அழிந்து வரும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம்

thinakkural.lk 21 08 2014 ஜெயபாஸ்கரன் 

அழிந்து வரும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம்

உலகின் தற்போதைய மக்கள் தொகை 724 கோடி. உலகின் மக்கள் தொகை வேகமாகப் பெருகிவருகிறது. ஆனால், உலக மக்களின் பல மொழிகள் அதைவிட வேகமாக அருகி மறைந்து வருகின்றன. சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால் மொழிகள் மரணமடைகின்றன. உலக அளவில் இப்போதைக்கு 7,105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் 1,000 க்கும் குறைவான மக்கள் தொகையினரால் சுமார் 2,000 மொழிகள் பேசப்படுவதாகவும், இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் மேலும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட உலகளாவிய மொழி நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஆண்டுதோறும் பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் 7,105 மொழிகளில் ஆங்கிலம், சீனம், ரஷ்யன், ஸ்பெயின், இந்தி உள்ளிட்ட வெறும் 13 மொழிகள்தான் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகிற மொழிகளாக இருக்கின்றன. இந்த 13 மொழிகளில் நமது தமிழ்மொழியும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிறநாடுகளிலுமாக உலக அளவில் தமிழர்கள் 10 கோடி பேர் இருக்கலாம். எனினும், தமிழர்களிடையே தமிழ்மொழி எந்த அளவுக்குப் பேச்சு மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும் இருக்கிறது எனும் ஒரு மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுகிறது. தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர, அது அவர்களின் வாழ்க்கை மொழியாக இல்லை.

உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி 8 ஆம் இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சவையின் யுனெஸ்கோ 10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருக்கிறது. பயன்படுத்தப்படாத நிலை, வேகவேகமாக வேற்றுமொழிச் சொற்கள் கலந்துவிடுகிற கலப்படநிலை போன்ற அளவுகோள்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு தமிழ்மொழிக்கு இந்த 8 ஆம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. "தமிழை யாராலும் அழிக்க முடியாது. அது முன்தோன்றிய மூத்தமொழி, உயர்தனிச் செம்மொழி, இலக்கிய வளம் செறிந்த மொழி, இலக்கணங்களால் ஆனமொழி' என்றெல்லாம் சில அறிஞர்கள் பேசுவதுண்டு. அத்தகையப் பேச்சு அவர்களது மொழிப் பற்றின் விளைவாக எழுகின்ற ஒரு நம்பிக்கைதானேயன்றி சமூக அறிவியல் அல்ல. பயன்படுத்தப்படாத எதுவொன்றும் படிப்படியாக மறைந்து அழிந்துவிடும் என்பது மொழிகளுக்கும் பொருந்தும்.

தாய்மொழியாக இருந்தும்கூட இன்றைய நிலையில் தமிழ்நாட்டில், தமிழர்களாலேயே தள்ளி நிறுத்தப்படுகிற ஒரு மொழியாகத்தான் தமிழ் இருக்கிறது. தமிழின் பெருமைகள் மேடைகளில் முழங்கப்பட்ட அளவுக்கு அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை, நிரந்தரமாக அதைப் பாதுகாத்து நிலைபெறச் செய்வதற்கான வழிமுறைகளும் காணப்படவில்லை. "எங்கும் தமிழ்' "எதிலும் தமிழ்' என்பதெல்லாம் அழகான முழக்கங்களாக மட்டுமே இன்றைக்கு நம்மிடம் இருக்கின்றன. வாழவைக்காமல் "வாழ்க' "வாழ்க' என்று மொழியிடம் விண்ணப்பம் செய்பவர்களாக நாம் இருக்கிறோம். ஒரு காலத்தில், இரண்டு தமிழர்களுக்கிடையே நிகழும் உரையாடல்களில் ஆங்கிலத்தைக் கலப்பது என்பது ஒரு கலாசாரமாகத் தொடங்கியது. இப்போது அது கட்டாயமாகிவிட்டது. "தமிழ் என்பது நமது மொழிதான். அதன் அருமை பெருமையெல்லாம் சரிதான். ஆனால், அது இன்றைய நமது வாழ்வியலுக்குப் பயன்படாது' போன்ற கருத்துகள் தொடர்ந்து விதைக்கப்பட்டு அவை இன்றைக்குப் பெரும்பாலானோரின் மனங்களில் ஆழமாக வேரூன்றி அகலக் கிளைவிரித்துப் பரவியிருக்கின்றன

தயாரிக்கப்படுவது தமிழ்த்திரைப்படங்களாக இருந்தாலும், தமிழர்களே அவற்றின் நுகர்வோராக இருந்தாலும் அவற்றின் தலைப்புகள், பாடல்கள், உரையாடல்கள் போன்றவற்றில் கூச்சமின்றியும் தங்குதடையின்றியும் ஆங்கிலம் கலக்கப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் சூட்டினால் அப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் வேறு எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை இருக்கிறது. இது எந்த வகைப்பட்ட தமிழ் மீட்பு நடவடிக்கையோ தெரியவில்லை. மொழியில் கலப்படம் செய்தால் அதற்காகத் தண்டனை அளிக்கின்ற பல உலக நாடுகளுக்கிடையே, கலப்படம் செய்யாமல் இருக்கிறவர்களுக்கு பொருளாதாரச் சலுகை அளிப்பவர்களாக, வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் அதற்குக் கையூட்டுக் கொடுப்பவர்களாக நாம் இருக்கிறோம். வாழ்வின் மிக முதன்மையான கட்டங்களில் தமிழர்களுக்குத் தங்களது தாய்மொழியான தமிழ் நினைவுக்கு வருவதேயில்லை. வாழ்க்கைக்கும், வங்கிக்கணக்கு நடைமுறைகளுக்கும், வரவு செலவு வணிகத்திற்கும் வருமானத்திற்கும் தமிழ் பொருந்தாது அல்லது பயன்படாது என்கிற அறிவியலுக்குப் புறம்பான தாழ்வுமனப்பான்மையே அதற்கான காரணங்களாக இருக்கின்றன.

எனவேதான் தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, மருத்துவம் என்று அத்தனைத் துறைகளிலும் நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் வேறு ஒரு மொழியில், மிகவும் குறிப்பாக ஆங்கில மொழியில் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்று , தமிழ் மக்கள் பார்ப்பதற்கான திரைப்படங்களை "மூவிஸ்'களும், "தியேட்டர்ஸ்''களும், "ஸ்டுடியோ'களும் தயாரித்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் வாங்குவதற்கான பொருள்களை "அன்கோ'களும், "பிரதர்ஸ்'களும், "சன்ஸ்'களும், "டிரேடர்ஸ்'களும், "எண்டர்பிரைசஸ்'களும் விற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்குத் தேவையான பணத்தை "பெனிபிட்'களும், "சிட்பண்ட்'களும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் தங்க நகைகளை பான்புரோக்கர்ஸ்கள் அடகு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் பார்ப்பதற்கான தொலைக்காட்சிகளை நெட்வோர்க்குகளும் கம்யூனிகேஷன்களும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் கேட்பதற்கான பாடல்களை ஆடியோக்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களுக்கான மருந்துகளை மெடிக்கல்ஸ்கள் விநியோகித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களை ஹாஸ்பிட்டல்ஸ்கள் குணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை மெட்ரிகுலேஷன்கள் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன

தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய பயணங்களை டிராவல்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்குத் தேவையான வேளாண்மை பொருட்களை அக்ரோ பார்ம்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் பசியை ஹோட்டல்களே போக்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாகத்தான் துறை தோறும் தமிழ் முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் சண்டைகள் தமிழிலும், அவற்றின் பொருட்டான வழக்குகள் வேறு ஒரு மொழியிலும் நடக்கின்றன. தங்களது வாழ்வின் முதன்மையான கட்டங்களில் தமிழை வளாகங்களுக்கு வெளியே நிற்க வைத்துவிடுகிறார்கள் தமிழர்கள். அந்த வகையில் நீதிமன்றங்களுக்கு வெளியேயும், கல்வி நிறுவனங்களுக்கு வெளியேயும், திருமண அரங்குகளுக்கு வெளியேயும், இசையரங்குகளுக்கு வெளியேயும், நிதி நிறுவனங்களுக்கு வெளியேயும், வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியேயும், வணிகச் செயல்பாடுகளுக்கு வெளியேயும் தமிழை கால்கடுக்க நிற்க வைத்து உள்ளே நுழைகிற தமிழர்கள், வேலை முடிந்தவுடன் வெளியே வந்து தங்களது தமிழைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குலவுகிறார்கள், மூச்சுவிட்டுக் கொள்கிறார்கள், இளைப்பாறிக்கொள்கிறார்கள், சிரித்துக் கொள்கிறார்கள். இதுதான் இன்றையத் தமிழர்கள் தங்களது தாய்மொழியான தமிழை வாழவைக்கும் முறையாக இருக்கிறது. இன்றைய நிலையில், நாம் தமிழைத் தலைவர்களின் சொற்பொழிவுகளாகவும் திரையிசைப் பாடல்களாகவும் வசனங்களாகவும் கேட்கலாம். கவிதை, கதை, கட்டுரை, செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களாகப் படிக்கலாம். அதாவது தமிழைக் கேட்கலாம் படிக்கலாம். இந்த இரண்டு நிலைகளைத் தாண்டி வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கிற பேச்சுக்கே இப்போது இடமில்லை.