தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 60) நிறைவேற்று ஜனாதிபதியும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும்

09 05 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 60) நிறைவேற்று ஜனாதிபதியும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும்

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
இலங்கையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்துவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவாக இருந்தது. தான் பெற்றுக்கொண்ட 5/6 பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டு 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பினூடாக அதனைச் சாத்தியப்படுத்தினார் ஜே.ஆர். சுதந்திரம் முதல் இதுவரைகாலமும் இலங்கையின் ஆட்சியானது வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியிலேயே அமைந்தது. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கூட வெஸ்ட்மினிஸ்டர் அடிப்படைகளில் பெரும் மாற்றமெதனையும் கொண்டுவரவில்லை. வெஸ்ட்மினிஸ்டர் மாதிரி என்பது பிரித்தானிய ஆட்சிமுறையைக் குறித்து நிற்கிறது. குறித்த அரசானது பெயரளவில் மகாராணியாரை அரசாங்கத்தின் தலைவராக கொண்டிருப்பினும் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையிடமே (கபினட்) காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடையவரை அரசாங்கத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரே சட்டவாக்கத்துறையின் தலைமையையும் நிர்வாகத்துறையின் தலைமையையும் ஏற்பார். அமைச்சரவையானது கூட்டுப்பொறுப்புடையதாக அமையும். இம்முறையானது அமெரிக்க முறையிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். 

அமெரிக்க ஆட்சிமுறையில் சட்டவாக்கத்துறையானது இரு அவைகளைக் கொண்ட அமெரிக்க காங்கிரஸிடமும் நிர்வாகத் துறையானது ஜனாதிபதியிடமும் இவற்றிலிருந்து வேறுபட்ட நீதித்துறையையும் கொண்ட அமைப்பாகும். இது பிரான்ஸ் அரசறிவியலாளர் மொன்டெஸ்க்யுவின் அதிகாரப்பிரிவுக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததொன்றாகும். அதாவது, சட்ட, நிர்வாக, நீதித் துறைகள் என்பன வேறுபட்ட நபர்களின் கீழ் அமைந்ததுடன் ஒன்றையொன்று மட்டுப்படுத்தும் வகையில் ‘தடைகளையும் சமன்பாடுகளையும்’ (checks and balances) கொண்டனவாக அமைந்திருக்கும்.
இலங்கையின் ஆட்சிமுறையை மாற்றியமைத்து, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரின் கீழ் நிர்வாகத்துறையைக் கொண்டுவரும் வகையில் புதிய அரசியலமைப்பை ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கியிருந்தார். இது வெஸ்ட்மினிஸ்டர் முறையிலிருந்து நீங்கி அமெரிக்க முறையையொத்த பலம்மிக்க ஜனாதிபதிமுறையை இலங்கையில் கொண்டு வரும் முயற்சியாக இருந்தது. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்த்தன இதனை முழுமையான அமெரிக்க மாதிரியில் வடிவமைக்கவில்லை. அவர் பிரதமர் என்ற பதவியும், கபினட் அமைச்சர்கள் என்ற பதவியும் தொடருமாறு இதனை வடிவமைத்தார். அதாவது அமெரிக்க மாதிரியில் காங்கிரஸிற்கும் நிர்வாகத்துறைக்குமிடையில் முழுமையான அதிகாரப் பிரிவுண்டு. அங்கு நிர்வாகத் துறையினர், சட்டவாக்கத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை; சட்டவாக்கத்துறையினர், நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை. ஆனால் பிரித்தானிய முறையில் நாடாளுமன்றத் தலைவரான பிரதமரே, நிர்வாகத்துறையின் தலைவராவார். பிரதமரால் நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். ஆகவே பிரதமரும், அமைச்சர்களும் சட்டவாக்கம் மற்றும் நிர்வாகம் ஆகிய இருதுறைகளிலும் ஈடுபடுவார்கள்.
இந்த இரண்டு முறைகளிலொன்றை தெரிவதை விட, இரண்டிற்கும் இடைப்பட்டதொரு முறையை ஜே.ஆர் தெரிவு செய்தார். சட்டவாக்கத்துறையில் எந்தவித நேரடிப் பங்குபற்றுதலுமில்லாத மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியே நிர்வாகத் துறைத் தலைவராக இருப்பார். ஆயினும் அந்த ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவையில் சட்டவாக்கத்துறைத் தலைவரான பிரதமரும் ஜனாதிபதியால் அமைச்சர்களாக நியமிக்கப்படும் சட்டவாக்கத்துறை உறுப்பினர்களும் காணப்படுவார்கள். ஜே.ஆர் தேர்ந்தெடுத்த இந்த முறையானது முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல், பிரான்ஸின் ஐந்தாவது சனநாயக அரசியலமைப்பினூடாக அறிமுகப்படுத்திய ஆட்சி முறையை பெரிதும் ஒத்தாக அமைந்திருந்தது.

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை வைத்து அதனூடாக இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை மக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உருவாக்குதற்குப் பதிலாக, அன்றைய பிரதமரான அவரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாகக் கருதப்பட்டு நேரடியாக அந்தப் பதவியை அடையும் வகையில் தனது பெரும்பான்மைப் பலத்தினூடாக சட்ட ஏற்பாடுகளைச் செய்து ஏலவே இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். அத்தோடு இலங்கையின் 2000 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்றில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசாங்கத் தலைவர்தான் என்று மார்தட்டிக்கொள்ளவும் செய்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று அவ்வப்போது தலைதூக்கிப் பார்க்கிறது. 2015 ஜனாதிபதித் தேர்தலில்கூட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது பற்றிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் ஜே.ஆர் வடிவமைத்திருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, ஜனாதிபதியை அதிகாரத்தின் குவியமாக மாற்றியிருந்தது. இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைப் பற்றி குறிப்பிடுபவர்கள் ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர எதனையும் சாதிக்கும் வல்லமை இலங்கையின் ஜனாதிபதிக்குண்டு’ என்று சொல்வார்கள். இதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன குறிப்பிட்டிருந்தார் என்ற பரவலான கருத்தும் உண்டு. இந்த அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் மட்டுமே வந்ததல்ல; மாறாக 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பினூடாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தியிருந்த இன்னொரு முக்கிய மாற்றமான தேர்தல் முறை மாற்றமும் இதற்குப் பங்களித்தது.

புதிய தேர்தல் முறை

இதுவரைகாலமும் இலங்கையில் தேர்தல்களானது தொகுதிவாரி முறையில் ‘முதலில் வருபவருக்கு வெற்றி’ என்ற அடிப்படையிலே நடத்தப்பட்டது. அதாவது இலங்கையானது தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிடுபவர்களில் எவர் அதிகளவு வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் அத்தொகுதியில் வெற்றிபெற்றவராவார். இதுவும் நாம் பிரித்தானியாவிலிருந்து பெற்றுக்கொண்ட ஒன்று என்பதுடன், இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தேர்தல் முறையாகும். இந்த முறையின் கீழ் தொகுதிகளில் பிரபல்யமானவர்கள், பெரும் கட்சிகளின் அபேட்சகர்கள், அந்தந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். ஆனால் இம்முறையின் கீழ் சிலவேளைகளில் குறித்த தொகுதியில் ஒட்டுமொத்த பெரும்பான்மையினர் விரும்பாத ஒருவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. உதாரணமாக ஒரு தொகுதியில் நால்வர் போட்டியிடும் நிலையில், ‘அ’ என்பவர் 20%, ‘ஆ’ என்பவர் 25%, ‘இ’ என்பவர் 30%, ‘ஈ’ என்பவர் 25% என்ற ரீதியில் வாக்குகளைப் பெற்றிருந்தால், அதிக வாக்குப்பெற்ற ‘இ’ வெற்றியாளராவார். ஆனால் அவரை தொகுதியின் 70% மக்கள் விரும்பியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த முறையின் கீழ் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பிரதேசங்களில் வாழ்ந்த சிறுபான்மையினருக்கு தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் வாய்ப்பு என்பது சூனியமாகத் தான் இருந்தது. குறிப்பாக கொழும்பு மற்றும் மலையகத்தின் நுவரெலிய தவிர்ந்த மற்றைய மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெற்றிபெறும் சாத்தியம் இருக்கவேயில்லை. சுருங்கக் கூறின் இந்தத் தொகுதிவாரி ‘முதலில் வருபவருக்கு வெற்றி’ முறையானது இலங்கையைப் பொறுத்தவரையில் இருகட்சி அரசியலுக்கு வலுச்சேர்த்ததேயன்றி சிறுகட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் வெற்றிபெறக்கூடிய சாத்தியம் காணப்படவேயில்லை. ஒரு குறிப்பிட்ட தொகுதி சார்ந்து ஒரு சிறுகட்சியானது தனது செல்வாக்கை வளர்த்து, பெரும்கட்சியொன்றுடன் கூட்டணியமைத்து அத்தொகுதியில் போட்டியிட்டாலன்றி, பெரும்கட்சிகளுடன் நேரடியாகப் போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் மூலம் புதிய தேர்தல் முறையாக ‘விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை’ ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தினார்.

இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் ஒரு குறித்த தொகுதியில் கட்சியொன்று பெற்றுக்கொண்ட வாக்கு விகிதத்திற்கேற்ப அதற்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. மிக எளிமையான உதாரணம் ஒன்றை முன் வைப்பதாயின் ஒரு குறித்த மாவட்டத்துக்கு 10 ஆசனங்கள் இருப்பின், அம்மாவட்டத்தில் ‘அ’ கட்சி 40% வாக்குகளையும் ‘ஆ’ கட்சி 30% வாக்குகளையும் ‘இ’ கட்சி 10% வாக்குகளையும் ‘ஈ’ கட்சி 20% வாக்குகளையும் பெற்றிருக்குமாயின், கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குவீதத்திற்கேற்ப முறையே ‘அ’ கட்சிக்கு நான்கு ஆசனங்களும், ‘ஆ’ கட்சிக்கு மூன்று ஆசனங்களும். ‘இ’ கட்சிக்கு ஓர் ஆசனமும் ‘ஈ’ கட்சிக்கு இரண்டு ஆசனங்களும் வழங்கப்படும். இம்முறையானது சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சாதகமானதாக அமைந்தது. இந்த முறையின் கீழ் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தொகுதிகளுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த தொகுதிகளிலிருந்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு உருவானது. இதைத் தவிரவும் இருபெரும் கட்சிகளைத் தவிர்த்து, ஏனைய கட்சிகளுக்கும் தாம் பெற்ற வாக்குவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளத்தக்க வாய்ப்பு உருவானது. மேலும் இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் விருப்பு வாக்கு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது குறித்த தேர்தல் மாவட்டமொன்றில், குறித்த எண்ணிக்கையிலான அபேட்சகர்களை ஒரு கட்சி களமிறக்கும். வாக்களிப்பின் போது மக்கள் தமது விருப்பக்கட்சிக்கு வாக்களிப்பதுடன், அக்கட்சியில் குறித்த தொகுதியில் போட்டியிடும் அபேட்சகர்களுள் தமக்கு விருப்பமான அபேட்சகர்களில் அதிகபட்சம் மூவரும் தமது விருப்பு வாக்கினை அளிக்கலாம். இதன் மூலம் குறித்த தொகுதியில் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சிக்கான ஆசனங்களும் குறித்த கட்சியின் அபேட்சகர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கட்சி வென்ற ஆசனங்களுக்கான பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்பட்டார்கள். இந்த விருப்புவாக்கு முறை மூலம் ‘இடைத் தேர்தல்’ என்ற நடைமுறை இல்லாதொழிக்கப்பட்டது. பதவியிலிருக்கும் ஒருவர் பதவி விலகினாலோ, உயிரிழந்தாலோ, அல்லது ஏதேனும் காரணத்தால் பதவியை இழந்தாலோ, கட்சியின் அபேட்சகர் பட்டியலில் அடுத்ததாக உள்ளவர் பதவியைப் பெறத்தக்கதாக இருந்ததால், ‘இடைத் தேர்தலுக்கான’ தேவை இல்லாதுபோனது. இதற்காகச் சொல்லப்பட்ட நியாயம் யாதெனின் இம்முறையின் கீழ் ஓர் அபேட்சகர் கட்சிசார்பிலேயே தெரிவு செய்யப்படுகிறார். அவர் அப்பதவியை இழக்கும் பட்சத்தில், அக்கட்சி வெற்றிபெற்ற அவ்வாசனத்தை அக்கட்சியின் பட்டியலில் அடுத்ததாக உள்ளவருக்கு வழங்குவதே பொருத்தமானது என்பதாகும். இம்முறையின் கீழ், கட்சிகளின் முக்கியத்துவமும் செல்வாக்கும் அதிகரித்தது என்பதுடன், தொகுதி ரீதியிலான தனிநபர் செல்வாக்கு அரசியலுக்கும் சுயேட்சை அரசியலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசித்த பிரதேசங்களுக்கப்பால் சிறுபான்மையினங்கள் சிறுபான்மையாக வாழ்ந்துகொண்டிருந்த பகுதிகளில் சிறுபான்மையின பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய சூழலை உருவாக்கியது. குறிப்பாக கொழும்பு, மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலிருந்து தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றிபெறுவதற்கு இம்முறை உதவியது. மேலும் வடக்கு-கிழக்கிலும் பெரும்பான்மைப் பலம் கொண்டு கட்சியைத் தாண்டி ஏனைய சிறுகட்சிகளும் தமக்கான ஆசனங்களை வெற்றிகொள்ளத்தக்க வாய்ப்பையும் உருவாக்கியது. இந்த வாக்களிப்பு முறையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தியதற்கு சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சிறுகட்சிகளுக்கும் வாய்ப்பளித்தல் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவர்களது கூட்டணியிலிருந்த ‘தோழர்களும்’ 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் மிகப்பெரும் பெரும்பான்மையைப் பெற்றிருந்தன. இத்தகைய பெரும் வெற்றிகள் அன்று நடைமுறையிலிருந்த தொகுதிவாரி ‘முதலில் வருபவருக்கு வெற்றி’ என்ற தேர்தல் முறையின் கீழ் மட்டுமே சாத்தியமானது. 1970 இல் நாடுதழுவிய ரீதியில் ஏறத்தாழ 49% வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணி 76.8% ஆசனங்களை வெற்றி கொண்டது.

1977 நாடுதழுவிய ரீதியில் ஏறத்தாழ 50.92% வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி 83.3% ஆசனங்களை வெற்றிகொண்டது. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் இருபெரும் கட்சிகளும் இணைந்தாலன்றி 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெற்றதைப் போன்றதொரு 5/6 பெரும்பான்மையைக் கொண்ட வரலாறு காணாத மாபெரும் வெற்றியை அடையவே முடியாது. ஆகவே, எதிர்காலத்தில் இதுபோன்றதொரு மாபெரும் பெரும்பான்மை ஏற்படக்கூடாது என்பதற்காக ஜே.ஆர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வந்தார் எனச் சொல்லும் அரசியல் ஆய்வாளர்களும் உண்டு. இதனால்தானோ ஜே.ஆர் அவரது ஆட்சிக்காலத்தில் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்லாது, அவர் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பினூடாக அறிமுகப்படுத்திய இன்னொரு குறிப்பிடத்தக்க விடயமான ‘சர்வசன வாக்கெடுப்பின்மூலம்’ (இதனை ஒப்பங்கோடல் எனச் சொல்வதுமுண்டு) நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டித்தார். ஏனெனில், அவர் பெற்றிருந்த 5/6 பெரும்பான்மையை இழந்திருக்க விரும்பவில்லை ‘விகிதாசார பிரதிநிதித்துவ’ முறையின் கீழ் அத்தகைய பெரும்பான்மையொன்று மீண்டும் கிடைக்கப்போவதில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.

‘விகிதாசாரப் பிரதிநிதித்துவ’ முறையானது வடக்கு-கிழக்கிற்கு அப்பாலுள்ள தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள ஒரு வாய்பை உருவாக்கித்தந்தது என்பதுடன், வடக்கு-கிழக்கில் பெரும்பான்மைப் பலம் கொண்ட தமிழ்க்கட்சியைவிடவும் ஏனைய சிறுகட்சிகளும் ‘மாற்றுக்கருத்துடைய’ தமிழ்க் கட்சிகளும் எதிர்காலத்தில் தமக்கான பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ளத்தக்க வாய்ப்பை உருவாக்கியது.

நாடாளுமன்றத்துக்கு நேரடியாக பொறுப்புக்கூறத் தேவையில்லாத இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் அதிகாரக்குவியம் சார்ந்த ஆபத்துகள் நிறையவிருப்பினும் சில நன்மைகளுக்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை. ஒரு தனிநபராக முடிவெடுக்கத்தக்க அதிகாரமிருப்பதாலும் ஜனாதிபதியை பதவி நீக்கும் நடைமுறையானது கடினமானதாகவும் இருப்பதாலும், தன்னுடைய கட்சி மீது எப்போதும் ஜனாதிபதிக்கு செல்வாக்கு இருப்பதனாலும், நிறைவேற்று ஜனாதிபதியாக சில முடிவுகளை அவர் தைரியமாக எடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தது. இதனைப் பயன்படுத்தி இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை சாத்தியப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதனை ஜே.ஆர் முதல் மஹிந்த ராஜபக்ஷ வரை எவருமே செய்யவில்லை என்பதுதான் துரதிஷ்டவசமானது. 

( தொடரும்) yarl.com 10 102016