தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 187)

18 01 2020

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 187)

தாயகமும் குடியேற்றமும்

தமிழர் தாயகமாக, தமிழர்கள் இன்று கோரும் நிலப்பரப்பானது, வரலாற்றுக் காலம் முதல், தமிழர்களின் ஒற்றைத் தனி இராச்சியமாக இருந்ததா என்ற கேள்வியைத் தாண்டி, அங்கு வாழ்ந்த மக்கள், அங்கு நிலை பெற்றிருந்த கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் என்பன, பொதுவாகத் தமிழ் சார்ந்ததாகவும் சிங்களம் சாராததாகவும் இருந்ததா என்ற கேள்வியும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், தமது வாழ்வை, தமது சுய வேர்களின் அடிப்படையில், தமக்கே உரிய நம்பிக்கைகளின் அடிப்படையில், தமது விருப்பப்படி கொண்டு நடத்தினார்களா ஆகிய கேள்விகள் முக்கியமானவை ஆகும்.வெறுமனே, நடைமுறை ரீதியில் ஒரு நிலப்பரப்பு, இன்னோர் இராச்சியத்துக்குக் கீழ்பட்டதாக இருந்தது என்ற காரணம் மட்டும், அந்நிலப்பரப்பு வேறுபட்ட மக்களுக்குரிய தாயகமாக இருக்கவில்லை என்ற மறுப்பை, நியாயப்படுத்திவிடாது.

இலங்கையில் தமிழர்களின் தாயகக் கோரிக்கை என்பது, பெரும்பான்மை 'சிங்கள-பௌத்த' பெருந்தேசியவாதத்திடமிருந்து, தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக உருப்பெற்ற, தமிழ்த் தேசியத்தின் முக்கியமானதோர் அங்கமாகவே நோக்கப்பட வேண்டும்.மேற்கத்தேய கொலனித்துவ காலத்தில், வன்னிப் பிரதேசமென்பது, பெருமளவுக்குக் காடாகிப் போயிருந்த பிரதேசம். ஆனால், வன்னி மண்ணுக்கும் பெரும் வரலாறு உண்டு என்பது வரலாற்று, தொல்லியல் சான்றுகளின் அடிப்படைகளில் தெரியவருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.யாழ்ப்பாணத்திலிருந்து வேறுபட்டதும் மிகத்தொன்மையான வரலாறும், பண்பாடும் கொண்டதாக வன்னி காணப்பட்டதுடன், வன்னி மண்ணில் தமிழர்களே வாழ்ந்ததற்கான சான்றாதாரங்களும் மேலோங்கிக் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு என வாழ்ந்த தமிழர்களிடையேயான வாழ்வியல், கலாசாரம், பண்பாட்டு வேறுபாடுகளைத் தெரிந்தெடுத்துச் சுட்டிக்காட்டி, இவர்கள் வேறுபட்ட மக்கள், தம்மை வேறுவேறாக அடையாளப்படுத்திக் கொண்ட மக்கள், வேறுபட்ட வாழ்வியலைக் கொண்ட மக்கள், வேறுபட்ட அரசியலைக் கொண்ட மக்கள்; ஆகவே ஒட்டுமொத்தமாக, அந்தப் பிரதேசம் அனைத்தும், ஒன்றாக ஒரே மக்களுக்கு உரிய தாயகமாக அடையாளப்படுத்த முடியாது என்று, தமிழர் தாயகக் கோரிக்கையை நிராகரிக்கும் சிலர், வாதிடுவார்கள்.

அவர்கள் குறிப்பிடுவதில், இலங்கைத் தமிழர்கள், வரலாற்றுக் காலத்தில் தம்மை ஒரே மக்களாக, ஒரே தேசமாக உணரவில்லை; அடையாளப்படுத்தவில்லை என்பது உண்மை.ஆனால், அதே தர்க்க நியாயம், சிங்கள மக்கள் தொடர்பிலும் பொருத்தமாகிறது. வரலாற்றுக் காலத்திலிருந்து, இன்று 'சிங்களவர்களாக' பொது அடையாளத்தைச் சுவீகரித்துக் கொண்டவர்கள் யாவரும், தம்மை ஒரே மக்களாகவும் ஒரே தேசமாகவும் உணர்ந்து கொண்டவர்கள் இல்லை.இந்தத் தீவுக்குள் வேறுபட்ட சிங்கள இராச்சியங்கள் இருந்தன. அம்மக்கள் தம்மை, மற்றைய இராச்சியத்திலிருந்து வேறானவர்களாகவே கருதிக்கொண்டார்கள்.

கண்டிய, கீழ்நாட்டு சிங்களவர்கள் இடையேயான வேறுபாடு, சமூக அளவில் இன்றும் உண்டு. அதேவேளை, இலங்கையில் தம்மை வேறாக அடையாளப்படுத்தி, இலங்கையில் சமஷ்டி ஆட்சியையும் தமக்கான தனி சமஷ்டி அலகையும் முதன்முதலாகக் கேட்டவர்கள் கண்டிய சிங்களவர்கள் என்பதும் இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது.ஆகவே, வரலாற்றுக் காலத்தில் காணப்படாத ஒரு பொதுவான, 'சிங்கள-பௌத்த' அடையாளம் என்பது, எப்படி 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அநகாரிக தர்மபாலவின் மறுமலர்ச்சி முயற்சிகளுடன் உருப்பெற்றதோ, அதைப்போலவே, அந்தச் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதத்தின் எழுச்சியிலிருந்து, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, 20ஆம் நூற்றாண்டின் மத்தியில், தமிழ்த்தேசியம் உருவானது.

ஆகவே, 'வரலாற்று ரீதியாகத் தமிழர்கள், ஒரு மக்கள் அல்ல' என்ற வாதத்தை, மேற்கூறிய தர்க்கத்தின்படி எவரேனும் முன்வைப்பார்களேயானால், அதே வரலாற்று ரீதியான தர்க்கத்தின் படி, சிங்களவர்களும் ஒரு மக்கள் அல்ல; அவ்வளவு ஏன், தாராளவாதிகள் கட்டியெழுப்ப விரும்பும் 'இலங்கையர் யாவரும் ஒரு மக்கள்' என்ற சிவில் தேசிய அடையாளமும் வரலாற்று ரீதியில் ஒரு போதும் இருந்திராத ஒன்றாகும்.இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில், 'சிங்கள-பௌத்த' பெருந்தேசியவாதத்தின் எழுச்சி வரை, தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றைப் பற்றி, உயிர்ப்பான வகையில் சிந்திக்கவோ, அக்கறைப்படவோ வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை.ஏனெனில், அவர்களது வாழ்வை, அவர்கள் வாழ்ந்த மண்ணில், அவர்களது விருப்பப்படி கொண்டு நடத்தக் கூடியதாக இருந்தது. ஒரு மனிதனின் சுதந்திரம் பறிக்கப்படும் வரை அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் வரை, அவன் சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய தேவை இராது; அதைப் பற்றிய பேச்சுக்குமான அவசியமிராது.

அதற்காக, அவன் அதுவரை சுதந்திரம் பற்றிப் பேசாததால் மட்டுமே, அவன் சுதந்திர எண்ணம் கொண்டவனாக இருக்கவில்லை என்று குறிப்பிடுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போலத்தான், தமிழ் மக்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து தேசியம், சுயநிர்ணயம், தாயகம் பற்றி உணரவில்லை, பேசவில்லை, அக்கறைப்படவில்லை என்று குறிப்பிடுவதும் ஆகும்.இந்த வகையில், தமிழர்களின் தாயகக் கோரிக்கை என்பது, 'சிங்கள-பௌத்த' பெருந்தேசியவாதத்தால், அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதொரு மாற்று மருந்தாக, உணர்வுபெற்றதொரு கோரிக்கையாகும். இந்த உணர்வெழுச்சிக்கு முக்கிய காரணம், திட்டமிட்ட குடியேற்றம்.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு என்பது, சுதந்திரத்துக்கு முன்னதான சில நூற்றாண்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசம்.வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, வடமத்தியிலும் தமிழர்களே பெருமளவு வாழ்ந்து வந்தார்கள். 1930களில் புனித நகராக அநுராதபுரம் பிரகடனம் செய்யப்படும் வரை, அநுராதபுரத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே வாழ்ந்து வந்தார்கள் என, எச்.எல். செனவிரத்ன தொகுத்த ஆய்வு நூலொன்றில், எலிஸபெத் நிஸான் குறிப்பிடுகிறார்.

ஆனால், 20ஆம் நூற்றாண்டிலிருந்து, அதிலும் குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து, திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம், தெற்கிலிருந்து சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கில் குடியேற்றப்பட்டதன் மூலம், அப்பிரதேசத்தின் குடிப்பரம்பல் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டது.இந்தத் திட்டமிட்ட குடியேற்றத்தை, தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக எதிர்த்து வருகின்றனர். இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களிலிருந்தும், அதனால் தமிழர் மிகப் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் குடிப்பரம்பல் சிதைப்பிலிருந்தும் பாதுகாப்பதற்காகவும் தமிழர் தாயகம் என்ற கோரிக்கை முக்கியம் பெறுகிறது.தமிழர் தாயகம், என்பதை பிரிவினைக்கானதும் தனிநாட்டுக்கானதுமான ஒன்றாகப் பேரினவாதிகள் உருவகப்படுத்துவது, பொதுவாக கேட்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

'தாயகம்' என்பது, அப்பிரதேசத்துக்கு உரியவர்கள் அல்லாதோர், அங்கு பிரவேசிக்க முடியாதென்றோ, அங்கு இடம்பெயர்ந்து வாழமுடியாதென்றோ அர்த்தம் கற்பிப்பது அபத்தமானதாகும்.வடக்கு, கிழக்கைச் சார்ந்த தமிழர்கள், எவ்வாறு கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கைத் தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்களோ, அதைப் போலவே இலங்கையிலுள்ள அனைவரும், வடக்கு, கிழக்குக்கும் பல்வேறு காரணங்களுக்காகவும் இடம்பெயர்ந்து வாழும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள்.அதன்படி, வடக்கு, கிழக்கில் தமது சுயவிருப்பின் பேரில் வந்து குடியமர்வதை எந்தத் தமிழனும், குறிப்பாக வடக்கு, கிழக்கைத் தாயகமாகக் கொண்டவர்களும் ஒருபோதும் மறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு, தனது அரச வளங்களைப் பயன்படுத்தி, அபிவிருத்தி என்ற பெயரில் திட்டமிட்டு, வடக்கு, கிழக்கில் குடியேற்றங்களைச் செய்வதைத்தான் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள்.

இதனால்தான், 'வடக்கு, கிழக்கு எமது தாயகம்' என்ற குரல், மேலும் மேலும் வலுப்பெறுகிறது. தாராளவாதிகள், இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களை, அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடு என்று நியாயப்படுத்தக் கூடும். அது அவ்வாறாயின், வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி செய்யப்படாத நிலப்பகுதியில், குடியேற்றங்களை ஏற்படுத்தி, அப்பகுதியை அபிவிருத்தி செய்ய விரும்பினால், இலங்கைத் தீவின் இன்னொரு எல்லையிலிருந்து மக்களைக் கொண்டு வந்து வடக்கு, கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்யும் பிரதேசத்தில் குடியேற்றுவதை விட, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கே, குறிப்பாக, அதனை அண்டிய சனநெரிசல் கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கே உரிய சலுகைகளை வழங்கி, அவர்களை வடக்கு, கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்ய விளையும் பிரதேசங்களில் குடியேற்றலாம்.அவ்வாறு செய்யும் போது, குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைச் சிதைக்காது, அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். உண்மையான தாராளவாத அரச இயந்திரமொன்று, இதனைத் தான் செய்யும். ஆனால் தாராளவாத முகமூடிக்குள் ஒழிந்துகொண்டுள்ள பெரும்பான்மை இனமதத் தேசியவாத அரசாங்கமானது, தாராளவாத முகமூடியைத் தனது பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு முன்னகர்த்துவதற்கே பயன்படுத்திக் கொள்ளும். இந்தச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானதாகும்.ஓர் இறைமையுள்ள அரசாங்கத்துக்குள் குறித்ததொரு மக்கள் கூட்டத்துக்கான தாயகத்தை அங்கிகரித்தல் என்பது, தாராளவாத அரசுகளில் இடம்பெறாததொன்றல்ல. அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தொன்றுதொட்டு குறித்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக, ஒரு மக்கள்கூட்டம் வாழ்ந்து வரும் பகுதி, அம்மக்களினுடைய 'தாயகமாக' அங்கிகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, 'தாயகம்' என்ற அங்கிகாரமென்பது தாரளவாதத்துக்கு அந்நியமானதொன்றல்ல; அது தாராளவாதத்தின் எல்லைகளை விரிவடையச் செய்யுமேயன்றி, அதனை தகர்ப்பதாக அமையாது.தாராளவாதிகள், இனத் தேசியத்தை எதிர்க்கிறார்கள். அதனால் அவர்கள் தமிழ்த் தேசியத்தையும் அதன்பாலான தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தையும் எதிர்க்கிறார்கள் என்று கூறுவார்களேயானால், அவர்கள் இங்கு முக்கியமானதொரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளத் தயங்குகிறார்கள்.தமிழ்த் தேசியம் என்பது, தானாக உருவானதொன்றல்ல; அது பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட, 'சிங்கள-பௌத்த' தேசியவாதத்திலிருந்து, அத் தேசியவாதத்தின் அடக்குமுறைக்குள்ளான ஒரு மக்கள் கூட்டம், தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக, சுவீகரித்துக் கொண்ட தற்காப்புத் தேசியம் ஆகும்.

ஆகவே, 'சிங்கள-பௌத்த' தேசியவாதத்தையும் அதிலிருந்து தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக உருவான தமிழ்த் தேசியவாதத்தையும் தாராளவாதிகள் ஒரே தட்டில் அணுகுதல் என்பது, ஏற்புடையதொன்றல்ல. சிங்கள-பௌத்த தேசியவாதம் இல்லாது போகும் போதும், தமிழ்த் தேசியவாதத்துக்கான தேவையும் இல்லாது போகும். ஆகவே, அடக்குமுறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் குரலாக, தமிழ்த் தேசியத்தை நோக்கினால், அது இனத் தேசியவாதமல்ல; மாறாக இனமத பேரினவாதத் தேசியவாதத்திலிருந்து தன்னைத் தற்பாதுகாத்துக்கொள்ள, ஒரு மக்கள் கூட்டம் உருவாக்கிய தற்காப்புத் தேசியவாதம் என்பதைத் தாராளவாதிகள் புரிந்துகொள்ளலாம்.அவ்வகையில் நோக்கினால், இலங்கைத் தமிழர்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அபிலாஷைகள், தாராளவாதத்துக்கு நேரடியாக ஏற்புடையதல்ல; எனினும், தாராளவாதத்தின் சாரத்துக்கு முற்று முழுதாக முரணானதும் அல்ல.

(தொடரும்)yarl.com  mar 28 2019