தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 169)

11 09 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 169)

வரலாற்றின் முக்கியத்துவம்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்ற கேள்விக்கான, விடை தேடும் இந்தப் பயணத்தின் முக்கிய கட்டம், திம்பு பேச்சுவார்த்தைகள்சுதந்திர இலங்கையில், குடியுரிமைப் பிரச்சினையில் தொடங்கி, 1956இல் மொழிப் பிரச்சினையாக உருவெடுத்து, தொடர்ந்து தமிழ் மக்கள் பல வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகி, தமது அரசியல் பலத்தைத் தொலைத்து, இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டதில் இருந்து, 1976இல் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து, அதன் பின்னர், ஆயுதவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுவரை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மாற்றமடைந்தும், கூர்ப்படைந்தும் வந்திருந்ததை நாம் அவதானிக்கலாம்.   

இதனால்தான், ‘தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?’ என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதில், வரலாறை மீட்டுப்பார்ப்பது மிகமுக்கியமானதும் அத்தியாவசியமானதுமான விடயமாகிறது. இன்று, இன்றைய நாள்களில், இலங்கை மிகப்பெரும் அரசமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ‘ஜனநாயகத்தின் கோவில்’ என்று விளிக்கப்படும் நாடாளுமன்றத்தின் இயல்பான இயக்கம், அதன் உறுப்பினர்களில் சிறுபான்மையினரின் வெட்கக்கேடான, அவமானகரமான, ரௌடித்தனமான செயற்பாடுகளால் முடக்கப்பட்டிருக்கிறது.  நாடாளுமன்றத்தின் முடிவை, ஜனாதிபதி ஏற்க மறுக்கிறார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இருக்கின்ற கட்சியின் தலைவரை, பிரதமராக ஏற்க ஜனாதிபதி மறுக்கிறார்.   இந்தப் பெரும் நெருக்கடி நிலையில், நாம் அவதானிக்கக் கூடிய இன்னொரு விடயமும் நடக்கிறது.   

தமிழ் மக்களின், குறிப்பாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின், பெரும்பான்மை ஆதரவு பெற்ற பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கான ஆதரவை, நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கி வருகிறார்கள்.ஆட்சிக் கவிழ்ப்பொன்றை அரங்கேற்றி, அரசியல் நெருக்கடி நிலையை உருவாக்கி, சந்தர்ப்பவாத அரசியலினூடாக, உடனடியாகத் தேர்தலொன்றுக்குச் சென்று, ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ குழுவினருக்கு எதிரான, ஜனநாயகப் போரில், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சட்டவாட்சியையும் காப்பாற்றப் போராடும் கட்சிகளோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கைகோர்த்து நிற்கிறது.   

இது, வரலாற்றில் முன்பு நடந்ததொரு விடயத்தை, எமக்கு நிச்சயம் ஞாபகமூட்டுவதாக அமைகிறது. 1965இல் ஆட்சிப்படியேறிய ‘டட்லி அரசாங்கம்’, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினது ஆதரவு தேவைப்பட்டிருந்தது. டட்லி - செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி, டட்லி அரசாங்கத்துக்குத் தனது ஆதரவை வழங்கியிருந்தது.   டட்லி-செல்வா ஒப்பந்தம் தோல்வி கண்ட பிறகும் கூட, ஆட்சியிலிருந்து விலகிய தமிழரசுக் கட்சி, வௌியிலிருந்து கொண்டு, டட்லி அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்த வரலாறு, இந்தத் தொடரின் வாசகர்களுக்கு நிச்சயம் பரிச்சயமானதே.  

வரலாறு இன்னொரு வகையில் மீளவும் அரங்கேறுகிறது

 ஜோர்ஜ் சன்ரயானா சொன்னது போல, “வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்”. இம்முறையாயினும், கடந்தகாலப் படிப்பினைகள் எதிர்காலத்தை மாற்றியெழுதுவதாக அமையவேண்டும்.   

தமிழ் மக்களும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும்

ஒவ்வொரு முறையும், தமிழர்கள் பிரிவினைவாதிகள், இனவாதிகள், இனவெறியர்கள், வன்முறை வழிசென்ற பயங்கரவாதிகள் என்ற பாணியிலான குற்றச்சாட்டுகள் அறியாமை இருளில் சிக்கியுள்ளவர்களால் முன்வைக்கப்படும். அதன்போது, இந்த வரலாற்றை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுதல் அவசியமாகும். தமிழ் மக்கள், ஆயுத வழியை ஆதரித்தவர்கள் அல்லர். ஜனநாயக விழுமியங்களினூடாகத் தமது உரிமைகளை வென்றெடுக்கவே இரண்டரைத் தசாப்தத்துக்கும் மேலாக, தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள்.   

தமிழ் மக்கள், தனிநாட்டை விரும்பியவர்கள் அல்ல. மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயமரியாதையுடன், சமவுரிமையுடன், தமது தாயகத்தில் கௌரவத்துடன் வாழவே விரும்பினர். அதன் பாலான அரசியலுக்கு, தமிழ் மக்கள் திரண்டெழுந்து வாக்களித்திருந்தனர். இதுதான் வரலாறு, இதுதான் யதார்த்தம்.  ஆரம்பத்திலேயே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி, தனி நாடு கோரிய தலைவர்களைத் தமிழ் மக்கள் நிராகரித்திருந்த வரலாற்றை, நாம் இங்கு மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.   

ஆனால், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள், அஹிம்சை வழியில் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டையும் குறைந்தபட்சத் தீர்வுகளையும் வேண்டி நின்ற தமிழ்த் தலைமைகளை, உதாசீனம் செய்ததும், தமிழ் மக்கள் மீது சொல்லொணா வன்முறைவெறியைக் கட்டவிழ்த்து விட்டதும், ஆசியாவின் மிகப் பெரிய இன அழிப்புச் சம்பவங்களிலொன்று 1983 ஜூலையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டதும், வேறு வழியின்றிய நிலையில், தமிழ் மக்களைத் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின்பால் அனுதாபங்கொள்ளச் செய்தது இதற்காகத் தமிழ் மக்கள், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை முழுமையாகவும், எதுவித நிபந்தனைகள் இன்றியும் ஆதரித்தார்கள் என்று சொல்வதற்குமில்லை.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால், இலங்கை அரசாங்கம் மட்டுமே பாதிக்கப்பட்டது என்று சொல்வதற்குமில்லை; தமிழ் மக்கள் பாதிக்கப்படவேயில்லை என்று சொல்வதற்குமில்லை. 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால், தமிழ் மக்களும் கணிசமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் கறுப்புப் பக்கங்கள்.   

இதில் குறிப்பிடத்தக்க ஒரு படுகொலை, திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.   

யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியம் என்பது, இன்றுவரை தமிழர்கள் மெச்சிக்கொள்ளும் விடயங்களுள் ஒன்று. அந்தக் கல்விப் பாரம்பரியத்துக்கு வலுச்சேர்த்த, புகழ் பூத்த கல்லூரிகளிலொன்று யாழ். பரி. யோவான் கல்லூரியாகும்.  

1976 முதல் அந்தக் கல்லூரியின் அதிபராக இருந்தவர் சீ.ஈ. ஆனந்தராஜா. 1985 ஜூன் 18ஆம் திகதி, அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த திம்புப் பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளின் ஒரு பகுதியாக, யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.   

இந்த யுத்த நிறுத்த காலத்தில், 1985 ஜூன் 26ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சீ.ஈ. ஆனந்தராஜா, ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை, விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடும் ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களான ராஜனி திரணாகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீ தரன் ஆகியோர், “திரு ஆனந்தராஜாவுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு அற்பமானது. அதாவது, போர் நிறுத்தச் சூழ்நிலையின் நம்பிக்கையில், யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையே, ஒரு கிரிக்கட் விளையாட்டுப் போட்டியை, அவர் ஒழுங்குபடுத்தியதாகும்” என்று, தமது நூலில் பதிவு செய்கிறார்கள்.   

ஆகவே, தம்முடைய நிகழ்ச்சி நிரலுக்கு முரணாகச் செயற்படுபவர்கள், அவர்கள் நல்லெண்ணத்தோடு செயற்பட்டாலும் கூட, அவர்களைக் கொன்றொழிக்க, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் தயங்கவில்லை என்ற யதார்த்தத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  இத்தகைய கொலைகள் பற்றிக் கருத்துரைக்கும் ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்கள், “ஆயுதபாணிகளால் தாம் முற்றுகையிடப்படுவோம்  என்ற உணர்வால், யாழ்ப்பாண மக்கள், எல்லா வதந்திகளையும் மறைமுகக் கூற்றுகளையும் எவ்வித விசாரணையுமின்றித் தமிழ் இலட்சியத்தை முன் தள்ளுகிறது எனும் பேரில் ஏற்றுக்கொள்கிறார்கள். விடயங்கள் ஆபத்தான வகையில், பிழையான திசைக்குச் சென்றுவிட்டதாகச் சிறுதொகையினரே உணர்ந்தனர். ஆனால் அநேகர், பெடியன்கள் தெரிந்துகொண்டே சிறு தவறுகள் செய்தாலும் அவர்கள் சரியான வழிக்குத் திரும்பி விடுவார்கள் என்று கருதினர்” என்று பதிவு செய்கிறார்கள்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கான தமிழ் மக்களின் ஆதரவு என்பது, இலங்கை அரசாங்கத்தாலும், அரசபடைகளாலும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உருவானபோது தான், வலுத்தது என்பதையும் இங்கு உற்று அவதானிக்க வேண்டும்.  ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பைத் தொடர்ந்து, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் இந்தியாவுக்குச் சென்று, தஞ்சம் புகுந்துவிட்டிருந்த நிலையில், தமது பாதுகாப்புக்குப் ‘பெடியங்களை’ நம்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் மக்கள் இருந்தார்கள்.   

தமிழ்த் தரப்பு, ஜனநாயக அரசியல் தலைமை, ஆயுதத் தலைமை என்ற இருபிரிவாக மட்டும் இருக்கவில்லை. ஆயுதத் தலைமை என்பது, பல தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களிடையேயான போட்டியாக மாறியிருந்தது. தமிழ்த் தரப்புக்குள்ளான இந்தப் பிரிவினையை, ஜே.ஆர் அரசாங்கம் தமக்குச் சாதகமானதாகக் கருதினர். திம்புப் பேச்சுவார்த்தை அல்ல; எந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற வேண்டுமானாலும், முதலில் தமிழ்த் தலைமைகள் தமக்குள் இணக்கமொன்றுக்குள் வரவேண்டிய சூழல் இருந்தது.  தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்குள் இருந்த பகைமை, அந்த இணக்கத்துக்கு வாய்ப்பளிக்காது என்று ஜே.ஆர் அரசாங்கம் எண்ணி இருக்கக்கூடும். ஆனால், திம்புப் பேச்சுவார்த்தையில் நடந்த விடயம், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு ஆச்சரியமூட்டியதாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இந்நாள் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டதாக, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

திம்புப் பேச்சு வார்த்தைகள்- முதல்நாள்

திம்புப் பேச்சு வார்த்தைகள், 1985 ஜூலை எட்டாம் திகதி, பூட்டான் தலைநகர் திம்புவில் அமைந்துள்ள அரச மாளிகையில் ஆரம்பமானது. தமிழர் தரப்பில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், இராஜவரோதயம் சம்பந்தன் ஆகிய மூவரும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் சார்பில் வரதராஜபெருமாள், கேதீஸ்வரன் ஆகிய இருவரும், டெலோ இயக்கம் சார்பில் சார்ள்ஸ் அன்ரனி தாஸ், மோகன் ஆகிய இருவரும், ஈரோஸ் இயக்கம் சார்பில் சங்கர் ராஜு, ஈ. இரத்னசபாபதி ஆகிய இருவரும், புளொட் இயக்கம் சார்பில் வாசுதேவா, த. சித்தார்த்தன் ஆகிய இருவரும், எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் சார்பில் லோரன்ஸ் திலகர், சிவகுமாரன் ஆகிய இருவரும் பங்குபற்றி இருந்தனர்.   

மறுபுறத்தில், இலங்கை அரசாங்கம் சார்பில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் சகோதரரும் இலங்கையில் புகழ்பூத்த வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ. ஜெயவர்தன தலைமையில் ஒரு வழக்குரைஞர் பட்டாளம் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தது. அந்த வழக்குரைஞர் பட்டாளத்தில், இலங்கையின் குறிப்பிடத்தக்க வழக்குரைஞர்களாக இருந்த எச்.எல்.டி. சில்வா, எல்.சீ. செனவிரத்ன, மார்க் பெணான்டோ, எஸ்.எல். குணசேகர ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.  

 கிட்டத்தட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் குழுவைப்போல, திம்புப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்துகொண்ட குழு அமைந்ததென்று சொன்னால் அது மிகையல்ல.   முதல்நாள் நிகழ்வு, சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வாகவே அமைந்தது. பூட்டானின் அன்றைய வௌிவிவகார அமைச்சர் தாவா ஸ்செரிங், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வந்த தரப்பினரை வரவேற்றுப் பேசினார்.   அதில், அரசியல் பிரச்சினைகள், அமைதி வழியில் தீர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறத் தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.   இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேசிய எச்.டபிள்யூ. ஜெயவர்தன, தன்னுடைய உரையில், பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்த இந்தியாவுக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தச் சம்மதித்த பூட்டானுக்கும் நன்றி தெரிவித்தார். தமிழ்த் தரப்பு சார்பில், டெலோ இயக்கத்தின் சார்ள்ஸ் அன்ரனி தாஸ் நன்றியுரை ஆற்றியிருந்தார். முதல் நாள் நிகழ்வு, பூட்டானின் வௌிவிவகார அமைச்சர் வழங்கிய விருந்துபசாரத்தோடு நிறைவுற்றது.மறுநாள், 1985 ஜூலை ஒன்பதாம் திகதி, முதற்சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.   

(தொடரும்)  yarl.com 19 11 2018