தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-47) இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள்

05 01 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-47) இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள்

என். கே. அஷோக்பரன் LLB (Hons)

லங்கா சமசமாஜக் கட்சியின் பதிலடி
லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா, லெஸ்லி குணவர்த்தன ஆகியோர் பிரதமர் சிறிமாவோவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டனர். ஆரம்ப காலங்களிலிருந்தே இடதுசாரிகள் இருபெருங்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கையற்றே இருந்தனர்.
1962 இல் நாடாளுமன்ற உரையொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியையும் பற்றிக் குறிப்பிட்ட கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா, 'அழுக்குகளில் தரம் கூடிய அழுக்கு, தரம் குறைந்த அழுக்கு என பிரித்துப் பார்க்கும் வல்லமை எனக்கில்லை' என இருபெரும் கட்சிகளையும் „அழுக்குகள்... எனச் சாடிப் பேசியிருந்தார்.

ஆனாலும் ஆட்சி அதிகாரத்தை தாம் கைப்பற்ற வேண்டுமானால் அது இருபெரும் கட்சிகளிலொன்றுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதனை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இந்த விசயத்தில் இடதுசாரிகளுக்கு முன்னோடி „மாக்ஸியப் புரட்சியாளன்... பிலிப் குணவர்த்தனவையே சாரும். வெறும் மாக்ஸியமும் இடதுசாரித்துவமும் மட்டும் ஆட்சிப் பதவி பெறப்போதாது, அதனுடன் பேரினவாதமும் இணையும்போதுதான் அது வலுப்பெறும் என்பதை முதலில் உணர்ந்து, பெருங்கட்சிகளுடன் கூட்டணியமைத்தவர் பிலிப்குணவர்த்தனவே.

இதேவழியைப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியும் தேர்ந்தெடுத்தன. அதன் விளைவாகத் தாம் முன்னர் தூக்கி நிறுத்திய கொள்கைகளையே அவர்கள் கைவிடவேண்டிய நிலைவந்தது. எந்தத் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வாவும் கலாநிதி என். எம். பெரேராவும் லெஸ்லிகுணவர்த்தனவும் உணர்ச்சி பொங்கப் பேசியிருந்தார்களோ, அவர்களே சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்று கூறிய 1972 ஆம ;ஆண்டு முதலாம் குடியரசு யாப்பை எழுதினார்கள். 'மதம் என்பது வெகுஜனங்களின் ஒபியம்' என்று சொன்ன கார்ள்மாக்ஸின் சீடர்கள் பௌத்தத்தை அரச மதமாக்கிய அரசியல் யாப்பை உருவாக்கினார்கள். எதனை அவர்கள் அழுக்கு என்று கருதினார்களோ, அந்த அழுக்குடன் கட்டிப்புரண்டு, உருண்டு தம்மையும் அழுக்காக்கிக் கொண்டார்கள். கடைசியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவர்களை தூக்கியெறிந்தது. தம்மை கழற்றி விட்ட சிறிமாவோ அரசாங்கத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க எண்ணிய லங்கா சமசமாஜக் கட்சியினர் 1975 டிசம்பர் 23 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) கொண்டு வந்தனர்.

சிறிமாவோ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நடிவடிக்கைகள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றியே இருந்தது. லங்கா சமசமாஜக் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவர்கள் மிகச் சிறந்த கல்விமான்களாக மட்டுமல்லாது, திறமையான பேச்சாளர்களாகவும் இருந்தார்கள். அதிலும் கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா இலங்கையின் புகழ்பூத்த சட்டத்தரணிகளில் ஒருவர். ஆகவே பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை மிகக்காத்திரமாக முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களில் பிரதானமானது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் அவரது பிள்ளைகளும் காணி சீர்திருத்தச் சட்டத்திற்கு விரோதமாக நடந்தமையும் (குறித்த சட்டத்தின் கீழ்காணிகளை விற்க முடியாத காலப்பகுதியில் கூடிய விலைக்கு ஒரு விற்பனையைச் செய்தமை) மற்றும் காணி தொடர்பான இன்னும் சில குற்றச்சாட்டக்களுமாகும்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் விவரமான உரையொன்றை ஆற்றிய கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா 'ஒரு நாட்டின் பிரதமரானவர் எந்த ஐயங்களுக்கும் இடந்தராத நிலையில் இருக்க வேண்டும். நாம் இங்கு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதமர் ஐயமிக்க வகையில் நடந்திருக்கிறார். அத்தகைய நடவடிக்கையினால் அவர் மீதான நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்திருப்பதனால் நம்பிக்கைத்துரோகம் இழைத்து விட்டார்' என்று பேசினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய விவசாய அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவ 'பிரதமர் சிறிமாவோ மீது குற்றம் சுமத்த முன், அவர்கள்தமது பரம்பரைச் சொத்தான 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியை காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு வழங்கியவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 2,000 ஏக்கர்கள் கொடுத்தவர்கள் வெறும் 82 ஏக்கர் காணியிலா முறைகேடு செய்திருப்பார்கள்?' என்று கேள்வியெழுப்பியதுடன் 'பிரதமர் சிறிமாவோவும் அவரது கணவரும் அரசியலுக்காக நிறையத் தியாகம் செய்திருக்கிறார்கள். தங்கள் சொந்த சொத்துக்களை தாமாக முன்வந்து இந்த நாட்டுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரது கணவர் தன்னுயிரையே தனது கொள்கைக்காக தியாகம் செய்திருக்கிறார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது பிரதமர் சிறிமாவோ மீது அவதூறு

சொல்லும், அவரது அரசியல் மதிப்பைக் கெடுக்கும் கேவலமான செயல்' என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா 'உணர்ச்சி மிகுவார்த்தைகளால் உண்மையை மாற்றியமைத்துவிட முடியாது. 2,000 ஏக்கர் தாமாக முன்வந்து விட்டுக் கொடுத்ததாக பேசினார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. காணி சீர்திருத்தச் சட்டத்தின் விளைவாக காணியுரிமையை இழந்த எவரும் தாமாக முன்வந்து காணிகளைவிட்டுத் தரவில்லை. அரசாங்கத்தின் கொள்கையடிப்படையிலான சட்டமொன்றின் விளைவாகவே அவர்கள் காணியுரிமையை இழந்தார்கள். அந்தச் சட்டத்தின்படி காணிகள் அரசுடமையாக்கப்பட்டது. இங்கு யாரும் தாமாக முன்வந்து காணிகளை விட்டுத் தரவில்லை' என்று பேசினார்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சகலரும் எதிர்பார்த்தது போலவே தோல்வியடைந்தது. வெறும் 43 பேர் ஆதரவாகவும் 100 பேர் எதிராகவும் வாக்களித்ததன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சியினர் கொண்டு வந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரேரணை மீதான வாதப்பிரதிவாதங்களில் வெளிவந்த விடயங்களினால் பிரதமரினதும் அவரது அரசாங்கத்தினதும் பெயர் களங்கமடைந்தது. அத்துடன் பிற்காலத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க மீது முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவும், அதன்படி அவரது குடியுரிமை பறிக்கப்படவும் லங்கா சமசமாஜக் கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது வைத்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையாக அமைந்தன. அந்த வகையில் தம்மை தூக்கி எறிந்த பிரதமர் சிறிமாவுக்;கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் தக்க பதிலடியை லங்கா சமசமாஜக் கட்சி வழங்கியது எனலாம். ஆனால் இதன் பின்னர் ஒருபோதும் லங்கா சமசமாஜக் கட்சியினாலோ, கம்யூனிஸ்ட் கட்சியினாலோ 1970 இல் சிறிமாவுடனான கூட்டணியில் பெற்றதைப் போன்றதொரு ஆட்சிப் பலத்தினை இதுவரை பெறமுடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஆனால் இந்தப் பிரச்சினை இத்தோடு நின்று விடவில்லை. 1976 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனவினால் அன்றைய நிதியமைச்சரும் நீதியமைச்சரும் பிரதமர் சிறிமாவின் இயக்குகரம் என்று அறியப்பட்டவருமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பிக்கப்பட்டது. ஜே. ஆர். ஜெயவர்த்தனவுக்கு எதிராக போலி ஆதாரங்களை தமது நீதியமைச்சர் என்ற அதிகாரத்தை அரசியல் இலாபங்களுக்காக துஷ்பிரயோகம் செய்து உருவாக்கியமை; தனது உறவினரை அரச கருவூலத்தின் செயலாளராக நியமித்ததுடன் அவரினூடாக தானும் மனைவியும் தங்கையும் இரத்தினக்கல் வியாபாரம் தொடர்பான இரகசிய தகவல்களை அறிந்து கொண்டு தமது இலாபத்துக்குப் பயன்படுத்தியமை; வேண்டுமென்றே தவறான தகவல்களை சபைக்களித்து தேசிய அரசுப் பேரவையை தவறாக வழிநடத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீது முன்வைக்கப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றியது பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் கைங்கரியமே என்ற பரவலான பேச்சு இருந்தது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் ஐக்கிய முன்னணி (தமிழரசுக் கட்சி), லங்கா சமசமாஜக் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. இதன் மீதான விவாதம் நீண்டு அமைந்ததுடன் அன்றைய தினம் நள்ளிரவு வரை நீடித்தது. இறுதியில் சில நுட்பவியல் காரணங்களினால் வாக்கெடுப்பு நடத்தப்படாது போனதில் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க் கட்சிகளும் கடும் விசனமடைந்தன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இத்தோடு இதனை விட்டுவிடவில்லை. பிற்காலத்தில் சிறிமாவோவுக்கு மட்டுமல்லாது, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிற்கும் எதிராக முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டன.

தெற்கின் அமைதியும் வடக்கின் விரக்தியும்

தெற்கில் இரு பெருங்கட்சிகளிடையேயான அரசியல் போட்டி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பற்றி சிந்திக்க தெற்கிற்கு நேரமிருக்கவில்லை. இது தமிழ் மக்களையும் அரசியல் தலைமைகளை சினத்தினதும் விரக்தியினதும் விளிம்புக்குக் கொண்டு சென்றது. ஏற்கெனவே தனிநாட்டுக்கான மக்களாணையை காங்கேசன்துறை இடைத்தேர்தலில் செல்வநாயகம் பெற்றிருந்தார். ஆனால் அது ஒரு தொகுதி மட்டுமே என்பதும், செல்வநாயகத்தை எதிர்த்து போட்டியிட்ட வி. பொன்னம்பலம் 9,457 (26.46%) வாக்குகளைப் பெற்றமையும் தமிழ் மக்கள் முழுமையாக „தனிநாடு... என்ற கொள்கையுடன் ஒன்றுபடவில்லையோ என்ற எண்ணத்தை உருவாக்கியது. இதற்கு வியாக்கியானம் தரும் சில அரசியல் விமர்சகர்கள் வி. பொன்னம்பலம் பெற்ற வாக்குகளின் பெரும் பகுதி
வி. பொன்னம்பலம் என்ற தனிமனிதன் மீதான அபிமானத்தில் வழங்கப்பட்டது என்பார்கள். எது எவ்வாறாயினும் தனிநாடு என்பதுதான் தமிழ் மக்களின் அபிலாஷை என்றால் அதற்கான வலுவானதொரு மக்களாணையைப் பெறவேண்டிய கடமை தமிழ் ஐக்கிய முன்னணிக்கு இருந்தது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

இந்த நிலையில்தான் தமிழர் அரசியல் வரலாற்றின் மிகமுக்கியமான நிகழ்வு, தமிழரின் அரசியல் தலையெழுத்தையும் எதிர்கால அரசியலையும் வரையறுத்த நிகழ்வு இடம்பெற்றது. 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு வட்டுக்கோட்டையிலுள்ள பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில ;அதன் தவிசாளர் சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. பண்ணாகம் தமிழரசுக் கட்சியின் அன்றைய „தளபதியான... அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பிறந்த ஊராகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணியானது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) என்று பெயர் மாற்றம் பெற்றதுடன் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டார். தமிழரின் தனிவழி அரசியலின் உத்தியோகபூர்வ பிரகடனமாக அறியப்படுகின்ற „வட்டுக்கோட்டைத் தீர்மானம்... சா. ஜே. வே. செல்வநாயகத்தினால் முன்மொழியப்பட்டு, மு. சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்டு அங்கு கூடியிருந்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

„ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீளஉருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது... என்று பிரகடனம் செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழ் மக்கள் தனியரசு கோருவதற்கான வரலாற்றுப் பின்னணியினையும் அதற்கான நியாயங்கள் மற்றும் காரணங்களையும் அப்படி அமைகின்ற தனியரசின் இயல்புகளையும் அத்தகைய தனியரசை பெறுவதற்கான வழிமுறையையும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தெளிவாக எடுத்துரைத்தது. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்வரும் தேர்தலில் மக்கள முன்சமர்ப்பித்து இதற்கான மக்களாணையைப் பெறத்தமிழரசுக்கட்சி எண்ணம் கொண்டிருந்தது.
(தொடரும்... )

jarl.com 11 07 2016