தமிழர் கல்வி தொடர்பில் வழிகாட்ட உயர் அமைப்பொன்று தேவை

thinakkural.lk 03 06 2014 

தமிழர் கல்வி தொடர்பில் வழிகாட்ட உயர் அமைப்பொன்று தேவை

ஒரு நாட்டில் பிரச்சினைகளோ, சிக்கல்களோ, தலையீடுகளோ வேறெந்த குறைபாடுகளோ அற்ற துறையாக விளங்கவேண்டிய துறைகளில் ஒன்றாக கல்வித்துறையுள்ளது. கல்வித்துறையே நாட்டின் அத்திபாரமாகவுள்ளது. நமது நாட்டில் கல்வித்துறையின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்படாமலுள்ளது என்றே எண்ணவேண்டியுள்ளது. கவலைதரும் இந்நிலை நாட்டின் எதிர்காலத்திற்கு பல பாதகங்களை உருவாக்கிவிடும்.

நாட்டின் கல்விக் கொள்கை மிக உயரத்தில் உள்ளது. நடைமுறையில் அக்கொள்கை செயலிழந்தவொன்றாகவே காணப்படுகின்றது. அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு அரசகரும மொழி மற்றும் நிர்வாக மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்த போதிலும் அவை நடைமுறையில் செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளமை போன்றே கல்வித் துறைசார் கொள்கை, கோட்பாடுகளும் உள்ளமையை நோக்க வேண்டியுள்ளது.

இலவசக் கல்வி, பதின்நான்கு வயது வரை கட்டாயக் கல்வி, சமத்துவக் கல்வி, பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி என்பவை நமது நாட்டின் கல்விக் கோட்பாடுகள். அவற்றுடன் இலவசப் பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் என்று பல நலத்திட்டங்கள் விரிவடைந்து செல்கின்றன. மேலும் காலத்திற்கு காலம் பல மாணவருக்கான நலத்திட்டங்கள் வெளியிடப்பட்டாலும் அவற்றில் பல முளையிலேயே கருகி விடுவதையும் அவதானிக்க முடிகின்றது. இலவச பால் வழங்கும் திட்டம் நடைமுறையில் எந்த அளவு செயற்படுத்தப்படுகின்றது என்பதை எவரும் ஆராய்வதில்லை. அதே போன்று மாணவருக்கான இலவச உணவுத்திட்டத்தின் நிலையுமுள்ளது.

கல்வியானது இன, மத, மொழி, பிரதேசம் போன்ற எந்தவொரு வேறுபாடுகளுக்கும் உட்படாது நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் அவர்களது மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், இன்று அந்த நிலை நாட்டில் நிலவவில்லை என்பதே யதார்த்த நிலை. கல்வித்துறையில் பாகுபாடு காட்டப்படுகின்றது. சமத்துவக் கல்வி என்ற கொள்கை அடியோடு கைவிடப்பட்டுள்ளது. அரசியல் வாதிகளதும் அதிகாரவர்க்கத்தினதும் தாளத்திற்காடும் நிலைக்கு நாட்டின் கல்வி நிலை தாழ்ந்துவிட்டது தரமிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அதிலும் தமிழ்க் கல்வி பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக பொதுவாகக் கூறப்பட்டாலும் தமிழ்க் கல்வியில் தமிழர் கல்வியின் நிலை பல்வேறு வழிகளில் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு தவிக்கின்றது. தமிழர் கல்வி என்னும்போது தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி என்பது விளக்கமாகும்.

தமிழ் மொழிமூலக் கல்வியில் தமிழர் கல்வியின் பாரிய பின்னடைவை வெளிப்படுத்துகின்றது. முற்று முழுதாக தமிழ் மொழி மூலக் கல்வியை வழங்குவது மட்டக்களப்பு மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களுள்ளன. அவை மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய கல்வி வலயங்களாகும். இவற்றில் மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டதாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் உள்ளது. நிலத் தொடர்பு கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்க வழி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் சிங்களப் பாடசாலைகள், தமிழ்ப் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகளென்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாடசாலைகளென்றும் மாகாண சபைகளின் நிர்வாகத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளென்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரச ஆதரவுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுடன்அரச கட்டுப்பாடற்ற சர்வதேசப் பாடசாலைகளும் நாட்டில் நாளுக்குநாள் பெருகிவருகின்றன.

அரச கட்டுப்பாட்டிற்குட்பட்ட பாடசாலைகளும் பல்வேறு தரங்களில், பெயர்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலைகள் அதாவது ஐந்தாம் தரம் வரை கொண்டவை. டி.3 என்றும் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரம் வரை வகுப்புகளைக் கொண்டவை டி.2 என்றும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரத்தில் கலை மற்றும் வர்த்தக பாடநெறிகளைப் பயிற்றுவிக்கும் பாடசாலைகள் தரம் 1 சி என்றும் அதேதரத்தில் கலை, வர்த்தக பாடநெறிகளுடன் கணித, விஞ்ஞான பாட நெறிகளையும் கொண்ட பாடசாலைகள் 1 ஏ.பி. தரத்திலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மகிந்தோதய, நவோதய, ஆயிரம் பாடசாலைகள் திட்டம் என்றும் பாடசாலைகள் மேலும் பகுப்பிடப்பட்டு இயக்கப்படுகின்றன. எத்தனை வேறுபாடுகளுடையவையாகப் பெயரிடப்பட்டாலும் பொதுப் பரீட்சைகளான 5 ஆம் தரப் புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகள் ஒரே பாடத் திட்டத்திற்கமைவாகவே நடத்தப்பட்டு பெறுபேறுகளும் வழங்கப்படுகின்றன.

சகல பாடசாலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களும் ஒரே கல்வித் தகைமை கொண்டவர்களாகவும் பயிற்சியோ, பட்டமோ கொண்டவர்களாகவுமேயுள்ள நிலையில் அதாவது ஒரே பாடத்திட்டத்துடன் ஒரே கல்வித் தகைமை கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் பாடசாலைகளைத் தரப்படுத்தி உயர்வு, தாழ்வு பாராட்டுவது இலங்கையின் தற்போதைய கல்விக் கொள்கையின் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மத்தியிலும், பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மத்தியிலும் சமத்துவ நோக்கின்மைக்கு வழிவகுத்துள்ளது. 1ஏ.பி. கொண்ட இரு மொழிப் பாடசாலைகள் அதாவது போத னா மொழிகளாக சிங்களமும் தமிழும் உள்ள பாடசாலைகளில் சமத்துவமான கல்வி வழங்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக மத்துகம கல்வி வலயத்திலுள்ள சென். மேரிஸ் கல்லூரியை கொள்ளலாம். சிங்கள மொழி மூலம் பயிலும் மாணவருக்கு உயர்தர வகுப்பில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய நான்கு பாடநெறிகளும் பயிற்றுவிக்கப்படும் அதேவேளை, தமிழ் மொழி மூலம் உரிய தகைமை கொண்ட ஆசிரிய ஆளணி போதுமானதாக இல்லாத நிலையில் கலை, வர்த்தக பாடநெறிகள் மட்டுமே போதிக்கப்படுகின்றன. ஒரே பாடசாலையில் சமத்துவமின்மை வெளிப்படுகின்றது.

தமிழர் கல்வி பின்னடைவதற்கு, பின்தள்ளப்படுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் தெளிவான எடுத்துக் காட்டுகளாயுள்ளன. இலங்கையில் மொத்தமாக தொண்ணூற்றேழு கல்வி வலயங்களுள்ளன. கடந்த கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலின்படி முஸ்லிம் பாடசாலைகளை மட்டுமே கொண்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் நாட்டிலேயே முதலாம் இடத்தைப் பெற்றுள்ள அதேவேளை, அதே மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயம் தொண்ணூற்றி மூன்றாம் இடத்தையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தொண்ணூற்றி ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன. ஒரே மாவட்டத்தில் தமிழர் கல்வியின், தமிழ்ப் பாடசாலைகளின் கல்வியில் பின்னடைவை இத்தரப்படுத்தல் வெளிப்படுத்துகின்றது. தமிழ்ப் பாடசாலைகளில் கற்கும் மாணவ மாணவியரின் பின்னடைவுக்கான ஏதுக்கள் கண்டறியப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித் தரத்தில் சிறப்பாக இருந்து பல்துறைசார் கல்வியிலாளர்களை, வைத்தியர்களை, பொறியிலாளர்களை, அரசியல்வாதிகளை, சட்டத்தரணிகளை இதுபோன்ற உயர்நிலை கல்விமான்களை உருவாக்கிய மட்டக்களப்பு மாநகரிலே உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் இன்று கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். களுத்துறை மாவட்டத்திலுள்ள முப்பத்தெட்டு தமிழ்ப் பாடசாலைகளில் ஒரு தமிழ்ப் பாடசாலையாவது உயர்தர வகுப்பில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய நான்கு பாடநெறிகளைப் போதிக்கும் பாடசாலையாக இல்லை. அவ்வாறே சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தொண்ணூற்றி நான்கு தமிழ்ப் பாடசாலைகளும் கேகாலை மாவட்டத்திலுள்ள அறுபத்தொன்பது தமிழ்ப் பாடசாலைகளும் பல்வேறு பின்னடைவுகளுடனேயே இயங்குகின்றன.

தமிழ்ப் பாடசாலைகள் நூற்றி அறுபத்து மூன்றைக் கொண்ட சப்ரகமுவ மாகாணத்தில் தரமான உயர்தர வகுப்புகளைக் கொண்ட ஒரு தமிழ்ப் பாடசாலையாவது இல்லையென்பது சப்ரகமுவ மாகாணத் தமிழ்ப் பிள்ளைகள் உரிய, உயரிய கல்வியைத் தமிழ் மொழி மூலம் பெற்றுக் கொள்ளும் உரிமையை இழந்துள்ளமைக்குத் தக்கசான்றாக உள்ளது. நாட்டிலுள்ள இருபத்தைந்து மாவட்டங்களில் அம்பாந்தோட்டை தவிர்ந்த ஏனைய இருபத்து நான்கு மாவட்டங்களிலும் தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. ஏலவே தமிழ்ப் பாடசாலைகளென்று இயங்கிய பாடசாலைகளை இனரீதியாகப் பிரித்ததன் மூலம் பலநூறு தமிழ்ப் பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளென பெயர் மாற்றப்பட்டன. ஒரு பாடசாலையில் எந்த மொழியையோ, மதத்தையோ சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாகக் கற்கின்றனரோ அதே சமூகத்தைச் சேர்ந்தவரே அப்பாடசாலையின் அதிபராக செயற்படுவார் என்பது கல்வித்துறையின் கொள்கையாகவுள்ளது. ஆனால் அது தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்தவரை மீறப்பட்டே வருகின்றது.

தமிழே தெரியாத சிங்கள அதிபர்களும், முஸ்லிம் அதிபர்களும் தமிழ்ப் பாடசாலைகளில் அதிபர்களாக கடமை ஆற்றுகின்றனர். ஆனால் சிங்களப் பாடசாலைகளில் சிங்கள அதிபர்களும் முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் அதிபர்களுமே கடமையாற்ற வேண்டும் என்ற கொள்கை உறுதியாகக் கைக் கொள்ளப்பட்டு வருகின்றது. தகைமையும் தகுதியும் ஆற்றலும் கொண்ட தமிழாசிரியர்களை முஸ்லிம் பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்துவதற்கு வலிந்து செயற்படும் கல்வித்துறை தமிழ் அதிபர் ஒருவர் கடமையாற்ற அனுமதிப்பதில் பின்னிற்கின்றது. பெற்றோரும் பாடசாலைச் சமூகமும் ஏற்க மறுக்கின்றனர். ஆனால், தமிழ்ப் பாடசாலைகளின் நிர்வாகத்தை எவரும் கவனிக்கலாம். எப்படியும் தமிழ்ப் பாடசாலை கள் பெயரளவில் இயங்கட்டும் என்ற நிலையே நாட்டின் கல்வித்துறையில் காணப்படுகின்றது.

மொனராகலை, பதுளை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, அநுராதபுரம், பொலநறுவை போன்ற மாவட்டங்களிலியங்கும் தமிழ்ப் பாடசாலைகள் மட்டுமல்ல மத்திய மாகாணத்தின் மாத்தளை, நுவரெலியா, கண்டி, மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு ஆகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பெரும்பாலானவை முன்னேற்றமின்றித் தவிக்கின்றன. உரிய, உயரிய கல்வியை வழங்குவதில் தடுமாறுகின்றன. இதுவே இன்றைய யதார்த்த நிலை. பெரும்பாலான பெருந்தோட்டத்துறைத் தமிழ்ப் பாடசாலைகள் தோட்டங்களின் எல்லையில் பெரும்பான்மையினத்தவர் வசிக்கும் கிராமங்களின் எல்லையில் நிறுவப்பட்டுள்ளன. அதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காணியைக் கைப்பற்றும் அத்துமீறல்கள் உட்பட பல்வேறு தாக்கங்களுக்கு மலையக பெருந்தோட்டப் பகுதித் தமிழ் பாடசாலைகள் உட்படுவது தெரியவந்துள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை கல்வி வலயத்திற்குட்பட்ட தெகிவளை தமிழ் மகா வித்தியாலயத்திற்குரித்தான காணியில் பல ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்து வீடமைத்து பெரும்பான்மையினத்தவர் ஒருவர் வசித்துவருவதும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

தமிழ்ப் பாடசாலை அல்லாத ஒரு பாடசாலையில் இவ்வாறான ஆக்கிரமிப்பு இடம்பெற்றால் கல்வித்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பர். தமிழ்ப் பாடசாலையென்பதால் அக்கறையின்றியுள்ளனர் என்று கருதினாலும் அதை மறுப்பதற்கொன்றுமில்லை. தரமான, தகுதியான, சேவை மனப்பான்மையுடன் கூடிய தமிழாசிரியர்கள் இனங் காணப்பட்டு தமிழ்ப் பாடசாலைகளிலிருந்து தமிழ்மொழி மூல பிற பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதும் அறிக்கையிடப்பட்டுள்ளது. திட்டமிட்டே இச் செயற்பாடுகளால் தமிழ்ப் பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளின் கல்வி திட்டமிட்டு பாழடிக்கப்படுகின்றது. செயற்படாத, கற்பித்தலில் கவனம் செலுத்தாத ஆசிரியர்களின் புகலிடமாகத் தமிழ்ப் பாடசாலைகளேயுள்ளன. சிங்களப் பாடசாலைகளுக்கு வேண்டப்படாத சிங்கள ஆசிரியர்கள் பலர் தமிழ்ப் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. மாணவ மாணவியரின் தேவைக்கே ஆசிரியர்கள் என்ற நிலை தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்தவரை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. ஆசிரியர்களின் வசதிக்கு பாடசாலைகள் வழங்கப்படுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் உயர்தர வகுப்பில் இந்துநாகரிக பாடம் கற்பித்த ஆசிரியை ஒருவர் ஓய்வு பெறவுள்ளதால் குறித்த பாடம் உயர்தர வகுப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகள் விரும்பினாலும் கற்க வழி செய்யப்படவில்லை. அதிபரும் செய்வதறியாதுள்ள நிலையில் இதே மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் பல பாடசாலைகளில் இந்து நாகரிக பாடத்தில் பட்டம், சிறப்புப் பட்டம் பெற்ற பலர் வேறு பாடங்களைக் கற்பிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சரியாக கணிக்குமிடத்து நாடளாவிய ரீதியில் தமிழர் கல்வி பல்வேறு இடையூறுகளுக்கு இலக்காகியே இயங்குகின்றது என்பது தெளிவாகப் புலனாகின்றது. இந்நிலை தொடர்ந்தும் நீடித்தால் இலங்கையின் தமிழர் சமூகம் பின்னடைவிலிருந்து மீள முடியாது. தமிழர் கல்வியின் அடிப்படைத் தேவைகள் எவை, அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள் எவை என்பவை கண்டிறியப்படவேண்டும். தமிழர் கல்வியை சீர்செய்து உயர்ந்த நிலைக்கு, நாட்டின் ஏனைய சமூகத்தவர் பெற்றுக் கொள்ளும் தரத்திற்கு தமிழர் கல்வியையும் உயர்த்த வழி காணப்பட வேண்டும். இதுவே நம் மத்தியிலுள்ள முதற்பணி. அரசியல் நலனுக்காக தமிழர் கல்வியை பாழ்படுத்தும் சிந்தனையுடன் நமது அரசியல்வாதிகள் செயற்படாது தமது தனிப்பட்ட அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கப்பால் இருந்து சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தமிழர் கல்வியில் அக்கறை கொண்டோர் விருப்பமாகும்.

ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் தமது அரசியல் வளர்ச்சியின் படிகளாகப் பயன்படுத்த எத்தனிக்கும் பக்குவமற்ற தமிழ் அரசியல்வாதிகளாலும் தொழிற்சங்க வாதிகளாலும் தமிழ்க் கல்விக்கு, தமிழர் கல்விக்கு இதுவரை ஏற்பட்டுள்ள தடைகள், தாமதங்கள் இனியும் தொடராதிருக்க வழிகாண வேண்டியது சமூகப் பொறுப்பாகும். எனவே , தமிழ்க் கல்வி, தமிழர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்து வழிகாட்டக் கூடிய தேசிய மட்டத்திலான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டிய தேவையை தமிழ்ச் சமூகம் உணரவேண்டும். குறைகள் தொடர்பில் குரல் கொடுக்கக்கூடிய சீர்செய்ய வழி முறைகளை ஏற்படுத்தக் கூடிய பொறுப்பு வாய்ந்த உயர் அமைப்பின் தேவையை தமிழ்க் கல்வியில் கருத்துள்ளோர் கவனத்தில் கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகும். -