தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 44) தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை

10 12 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 44) தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

காங்கேசன்துறை இடைத்தேர்தல் முடிவுகள்
சா.ஜே.வே.செல்வநாயகம் 'தனியரசுக்கான' மக்களாணையைக் கோரியமையானது, அன்று பிரிவினையை வேண்டிய இளைஞர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. அவர்கள், செல்வநாயகத்தின் வெற்றிக்காக, குறித்த இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்தனர். இந்த இளைஞர்கள், தமது சுதந்திர தமிழீழக் கனவை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க அருமையாக சந்தர்ப்பமாக இதைக்கருதினர். மறுபுறத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் சார்பில் களமிறங்கியிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வி.பொன்னம்பலம், பிராந்திய தன்னாட்சி என்ற விடயத்தைப் பற்றிப் பேசினார். ஆனால், அரசாங்கம் இதனை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி, காங்கேசன்துறை இடைத் தேர்தல் நடந்தது. பதிவு செய்யப்பட்ட 41,227 வாக்காளர்களில் 35,737 வாக்காளர்கள், தமது வாக்கினை அளித்திருந்தார்கள். அதாவது 86.68 சதவீத வாக்களிப்பு வீதம் பதிவாகியிருந்தது. இவற்றில் வெறும் 168 வாக்குகள் செல்லுபடியற்றதாக நிராகரிக்கப்பட, 35,569 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்தன. தமிழ் ஐக்கிய முன்னணி சார்பில் 'வீட்டுச் சின்னத்தில்' போட்டியிட்ட செல்வநாயகம் 25,927 (72.55 சதவீதம்) வாக்குகளைப் பெற்றிருந்தார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நட்சத்திரச் சின்னத்தில் வி.பொன்னம்பலம் போட்டியிட்டு 9,457 (26.46 சதவீதம்) வாக்குகளைப் பெற்றிருந்தார். கப்பல் சின்னத்தில் போட்டியிட்ட எம்.அம்பலவாணர் 185 (0.52 சதவீதம்) வாக்குகளைப் பெற்றிருந்தார். 16,470 வாக்குகள் பெரும்பான்மையாகப் பெற்ற சா.ஜே.வே.செல்வநாயகம், காங்கேசன்துறை இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார்.

காங்கேசன்துறைத் தொகுதியில் கிடைத்த மிகப்பெரிய பெரும்பான்மை இதுவாகவே இருந்தது. ஆனால், இந்த வெற்றி செல்வநாயகத்தின் வெற்றியோ, தமிழ் ஐக்கிய முன்னணியின் வெற்றியோ மட்டும் அல்ல. இது தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை நிராகரித்ததற்கும், தனிநாடொன்றை வேண்டியமைக்குமான மக்களாணையும் கூட. தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை மாற்றியமைத்த தேர்தல் இது. இந்தத் தேர்தல் தொடங்கி இன்று வரை, தமிழர் தாயகப் பிரதேசத்தில் மக்கள் பிரதான தமிழ்க்கட்சி அல்லது கூட்டணி முன்வைத்த கோரிக்கையான தனிநாட்டுக்கோ, சமஷ்டிக்கோ அல்லது அதிகாரப் பகிர்வுக்கோ தொடர்ந்து தமது மக்களாணையை வழங்கி வருகிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் பேசிய செல்வநாயகம் 'வரலாற்றுக் காலம் முதல் அந்நியர் ஆதிக்கம் ஏற்படுத்தப்படும் வரை இந்நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபட்ட இறைமை கொண்ட மக்களாகவே வாழ்ந்துவந்திருக்கின்றனர். கடந்த 25 வருடகாலமாக, ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்காக எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, நாம் எம்மாலான சகல முயற்சிகளையும் முன்னெடுத்தோம். ஆனால், சுதந்திரம் பெற்றது முதல் வந்த ஒவ்வொரு சிங்கள அரசாங்கமும் தமது அதிகாரத்தை எமது அடிப்படை உரிமைகளை நசுக்கவும் அதன்மூலம் எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக ஆக்கவும் பயன்படுத்தின என்பது மிகுந்த வேதனையளிக்கும் விடயமாகும். தமிழ் மக்களுக்கெதிராக பாரபட்சமாகச் செயற்பட்டே இந்த

அரசாங்கங்கள் எம்மை இந்தநிலைக்கு கொண்டுவந்தன.

இந்த தேர்தல் முடிவுமூலம் நான் ஒன்றை எனது மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் சொல்ல விரும்புகிறேன். நான் இந்தத் தேர்தல் தந்த தீர்ப்பை, தமிழீழ தேசம் ஏலவே தமிழ் மக்களிடம் பொதிந்துள்ள இறைமையைக்கொண்டு விடுதலைபெற வேண்டும் என்பதற்கான மக்களாணையாகவே கருதுகிறேன். தமிழ் ஐக்கிய முன்னணி சார்பாக நான் ஓர் உறுதிமொழியைத் தருகிறேன். இந்த மக்களாணையை நாங்கள் நிச்சயம் முன்கொண்டு செல்வோம்' என்று குறிப்பிட்டார். இந்தப் பேச்சைக் கேட்ட மக்கள் கூட்டம், தமிழீழம் எங்கள் தாய்மண்;, தமிழீழம் எங்கள் அபிலாஷை என்ற வகையிலான கோஷங்களை எழுப்பியது. உணர்ச்சி வசப்பட்ட சிலர் தமது விரல்களைக் கீறி அதில் வழிந்த இரத்தத்தின் மூலம் செல்வநாயகத்துக்கு 'இரத்தத்திலகம்' இட்டனர். இந்த 'இரத்தத்திலகம்' இடும் கலாசாரம் பின்னர் அமிர்தலிங்கம் காலத்திலும் தொடர்ந்தது.

ஆனால், இந்த உணர்ச்சிப்பெருக்குக்கும். பிரிவினைக் கோசத்துக்குமான விலை அதிகமாகவே இருந்தது. அதனை தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் கொடுக்க வேண்டிவந்தது. காங்கேசன்துறை இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் பிரதேசங்கள் எங்கிலும் தமிழீழக் கோசம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் அவசரகாலச்சட்டம் எனும் இரும்புக்கரம் கொண்டு தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து தடுத்துவைக்கத் தொடங்கியது. தமிழ் தலைமைகள் மிரட்டப்பட்டனர். உயிர்க்கொலைகளும் ஆங்காங்கே நிகழ்ந்தன. கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பரராசா என்ற ஒரு வங்கி எழுதுவினைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை மலையக பெருந்தோட்டங்களிலும் பரவியது.

சிறிமாவோ அரசாங்கம், பெருந்தோட்டங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தது. சிங்கள மக்கள் பெருந்தோட்டங்கள் மீண்டும் தமக்கு சொந்தமாக்கப்படும் எனும் எண்ணம் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே, 'அந்நியர்கள்' என்றும் 'கள்ளத்தோணிகள்' என்று முத்திரைகுத்தப்பட்டிருந்த அப்பாவி தோட்டத்தொழிலாளர்களின் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்களைத் தோட்டங்களை விட்டு வெளியேற்றுவதற்காக தொழிலாளர்களின் வசிப்பிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. லெட்சுமணன் என்ற இளைஞன் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தான். பெருந்தோட்டப் பகுதி தமிழ் மக்களின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலை காரணமாகவே அரசாங்கம் இந்த வன்முறைகளை நிகழ்த்தியது என ஒரு சாரார் குற்றம் சுமத்தினர். எது எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு நாடு முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருந்தது.

ஆனால், செல்வநாயகம் உறுதியாக இருந்தார். 1975 மே மாதம் கொக்குவில்லில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய செல்வநாயகம், தமிழ் மக்கள் கோரியுள்ள தமிழீழத்தை விட மிகச்சிறிய அளவிலான, மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகள் பலவும் சுதந்திர அரசுகளாக இருக்கின்றன. அப்படி இருக்கையிலே, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மட்டும் தம்மைத்தாமே ஆள்வதற்கான ஒரு தனிநாட்டைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.

அல்ஃப்றட் துரையப்பா படுகொலை

தமிழர் நலன்களுக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கத்தை, தமிழ் ஆயுதக்குழு இளைஞர்கள் எதிரியாகவே கண்டனர். எதிரிகளோடு கூட்டுச்சேர்ந்த தமிழர்களை 'துரோகிகள்' என்று முத்திரை குத்தினர். ஏற்கெனவே, காசி ஆனந்தன் போன்றவர்கள் இந்தத் 'துரோகிகளுக்கு' தமிழ் இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும் என்ற பாணியிலான பேச்சுக்களை மேடைகளில் பேசி வந்தனர். ஏலவே, பொன்னுத்துரை சிவகுமாரன் 'துரோகி' என முத்திரை குத்தப்பட்ட அல்ப்றட் துரையப்பாவைக் கொல்ல எடுத்த முயற்சி தோல்விகண்டிருந்தது. சிவகுமாரன் முன்னெடுத்த கருமத்தை, தான் முடித்துவைக்க, 'புதிய தமிழ்ப் புலிகள்' என்ற அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற 20 வயது இளைஞன் தயாரானான்.

யாழ்ப்பாண மேயராக இருந்த அல்ப்றட் துரையப்பா கொல்லப்பட பல காரணங்களை தமிழ் ஆயுதக்குழுக்கள் முன்வைத்தன. இதில் தமிழாராய்ச்சி மாநாட்டு கலவரமும் உயிரிழப்பும் முக்கிய காரணங்களாக முன்னிறுத்தப்பட்டன. ஆனால், தமிழாராய்ச்சி மாநாட்டு கலவரத்துக்கும் அல்ப்றட் துரையப்பாவுக்கும் நேரடிச் சம்மந்தம் இருப்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது ஒரு சாராரின் கருத்து. தமிழ் ஐக்கிய முன்னணியின் பிரசாரம் தான் அல்ப்றட் துரையப்பாவைப் பலிகடாவாக்கியது என்கிறார்கள் சில விமர்சகர்கள். 'தமிழின எதிரிகள்' என முத்திரை குத்தப்பட்ட சிறிமாவோ அரசாங்கத்தை தமிழர் பிரதேசத்தில் அல்ப்றட் துரையப்பா பிரதிநிதத்துவம் செய்வதோடு அதனை பிரபலப்படுத்த முயற்சிப்பதும் இன்னொரு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.

பிரபாகரனும் தோழர்களும், அல்ப்றட் துரையப்பாவை குறிவைத்ததும் தமிழர் ஆயுதப் போராட்டத்தின் அரசியல் படுகொலை வரலாறு எழுதப்படத் தொடங்கியது. அல்ப்றட் துரையப்பா கிறிஸ்தவராக இருந்தாலும் வாரம் தோறும் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் குறைந்த அந்தக் கோவிலின் அழகும், நிசப்தமும் தனது மனதுக்கு நிறைந்த அமைதியைத் தருவதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். நகர அமைப்பாளராக இருந்த ராஜசூரியரிடம் அல்ப்றட் துரையப்பா பகிர்ந்து கொண்டதாக, தனது கட்டுரையொன்றில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.

1975 ஜூலை 27ஆம் திகதி அல்ப்றட் துரையப்பா, தனது பேஜோ 404 காரிலே பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். கோவில் வாயிலைத் தாண்டி சில மீற்றர்கள் தொலைவில் அவரது கார் நின்றது. துரையப்பா தனது காரிலே இருந்து இறங்கியதும், சில இளைஞர்கள் 'வணக்கம் ஐயா' என்றனர். துரையப்பாவும் பதிலக்கு 'வணக்கம் தம்பிகள்' என்றார். பிரபாகரன், தனது துப்பாக்கியை எடுத்து அல்ப்றட் துரையப்பாவின் நெஞ்சிலே சுட்டார். சுருண்டு விழுந்த அல்ப்றட் துரையப்பாவின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. பிரபாகரனும் இளைஞர்களும், துரையப்பாவின் கார் சாரதியை விரட்டிவிட்டு, அதே காரிலே ஏறித் தலைமறைவானார்கள். தமிழ் ஆயுதப்போராட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் படுகொலை இவ்வாறுதான் நடத்தப்பட்டது எனப்பதிவு செய்கிறார் ரீ.சபாரட்ணம்.
இந்த அரசியல் படுகொலை தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போனது. சிறிமாவோ பண்டாரநாயக்கவும் அதிர்ந்து போனார். ஓர் ஆயுதப் புரட்சி அல்லது அதற்கான அறிகுறி என்பது எந்தவோர் அரசாங்கத்துக்கும் அச்சந்தரக்கூடிய சவாலாகும். தமிழ் மக்களிடம், குறிப்பாக யாழ் மக்கள் அதிர்ந்து போனார்கள்.

அல்ப்றட் துரையப்பா, சிறிமாவோ அரசாங்கத்தின் ஆளாக இருந்தாலும், அரசாங்கத்தை ஆதரித்தாலும் தனிப்பட்ட ரீதியில் மக்கள் விரும்பும் மிக நல்ல மனிதராகவே இருந்தார் என்பது பல விமர்சகர்களினதும் கருத்தாகும். அவர், யாழ். நகரபிதாவாக (மேயராக) இருந்தபோது யாழ். நகரம் பெருமளவுக்கு அழகுபடுத்தப்பட்டதோடு, நிறைய புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. எல்லாவற்றையும் விட அரசியல் எதிரியை அல்லது மாற்றுக்கருத்துடையவனின் உயிரைக் கொல்லுதல் என்பது அன்றைய சூழலில் புதியதொரு விடயமாகவும், அதிர்ச்சிதரக் கூடிய ஒன்றாகவே இருந்தது.

அல்ப்றட் துரையப்பா கொல்லப்பட்டதும், இந்தக் கொலைக்குப் பின்னால் இருப்பது அவரது உட்கட்சிப் போட்டியாளரான அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தான் என்ற பேச்சும் எழுந்தது. அதேவேளை, பிரபாகரன் தலைமையிலான புலிகள் குழுவினர்தான் இக்கொலையைச் செய்தார்கள் என்ற கருத்தம் பரவியது. ஆனால், உடனடியாக புலிகளோ வேறு அமைப்பினரோ இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கவில்லை. 1978 ஏப்ரல் 25ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்ட திறந்த கடிதத்தில் அவ்வமைப்பு அல்ப்றட் துரையப்பா படுகொலை உட்பட பதினொருவரின் படுகொலைகளுக்கு பொறுப்பேற்றிருந்தது. அல்ப்றட் துரையப்பாவின் இறுதிச் சடங்குகள் மிகப்பெரியளவில் யாழ். நகர மண்டபத்தில் இடம்பெற்றன. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அமைச்சர்களான மைத்திரிபால சேனநாயக்க, ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ரீ.பி.இலங்கரட்ண, பீ.பீ.ஜீ.களுகள்ல உட்பட்ட மொத்த அமைச்சரவையும் அல்ப்றட் துரையப்பாவின் இறுதிச் சடங்குகளில் பிரசன்னமாயிருந்தனர்.

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள அச்சம் கொள்ளவில்லை. அவர்கள், தாம் கலந்துகொண்டால், தாம் தாக்குதலுக்குள்ளாகலாம் என அச்சம்கொண்டுள்ளதாக அன்றைய குற்றப்பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ராமச்சந்திரா சுந்தரலிங்கத்திடம் குறிப்பிட்டிருந்ததாக ஜானக பெரேரா தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். தமிழரசுக் கட்சியிலிருந்து பின்னர் சிறிமாவோ அரசாங்கத்துக்கு ஆதரவு தந்த சீ.எக்ஸ்.மாட்டீன், அல்ப்றட் துரையப்பாவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டார்.

இந்தக் கொலை தொடர்பிலும், ஆயுதக்குழுக்களுடனான தொடர்புகள் தொடர்பிலும் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அல்ப்றட் துரையப்பாவின் கொலையை தமிழரசுக் கட்சித் தலைவர்களோ, தமிழ் ஐக்கிய முன்னணித் தலைவர்களோ குறிப்பிடப்படும்படி கண்டித்ததாகப் பதிவுகள் இல்லை. இந்த அமைதிக்குக் காரணம் இந்தத் தலைவர்கள் இந்தப் படுகொலையை ஆதரித்தார்கள் என்பதா, அல்லது இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளோடு உடன்பட்டார்கள் என்பதா, அல்லது இந்த ஆயுதக்குழுக்களை எதிர்க்கும் வலு அவர்களிடம் இல்லை என்பதா அல்லது இந்த ஆயுதக் குழுக்களை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை என்பதா?
( தொடரும்...)

yarl.com 20 06 2016