சென்னை டூ யாழ்ப்பாணம் விமானசேவை தொடக்கம் : விரிவான தகவல்கள்

17 10 2019

சென்னை டூ யாழ்ப்பாணம் விமானசேவை தொடக்கம் : விரிவான தகவல்கள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக திறந்து வைத்தனர்.விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.இந்த விமானத்தில் எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹானி எலையன்ஸ் எயர் தலைமை நிறைவேற்று அதிகாரி சுப்பையா உள்ளிட்ட குழுவினர் வருகை தந்தனர்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்துள்ளது.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக இது இடம்பிடித்துள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிக்கு 2250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீட்டர் அளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.இத்திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட,, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

bbc tamil oct 17 2019