தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-49) தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க 'ட்ரையல்-அட்-பார்' வழக்கு

25 01 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-49) தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க 'ட்ரையல்-அட்-பார்' வழக்கு

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ்த் தலைவர்கள் கைது
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) மாநாட்டில், 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்ட பின்னர், அதனை மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மும்முரமாக இருந்தார்கள். தமிழர்களுக்கு தனியரசு கோரும் 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' பிரதிகள் துண்டுப்பிரசுரமாக மக்களுக்கு வழங்கப்பட்டன.இந்நிலையில் 1976 மே 21 ஆம் திகதி தேசத்துரோகத் துண்டுப்பிரசுரங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை என்ற குற்றங்களின் பேரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அதன் பொதுச் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சாவகச்சேரித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், ஊர்காவற்றுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ரட்ணம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரான மு.சிவசிதம்பரம், பருத்தித்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். மறுதினம் மு.சிவசிதம்பரம் விடுதலை செய்யப்பட்டாலும் மற்றைய நால்வரும் விமானம் மூலம் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்டு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் தேசத்துரோகக் குற்றத்துக்காக 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டார்கள்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' பிரதிகளை சா.ஜே.வே.செல்வநாயகம் உட்பட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பலரும் தம்வசம் வைத்திருந்தாலும், அதனை விநியோகித்திருந்தாலும், இந்த நான்கு தலைவர்களும், அதிலும் குறிப்பாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனித்துக் குறிவைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, பின்னர் அவருக்கெதிராக குற்றவியல் வழக்கும் பதிவுசெய்யப்பட்டமையானது, அமிர்தலிங்கத்தை அரசியலிலிருந்து அகற்றுவதற்கான திட்டமாக இருக்கலாம் என பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் 'சா.ஜே.வே.செல்வநாயகமும் இலங்கைத் தமிழ்த் தேசியமும் (ஆங்கிலம்)' என்ற தனது நூலில் கருத்துரைக்கிறார்.

ட்ரையல்-அட்-பார்

குறித்த தலைவர்களுக்கெதிராக குற்றவியல் வழக்கொன்றை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கும் நோக்கில், அரசாங்கமானது அவசரகாலச் சட்டவொழுங்குகளில் திருத்தமொன்றைச் செய்ததனூடாக நடைமுறையிலிருந்த அறங்கூறும் அவயத்து (ஜூரி) விசாரணை முறைக்குப் பதிலாக யாதாயினுமொரு முக்கியத்துவம்மிக்க குற்றவியல் வழக்கை தான் நியமிக்கும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டமைந்த 'ட்ரையல்-அட்-பார்' முறையில் விசாரிக்கச் செய்யும் அதிகாரத்தை பிரதம நீதியரசருக்;கு வழங்கியது. இதன்படி அன்றைய சட்டமா அதிபர் சிவா பசுபதியினால் அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குறித்த வழக்கை 'ட்ரையல்-அட்-பார்' முறையில் விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஜே.எப்.ஏ. சோஸா, ஏ.ஜீ.டி சில்வா, சிவா செல்லையா ஆகியோர் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை குறித்த நீதிபதிகள் முன்பு 1976 ஜூன் 18 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

ஒன்றுபட்ட தமிழ்ச் சட்டத்தரணிகள்

இந்தச் சந்தர்ப்பத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.திருச்செல்வம் மற்றும் கொழும்பிலுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் ஒன்றுபட்டு ஏறத்தாழ 61 சட்டத்தரணிகள் குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜராகினர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் ராஜா அப்புக்காத்துவான சா.ஜே.வே.செல்வநாயகமும், ராணி அப்புக்காத்துவான ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இணைந்து வழக்காடியமையாகும். ராஜா அப்புக்காத்து (King’s Counsel - KC) அல்லது ராணி அப்புக்காத்து (Queen’s Counsel - QC) என்பது இலங்கை பிரித்தானிய முடியின் கீழிருந்த காலத்தில் ஒரு வழக்குரைஞருக்கு (Counsel) கிடைக்கத்தக்க உயர் கௌரவமாகும். இந்தக் கௌரவத்தினைப் பெற்றவர்களே பட்டுத்துணியாலான வழக்கறிஞர் துகிலை அணியும் அந்தஸ்தைப் பெற்றவர்களாவர்.

பிரித்தானிய முடியாக ராஜா ஒருவர் இருக்கும் போது இந்த அந்தஸ்தைப் பெற்றவர் ராஜா அப்புக்காத்து என்றும், பிரித்தானிய முடியாக ராணி ஒருவர் இருக்கும் போது இந்த அந்தஸ்தைப் பெற்றவர் ராணி அப்புக்காத்து என்றும் அறியப்படுவார். இந்த விடயம் பற்றிய குறிப்பொன்றை தான் 2012 இல் ஆற்றிய மு.சிவசிதம்பரம் நினைவுப்பேருரையிலும் 2013 இல் ஆற்றிய செல்வநாயகம் நினைவுப்பேருரையிலும் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், சட்டத்தரணியுமான ரவூப் ஹக்கீம் பின்வருமாறு பதிவு செய்திருந்தார். 'தந்தை செல்வா கிங்ஸ் கவுன்சல் அதாவது மன்னர் அப்புக்காத்து ஆவார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் குவின்ஸ் கவுன்சல் அதாவது ராணி அப்புக்காத்து ஆவார். தந்தை செல்வா மன்னர் அப்புக்காத்து என்றவகையில் சிரேஷ்டர் (மூத்தவர்) என்பதால் அவருக்கு கனிஷ்டராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்த வழக்கைப் பேசுவாரா என்ற சந்தேகம் நிலவியது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்த வழக்கில் அண்ணன் அமிர்தலிங்கத்துக்காக ஆஜரானது ஒரு பெரிய சாதனை. அவர்கள் சித்தாந்த ரீதியில் வேறுபட்டவர்கள். மு.திருச்செல்வம் (ராணி அப்புக்காத்து) மற்றும் அண்ணன் சிவா (மு.சிவசிதம்பரம்) ஆகியோரின் முயற்சியின் வெற்றியே இதனைச் சாத்தியமாக்கியது.'ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்காக பல வழக்கறிஞர்கள் ஆஜராகும்போது மூப்பு நிலை முக்கியம் பெறும். சிரேஷ்ட வழக்குரைஞராக ஒருவரும், ஏனையவர்கள் அவருக்கு கனிஷ்டராகவும் ஆஜராவார்கள். இந்நிலையில் இவர்களுள் தொழில்நிலையில் சா.ஜே.வே.செல்வநாயகம் மூத்தவர். ஆதலால், அவரின் கனிஷ்டராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜராவாரா என்ற ஐயம் பலருக்கும் அன்றிருந்தது. இது ஒரு குற்றவியல் வழக்கு. சா.ஜே.வே.செல்வநாயகம் திறமைமிக்க ஒரு சிவில் வழக்குரைஞர். ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலம்தான் மிகச்சிறந்த குற்றவியல் வழக்குரைஞர். ஆகவே ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜராவது மிக முக்கியமானதொன்றாக இருந்தது. இந்த எல்லா கரிசனங்களைக் கடந்து ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்த வழக்கில் ஆஜரானார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வாதம்

வழக்கில் ஆஜரான ராணி அப்புக்காத்துவான ஜீ.ஜீ.பொன்னம்பலம் குற்றம் சாட்டப்பட்டவர் இந்நீதிமன்றுக்கு இவ்வழக்கினை விசாரிக்கும் அதிகாரமில்லையென்ற நிலைப்பாட்டினை எடுப்பார் என்று நீதிமன்றத்துக்கு அறிவித்தார். ஆயினும், நீதிமன்றத்துக்குரிய மரியாதையினை வழங்கும் முகமாக குற்றப்பத்திரிகையை ஏற்பதாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்களை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொள்கிறாரா இல்லையா என்று கேட்கப்பட்டபோது, சில முக்கிய விடயங்களை வாதிடப்பட இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ போவதில்லை என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த சட்ட மாஅதிபர் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்களை மறுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், குற்றம் சாட்டப்பட்டவர் இந்த நீதிமன்றம் உருவாவதற்கு அடிப்படையான அவசரகாலச் சட்டவொழுங்குகளின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குட்படுத்துவதனால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ தேவையில்லை என்றார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரான அமிர்தலிங்கம் ஏன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்ற காரணத்தை நீதிமன்றத்துக்குச் சொல்வதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் நீதிமன்றின் அனுமதியைப் பெற்றார்.
அதன்படி அமிர்தலிங்கம் 'இந்நீதிமன்றமானது செல்லுபடியற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதனால் நான் என்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ போவதில்லை' என்று நீதிமன்றத்திலுரைத்தார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணை வேண்டினார்கள். சட்ட மாஅதிபர் நீதிமன்றம் பிணை வழங்குவதை எதிர்க்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதுடன், வழக்கு விசாரணை ஜூலை 12 ஆம் திகதி இடம்பெறும் என்று முடிவானது.

வழக்கு விசாரணை ஆரம்பமானபோது ஜீ.ஜீ.பொன்னம்பலம் இரண்டு பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார். முதலாவதாக, குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படையானதும், குறித்த நீதிமன்றம் அமைவதற்கு அடிப்படையானதுமான அவசரகாலச் சட்டவொழுங்குகள் செல்லுபடியற்றவை என்றும், இரண்டாவதாக, 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியற்றது என்றும் தனது பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

முதலாவது பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பிலான வாதங்களை ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்வைத்தார். தற்போது நடைமுறையிலிருக்கும் அவசரகால நிலையானது 1972 மே 15 ஆம் திகதி ஆளுநரின் ஆணைக்பேற்ப நடைமுறைக்கு வந்தது. அன்று 1947 ஆம் ஆண்டின் 'சோல்பரி' அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. அதன் கீழ் அவசரகால நிலையை பிரகடனம் செய்வது பற்றி முடிவெடுக்கும் மற்றும் பிரகடனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே இருந்தது. ஆனால் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு இந்நிலையை மாற்றிவிட்டது. 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பின் கீழ் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வது பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமருக்கே இருக்கிறது. பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யலாம்.

1972 மே 15 அன்று செய்யப்பட்ட அவசரகாலப் பிரகடனமானது ஆளுநரால் செய்யப்பட்டது, அது பிரதமரின் ஆலோசனையின்படி செய்யப்படவில்லை. ஆகவே, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததும் மீண்டும் புதிதாக பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அவசரகாலநிலையைப் பிரகடனம் செய்திருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை என்பதால் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகால நிலை செல்லுபடியற்றதாகும். ஆகவே, அவசரகால நிலையின் கீழ் உருவாக்கப்பட்ட சகல சட்டவொழுங்குகளும் செல்லுபடியற்றது என்பதுடன் எவ்வித சட்டவலிதும் அற்றதாகும் என்று தனது வாதத்தை ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்வைத்தார். மேலும் இந்நீதிமன்றமும் அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் உருவானதால், இந்நீதிமன்றும் வலிதற்றது என்றும், அவசரகாலச் சட்டவொழுங்குகளின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சட்டவிரோதமானவை என்றும் வாதிட்டார்.

மு.திருச்செல்வத்தின் வாதம்

இரண்டாவது பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பிலான வாதங்களை மு.திருச்செல்வம் முன்வைத்தார். 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பினை இயற்றுவதற்கு ஐக்கிய முன்னணிக்கு போதிய மக்களாணை இருந்ததா என்பது ஐயத்துக்குரியது. ஒருவேளை சிங்கள மக்களின் ஆணை இருந்தது என்று கருதினாலும், இந்நாட்டின் தமிழ் மக்கள் அவர்களை ஆதரித்திருக்கவில்லை. மாறாக தமிழரசுக் கட்சிக்கே தமது மக்களாணையை வழங்கினர். ஆகவே 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பை இயற்றுவதற்கான மக்களாணை ஐக்கிய முன்னணிக்கு இருக்கவில்லை என்று வாதாடினார். தொடர்ந்தும் 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியலமைப்பு செல்லுபடியற்றதற்கான சோல்பரி அரசியலமைப்பின் 49 சரத்து உட்பட பல்வேறுபட்ட காரணங்களையும் முன்வைத்து வாதிட்டார். (இவை பற்றி முன்னைய அத்தியாயங்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது).

மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு

வழக்கு விசாரணை முடிவடைந்து, 1976 செப்டம்பர் 19 திகதி நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. 67 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பிலே, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலே எழுப்பப்பட்ட முதலாவது பூர்வாங்க ஆட்சேபனையை நீதிமன்று ஏற்றுக்கொண்டது. அதன்படி அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்படாமையினால், அதன்கீழ் உருவான சட்டவொழுங்குகள் செல்லபடியற்றவை.
அதனால் அச்சட்டவொழுங்குகளின் கீழ் அமைக்கப்பட்ட இந்நீதிமன்றம் முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன். இதன் நிமித்தம் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. இரண்டாவது பூர்வாங்க ஆட்சேபனை பற்றிக் குறிப்பிட்ட நீதிமன்று, முதலாவது குடியரசு அரசியலமைப்பின் செல்லுபடித்தன்மை பற்றி ஆராயும் அதிகாரம் இந்நீதிமன்றுக்கு இல்லை எனத் தீர்ப்பளித்தது.

மேன்முறையீடு

அவசரகால நிலை செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு அரசாங்கத்துக்கு பேரிடியாக வந்தது. ஏற்கெனவே அவசரகால சட்டவொழுங்குகளின் கீழ் பல வழக்குகள் நிலுவையிலிருந்த நிலையில், அவசரகால நிலை செல்லுபடியற்றது அந்த வழக்குகளும் கைவிடப்பட வேண்டி வரலாம். இது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது. இந்தத் தீர்ப்பை மாற்றியமைப்பதற்கான மேன்முறையீட்டை சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோன், நீதியரசர் ஜீ.ரீ.சமரவிக்ரம, நீதியரசர் வீ.ரீ.தாமோதரம், நீதியரசர் நொயெல் தித்தவல, நீதியரசர் டபிள்யூ.டீ.குணசேகர ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வானது குறித்த மேன்முறையீட்டை விசாரித்து, அவசரகாலநிலை முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது என்றும், அது செல்லுபடியானது என்றும் தீர்ப்பளித்ததுடன், மேல் நீதிமன்றமானது குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கப் பணித்தது.

வழக்கைக் கைவிட முடிவு

இதன் பின்னர் சட்ட மாஅதிபர் தாம் அந்த நால்வர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்தாதிருக்க தீர்மானித்திருப்பதாக நீதிமன்றுக்கு அறிவித்ததுடன், இதனை தான் முறையாக மேல் நீதிமன்றத்தில் அறிவிப்பதாகவும் கூறினார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்தில் 1977 பெப்ரவரி 10 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை தாம் மேற்கொண்டு நடத்தப்போவதில்லை என்று சட்ட மாஅதிபர் நீதிமன்றிற்கு அறிவித்தார். அதன்படி அமிர்தலிங்கம் உட்பட நான்கு தலைவர்களும் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு இந்த வழக்கு சோதனைக்காலமாக இருந்தாலும், இதுவும் அடுத்த தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சாதனைக்கும் காரணமானது.

( தொடரும்...)

yarl.com 25 07 2016