அனந்தி - கஜேந்திரகுமார் - விக்னேஸ்வரன்

thinakural/lk 16 03 2014

 அனந்தி - கஜேந்திரகுமார் - விக்னேஸ்வரன்

வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றபோது, மிகை ஆர்வமுடைய தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள், 38 ஆசனங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு செல்ல வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டமைப்பு ஆதரவாளர்களாக இருந்திருக்க வேண்டும். தேர்தல் ஒரு யுத்தத்திற்கு சமமானது. அதில் நாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்தவர்களும் இருக்கவே செய்தனர். அப்போது இருந்த இப்போதும் அப்படியே உள்ள தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு, குறிப்பாக வடமாகாண அரசியல் பிரச்சினைகள் சரியாக கையாளப்படுவதற்கு கூட்டமைப்பு வெற்றிபெறுவது அவசியம் என்ற விடயம் இப்பந்தியிலும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது.

இருப்பினும், அப்போது இப்பந்தியின் பிரதான கரிசனையாக இருந்தது யார் வடக்கில் நிர்வாகத்தை அமைக்கப் போகின்றார்கள் என்பது அல்ல. ஏனெனில், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கூட்டமைப்பின் வெற்றி நிச்சயமானதாகவே இருந்தது. எதிர்க்கட்சியாக வரப்போவது யார் என்பதே பிரதான பிரச்சினை என்பதை அப்போதே இப்பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம். இதற்கு மிக எளிமையான இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று கீரைக்கடைக்கும் (அது எவ்வளவு சிறந்த கீரைக்கடையாக இருந்தாலும்) எதிர்க்கடை தேவை என்பது. இரண்டாவது, கூட்டமைப்பு மாகாணசபையின் எல்லா ஆசனங்களையும் வெற்றி பெறுவது சாத்தியமானதல்ல என்ற பின்னணியில், வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தமிழ் மக்களின் நலனில் அக்கறை உடைய கட்சியாக இருக்க வேண்டும் என்பது. இக்கருத்தை தேசத்துரோகம் என்று விமர்சித்து மின்னஞ்சல் அனுப்பியவர்களும் இல்லாமல் இருக்கவில்லை.

அத்துடன், பகிஷ்கரிப்பு அரசியலை இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளார். அந்த அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை பகிஷ்கரித்தமை இப்பந்தியில் விமர்சிக்கப் பட்டு இருந்தது. எமது வாதமாக இருந்தது என்னவெனில், குமாரின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் போட்டியிடுகின்றபோது, அது வடமாகாணத்தின் எதிர்க்கட்சியாக வருவதற்கான சாத்தியம் காணப்பட்டது என்பதாகும். அது தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை சாதகமானதாக இருக்கும் என்பதாகும். துரதிர்ஷ்ட வசமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலை (2005இல் இடம்பெற்றது போல) பகிஷ்கரித்திருந்தது. இதில் சிக்கலான பரிமாணம் என்னவெனில், தமிழ் முன்னணி இன்றைய எண்ணக்கருவின் அடிப்படையில் தேர்தலைப் பகிஷ்கரித்து வருமாயின், மிக நீண்டகாலத்திற்கு பயனற்ற ஒரு அரசியற் கட்சியாக தொடர்ந்து இருக்கும் என்பதாகும். இதன் மறுபக்கம் என்னவெனில் இருக்கின்ற அரசியல் யதார்த்தத்தில் அதிக மாற்றம் இல்லாமல் ஒருநாள் அது தேர்தல்களில் போட்டியிட வேண்டியிருக்கும் என்பதாகும்.

எவ்வாறாயினும், தேர்தல் முடிவு வெளிவந்த போது யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 80சதவிகிதம் அளவிலான வாக்குளைப் பெற்றமையினால், எதிர்க்கட்சி ஒன்று இல்லாத நிர்வாகம் ஒன்று போன்று மாற்றமடைந்துள்ளது. அடுத்த தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்பது போன்ற சூழ்நிலையே காணப்படுவதனால் மக்கள் நலன் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயுள்ளது. வடமாகாணத்தில் மட்டும் அல்ல, எந்த ஒரு அரசியற் சூழ்நிலையிலும் அடுத்த தேர்தலின் முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சம் இல்லாதபோது அசமந்தமாக இருப்பது இலகுவானதாக மாறிவிடும். வடக்கில் மட்டும் அல்ல, தென்னிலங்கையி லும் இன்று அதுவே இடம்பெறகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி முக்கியமான ஒரு தேர்தலில் வெற்றி பெறும்வரை அரசாங்கத்தின் கவனத்தை திருப்புவது சாத்தியமானது அல்ல. வடமாகாண சபையில் எதிர்க்கட்சி ஒன்று இல்லாத சொகுசு கூட்டமைப்புக்கு இருந்தபோதும் சுவாரசியமான வகையில் இடம்பெற்றது என்னவெனில் கூட்டமைப்பினுள்ளேயே ஒரு எதிர்க்கட்சி தோன்ற ஆரம்பித்தமையாகும். இந்த விடயத்திலேயே அனந்தி சசிதரனின் அரசியல் முக்கியத்துவமுடையதாக மாற்றமடைகின்றது.

வடமாகாண சபை தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மாகாணசபை நிர்வாகத்தினுள் இரு பிரதான பிரிவுகள் இருப்பது புலப்படத் தொடங்கி இருந்தன. இவ்விரு பிரிவினுள்ளும் அரசியல், கலாசார, கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று விக்னேஸ்வரனை மையமாகக் கொண்ட அதேசமயம், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, ஒரு வகையான மிதவாதக் குழு. இரண்டாவது பிரிவு அனந்தி தலைமைத்துவம் வகிக்கக் கூடிய ஒருவித தீவிரயதார்த்தவாத குழு. இவ்விரு குழுக்களுக்கும் புறம்பாக மேற்கூறிய கோட்பாட்டு மூலக்கூறுகளை வேறுபட்ட அளவில் வெளிப்படுத்தக்கூடிய சிறு குழுக்களும் கூட்டமைப்பின் மாகாணசபை குழுவினுள் இருக்கக் கூடும். இங்கு அவதானிக்கப்பட வேண்டியது என்னவெனில் வடமாகாணத்தில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத குறையை அனந்தி சசீதரன் அல்லது அவரைத் தலைமையாகக் கொண்டிருக்கக் கூடிய குழு தீர்க்கத் தொடங்கியுள்ளமையாகும். அதாவது, இப்போது அனந்தி குழு மாகாணசபை ஆளும் கட்சி போலன்று எதிர்க்கட்சி போல செயற்படத் தொடங்கி உள்ளமையாகும்.

இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான கலாசார வேறுபாடுகள் சில காலமாகவே வெளிப்படத் தொடங்கியிருந்த போதும், அனந்தி ஜெனீவாவில் இருந்து திரும்பிய பின்னர் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுமந்திரனுக்கு எதிராக, அல்லது குற்றம் சாட்டும் தொனியில் முன்வைத்து இருந்த அபிப்பிராயத்துடன் கூர்மையடைந்திருந்தது. இங்கு சுவாரசியமானதும் கவனிக்கப்பட வேண்டியதுமான ஒரு விடயம், அனந்தியின் அரசியல் கூட்டமைப்பின் உயர் குழாம் தலைமைத்துவத்தின் மீது குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது கொண்டு வருகின்ற அழுத்தம் ஆகும். விக்னேஸ்வரன் அடிப்படையில் அதிமிதவாத, கொழும்பைப் பகைத்துக் கொள்ளாத அரசியலில் நம்பிக்கை கொண்டவராகும். தேர்தல் காலத்தில் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று முன்வைக்கப்பட்ட கோசத்திற்கு புறம்பாக இவ் அடிப்படையை நிராகரிக்

கக் கூடிய வேறு ஆதாரங்கள் காணப்படவில்லை. இக்கூற்றும் கூட வாக்கு நோக்கில் முன்வைக்கப்பட்டது ஒன்றாக எதிர்காலத்தில் கணிக்கப்படலாம். இருப்பினும், பதவி ஏற்ற காலம் முதல் விக்னேஸ்வரன் அதி தீவிர மிதவாதத்தை தெளிவாக வெளிப்படுத்தி வந்துள்ளார். இதற்கான ஆதாரமாக பல உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படலாம். தமது பிரதேசத்திற்கு அதிக அரசியல் சுயாதீனம் வேண்டும் என்று கோரும் மக்களின் தலைமைப் பதவி ஏற்க கொழும்பு சென்றமை விசித்திரமானதாகவே இருந்தது.

 

அண்மைக்காலத்தில் தமிழக முதலமைச்சர்கள் பதவி ஏற்க டில்லி செல்வதி இங்கு முக்கியமானது என்னவெனில் இவை விக்னேஸ்வரனின் அதிமிதவாதத்திற்கான உதாரணங்களில் சிலவே என்பதாகும். பதவி ஏற்றதன் பின்னர் வரவேற்பு வைபவங்களிலும், திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதற்கும் புறம்பாக, நிச்சயமான அரசியல் நடவடிக்கைகள் எதிலும் அவர் ஈடுபடவில்லை என்பது முக்கியமான ஒரு விடயம் ஆகும். உறுதியான எதிர்க்கட்சி ஒன்று இருக்கின்றபோது இவ்விதமான அசமந்தப் போக்கு இருப்பதற்கான சாத்தியம் குறைவானதாகவே இருக்கும்.ல்லை. மாநிலங்களின் சுயாதீனத்தை மதிக்கின்ற அமெரிக்க மாநில ஆளுநர்கள் பதவி ஏற்க வாஷிங்கடன் செல்வதில்லை. இருப்பினும், விக்னேஸ்வரனுக்கு இப்பரிமாணம் பற்றிய போதிய அக்கறையோ அல்லது புரிந்துணர்வோ இருக்கவில்லை. பிந்திய உதாரணம், தாம் சாத்தியமான எந்த ஒரு தீர்வையும் ஏற்கத் தயாராக இருப்பதாக விக்னேஸ்வரன் கூறியிருந்தமையாகும். இதில் பல பிரச்சினைகள் காணப்பட்டிருந்தன. ஒன்று சாத்தியமான எந்தத் தீர்வையும் ஏற்க தமிழ் மக்கள் தயாராக உள்ளனரா என்பது. இரண்டாவது, சாத்தியமான எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக்கொள்ளும் அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார் என்பது. மூன்றாவது, இன்றைய நிலையில் சாத்தியமான தீர்வு பஞ்சாயத்து சபையோ அல்லது மாவட்ட சபையோதான் என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியுமா என்பது.

எவ்வாறாயினும் அனந்தியின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஒரு ஆதரவுத் தளம் தோன்றத் தொடங்கியுள்ளது போல் தோன்றகின்றது. இது விக்னேஸ்வரன் மீதும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மீதும் அழுத்தத்தை கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக விக்னேஸ்வரனும் கூட தேசியவாத சுலோகங்களை இடைக்கிடை வீசிவர வேண்டியுள்ளது. வடமாகாண சபையில் சர்வதேச விசாரணையையும் ஜெனீவா தீர்மானத்தையும் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியபோது விக்னேஸ்வரன் அதனை விரும்பவில்லை என்பது புலப்பட்டிருந்தது. இனச் சுத்திகரிப்பா, மனிதப்படுகொலையா என்ற வார்த்தை விளையாட்டில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. யார் இவற்றை வரையறுப்பது? நடைமுறையில் மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லாவிடினும் வார்த்தைப் பயன்பாடு உரிமையையாவது பயன்படுத்தலாம் அல்லவா. இருப்பினும் இங்கு முக்கியமானது அதுவல்ல. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கப் போகின்றோம், அதை வெற்றிபெறச் செய்யப் போகின்றோம் என்ற தீர்மானம் இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின், அப்பொறுப்பை உறுதியாக முன்னெடுக்கக்கூடிய ஒருவர் ஜெனீவா அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இதற்கு விக்னேஸ்வரனை விடப் பொருத்தமான வேறு யார் இருக்கக்கூடும்.

அவரது ஆங்கிலப் புலமையும் சட்ட வல்லுமையும் பயன்பட்டிருக்கு மல்லவா? இருப்பினும், இப்பொறுப்பை ஏற்க விக்னேஸ்வரன் முன்வரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் காணப்பட்டிருக்கலாம். ஒன்று அவர் ஜெனீவா செல்வதன் மூலம் கொழும்பை பகைக்காதிருக்க விரும்பி இருக்கலாம் அல்லது தீர்மானத்தில் நம்பிக்கை இல்லாதிருந்த நிலையில் அதை முழுமையாக எதிர்க்க விரும்பாது இருந்திருக்கலாம். -

இத்தகைய பின்னணியிலேயே சர்வதேச விவகாரங்களில் பாரிய முன் அனுபவம் இல்லாத அனந்தியை ஜெனீவா அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. இப்போது இத்தீர்மானம் ஒரு கண்துடைப்பாக இருக்கலாமோ என்று தோன்றுவதற்கான காரணம் அனந்தியின் புலிகளுடனான தொடர்பு ஜெனீவாவில் ஒரு பிரச்சினையாக இருக்கும் என்பது அப்போதே புரிந்திருக்க வேண்டும். அனந்தியின் புலிகளுடனான தொடர்பு வடமாகாண சபை தீர்மானத்தின் பின் ஏற்பட்டது அல்ல. ஒரு வகையில் அனந்தியை ஜெனீவா அனுப்பும் தீர்மானம் அல்லது யோசனை அனந்தியின் செயற்பாட்டு வாதத்திற்கு எதிரான தாக்குதலாகக் கூட இருந்திருக்கலாம். இதுவே அனந்தி போன்றவர்களது செயற்பாட்டு வாதம் கூட்டமைப்பின் மீது கொண்டு வருகின்ற அழுத்தம் ஆகும்.