டன, ஒருவேளை இதுபோன்ற சுதந்திரமானதொரு விசாரணைக் குழுவினை அரசாங்கம் அமைத்திருக்குமானால், இன்னும் நிறைய உண்மைகள் வெளிவந்திருக்கக்கூடும். சிறிமாவோ அரசாங்கம் கள்ளமௌனம் சாதித்தது. சிறிமாவோ அரசாங்கத்தில் ஒரேயொரு தமிழ் அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியர் கூட, தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் மக்கள் மீது பொலி ஸாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டிக்கவில்லை. இந்த மௌனமும், மெத்தனப் போக்கும் தமிழ் மக்களின் சினத்தை அதிகப்படுத்தியது.
அல்ஃப்றட் துரையப்பா குறிவைக்கப்படுகிறார்
'அஹிம்சாவாதி' என்றும் 'ஈழத்துக் காந்தி' என்றும் புகழப்படும் சா.ஜே.வே.செல்வநாயகம் இருந்த அதே மேடைகளிலேயே, தமிழ் ஐக்கிய முன்னணிக்கு எதிரான அரசியல் தலைவர்கள் தமிழனத் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். அவர்களது மரணம் எப்படி இருக்கவேண்டும் என இளைஞர்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஆவேசமான வன்முறைப் பேச்சுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை செல்வநாயகம் மறுத்துப் பேசியது பற்றி எந்தப் பதிவுகளும் இல்லை. செல்வநாயகம் 'பாகின்ஸன்ஸ் நோயினால்' பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், தனது செவிப்புலனை பெருமளவு இழந்திருந்தார். ஆகவே இந்தப் பேச்சினைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று சிலர் சொல்வதுமுண்டு. ஆனால் செல்வநாயகத்தை 'தந்தை' என வியந்தழைக்கும் எந்தத் 'தனயர்களும்' கூட, இந்த வன்முறையைத்தூண்டும் ஆவேசப் பேச்சைக் கடிந்துகொள்ளவில்லை. அடுத்த நிலைத் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அணுகுமுறை இளைஞர்களைத் திருப்திப்படுத்துவதாக இருந்ததேயன்றி, உணர்ச்சிமிக்க இளைஞர்களோடு முரண்பட அன்று அவர் தயாராக இருக்கவில்லை.
இதற்கு முன்பே அல்ஃப்றட் துரையப்பா, பிரதி அமைச்சர் சந்திரசிரி போன்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதுல் முயற்சிகள் இந்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ் ஆயுதக் குழுக்களின் வரலாற்றில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனது கொள்ளைக்காக முதலில் உயிர் நீத்ததாகக் கருதப்படும் பொன்னுத்துரை சிவகுமாரன், 1972லேயே அல்ஃப்றட் துரையப்பாவின் காருக்குக் கீழ் குண்டினைப் பொருத்தி, அல்‡ப்றட் துரையப்பாவைக் கொல்ல முயற்சிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறைக்குப் பின்பு, அல்ஃப்றட் துரையப்பா கொல்லப்பட வேண்டும் என சிவகுமாரன் உறுதியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஜூன் மாதம் பொலி ஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட சிவகுமாரன், சயனைட் விழுங்கித் தற்கொலை செய்துகொள்கின்றார்.
1974 ஜூன் மாதம் 5ஆம் திகதி, மக்கள் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுச் செயற்படுகையில், தம்மால் சுற்றிவளைக்கப்பட்டபோது சிவகுமாரன், சயனைட் விழுங்கித் தற்கொலை செய்ததாக சிவகுமாரனைச் சுற்றிவளைத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவிருந்த உதவி ஆய்வாளர் விஜேசுந்தர குறிப்பிடுகிறார். தமிழ் அரசியல் வரலாற்றில், ஆயுதக்குழு இளைஞன் ஒருவன், சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்ட முதல் சம்பவம் இது. எதிர்காலத்தில் தமிழ்ப் போராளிகள் பலரினது கழுத்தில் சயனைட் குப்பி தொங்கியதற்கும், பல போராளிகள் சயனைட் விழுங்கித் தற்கொலை செய்துகொண்டமைக்கும் இதுதான் ஆரம்ப, ஆதர்ஷ புள்ளி.
அல்ஃப்றட் துரையப்பாவுக்கு சிவகுமாரன் மட்டும் குறிவைக்கவில்லை. இன்னோர் இளைஞனும் அல்ஃப்றட் துரையப்பாவைக் குறிவைத்திருந்தான். அந்த இளைஞனின் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அங்கு செட்டியுடன் மீண்டும் கைகோர்த்த பிரபாகரன், 1974 ஜூலையில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, தனது தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆயுதந்தாங்கிய இளைஞர்களை வேட்டையாடிக் கைதுசெய்யும் படலம் வேகமடையத் தொடங்கியிருந்தது. பொலிஸ் ஆய்வாளர்களான பஸ்தியாம்பிள்ளை, பத்மநாதன் மற்றும் தாமோதரம்பிள்ளை ஆகியோர் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்களைக் கைது செய்யத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அமைச்சர் செல்லையா குமாரசூரியர், தமிழ் ஆயுதக் குழுக்களை முளையிலேயே கிள்ளியெறியத் திண்ணம் கொண்டு அதற்கான அழுத்தத்தை பொலிஸாருக்கு வழங்கினார்.
அவசரத்தில் உருவான யாழ். பல்கலைக்கழக வளாகம்
இந்தநிலையில், அரசியல் பரப்பில் தமிழர்களைச் சாந்திப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையிருப்பதை உணர்ந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் மக்கள் வேண்டியதன் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முடிவை அவர் அறிவித்தார். தமிழர் மண்ணில் பல்கலைக்கழக வளாகம் அமைத்தல் என்பது வரவேற்கத்தக்கது. எனினும், இதற்குள் ஓர் அரசியல் சூழ்ச்சியும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். தமிழரசுக் கட்சி, திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிவந்தது. சிங்களமயமாகிக் கொண்டிருந்த திருகோணமலையில், தமிழர் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இது உதவும் என தமிழரசுக் கட்சி கருதியிருக்கலாம். ஆனால், சிறிமாவோ பண்டாரநாயக்க, பல்கலைக்கழக வளாகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கத் திட்டமிட்டமையானது, தமிழர்களைப் பிரித்தாளும் தந்திரமாகும். தமிழ் மக்களிடையே உள்ள பிரதேசவாரி, சாதிவாரிப் பிரிவினைகள் பற்றிச் சிங்களத் தலைவர்கள் நன்றாக அறிந்துவைத்திருந்தனர். அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் அவர்கள் பலமுறை வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். பிரித்தானியர், இலங்கையர் மீது கையாண்ட பிரித்தாளும் தந்திரத்தை, சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்கள் மீது கையாண்டனர். எமது வரலாற்றை உற்றுக் கவனித்தால் இந்த பிரித்தாளும் தந்திரம் அவர்களுக்கு நிறைய வெற்றியைத் தந்திருக்கிறது. திருகோணமலையில் அமைக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி வேண்டியதை, யாழ்ப்பாணத்தில் அமைக்க முடிவெடுத்ததனூடாக, சிறிமாவோ அரசாங்கம், தமிழர்களைப் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தும் தனது பகடைக்காய்களை உருட்டத்தொடங்கியது என சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.
பிரதமர் சிறிமாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை ஆரம்பிக்கும் பணிகள் மிகத்துரித கதியில் இடம்பெறத் தொடங்கின. யாழ்ப்பாண வளாகத்துக்கு பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி தலைவராக நியமிக்கப்பட்டார்.
சேர். பொன்னம்பலம் இராமநாதனால் அவருடைய சொந்தக் காணியில் ஆரம்பிக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி, யாழ். வளாகம் அமைவதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைக்க, தான் நேரில் செல்ல பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முடிவெடுத்தார். யாழ். பல்கலைக்கழக வளாகம் 1974 ஒக்டோபர் 6ஆம் திகதி, பிரதமர் சிறிமாவோ றத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கவினால் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆயுதக் குழுக்களும் தமிழ் இளைஞர்களும், குறித்த நிகழ்வையும் பிரதமர் கலந்துகொள்ளும் ஏனைய நிகழ்வுகளையும் புறக்கணிக்கவும், அதேவேளையில் சிறிமாவோ தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் அழைப்பு விடுத்தனர். தமிழ் அரசியல் தலைமைகள் இந்த இளைஞர்களின் கட்டளைக்கு அடிபணிய வேண்டிய சூழலில் இருந்தனர்.
இந்த இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படக்கூடிய வல்லமை அவர்களுக்கு இருக்கவில்லை எனச் சில அரசியல் விமர்சகர்கள் கருத்துரைக்கும் அதேவேளை, சிலரோ அவர்கள் தம்மால் செய்ய இயலாத சிலதைச் செய்வதற்கு, தாம் அமைதியாக இருந்துகொண்டு இந்த இளைஞர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என விமர்சிக்கின்றனர். எது எவ்வாறு இருப்பினும், அன்று இந்த இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. அதேவேளை ஆயுதக்குழு இளைஞர்களில் சிலர் பிரதமரின் வருகையின்போது தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.
yarl.com 06 06 2016