தமிழ் மக்களின்அபிலாஷைகள் என்ன? பகுதி - 51 - 1978ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்: வெற்றியை நோக்கி ஜே.ஆர்

15 02 2017

தமிழ் மக்களின்அபிலாஷைகள் என்ன? பகுதி - 51 - 1978ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்: வெற்றியை நோக்கி ஜே.ஆர்

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தோல்விகளின் காரணம் என்ன என்று தேடிய ஜே.ஆர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த டட்லி சேனநாயக்கவின் மரணத்தைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியேற்றதிலிருந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வந்தார். 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த படுதோல்வியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு ஜே.ஆரிடமிருந்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வி வெட்கக்கேடானதொரு தோல்வியாகும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அரசியலில் யாரென்றே தெரியாத புதுமுகங்களிடமெல்லாம் 2,500 இற்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்திலெல்லாம் தோல்வி கண்டிருந்தார்கள்.

சுதந்திர இலங்கையில் 1952 தவிர ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த மற்றைய சந்தர்ப்பங்களில் எல்லாம் (1947, 1960 மார்ச், 1965) மிகச்சிறிய பெரும்பான்மையை, அல்லது கூட்டணியாட்சியையே அமைத்திருந்தது. 1952 ஆம் ஆண்டில் பெற்ற குறிப்பிடத்தக்க பெரும்பான்மையென்பது, “தேசபிதா” என்று கருதப்படும் டி.எஸ்.சேனநாயக்கவின் அகால மரணத்தோடு ஏற்பட்ட அனுதாப அலையின் விளைவுதான். மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1956 மற்றும் 1970 ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் மாபெரும் எழுச்சிமிகு வெற்றியைப் பெற்றிருந்தது. அதுபோலவே ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் பாரதூரமான தோல்வியாக அவை அமைந்தன. 1956 இல் வெறும் எட்டு ஆசனங்களையும், 1960 ஜூலையில் 30 ஆசனங்களையும், 1970 இல் வெறும் 17 ஆசனங்களையும் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மோசமான தோல்விகளைச் சந்தித்திருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்விகளைச் சந்தித்த போது கூட அவை கணிசமான ஆசனங்களைப் பெற்றிருந்தன. 1960 மார்ச்சில் 46 மற்றும் 1965 இல் 41 என தோல்வியிலும் சொல்லத்தக்க ஆசனங்களை சுதந்திரக்கட்சி பெற்றிருந்தது. ஜே.ஆர் இந்த வித்தியாசத்துக்கான காரணத்தை உன்னிப்பாக ஆராய்ந்ததாக ஜே.ஆரின் வாழ்க்கை வரலாற்று நூலிலே அதன் எழுத்தாளர் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.

அதிகார அரசியல்

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியல் எப்போதும் “அதிகார அரசியல்” சார்ந்ததாகவே இருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அதனைத் தக்கவைப்பதுமே அரசியல் என்ற மாக்கியாவலியின் “இளவரசன்” பாணியிலான அரசியலை ஜே.ஆரில் காணலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கும் பின்னடைவுக்கும் சுதந்திரக் கட்சியின் எழுச்சிக்கும் காரணம் தேடிய ஜே.ஆருக்கு சில அடிப்படைகள் புலப்பட்டதாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார். இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ ஒரே தன்மையினதான வேட்பாளர்களையே களமிறக்கியிருந்தன. இரு கட்சிகளிலும் ஏறத்தாழ சம அளவிலான நிலவுடைமையாளர்களும் ஏனையோரும் இருந்தனர். அவ்வாறிருக்கையில் இரண்டு கட்சிகளுக்குமிடையிலான கொள்கை வேறுபாடு என்ன என்று கவனிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி “உள்ளவர்களின்” கட்சி என்ற வகையிலும், சுதந்திரக்கட்சி “இல்லாதவர்களின்” கட்சி என்ற வகையிலுமான பொது அபிப்பிராயம் உருவாகியிருப்பதை அவர் உணர்ந்தார். காலமாற்றத்துக்கேற்ப ஐக்கிய தேசியக் கட்சியும் மாறவேண்டும்; அதுவே ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழி என ஜே.ஆர் உணர்ந்தார். 1970 இல் படுதோல்விக்குப் பின், வேறுவழியின்றி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை டட்லி சேனநாயக்க ஜே.ஆருக்கு வழங்கிய போது, தேசிய முக்கியத்துவம் மிக்க விடயங்களில் அரசாங்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயற்பட வேண்டும் என ஜே.ஆர் தனது முன்மொழிவைக் கட்சியின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் முன்வைத்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கட்சிக்குள் ஏற்பட்டதோடு, ஜே.ஆரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. இதன் தீவிரம் ஜே.ஆர் தன்னை கட்சியிலிருந்து நீக்காதிருக்க நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு பெறும் வரை சென்றது. ஜே.ஆரின் நோக்கம் சிறிமாவோ அரசாங்கத்தை ஆதரிப்பதல்ல! மாறாக, மக்களிடம் செல்வாக்கு மிக்க, தேசிய முக்கியத்துவம் மிக்க திட்டங்களை சிறிமாவோ அரசாங்கம் முன்னெடுக்கும் போது அதனால் வரும் மக்களின் அபிமானத்தின் பங்கை தாமும் பெறவேண்டும் என்பதே! அதாவது பெரும்பான்மை மக்கள் வெறுக்கும் காரியத்தை அரசாங்கம் செய்யும்போது அதனை எதிர்த்தல், பெரும்பான்மை மக்கள் விரும்பும் காரியத்தை அரசாங்கம் செய்யும் போது அதனை ஆதரித்து மக்களின் நன்மதிப்பைத் தாமும் பெறுதல். கட்சிக் கொள்கை என்பது ஜே.ஆரைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெறவில்லை. மாறாக மக்களின் அபிமானத்தை வெல்லுதல், ஆட்சியதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றுதல் என்ற பாணியிலேயே அவரது அரசியல் இருந்ததை நாம் உணரமுடியும். டட்லியின் மரணத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை அவர் ஏற்றபொழுது அவரது பார்வையானது “டட்லியிடமிருந்து எனக்குக் கிடைத்த இந்தப் பிணத்துக்கு உயிர் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது” என்ற பாணியில் இருந்ததாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.

மக்களின் அபிமானத்தை வெல்ல முயற்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்ற நாளிலிருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன தான் விரும்பிய மாற்றங்களை கட்சியினுள் ஏற்படுத்தத் தொடங்கினார். “வீதிக்கிறங்குதல்”, “மக்களோடு மக்களாகப் போராடுதல்” என்பவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த தலைவர்கள் பெரும்பான்மையானோருக்கு அந்நியமான விடயமாகவே இருந்தது. இந்த விடயத்தில் ஜே.ஆர் ஒரு விதிவிலக்கு! அரசியலுக்கு வந்த ஆரம்ப காலங்களிலிருந்தே “வீதிக்கிறங்குதல்”, “பாதயாத்திரை”, “சத்தியாக்கிரஹம்” போன்றவற்றை முன்னெடுப்பதில் ஜே.ஆர் மும்முரமாக இருந்தார். அத்தோடு பெரும்பான்மை வாக்குவங்கியைத் திருப்திப்படுத்தத்தக்க விடயங்களைச் செய்வதிலும் ஜே.ஆர் அக்கறையோடு இருந்தார். 1956 இல் “தனிச்சிங்களச் சட்டத்தை” கொண்டு வந்தது எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவாக இருக்கலாம். ஆனால் 1944 இலேயே இதற்கான முன்மொழிவைக் கொண்டு வந்திருந்தவர் ஜே.ஆர். இப்போது அவரைத் தடுக்க யாருமில்லை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அவர். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான “தேசிய தொழிலாளர் சங்கம்” 1970 தேர்தல் தோல்விக்குப் பின் செயலிழந்து போயிருந்தது. 1973 இல் கட்சித்தலைமைப் பதவியை ஏற்றதும் ஜே.ஆர் அதனை மீள இயங்கச் செய்வதில் மும்முரம் காட்டினார். ஆரம்ப காலங்களிலிருந்தே தொழிற்சங்கத்தை நடத்துவதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுக்கு பெரும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இதற்கு மாற்றான சிந்தனையுடையவராக ஜே.ஆர் இருந்தார். அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதனைக் கொண்டு நடத்துவதற்கும் தொழிலாளர்களினது ஆதரவு அவசியம் என்பதை அவர் ஆரம்பத்திலிருந்து உணர்ந்திருந்தார்.

பிரசார ஆயுதங்கள்

சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூடிய பொருளாதார முறையின் விளைவாக உணவுப் பொருட்களிலிருந்து, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பலவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பாண் வாங்குவதற்கு வரிசைகளில் நின்று மக்கள் அல்லற்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இந்தத் தட்டுப்பாட்டை தனது முக்கிய பிரசார ஆயுதங்களுள் ஒன்றாக ஜே.ஆர் மாற்றினார். அடுத்ததாக சிறிமாவோவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன, இந்தக் குடும்ப ஆட்சிக்கெதிரான பிரசாரத்தையும் ஜே.ஆர் முன்னெடுத்தார். சிறிமாவோவின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது, இதனையும் தனக்குச் சாதகமாக்கி வேலையின்றித் தவித்த இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். தனது அமைச்சர்களின் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள் பற்றியெல்லாம் சிறிமாவோ பாராமுகம் கொண்டிருந்தார். இதனையும் தனது பிரசாரத்தின் முக்கிய ஆயுதமாக ஜே.ஆர் கையிலெடுத்தார். பிரசார ஆயுதங்கள் கையிலிருந்தாலும் அதனை முற்கொண்டு செல்வதற்கான ஊடகங்கள் அரசாங்கத்தின் கைப்பிடிக்குள் இருந்தன. ஜே.ஆரின் உறவினரான எஸ்மண்ட் விக்ரமசிங்ஹவினதும் விஜேவர்த்தன குடும்பத்தினதும் நிறுவனமான “லேக் ஹவுஸ்” சிறிமாவோ ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டிருந்தது. மற்றைய பத்திரிகை நிறுவனமான “ரைம்ஸ் குழுமம்” சிறிமாவோவின் புதல்வரான அநுர பண்டாரநாயக்கவின் கட்டுப்பாட்டிலிருந்தது. இன்னொரு பத்திரிகை நிறுவனமாக “சன் நிறுவனம்” அவசரகாலச் சட்டத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. இந்நிலையில் மக்களிடையே நேரடியாகச் செல்வதுதான் மிகப்பொருத்தமான பிரசார உத்தி என்பதை ஜே.ஆர் உணர்ந்திருந்தார்.

கட்சிக்கு புத்துயிரூட்டிய ஜே.ஆர்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதில் மும்முரம் காட்டிய ஜே.ஆர் நிறையப் புதியவர்களையும் இளைஞர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்தார், கட்சிக்குள் இருந்த பல இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் பல இளைஞர்கள் ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் களமிறக்கப்பட்டார்கள். இவர்களில் லலித் அதுலத்முதலி மற்றும் ஜே.ஆரின் உறவினரான ரணில் விக்ரமசிங்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஏற்கெனவே அரசியல் களத்திலிருந்த காமினி திசாநாயக்க, தஹம் விமலசேன, ரணசிங்க பிரேமதாஸ, றொனி டி மெல், நிஸ்ஸங்க விஜேரத்ன, விக்ரம வீரசூரிய, டிரோன் பெர்னான்டோ, நவீன் குணரத்ன ஆகியோருக்கும் ஜே.ஆர் முக்கியத்துவம் வழங்கினார்.

1973 இலிருந்து ஜே.ஆர் முன்னெடுத்த மாற்றங்கள், நகர்த்திய காய்கள் எல்லாமே 1977 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்காகக் கொண்டேயிருந்தது. இதுவரை காலமும் செல்வந்தர்களாலேயே கட்சிக்கு நிதிவசதி தரப்பட்டது. இதனை மாற்ற நினைத்த ஜே.ஆர், ஒரு ரூபாய் அங்கத்துவத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பொதுமக்களிடம் நிதி திரட்டியது மட்டுமல்லாமல், பெருமளவு மக்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த முறையின் மூலம் மட்டும் 1976 வரை ஏறத்தாழ 500,000 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 மே தின ஊர்வலத்தில் ஏறத்தாழ 300,000 பேர் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது ஜே.ஆரின் தேர்தல் வெற்றிக்கு ஆரூடம் சொல்வதாக இருந்தது.

மாறிய களநிலமைகள்

1977 தேர்தல் நெருங்கியபோது, இரு கட்சிகளினதும் கள நிலமைகள் மாறியிருந்தன. பணக்காரர்களினது கட்சி என்றறியப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்நாட்டின் ஏழை மக்களின் ஆதரவே அதிகமாக இருந்தது. முதலாளிகளின் கட்சி என்றறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு தொழிலாளர்களின் ஆதரவு கணிசமானளவில் இருந்தது. பெருங்கூட்டங்கள் நடத்துவதிலிருந்து மாறி அடிமட்டத் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்கும் “பொக்கற் கூட்டங்களை” அதிகளவில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்தது. மறுபுறத்தில் சுதந்திரக் கட்சியோ குடும்ப ஆட்சியிலும், ஊழலிலும் சிக்கித் திணறியது. பிரதான ஊடகங்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தது. பாரியளவிலான பொதுக்கூட்டங்களை, அரச போக்குவரத்துச் சேவை பேரூந்துகளில் மக்களைக் கொண்டுவந்து நடத்தியது.

ஜே.ஆர் தான் செய்ய விரும்பிய மாற்றங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தார். 1970 இல் படுதோல்வியடைந்திருந்த கட்சியை, தான் தலைமைப் பதவியேற்றதிலிருந்து நான்கு வருடங்களுக்குள் மக்களபிமானம் பெற்ற கட்சியாக மாற்றியிருந்தார். இதற்கு சிறிமாவோவின் அரசாங்கம் விட்ட தவறுகளும் முக்கிய காரணம், ஆனால் அதனைத் தனக்குச் சாத்தியமாக ஜே.ஆர் மாற்றியிருந்தார்.

தமிழர்களின் பிரச்சினை பற்றி ஐ.தே.க

இலங்கையின் இனப்பிரச்சினை, “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை”த் தொடர்ந்து தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறியது:  “தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்று வழங்கப்படாமையானது தமிழ் மக்கள் தனிநாடு கோரும் ஒரு குழுவை ஆதரிக்கும் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது. நாடு முழுவதினதும் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையின் காரணத்திற்காக குறித்த பிரச்சினைகள் காலவிரயமின்றித் தீர்க்கப்பட வேண்டுமெனக் கட்சி கருதுகிறது. எமது கட்சி ஆட்சிக்கு வரும்போது பின்வரும் துறைகள் சார்ந்து அவர்கள் கொண்டுள்ள கவலையைத் தீர்ப்பதற்காக சகல சாத்தியமான வழிறைகளையும் முன்னெடுக்கும்: (1) கல்வி, (2) குடியேற்றம், (3) தமிழ் மொழியின் பயன்பாடு, (4) பொதுக் கூட்டுத்தாபனங்களில் வேலைவாய்ப்பு. நாங்கள் ஒரு சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டி, அதன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம்.”

ஜே.ஆரின் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்சினை பற்றித் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த இந்த விடயம் எவ்வளவு இனிப்பாக இருக்கிறது! ஆனால் தேர்தல் முடிந்த சிலகாலத்திலேயே, 1958 இற்குப் பின்னர் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு கொடிய இனக்கலவரத்துக்கு முகங்கொடுக்க வேண்டி வந்தது. யதார்த்தம் அவ்வளவு இனிப்பாக இருக்கவில்லை.
( தொடரும்)

yarl.com 09 08 2016