தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 185)

04 01 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 186)

திம்புக்கோட்பாடுகளில் தாயகம்

திம்புக் கோட்பாடுகளில், இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்; தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல் ஆகிய இரண்டுடன் இணைந்தொன்றாக அமையும் திம்புக் கோட்பாடு, இலங்கைத் தமிழருக்கென்ற அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல் என்பதாகும்.அரசியல் களத்திலும் அன்றாட வாழ்விலும், இம்மூன்று கோட்பாடுகளும், சுருக்கமாக "தேசியம், சுயநிர்ணயம், தாயகம்" என்று அடையாளப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கலாம்.தமிழ் மக்களை ஒரு தேசமாக நிறுவுதல், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை ஆகியவற்றை விடவும், கோட்பாட்டு ரீதியாக மிகச் சவாலானதொன்றாக அமைவது, இலங்கைத் தமிழருக்கென அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல் என்ற "தாயகம்" கோரிக்கையாகும்.இந்தச் சிக்கலை விளங்குவதற்கான வசதியின் நிமித்தமாக, தத்துவார்த்த ரீதியிலான சிக்கல், வரலாற்று ரீதியிலான சிக்கல் என்ற இரு படிகளில் அணுகுதல் உசிதமாக இருக்கும். ஆனால் அதற்கு முன்பதாக, "தாயகம்" என்பதன் தத்துவார்த்தப் பொருளை விளங்கிக்கொள்ள முயற்சித்தல் அவசியமாகிறது.

மண்ணும் மக்களும்

"மண்" என்பது வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, மனித வாழ்வில் மிக முக்கிய அங்கமாக இருந்துவருகிறது.மஹாபாரதப் போரை "மண்ணுக்கான" போர் என்று பலரும் விளிப்பார்கள். தமக்கே சொந்தம் என்று, தாம் கருதும் மண்ணின் மீதான தம்முடைய உரித்தை நிலைநாட்டுவதற்காக, மனிதர்களின் இரத்தம் இந்த மண்ணில் ஆறாகப் பாய்ந்திருக்கிறது.மனிதக் குழுக்கள் தாம் வாழும் இடத்தின் மீது அதீத பற்றை, காலங்காலமாக வளர்த்து வந்துள்ளனர். காலங்காலமாக, பரம்பரைகள் பல கடந்து, குறித்த மனிதக் குழுக்கள் தாம் வாழ்ந்துவரும் "மண்ணை" தாய்மண் (motherland), தந்தையர்மண் (fatherland) என்று விளித்து வருகின்றமையை உலகெங்கும் நாம் காணலாம்.

அத்தகைய உறவுமுறையொன்றை மண்ணுடன் ஏற்படுத்துவதன் வாயிலாகவும் தம்மை குறித்த மண்ணின் பிள்ளைகளாக உருவகப்படுத்துவதன் வாயிலாகவும் அந்த மண்ணின் மீது அவர்களுக்கென்று பிரத்தியேக உரிமையை மீளுணர்த்துகிறார்கள். அதாவது, தம்மைத் தவிர ஏனையயோரை, அம்மண்ணின் உரித்திலிருந்து விலக்கிவைக்கும் எண்ணம் தாய்மண், தந்தைமண் என்கிற விளிப்பின் அடிநாதமாக அமைகிறது. உலகம் முழுக்கவே தாய்மண் அல்லது தந்தைமண்ணைப் புகழும் பாடல்களும் உணர்ச்சிவேகக் கவிகளும், வரலாறெங்கும் நிறைந்திருப்பதைக் காணலாம்."எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்று சுப்ரமணிய பாரதி பாடியதைப் போல, ஸ்கொட்லாந்தின் புகழ்பூத்த கவிஞன் சேர். வோல்டர் ஸ்கொட், "இது எனக்குச் சொந்தமான பாரம்பரிய மண் என்று ஒரு போதும் சொல்லாதவன், மூச்சிருப்பினும் மரித்துப்போன ஆன்மாவைக் கொண்டவன்" என்று பாடுகிறார். மண்ணின் மீதான இந்தக் காதலுக்கு, உலகின் எந்த மனிதக் கூட்டமும் விதிவிலக்கல்ல என்பதுதான் நிதர்சனம்.தன்னைத் தனித்ததொரு மக்கள் கூட்டமாக அடையாளப்படுத்தும் ஒரு மண்ணில், பாரம்பரியமாக வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் மக்கள் கூட்டம், குறித்த அந்த மண்ணின் மீது கோரும் தார்மீக உரிமையிலிருந்துதான் "தாயகம்" என்ற கோட்பாடு பிறக்கிறது.

ஆகவே, "தாயகம்" என்பது ஒரு மனிதக்குழு சார்ந்த ஆட்சி எல்லை சார்ந்த கோட்பாடாக அமைகிறது. ஒரு வரையறுத்த பிரதேசத்தின் மீது குறித்த மனிதக் குழுவொன்று நீண்ட வரலாற்றையும் ஆழ்ந்த கலாசார தொடர்பையும் கொண்டிருக்கும் போது, அந்த வரையறுத்த பிரதேசமானது குறித்த மனிதக் குழுவின் "தாயகமாக" உணரப்படுகிறது.பொதுவாக, குறித்த ஓர் இனம் அல்லது தேச அடையாளம் உருவாகிய மண், குறித்த இனத்தின் அல்லது தேசத்தின் "தாயகமாக" உணரப்படும். குறிப்பாக ஒரு குறித்த மண்ணிற்கேயுரிய பாரம்பரிய மக்கள் கூட்டங்கள் குறித்த நிலப்பரப்பை, தம்முடைய "தாயகமாக" அல்லது "பாரம்பரிய மண்ணாக" அடையாளப்படுத்துவதை, பல்வேறு அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில், பல்வேறு பழங்குடி இனங்களும் காலங்காலமாக வாழ்ந்துவரும் நிலப்பகுதி, அவற்றின் பாரம்பரியப் பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

தமிழர்த் தாயகம்

இலங்கைத் தீவில், தமிழ் மக்களின் "தாயகம்" கோரிக்கை, வரலாற்று மற்றும் தத்துவார்த்தச் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. குறித்த சிக்கல்கள் தொடர்பில் ஆழ்ந்து ஆராய்வதற்கு முன்னதாக, தமிழர்கள் தமது தாயகமாக வரையறுக்கும் பிரதேசம் எது, தமிழர்கள் அதனை எந்த அடிப்படையில் உரிமை கோருகிறார்கள் என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடுதல் முக்கியமாகிறது.பண்டா-செல்வா காலம் முதல், "தமிழர் பிரதேசங்களுக்கான" அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்பட்டும் உடன்பாடுகள் எட்டப்பட்டும், அவை பின்னர் தோல்வியடைந்ததுமாக வரலாற்றை நாம் காணலாம். ஆனால் "தமிழர் பிரதேசங்கள்" என்பதற்கான மிகத் தெளிவான வரையறையொன்று வழங்கப்படவில்லை. ஆனால் அது, தமிழர்கள் காலங்காலமாகப் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் என்ற இயல்பான புரிதலின் அடிப்படையிலானது என்பதையும் இங்கு மறுக்கமுடியாது.

"வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்" தமிழருக்கான தனிநாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பினும், அந்த நாட்டின் எல்லைகள் தெளிவுற வரையறுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாக இருக்கிறது. அவ்வாறு குறிப்பிடப்படாததால் மட்டும், அவ்வாறான தமிழர்த் தாயகம் என்று ஒன்றில்லை என்று எழுந்தமானமாக அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால், வரையறுத்த எல்லைகள் வெளிப்படையாகச் சொல்லப்படாவிடினும், அது தொடர்பான ஆழமான புரிதல் தமிழ் மக்களிடையே தொடர்ந்து இருந்து வருவதையும் மறுத்துவிட முடியாது.தாம், பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக ஆண்டு அனுபவித்துவரும் மண், பிரதேசமே தம்முடைய தாயகம் என்பது அவர்களின் ஆழமான புரிதலின் அடிப்படை. அவ்வாறு காலங்காலமாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பிரதேசம் எது என்ற கேள்விக்கான பதிலில் தான் தமிழர் தாயகத்தின் வரையறுத்த எல்லைகளை நாம் இனங்காண முடியும்.

ஆனால், அது அவ்வளவு இலகுவானதல்ல. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் "வட்டுக்கோட்டைத் தீர்மானத்துடன்" உருப்பெறத் தொடங்கிய தமிழீழக் கனவுக்கு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உயிர்கொடுக்கத் தொடங்கியபோது, தமிழீழத்தின் வரையறுத்த எல்லையை அவர்கள் நிர்ணயிக்க எத்தனித்தார்கள்.

அதன்படி, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும், வடமேல் மாகாணத்தின் புத்தளம் வரையிலானதுமான விஸ்தீரணம் கொண்ட பகுதி பொதுவில் தமிழர்களின் தாயாகமாகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் முன்னிறுத்தப்பட்டது.இந்தப் பகுதியானது, இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.இதில் 1981 சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாணம் (97%), கிளிநொச்சி (97%), முல்லைத்தீவு (89.8%), மன்னார் (63.7%), வவுனியா (76.2%), மட்டக்களப்பு (72%) ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரும்பான்மையான அளவில் இலங்கைத் தமிழர்களைக் கொண்டிருந்ததுடன், அம்பாறை (20%) திருக்கோணமலை (36.4%) சிறுபான்மை அளவில் இலங்கைத் தமிழர்களையும், புத்தளம் (6.8%) மிகச் சொற்பளவான இலங்கைத் தமிழர்களையும் கொண்டமைந்தது.

இதில் அம்பாறை, புத்தளம் மாவட்டங்களில் மட்டும் தமிழர்களை விட, சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ சம அளவிலும் காணப்பட்டது.தமிழர் பிரதேசங்கள் என்று வரும் போது, "யாழ்ப்பாணம்" தமிழர்களுடையது என்பது தொடர்பில் ஒரு சில பேரினவாதப் போக்குடைய விமர்சகர்களைத் தவிர வலுவான எதிர்ப்பைப் பலரும் முன்வைப்பதில்லை.ஆனால் அதனைத் தாண்டிய பிரதேசங்களை தமிழர் "தாயகமாக" அடையாளம் காணப்படுவதைக் குறிப்பாகச் சிங்கள மக்களும், சிங்கள அரசியல் தலைமைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த இடத்தில் தான் வரலாற்றுச் சிக்கலும் தத்துவார்த்தச் சிக்கலும் உருப்பெறத் தொடங்குகிறது.

தமிழர்களின் தாயகக் கோரிக்கையை கேள்விக்குட்படுத்தும் காமினி ஈரியகொள்ள, தன்னுடைய குறுநூலொன்றில் பாரம்பரிய தாயகக் கோரிக்கைகள் ஆபத்தானதும், அபத்தமானதுமாகும் என்று குறிப்பிடுவதுடன், வரலாற்று ரீதியாக தமிழர்களின் தாயகக் கோரிக்கை அடிப்படை அற்றது என்ற பகட்டாரவார வாதத்தையும் முன்வைக்கிறார்.தமிழர்களின் தாயக உரிமைகோரல் வரலாற்று ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற வாதத்தை கே.எம்.டீ. சில்வா, ஜீ.எச்.பீரிஸ் உள்ளிட்ட ஆய்வாளர்களும் முன்வைக்கிறார்கள்.

எதனால் இந்த வரலாற்றுச் சிக்கல்?

இந்த வரலாற்றுச் சிக்கல், "இலங்கைத் தமிழர்கள்" யார் என்ற கேள்வியில் தொடங்குகிறது. இலங்கைத் தமிழர்கள் எனப்படுவோர் வரலாற்றுக் காலத்துக்கு முஇந்தன்னிருந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து வருபவர்கள் என்பது ஒரு துருவத்திலும், தமிழர்கள், அந்நிய படையெடுப்புகளின் போதும், பின்னர் மேற்கத்தேய அந்நியர்களில் ஆதிக்கத்தின் போதும் இலங்கையில் வந்து குடியேறிய வந்தேறு குடிகள் என்பது மறு துருவத்திலும், இடை நடுவே தமிழர்கள் இடைக்காலங்களில் மலபாரிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்ற கருத்தும் இந்த வாதங்களில் வெவ்வேறான, ஒன்றிற்கொன்று எதிர்முரணான நிலைப்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன.

இதில் தமிழர்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து இந்த மண்ணில் வாழ்ந்து வருபவர்கள் என்ற கருத்து, இந்த மண் மீதான தமிழர்களின் உரிமையை வலுச்சேர்ப்பதாகவும், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பது இந்த மண் மீதான தமிழர்களின் உரிமைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதாகவும் அமையும் நோக்கத்தின் பின்புலத்திலேயே குறித்த வாதங்கள் முன்வைக்கப்படுவதும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

மறுபுறத்தில் மேற்கத்தேய ஆதிக்கத்துக்கு முன்னதான இலங்கை இராச்சியங்களின் அடிப்படையில் தமிழர்களின் தாயகக் கோரிக்கையை அணுகும் போக்கைச் சில ஆய்வாளர்கள் கைக்கொள்வதையும் நாம் அவதானிக்கலாம்.

யாழ்ப்பாணம் தமிழர்களின் தாயகம் என்ற கோரிக்கை வலுவாக மறுக்கப்படாமைக்கு இந்த அணுகுமுறை ஒரு முக்கிய காரணம் எனலாம். ஏனெனில், யாழ்ப்பாண இராச்சியமானது தமிழர் இராச்சியம் என்பதை பெரும்பாலும் எவரும் மறுப்பதில்லை.

ஆனால், திருக்கோணமலையோ வன்னியோ, மட்டக்களப்போ, மன்னாரோ, புத்தளமோ நேரடியாக யாழ்ப்பாண இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தவை அல்ல. அதிலும் வன்னிப்பகுதி பெரும்பாலும் ரஜரட்ட இராச்சியத்துக்கு உட்பட்டதாக இருந்ததாகவும், மேலும் வன்னிக் குடித்தலைவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வன்னி மீதான ஆதிக்க முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்ததாகவும், அதைவிடவும் மட்டக்களப்பானது ஆரம்பகாலத்தில் றுஹுணு இராச்சியத்துக்கு உட்பட்டதாகவும், பின்னர் கண்டி இராச்சியத்துக்கு உரியதாக இருந்ததாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவதை இவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.ஆனால், இந்த வாதத்துக்குள் ஒரு முக்கிய உட்பொருள் ஒளிந்துள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தாலும், ரஜரட்ட இராச்சியத்துக்கு உட்பட்டதாக வன்னி இராச்சியம் இருந்திருந்தாலும், வன்னி மண், அந்த மண்ணுக்குரிய தமிழர்களான வன்னித் தலைவர்களாலேயே ஆளப்பட்டது.

அதுபோலவே மட்டக்களப்பானது றுஹுணு, பிற்காலத்தில் கண்டி இராச்சியத்துக்கு உட்பட்டதாகக் கருதப்பட்டாலும், அது நேரடியாக குறித்த இராச்சியங்களால் ஆளப்படவில்லை. மாறாக அம்மண்ணிற்குரிய தமிழ்த் தலைவர்களால் (குறிப்பாக முக்குவத் தலைமைகளால்) ஆளப்பட்டது.

ஆகவே குறித்த நிலப்பரப்பு, குறித்த நிலப்பரப்பில் காலங்காலமாக வாழ்ந்துவந்த, குறித்த நிலப்பரப்புக்கு உரிய மக்களால் ஆளப்பட்டது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாது.

( தொடரும்) yarl.com  mar 12 ,2019