புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)
( ஆர். ராம்)குறித்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தவிரவும் அரசியலமைப்பு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை குறித்த அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஐந்து வருடகாலத்திற்கு மாத்திரம் உள்ளடக்கியதாக ஏற்பாடுகளை செய்வது சிறந்ததாகும்.
கேள்வி:- அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தின் மீயுயர் தன்மை இழக்கப்படுகின்றதல்லவா?
பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலுவிழக்கப்படும். ஆனாலும் தற்போதிருக்கின்ற நீதிமன்றக்கட்டமைப்பின் பிரகாரம் உயர்நீதிமன்றமே உயர்ந்தது. அரசியலமைப்பு பற்றிய பொருள்கோடலுக்கான அவசியம் ஏற்பட்டால் அதனை சீர் செய்யும் நீதிமன்ற நியாயாதிக்கம் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கும். ஆரம்பத்தில் அரசியலமைப்பு நீதிமன்றம் தொடர்பில் முன்மொழிகின்றபோது நீதிபதிகள் கூட விரும்பியிருக்கவில்லை. இருப்பினும் அது தொடர்பாக உபகுழுவில் கலந்துரையாடப்பட்டதையடுத்து அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வருகின்றபோது ஏனைய நாடுகளின் அனுபவங்களையும் கருத்திற்கொண்டே நடைமுறைப்படுத்துவோம்.
கேள்வி:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு பாராளுமன்றத்திற்கான அதிகாரம் ஏற்படுத்தப்படுகின்றபோது ஜனாதிபதி பதவி வெறுமனே கௌரவப்பதவியாகிவிடுமே?
பதில்:-ஆம்.பெயரளவிலேயே ஜனாதிபதி என்கின்ற நிலைமை தான் ஏற்படும். எமது நாட்டில் 1978ஆம் ஆண்டு வரையில் இருந்த நிலைமைக்கே மீண்டும் செல்வதாக இருக்கும். வரலாற்றை எடுத்துப்பார்க்கையில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது இந்த நாட்டில் எதேச்சாதிகாரத்திற்கு தான் வழிகோலியிருக்கின்றது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதல் இறுதியாக மஹிந்த ராஜபக் ஷ வரையில் அதிகார துஷ்பிரயோகத்தை தான் மேற்கொண்டிருக்கின்றார்கள். இதில் விதிவிலக்காக சந்திரிகா பண்டாரநாயக்கவை சொல்ல முடியும்.
அதன் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய நாட்டின் தலைவர் இருக்கவேண்டுமென்பதே பலரின் கருத்தாகின்றது. அதுவொருபுறமிருக்கையில், எமக்குள்ள பிரதான பிரச்சினை மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள். தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் பிரகாரம் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தினால் அவர் தன்னுடைய முகவராக உள்ள மாகாண ஆளுநர்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்க முடியும் என 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு வழங்கப்பட்ட பொருள்கோடலில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படுகின்றபோது மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரம் நீக்கப்படுவதற்கும் வழியேற்படும். மாகாணங்களைப் பொறுத்தவரையில் ஆளுநர்கள் பெயரளவிலே இருப்பதோடு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்களிடத்தில் தான் மாகாண நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது தான் அதிகாரங்கள் மக்கள் கையிலே பகிரப்பட்டதாக இருக்கும்.
கேள்வி:மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ள முன்மொழிவுகளின் பிரகாரம் அரசியல் பிரதிநிதியொருவரிடத்தில்(மாகாண முதலமைச்சரிடத்தில்) பொலிஸ் தரப்பை கையாளும் அதிகாரம் நேரடியாக கையளிக்கப்படுகின்றதே?
பதில்:- அரசியலமைப்பில் 13ஆவது திருத் தம் செய்யப்பட்டபோது இருந்த நிலைமை 17ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மாறியிருந்தது. பொலிஸாரின் சுயாதீன தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. 18ஆம் திருத்தத்தின் ஊடாக மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் 19ஆம் திருத்தத்தின் ஊடாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரிவு சுயாதீனமாக இயங்க வேண்டுமென்பது நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரத்தை கொடுக்கின்றபோது அங்கே அரசியல் தலையீடுகள் ஏற்படுவதை யாரும் விரும்பாத விடயம்.
மத்தியில் எவ்வாறு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு செயற்படுகின்றதோ அதேபோன்று மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களுக்கும் சுயாதீன தன்மை வழங்கப்பட்டு அதன் கீழே தான் பொலிஸ் தரப்பும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முன்மொழிவே உபகுழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது 13ஆவது சரத் தில் காணப்படாததும் அதேநேரம் பொலிஸின் சுயாதீனத்தையும் உறுதிசெய்வது புதிய விடயமாகின்றது.
கேள்வி:-காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து எவ்வாறான முன்னேற்றம் காணப்படுகின்றது?
பதில்:- காணி அதிகாரங்கள் சம்பந்தமான விடயங்களை நேரடியாக வழிநடத்தல் குழுவே கையாளுகின்றது. அது குறித்து ஆராயப்பட்டுள்ளபோதும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரால் புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அந்த வரைபில் எவ்வாறு காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிரப்படலாம் என்பது கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் சர்வ கட்சிகளின் திஸ்ஸ விதாரண அறிக்கையிலும் காணி அதிகாரங்கள் பற்றி அறிக்கை உண்டு. ஆகவே அவற்றையொட்டியதாகவே காணி அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான இறுதி வடிவம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக மாகாணத்தின் அனுமதியின்றி காணிகளை மத்தி எவருக்கும் வழங்கலாம் என்ற தற்போதுள்ள முறைமை நிச்சயமாக தடுக்கப்படும்.
கேள்வி:- மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் அதிகார எல்லை தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாகவிருக்கும் ஒத்திசைவு பட்டியல் நீக்கப்படுமா?
பதில்:- ஒத்திசைவுப்பட்டியல் நீக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் ஏகோபித்த நிலைப்பாடாக இருக்கின்றது. குறிப்பாக பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கூட தனது அறிக்கையில் ஒத்திசைவுப்பட்டியல் நீக்கப்படவேண்டுமென கோரியிருந்தார். இருப்பினும் அந்த அறிக்கையை அவர் மீளப்பெற்றுவிட்டார். சந்திரிகாவின் வரைவு, திஸ்ஸ விதாரண அறிக்கை, தற்போதைய உபகுழுக்களின் பரிந்துரை அறிக்கைகள் என எதிலும் ஒத்திசைவு பட்டியல் பற்றி குறிப்பிடப்படவில்லை.
தேசிய கொள்கை என்பது அதிகாரப்பகிர்வுக்கு தடங்கலான விடயமாக உள்ளது என்பதை எமது அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். இருப்பினும் சில விடயங்களில் தேசிய கொள்கை அவசியமாகின்றது. தேசிய கொள்கையானது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அத்தியாவசியமாக இருக்கின்றது. ஜேர்மனி போன்ற நாடுகளில் ஒத்திசைவு பட்டியலில் இருக்கின்ற விடயங்கள் தொடர்பாகத் தான் தேசியக் கொள்கை இயற்றப்பட முடியும் என்றொரு ஒழுங்கு முறைமை உள்ளது.
அவ்வாறான சில தேவைப்பாடுகளுக்காக ஒரு ஒத்திசைவு பட்டியலை ஏற்படுத்தினால் அது பாதகமில்லை என்ற சிந்தனை களும் உள்ளன. ஆகவே ஒத்திசைவு பட்டியல் முழுமையாக நீக்கப்படுமா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாது. ஆனால் ஒத்திசைவு பட்டியல் உருவாக்கப்படுமாக இருந்தால் நாடு பூராகவும் தேசிய கொள்கை ஒன்று காணப்படவேண்டும் என்ற அவசியம் காணப்படும் பட்சத்திலேயே அதனை இணைத்துக்கொள்வதற்கு இணங்குவோம்.
கேள்வி:- ஒற்றையாட்சிக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு த.தே.கூ இணங்கிவிட்டதா? ஒற்றையாட்சி சொற்பதம் புதிய சாசனத்திலும் இருக்குமா?
பதில்:- ஒற்றையாட்சிக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கி விட்டதாக சில அமைச்சர்கள் கூறியபோது அதனை உடனடியாக நாம் மறுத்திருக்கின்றோம். அதன் பின்னர் அந்த அமைச்சர்கள் இல்லை நீங்கள் எவ்வாறு இணங்கினீர்கள் என வாதிடவும் இல்லை. நிரூபிக்கவும் இல்லை. வழிநடத்தல் குழுவில் ஒற்றையாட்சி விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அதன்போது பிரதமரே தான் ஒற்றையாட்சிக்கு எதிரானவர் எனக் கூறியிருக்கின்றார். பிரதமரின் அவ்வாறான கூற்றை முன்வைப்பதற்கான காரணங்கள் வேறாக இருக்கின்றன.
ஒற்றையாட்சி முறைமை உள்ள நாடொன்றில் சாதாரண சட்டமொன்றினாலேயே நாட்டை பிரித்துக்கொடுக்க முடியும். கூட்டாட்சியால் அவ்வாறு முடியாது எனபதே பிரதமரின் கூற்றுக்கான காரணமாகும். நாட்டை பிளவுபடுத்தும் ஒற்றையாட்சியையா நீடிக்க வேண்டுமென கோருகின்றீர்கள் எனவும் பிரதமர் வழிநடத்தல் குழுவில் கேள்வியெழுப்பியிருந்தார். இதே கருத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதும் பிரதமர் கூறியிருந்தார்.
அச்சமயத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், நீங்கள் ஒற்றையாட்சியை எதிர்ப்பதற்கான காரணம் வேறு. நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம் வேறு எனச் சுட்டிக்காட்டினார். அச்சமயத்தில் பிரதமர், நீங்கள் என்ன காரணத்திற்காக எதிர்த்தாலும், நான் என்ன காரணத்திற்காக எதிர்த்தாலும் நாங்கள் ஒற்றையாட்சிக்கு எதிரானவர்கள் என்று பதிலளித்திருந்தார். இவ்வாறிருக்கையில் ஒற்றையாட்சி என்ற சொற்பிரயோகம் குறித்து நாங்கள் தீர்க்கமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். ஏனென்றால் சிங்கள மக்கள் மத்தியில் இதுவரையில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து அறியும் செயல்வடிவங்களில் பெரும்பான்மையானவர்கள் ஒற்றையாட்சி இருக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.
அவர்களிடத்தில் நீங்கள் எதற்காக ஒற்றையாட்சியை எதிர்க்கின்றீர்கள் எனக் கேள்வியெழுப்புகின்றபோது, நாடு பிரிவடைந்துவிடும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றோம் எனவும் அந்த மக்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். சிங்கள மொழியில் ஒற்றையாட்சி என்பதற்கு 'ஏக்கிய ரஜய' என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது. அந்த சொல் ஆட்சி முறையைக் குறிக்கும் சொற்பிரயோகம் அல்ல. அது நாடு ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிக்கும் சொற்பிரயோகமாகும்.
virakesari.lk 01 03 2017